Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை
Mayu / 2024 மே 03 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஐயூப்
அடுத்து நடைபெறப் போவது ஜனாதிபதித் தேர்தலா அல்லது பாராளுமன்றத் தேர்தலா என்றதோர் விவாதம் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கும் கலப்பு தேர்தல் முறையை அறிமுகப்படுத்த அமைச்சரவை கடந்த மார்ச் 18ஆம் திகதி முடிவு செய்துள்ளது.
கடந்த அரசாங்கம் தேர்தல் செலவுகள் தொடர்பாக சட்டமூலமொன்றை நிறைவேற்றியது. அதன் அடிப்படையிலேயே பாராளுமன்றத் தேர்தலுக்காகவும் கலப்புத் தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதற்காகச் சட்டத் திருத்தமொன்றைக் கொண்டுவர அரசாங்கம் கருதுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அன்றே அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்து இருந்தது.
அதன் பிரகாரம் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளினதும் கருத்துக்களை அறிந்து அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அக்குழு அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடியதாகவும் அக்கட்சித் தலைவர்கள் தொகுதி வாரியாக 160 பாராளுமன்ற உறுப்பினர்களையும்
தேசிய அல்லது மாகாண மட்டத்தில் விகிதாசாரப் படி 65 உறுபப்னர்களையும் தெரிவு செய்ய உடன்பட்டதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம், பாராளுமன்ற தேர்தல் முறையை மாற்றும் வகையில் அரசியலமைப்பைத் திருத்தச் சட்ட வரைவுத் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றும் அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
இந்த விடயம் சிறுபான்மை மக்களுக்கு, குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு மிகவும் முக்கிய விடயமாகும்.
ஏனெனில், அம்மக்களுக்கு தற்போதைய விகிதாசார தேர்தல் முறையே சாதகமாக அமைகிறது. தகவல் திணைக்களத்தின் அறிக்கையின் படி எதிர்காலத்தில் வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் சிறுபான்மையினரின் அரசியல் பிரதிநித்ததுவம் குறையும் சாத்தியம் இருக்கிறது.
இவ்வறிக்கையின் படி கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட தேர்தல் செலவுகள் தொடர்பான சட்டத்தின் காரணமாகவே கலப்புத் தேர்தல் முறை அவசியாகியிருக்கிறது. ஆயினும் 2001 முதல் மூன்று பாராளுமன்ற தெரிவுக் குழுக்கள் அம்முறையின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.
அக்குழுக்களில் ஒன்று 2001ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் காலத்தில் நியமிக்கப்பட்டது.
இரண்டாவது 2006ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் நியமிக்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் அதாவது 2021ஆம் ஆண்டு மூன்றாவது தெரிவுக் குழு நியமிக்கப்பட்டது.
எனவே கலப்புத் தேர்தல் முறையின் அவசியம் தேர்தல் செலவுகள் சட்டத்தின் காரணமாகவே தோன்றியது என்பது பிழையாகும்.
இத்தெரிவுக் குழுக்கள் விடயத்தில் ஒரு முக்கிய தகவல் என்னவென்றால் அம்மூன்றினதும் தலைவராக தற்போதைய பிரதமரும் அக்காலங்களில் அமைச்சராக இருந்தவருமான தினேஷ் குணவர்தனவே நியமிக்கப்பட்டார் என்பதேயாகும். அதேவேளை, இம்மூன்று குழுக்களும் கலப்புத் தேர்தல் முறையே இலங்கைக்குப் பொருத்தமானது என்று பரிந்துரைத்துள்ளது என்பதும் முக்கியமான விடயமாகும்.
தமது தலைமையில் ஒரு குழு ஒரு விடயத்தைப் பற்றி பறிந்தரைகளை சமர்ப்பித்து இருக்கும் நிலையில், அதே விடயத்தைப் பற்றி மீண்டும் மீண்டும் குழுக்கள் நியமிக்கப்பட்டு தாமே அதற்குத் தலைவராக நியமிக்கப்படும்போது, அதனை மறுக்காமல் ஏற்றுக்கொண்டு மாதக் கணக்கில் கூட்டங்களை நடத்தி அதே பரிந்துரைகளையே மீண்டும் மீண்டும் வழங்கிய “பெருமை” தினேஷ் குணவர்தனவே சாரும்.
எவ்வாறாயினும், இக்குழுக்களின் பரிந்துரைகளின் படி கலப்புத் தேர்தல் முறையின் கீழ், உள்ளுராட்சிமன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த ஏற்கனவே சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்போது பாராளுமன்ற தேர்தல்கள் விடயத்திலும் அம்முறையை அறிமுகப்படுத்தச் சட்டங்களை வரைய சட்ட வரைவு திணைக்களம் பணிக்கப்பட்டுள்ளது. இதன்போது, பிரதமர் “தினேஷ் குணவர்தனவின் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளையும் கவனத்தில் கொள்ளுமாறு” அத்திணைக்களத்துக்கு அமைச்சரவையால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாகப் பிரதமரின் தலைமையில் கடந்த இரண்டு தசாப்த காலத்தில் மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டு இருக்க, அவரது தலைமையிலான குழு என்று கூறும் போது அமைச்சரவை பெரும்பாலும் இறுதியாக 2021ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட குழுவையே குறிப்பிடுகிறது என்று நாம் ஊகிக்க வேண்டியுள்ளது.
இந்நாட்டு அரசியல்வாதிகள், குறிப்பாக ஆட்சியில் இருப்பவர்கள் ஞாபக சக்தியை இழந்தவர்கள் போல் தான் தெரிகிறது. தேர்தல் செலவுகள் தொடர்பான சட்டத்தை அமுலாக்க முற்பட்டு அதனடிப்படையில் கலப்பு தேர்தல் முறையின் அவசியத்தை உணர்ந்த போது இதற்கு முன்னர் மூன்று பாராளுமன்ற தெரிவுக்குழுக்கள் அதனை பரிந்துரைத்துள்ளன என்றும் அதன்படி, ஏற்கனவே உள்ளூராட்சிமன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தல்களுக்காகக் கலப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் அவர்கள் மறந்துவிட்டனர்.
எனவே தான் அம்முறையைப் பற்றி அரசியல் கட்சிகளின் கருத்துக்களைக் கண்டறிய அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டது. அவ் உப குழு தெரிவுக்குழுக்கள் மூலம் மூன்று முறை தமது கருத்துக்களைத் தெரிவித்த அதே அரசியல் கட்சிகளிடம் சென்று கருத்துக்களைக் கேட்டுள்ளது. அவ்வரசியல் கட்சிகளும் மீண்டுமொரு முறை கலப்புத் தேர்தல் முறையே வேண்டும் என்று கூறியுள்ளன.
அதன் பிரகாரம் பாராளுமன்றத் தேர்தலுக்கும் கலப்புத் தேர்தல் முறையை அறிமுகப்படுத்த சட்டம் வரையுமாறு சட்ட வரைவுத் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கும் போது தான் பிரதமரின் தலைமையிலான தெரிவுக்குழுவொன்று ஞாபகத்துக்கு வந்துள்ளது. (ஏனைய இரண்டையும் மறந்துவிட்டார்கள் போலும்.) எனவே அத்தெரிவுக்குழுவின் பரிந்துரைகளையும் கவனத்தில் கொள்ளுமாறு சட்ட வரைவுத் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறு ஆலோசனை வழங்கும்போது, மற்றுமொரு முக்கிய விடயத்தையும் அவர்கள் மறந்துவிட்டார்கள். அதாவது கலப்பு தேர்தல் முறையை அறிமுகப்படுத்தப் பாராளுமன்ற தேர்தல் சட்டத்தில் கொண்டுவர வேண்டிய மாற்றங்களைப் பரிந்துரைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையில்,
9 பேரர் கொண்ட ஆணைக்குழுவொன்றை நியமித்தார் என்பதே அந்த விடயமாகும்.
அவ்வாணைக்குழு ஆறு மாதங்களில், அதாவது இம்மாதம் 16ஆம் திகதிக்கு முன்னர் தமது பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னர் தான் அப் பரிந்துரைகளின் படி, சட்டமியற்ற சட்ட வரைவுத் திணைக்களத்தைப் பணிக்க வேண்டும்.
எனினும், அவ்வாணைக்குழுவை மறந்து அல்லது புறக்கணித்து அரசாங்கம் அதே விடயம் தொடர்பாகச் சட்டம் வரையுமாறு அத்திணைக்களத்தைப் பணித்துள்ளது, அல்லது பணிக்கப் போகிறது.
ஞாபக சக்தியை இழந்தவர்களாகவே இத்தலைவர்கள் செயற்படுகின்றனர் என்பது இனப் பிரச்சினை விடயத்திலும் பொருளாதார விடயங்களின் போதும் காணக்கூடியதாக இருந்தது.
2023ஆம் ஆண்டு 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2022ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட விவாதத்தின் போது கூறினார்.
அதனை மறந்து அவர் 2023ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய தைப் பொங்கல் விழாவில் உரையாற்றுகையில் இரண்டு வருடங்களில் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைப் பூரணமாக அமுலாக்குவதாக கூறினார்.
அதனையும் மறந்து அதே ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றும் போது அதே ஆண்டு இறுதிக்குள் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதாகக் கூறினார்.
அது ஒரு புறமிருக்க, தேர்தல் சட்ட மாற்றம் தெர்டர்பாக இரண்டு தசாப்தங்களாக முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை அமுலாக்காது பாராளுமன்ற தேர்தலொன்று நெருங்கி வரும் நிலையில் அதற்கான சட்டங்களை வரைய ஏன் அரசாங்கம் முன்வந்துள்ளது என்று எதிர்க் கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
கடந்த பொதுத் தேர்தலில் மாவட்ட ரீதியில் ஒரு ஆசனத்தையாவது வெற்றி பெறாத ஐ.தே.க எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பயந்து அத் தேர்தலை ஒத்திப் போடவே முயல்கிறது என்பதே எதிர்க் கட்சிகளின் வாதமாகும்.
ஐ.தே.க வின் கடந்த கால நடவடிக்கைகளைக் கருத்திற்கொள்ளும் போது, குறிப்பாக 2017ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களைக் காலவரையறையின்றி ஒத்தி வைக்க மேற்கொண்ட சூழ்ச்சியைக் கருத்திற்கொள்ளும் போது எதிர்க் கட்சிகளின் வாதத்தை நிராகரிக்க முடியாது.
2017ஆம் ஆண்டு; ஆட்சியில் இருந்த ஐ.தே.க மாகாண சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்கான சட்டமூலமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது.
அது தொடர்பான குழுநிலை விவாதத்தின்போது பெண்கள் பிரதிநிதித்துவத்தோடு சம்பந்தமே இல்லாத கலப்பு தேர்தல் தொடர்பான திருத்தமொன்றை ஆளும் கட்சி முன்வைத்து நிறைவேற்றிக்கொண்டது.
அத்திருத்தத்தைத் தனியாக சட்டமூலமாகவே சமர்ப்பித்திருக்க வேண்டும் அவ்வாறு செய்திருந்தால் அது உயர் நீதிமன்றத்தால் ஆராயப்பட்டு சிலவேளை அச்சட்டமூலம் அல்லது அதன் சில வாசகங்கள் அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கலாம்.
சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
ஆளும் கட்சியும் சேர்ந்து அதனை நிராகரித்தது. அதன் பின்னர் பிரதமரின் (ரணிலின்) தலைமையில் புதிய அறிக்கை சமர்ப்பித்திருக்க வேண்டும். அவர் சமர்ப்பிக்கவில்லை. எனவே, மாகாண சபைத் தேர்தல்கள் கடந்த ஆறரை ஆண்டுகளாக நடைபெறாமல் இருக்கிறது.
எனவே பழைய விகிதாசார முறைப்படி தேர்தலை நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்பி எம்.ஏ. சுமந்திரன் தனிநபர் சட்டமூலமொன்றை சமர்ப்பித்தார். ரணிலின் தலைமையிலான தற்போதைய அரசாங்கம் அதையாவது விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளாமல் இருக்கிறது.
04.03.2024
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago