2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

தேசிய சபையும் தமிழ், முஸ்லிம்களின் வகிபாகமும்

Johnsan Bastiampillai   / 2022 ஒக்டோபர் 04 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

இந்தியாவின் சினிமாத்துறை, அந்நாட்டின் அரசியலுக்கு பல நல்ல அரசியல்வாதிகளைக் கொடுத்துள்ளது. நமது நாட்டின் அரசியலானது, நல்ல நடிகர்களை உருவாக்கி இருக்கின்றது. ஆட்சியாளர்கள் உள்ளடங்கலாக, பெருந்தேசிய அரசியல்வாதிகள், சிறுபான்மை அரசியல்வாதிகள் என ஏகப்பட்டோர், இந்த நடிகர்கள் பட்டியலில் உள்ளடங்குகின்றனர். 

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர், முதலில் சர்வகட்சி அரசாங்கத்தை நிறுவமுயன்றார். பின்னர், தேசிய அரசாங்கத்தை நிறுவ நினைத்தார். பல்வேறு காரணங்களால், அவை இரண்டுமே கைகூடவில்லை. 

ஆயினும், நாட்டில் பிரச்சினைகளை கையாள்வதற்காக மட்டுமன்றி, குழப்பங்கள் ஏற்படுவதைத் தவிர்ப்பதன் மூலம், தனது இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்கும், சர்வதேச அழுத்தங்களை குறைத்துக் கொள்வதற்கும், ஏதாவது ஒரு கட்டமைப்பை நிறுவ வேண்டிய நிர்ப்பந்தம் ஜனாதிபதிக்கு ஏற்பட்டிருந்தது. நாட்டுக்கும் அவ்வாறான தேவை ஒன்று உள்ளது. 

இந்தப் பின்னணியிலேயே, இப்போது ‘தேசிய சபை’ நிறுவப்பட்டுள்ளது. தமிழ், முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் மட்டுமன்றி, மலையக மக்களின் பிரதிநிதிகளும் இதில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

ஆனால், செப்டெம்பர் 29ஆம் திகதி, தேசிய பேரவையின் கன்னி அமர்வு இடம்பெற்ற போது, சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த எம்.பிக்கள் சிலர் கலந்து கொண்டிருக்கவில்லை என்பது கவனிப்புக்குரியது.

டக்ளஸ் தேவானந்தா, ஏ.எல்.எம் அதாவுல்லா, சி.வி விக்கினேஸ்வரன், கஜேந்திரகுமார், நஸீர் அஹமட் ஆகியோர் கலந்துகொள்ளாதவர்களுள் முக்கியமானவர்கள். மேலும், இதில் இருவர் அமைச்சர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுதவிர, எதிர்க்கட்சித் தலைவரும் இதில் கலந்து கொள்ளவில்லை.

இந்தத் தேசிய பேரவை தொடர்பில் பல்வேறு கருத்துகள் உள்ளன. யதார்த்தபூர்வமான அரசியலோடு நெருங்கிப் போகாமல், கருத்தியல் ரீதியான அரசியலில் மட்டும் கவனம் செலுத்துகின்ற மக்கள் விடுதலை முன்னணி, “இது ஒரு வரலாற்று வித்தை” என்று கூறியிருந்தது.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஓரிரண்டு எம்.பிக்களுக்கும் இதில் பெரிதாக உடன்பாடு இல்லை என்பதை, அவர்களது கருத்துகள் வெளிப்படுத்துகின்றன. அத்துடன், இதில் கூட்டமைப்பு இணைந்து கொள்வதற்கு, தமிழ் மக்களின் பிரச்சினைகளை முன்நிபந்தனையாக முன்வைத்துள்ளதையும் குறிப்பிட்டாக வேண்டும். 

விரும்பியோ விரும்பாமலோ, விளங்கியோ விளங்காமலோ, சில முஸ்லிம் அரசியல்வாதிகள் இதனை வரவேற்கின்றனர்; சில எம்.பிக்கள் எதிர்க்கின்றனர். இவை இரண்டையும் வழக்கம்போல, மூடுமந்திரமாகவே செய்ய எத்தனிக்கின்றனர். ‘உள்ளொன்று வைத்துப் புறமொன்று செயற்படுவது’ அவர்களுக்குப் புதியதும் அல்ல. 

எது எவ்வாறிருப்பினும், முதலாவது கூட்டத்திலேயே ஆளும் தரப்புக்கு ஆதரவளிக்கும் சில தமிழ், முஸ்லிம் எம்.பிக்கள் கூட, இதில் கலந்து கொள்ளாமை என்னவோ போல் இருக்கின்றது. இது ஒரு வகையில் முதற்கோணல் என்பது மட்டுமல்லாமல், பல்வேறு கேள்விகள் எழுவதற்கும் காரணமாகியுள்ளது. 

தேசிய சபை என்பது, இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அனைத்து விதமான நெருக்கடிகளையும் கலந்துரையாடி, தீர்வுகளைத் தேடுவதற்கான ஒரு பொதுத் தளம் என்று கூறப்படுகின்றது.

அப்படியென்றால், முதலாவது அமர்விலேயே அரசாங்கத் தரப்பு அரசியல்வாதிகள் கூடக் கலந்து கொள்ளாமையை, அதில் அவர்கள் நம்பிக்கை அற்றவர்களாக இருக்கின்றார்கள் என்று எடுத்துக் கொள்ளவதா? அல்லது, அவர்களுக்கு ‘தவிர்க்க முடியாத’ வேறு வேலைகள் இருந்தன என்று கூறி, இந்தச் சந்தேகங்கத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதா என்று அடுக்கடுக்காகக் கேள்விகள் எழுகின்றன.

இலங்கையில் நாடக பாணியிலான அரசியலும், அதில் பல நடிகர்களும் இருக்கின்றார்கள் என்பதே நாம் கண்ட உண்மையாகும். முன்னதாக, இலங்கையின் பிரச்சினைகளைத் தீர்க்க, அறுதிப்பெரும்பான்மை வாக்குகள் தேவை என்று ராஜபக்‌ஷர்கள் கூறி, 69 இலட்சம் வாக்குகளைப் பெற்றார்கள்.

அதன் பிறகு, நிலைமைகளைக் கையாள்வது என்றால், ஜனாதிபதிக்கு அதிகரித்த அதிகாரம் இருக்க வேண்டுமெனக் கூறி, அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றினார்கள். பின்னர், பசில் ராஜபக்‌ஷ எம்.பியானால், எல்லாம் சரியாகி விடும் என்றார்கள். கடைசியில், தம்மிக்க பெரேராவையும் அமைச்சராக்கிப் பார்த்தார்கள். ஆனால், நாட்டு மக்களுக்கு நல்லது எதுவும் நடக்கவில்லை. 

மாறாக, அவர்கள் கொள்ளையடித்தார்கள்; நாட்டு மக்கள் எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்தார்கள். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு பிரச்சினைக்கும் ராஜபக்‌ஷர்களின் சூத்திரம் தீர்வாக அமையவில்லை. 

இதைப் பயன்படுத்தித்தான் ரணில் விக்கிரமசிங்க, தனது ஜனாதிபதி கனவை நனவாக்கிக் கொண்டார். அவரது சூட்சுமமான போக்குகள் தொடர்பில், நம்பிக்கையீனங்களும் எச்சரிக்கை உணர்வும் இன்று வரை உள்ளன. அவரது வருகையின் பின்னரும், நாட்டின் பிரச்சினைகள் அப்படியேதான் உள்ளன. ஆயினும், நெருக்கடிகள் ‘ஒரு சொட்டு’ குறைந்துள்ளதான தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையிலேயே, சர்வகட்சி அல்லது தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான முன்னெடுப்புகள் கைகூடாத நிலையில், நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான கட்சிப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு தேசிய சபையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உருவாக்கியுள்ளார். 

தேசிய சபை என்பது, தற்போது விமர்சிக்கப்படுவதைப் போல மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றுவதற்கான ஓர் ஏற்பாடாக இருக்கலாம். மேலே குறிப்பிட்டதைப் போல, ராஜபக்‌ஷர்களும் இப்படித்தான் 69 இலட்சம், 20ஆவது திருத்தம், பசில் என, மக்களுக்கு ‘பூச்சாண்டி’ காட்டி ஏமாற்றினார்கள்.

அவ்வாறில்லாவிடின், 2015இன் பின்னரான நல்லாட்சிக் காலத்தில், மைத்திரியும் ரணிலும் சேர்ந்து முன்மொழிந்த ‘நாடாளுமன்ற பேரவை’ போல, ஓர் ஏட்டுச் சுரைக்காயாகவும் அமைந்து விட, நிகழ்தகவுகள் இல்லாமலில்லை.

தேசிய சபையானது, பேய்க்காட்டுவதற்காக அல்லது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டதாயினும், இதனால் நாட்டின் நெருக்கடிகளை முற்றாகத் தீர்க்க முடியாது என்று முன்கணிப்புகள் இருந்தாலும் கூட, இதைக் கொண்டு மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வாய்ப்பிருக்கின்றது என்பதை மறுத்து விடக்கூடாது.

அதாவது, ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், ஜே.வி.பி தலைவர், தமிழ், முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் இச்சபையின் உறுப்பினர்களது இதயசுத்தியுடனான, அரசியல் நோக்கற்ற செயற்பாட்டிலும் வினைத்திறனான பங்கேற்பிலுமே இச்சபையின் வெற்றியும் தோல்வியும் தங்கியுள்ளது.

நாம் எத்தனையோ சபைகள், ஆணைக்குழுக்கள், விசாரணைக் குழுக்கள், உபகுழுக்கள், தெரிவுக்குழுக்கள், அறிக்கைக் குழுக்கள் போன்றவற்றை, இதற்கு முன்னர் கண்டிருக்கின்றோம். அவையெல்லாம் கடைசியில், எப்படி எந்தப் பலனுமற்றுப் போயின என்பதையும் நன்கறிவோம்.

அதுபோலவே, இதுவும் தோன்றினாலும், இதைத் தாண்டி நமது பங்களிப்புகளை வழங்குவது, காலத்தின் தேவையாகவுள்ளது. கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட பல முக்கிய குழுக்களில், சிறுபான்மையின அரசியல்வாதிகள் உள்ளடக்கப்படவில்லை. குறிப்பாக, முஸ்லிம்கள் அதிகம் வஞ்சிக்கப்பட்டு, புறமொதுக்கப்பட்ட வரலாறு இருக்கின்றது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், முஸ்லிம்களின் அல்லது தமிழர்களின் பிரதிநிதித்துவம் மறுக்கப்படுவதாகவும் இதன் ஊடாக, உரிமைக்கான குரல் நசுக்கப்படுவதாகவும் சிறுபான்மை மக்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

குறிப்பாக, “எங்களுக்கு வாய்ப்பு, அதிகாரம் தரப்படவில்லை; தந்திருந்தால்  முஸ்லிம் சமூகத்தின் எல்லாப் பிரச்சினைகளையும் நாம் தீர்த்து வைத்திருப்போம்” என்ற தோரணையில்தான், முஸ்லிம் கட்சித் தலைவர்களும் எம்.பிக்களும் ஒப்பாரி வைத்து வந்தனர். 

அந்தவகையில் நோக்கினால், தேசிய சபை என்பது கூட, கிடைத்துள்ள வாய்ப்பு என்றுதான் கருத வேண்டும். இதனை காத்திரமாக, வினைத்திறனாகப் பயன்படுத்துவதன் ஊடாக, தங்களது ‘செயற்றிறனை’ நிரூபிப்பதற்கான களம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு உள்ளது. 

தேசிய சபை, ஒரு காத்திரமான முன்னெடுப்பா அல்லது ஏமாற்று வித்தையா என்பது ஒருபுறமிருக்கட்டும். இன்னும் சில காலத்துக்கு இது இலங்கை அரசியலில் ஒரு முக்கிய கூறாக இருக்கப் போகின்றது என்றால், அதிலிருந்து முஸ்லிம்கள் விலகியிருக்க முடியாது. தமிழர்களின் நிலையும் இதுதான். ஆக, இப்போது நம்முன் இரண்டு தெரிவுகள் உள்ளன.

ஒன்று, உருவாக்கப்பட்டுள்ள தேசிய சபை, ஒரு போலி நாடகம் என்றால் அதனை முஸ்லிம், தமிழ் அரசியல்வாதிகள் மக்கள் மன்றத்தில் வெளிப்படையாகத் தெளிவுபடுத்திக் கூறுவதுடன், ஆசனத்தை வெறுமனே சூடாக்கிக் கொண்டிருக்காமல் அதிலிருந்து விலகிக் கொள்ளலாம்.

அல்லது, இது இன்றைய சூழலில் ஏதோ ஒருவகையில் செல்வாக்குச் செலுத்தப் போகின்றது; காரியமாற்றப் போகின்ற ஒரு சபையாக இருக்குமென்ற நம்பிக்கை இருந்தால், அந்த நம்பிக்கை கலையும் வரைக்காவது தேசிய சபைக்கு முழுமையான பங்களிப்பை வழங்குவதன் ஊடாக, தமது வகிபாகத்தை சரிவரப் பயன்படுத்த வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .