Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 30, வியாழக்கிழமை
Mayu / 2024 செப்டெம்பர் 07 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஐயூப்
தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த ஜூலை 26 ஆம் திகதி அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியையும் அதற்காக வேட்புமனு தாக்கல் செய்யும் தினத்தையும் அறிவித்தது. அதன்படி அடுத்த (ஆகஸ்ட்) மாதம் 15 ஆம் திகதி வேட்புமனு தாக்கல் இடம்பெறவிருக்கிறது. தேர்தல் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம் இத்தேர்தலில் தோல்வி அடையலாம் என்ற பயத்தால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலை ஒத்திவைக்க பல்வேறு தந்திரங்களில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் கடந்த சில மாதங்களாக குற்றஞ்சாட்டி வருகின்றன.
அந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைக்குமாறு கோரி இம்மாதத்துக்குள் இரண்டு அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டன. அத்தோடு அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பொன்று அவசியமாகும் அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றுக்கான சட்டமூலமொன்றையும் வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.
அது தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டால் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் நாட்களிலேயே சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டியிருக்கும்.
இந்த அரசியலமைப்புத் திருத்தம் ஜனாதிபதித் தேர்தலை பாதிக்கலாம் என்று எதிர்க் கட்சிகள் தொடரந்து கூறி வரவே தேர்தல் முடியும் வரை அதனை வர்த்தமானியில் பிரசுரிக்க வேண்டாம் என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தமது அமைச்சன் செய்லாளரை கடந்த 18 ஆம் திகதி பணித்தார். ஆனால் அன்றே ஜனாதிபதி அதனை வர்த்தமானியில் பிரசுரிக்குமாறு பணித்தார். அது அன்றே பிரசுரிக்கப்பட்டது.
இதற்கிடையே தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 9 மனுக்களின் பூர்வாங்க விசாரணை முடிவடைந்துள்ளது.
அந்நிலையில் அம்மனுக்கள் தொடர்பான விசாரணை முடியும் வரை தென்னகோன் பொலிஸ் மா அதிபர் பதவியில் கடமையாற்ற கூடாது என்று உயர் நீதிமன்றம் கடந்த 24 ஆம் திகதி உத்தரவிட்டது.
அரசாங்கம் அத்தீர்ப்பை ஏற்க மறுத்துள்ளது. அத்தீர்ப்பு சட்டவிரோதமானது என்று பிரதமர் தினேஷ் குணவர்தன கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அது பாராளுமன்ற சிறப்புரிமையை பாவித்து தெரிவிக்கப்பட்ட கருத்து என்றும் முடியுமென்றால் அக்கருத்தை வெளியில் வந்து வெளியிடுமாறும் எதிர்க்கட்சிகள் பிரதமருக்கு சவால் விடுத்துள்ளன.
தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்க வேண்டும் என ஜனாதிபதி மேற்கொண்ட பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பான அரசியலமைப்புச் சபையின் விவாதம் கடந்த பெப்ரவரி 26 ஆம் திகதி நடைபெற்ற போது அச்சபையின் 4 உறுப்பினர்கள் அதனை ஆதரித்தனர். இருவர் அதனை எதிர்த்தனர். மேலும் இருவர் வாக்களிப்பை தவிர்த்துக் கொண்டனர்.
அச்சபையின் உறுப்பினர்களில் குறைந்தபட்சம் ஐவரது ஒப்புதலிலேயேயே ஜனாதிபதி உயர் மட்ட பதவிகளுக்கு எவரையும் நியமிக்க முடியும். ஒரு நியமனத்துக்கு ஆதரவானவர்களினதும் எதிரானவர்களினதும் எண்ணிக்கை சமமாகும் பட்சத்தில் சபையின் தவிசாளரான சபாநாயகர் தமது வாக்கை ஏதோ ஒரு பக்கத்துக்கு அளித்து நியமனத்துக்கான அங்கீகாரத்தையோ, மறுப்பையோ ஜனாதிபதிக்கு தெரிவிக்க முடியும்.
தென்னகோனின் நியமனத்தை பற்றிய விடயத்தில் வாக்களிக்காமல் இருந்த இருவரும் எதிர்த்து வாக்களித்தவர்கள் என்ற அடிப்படையில் ஆதரவானவர்களும் எதிரானவர்களும் சமமாக இருப்பதாக கூறி சபாநாயகர் தமது வாக்கை நியமனத்துக்கு ஆதரவாக அளித்து அரசியலமைப்புச் சபை அந்நியமனத்தை அங்கீகரித்ததாக ஜனாதிபதிக்கு அறிவித்தார்.
இந்த முடிவு பிழையானது என்றும் வேறு காரணங்களை முன்வைத்தும் 9 அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. வாக்களிப்பின் போது நடுநிலை வகித்தவர்களுக்கு அதனை எதிர்க்கும் நோக்கம் இருந்திருந்தால் அவர்கள் நடுநிலை வகிக்காமல் எதிர்த்தே வாக்களித்து இருப்பார்கள் என்பதே அவர்களது வாதமாகும். அந்த வாதத்தை ஏற்றே உயர் நீதிமன்றம் தென்னகோனின் நிமனத்துக்கு கடந்த 24 ஆம் திகதி இடைக்கால தடை விதித்தது.
இப்போதும் சபாநாயகர் தமது நிலைப்பாட்டை நியாயப்படுத்தி கொண்டே இருக்கிறார். இந்த விடயத்தில் தாம் எவ்வித தவறும் செய்யவில்லை என்று அவர் பாராளுமன்றத்தில் கூறினார்.
ஜனாதிபதி அத்தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் ஏற்றுக்கொண்டவரை போல் கருத்து வெளியிடுகிறார்.
தென்னகோனின் நியமனத்தை இடைநிறுத்திய உயர் நீதிமன்றம் விசாரணை முடியும் வரை பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு அறிவித்தது. பொலிஸ் மா அதிபரின் பதவி இடைநிறுத்தப்பட்டுள்ளதே தவிர அவர் பதவி நீக்கப்படவில்லை என்றும் அந்த நிலையில் நீதிமன்றத்தின் கருத்தின் படி தாம் பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமித்தால் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரான தமக்கு எதிரான தேர்தல் மனுவொன்றுக்கு அது நாளை காரணமாக அமையலாம் என்றும் தாம் இந்த விடயத்திலிருந்து ஒதுங்கி நிற்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
எனவே இப்போது தென்னகோனால் பொலிஸ் மா அதிபராக செயற்படவும் முடியாது. பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்க முடியாது என்று ஜனாதிபதியும் கூறுகிறார். எனவே பொலிஸ் மா அதிபரோ பதில் பொலிஸ் மா அதிபரோ இல்லாத நிலைமை நாட்டில் உருவாகியிருக்கிறது.
இதை காரணமாக காட்டி தேர்தலை ஒத்திவைக்கவே ஜனாதிபதி முயல்கிறார் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. அதிலும் உண்மை இருக்கலாம் ஏனென்றால் இப்போது ஜனாதிபதியும் பிரதமரும் சபாநாயகரும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிராகரிப்பதைப் போல் தான் நடந்துகொள்கின்றனர்.
அரசியலமைப்புச் சபை சட்டமன்றத்தின் (பாராளுமன்றத்தின்) ஓர் அங்கம் என்றும் எனவே தென்னகோனின் நியமனத்தை அரசியலமைப்புச் சபை அங்கீகரித்ததை எதிர்த்து தீர்ப்பு வழங்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.
நீதிமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டால் சட்டமன்றம் நீதிமன்றத்தின் கட்டளைகளை ஏற்கத் தேவையில்லை என்று 1991 ஆம் ஆண்டு அப்போதைய சபாநாயகர் அனுர பண்டாரநாயக்க வழங்கிய தீர்ப்பை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆனால் இதற்கு முன்னர் ஜனாதிபதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பிரதம நீதிபதி நிஸ்ஸங்க கருணாரத்னவை உயர் நீதிமன்றத்துக்கு பரிந்துரைத்த போது அதனை அரசியலமைப்புச் சபை நிராகரித்தது. அது சர்ச்சையாகவே ஜனாதிபதி அரசியலமைப்புச் சபை நிறைவேற்றுத்துறையின் அங்கம் என்றும் அச்சபை நிறைவேற்றுத்துறையின் தலைவரான ஜனாதிபதிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என்றும் வாதிட்டார்.
அரசியலமைப்புச் சபை நிறைவேற்றுத்துறையின் அங்கமா அல்லது சட்டமன்றத்தின் அங்கமா என்பது ஒரு புறமிருக்க அதன் முடிவுகளை சவாலுக்குட்படுத்த முடியாது என்று அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் 126 ஆவது உறுப்புரைக்கு அமைவாக (அதாவது அடிப்படை உரிமை மனுக்கள் மூலம்) அதன் முடிவுகளை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியும் என்றும் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசபந்து விடயத்தில் அடிப்படை உரிமை மனுக்களே தாக்கல் செய்யப்பட்டன. எனவே அரசியலமைப்புச் சபை தேசபந்துவின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கிய முறை பிழையானது என்ற அடிப்படையில் உயர் நீதிமன்றம் அவருக்கு இடைக்கால தடை விதித்தமை சட்ட விரோதமானது என்று கூற முடியாது. இந்த நிலையில் இப்போது தேசபந்து விடயத்தில் பிரதம நீதியரசரும் சபாநாயகரும் கலந்தாலோசித்து ஒரு முடிவை எடுக்கலாம் என்று ஜனாதிபதி கூறியிருக்கிறார்.
உயர் நீதிமன்றம் ஒரு விடயத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி ஆலோசனை வழங்கலாமா? அவருக்கு அதற்கு அதிகாரம் இருக்கிறதா? தேசபந்துவின் நிமனத்துக்கு ஒப்புதல் வழங்குவதில் சபாநாயகர் முறையாக செய்றபடவில்லை என்ற அடிப்படையிலேயே நீதிமன்றம் தேசபந்துவின் நியமனத்துக்கு இடைக்கால தடை விதித்தது.
அதாவது இந்த வழக்கில் சபாநாயகரும் ஒரு பிரதிவாதியாவார். நீதிபதியும் பிரதிவாதியும் கலந்துரையாடி வழக்கு விடயத்தில் முடிவு எடுக்க முடியுமா? அவ்வாறாயின் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய இடைக்கால தீர்ப்பு செல்லுபடியில்லை என்று நீதிமன்றம் ஒப்புக்கொள்ள வேண்டுமா?
தேசபந்துவின் நியமனத்தில் ஜனாதிபதி இவ்வளவு ஆர்வம் காட்டுவது ஏன்? அவரது நியமனத்துக்கு அரசியலமைப்புச் சபையின் ஒப்புதல் முறையாக கிடைக்கவில்லை என்பதை நாம் மேலே விவரித்தோம். அவ்வாறிருக்க அதற்கு அச்சபையின் ஒப்புதல் முறையாக வழங்கப்பட்டதாக சபாநாயகர் ஏன் ஜனாதிபதிக்கு அறிவிக்க வேண்டும்?
இப்போது உயர் நீதிமன்றம் அந்த நியமனம் முறையாக இடம் பெறவில்லை என்பதை ஓரளவுக்கு ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் அந்த நியமனத்துக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
அதையும் ஏற்க ஜனாதிபதி தயாரில்லை போல் தான் தெரிகிறது. அதனால் தான் இவ்விடயத்தை சபாநாயகரும் பிரதம நீதியரசரும் கலந்தாலோசித்து தீர்க்க வேண்டும் என்கிறார்.
அதேவேளை தீர்ப்பை ஏற்க விருப்பம் இல்லாததால் தான் இத்தீர்ப்பின் படி தாம் பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமித்தால் தமக்கு எதிராக நாளை தேர்தல் மனுவொன்று தாக்கல் செய்யப்படலாம் என்று கூறுகிறார்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் தான் அவ்வாறான தேர்தல் மனுக்கள் தாக்கல் செய்யப்படலாம். அதேவேளை, அவர் பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமித்தால் அதன் மூலம் அவர் நீதிமன்ற உத்தரவையே நிறைவேற்றுகிறார்.
அதற்கு எதிராக தேர்தல மனுத தாக்கல் செய்யலாமா? தாக்கல் செய்தாலும் அது தோல்வியிலேயே முடியும். இதனால் தான் பொலிஸ் மா அதிபர் விடயத்தில் குழப்ப நிலையை உருவாக்கி ஜனாதிபதித் தேர்தலை ஒத்திப்போட ஜனாதிபதி முயல்வதாக எதிர்க் கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.
07.31.2024
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
50 minute ago
2 hours ago