2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

‘தென்னிலங்கையில் இனவாதம் விரும்பி விதைக்கப்படுகிறது’

Editorial   / 2020 ஜூலை 19 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

சமூகப் பணிகளைச் செய்வதற்கு, அரசியல் அங்கிகாரம் தேவையென்பது, இலங்கை அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டதென, மட்டக்களப்பின் பிரபல சமூகச் சேவையாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில், தொலைபேசி சின்னத்தில் இலக்கம் 6இல் போட்டியிடும் வேட்பாளருான எம்.எல்.அப்துல் லத்தீப் தெரிவித்தார்.

சமூக சேவைகளைச் செய்ய முனைப்புக் காட்டும்போது, அதனைச் செய்யவிடாது அரசியல் அதிகாரத்தினால் முடக்கங்களும் இடையூறுகளும் ஏற்படுகின்றன. எனக்கு மட்டுமல்ல. சமூக சேவைகளில் ஈடுபடும் எவருக்கும் இந்தக் கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். நாங்கள் அரசியலிலே நாட்டம் கொள்ளாவிட்டாலும், அரசியலில் நுழைவதற்கு எவ்வாறோ நிர்ப்பந்திக்கப்படுகின்றோம் என்றும் அவர் கூறினார். 

தமிழ்மிரருக்கு அவர் வழங்கிய பிரத்தியேகச் செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறினார். செவ்வியின் முழு விவரம் வருமாறு,

கேள்வி - நீங்கள், பல்வேறு சமூக சேவை நிறுவனங்களிலும் பொது அமைப்புகளிலும் இணைந்து, சமூக சேவைகளில் உங்களை ஈடுபடுத்திக் கொண்டவர். அவ்வாறிருக்கும் நிலையில், ஏன் அரசியலுக்குள் நுழைந்தீர்கள்?

சமூக சேவைகளைச் செய்ய முனைப்புக் காட்டும்போது, அதனைச் செய்யவிடாது அரசியல் அதிகாரத்தினால் முடக்கங்களும் இடையூறுகளும் ஏற்படுகின்றன. எனக்கு மட்டுமல்ல, சமூக சேவைகளில் ஈடுபடும் எவருக்கும் இந்தக் கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். நாங்கள், அரசியலிலே நாட்டம் கொள்ளாவிட்டாலும், அரசியலில் நுழைவதற்கு எவ்வாறோ நிர்ப்பந்திக்கப்படுகின்றோம்.

சமூக சேவைகளைத் திறம்படச் செய்ய வேண்டும் என்ற காரணத்தினால், 1988ஆம் ஆண்டு முதற்கொண்டு அரசியலில் நுழைந்தேன். நான் பாடசாலை மாணவப் பருவத்திலிருந்தே சமூக சேவைப் பணிகளில் நாட்டம் கொண்டு ஈடுபடத் தொடங்கியவன்.

இப்பிரதேசத்தில், இயற்கை இடர்கள் நிகழும்போதும் சமூகங்களுக்கிடையில் இனக் கலவரங்கள்  ஏற்படுத்தப்படும் போதும், பல சமூக சேவை அமைப்புகளை உருவாக்கி, சமூக ஒற்றுமை உட்பட பலவகையான உதவிகளை வழங்கும் ஊக்குவிப்புச் சேவைகளை முன்னெடுத்து  வந்திருந்திருக்கின்றேன்.

இந்திய அமைதிப்படை இங்கு வந்து அமைதியின்மை ஏற்பட்டபொழுதிலும்கூட, மக்களைக் காக்கும் ஓர் அரணாக, பள்ளிவாசல்களையும் இணைத்துக்கொண்டு சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தை உருவாக்கினேன். அது, இன்று வரை ஏறாவூர் பள்ளிவாசல்கள், முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனமாகப் பரிணமித்துள்ளது.

எவ்வாறேனும், சமூகப் பணிகளைச் செய்வதற்கு அரசியல் அங்கிகாரம் என்பது இலங்கை வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

கேள்வி - இன ரீதியிலான அரசியல் கட்சிகளில் நுழைவதிலிருந்து, நீங்கள் நீண்ட காலமாக உங்களைத் தூரப்படுத்தியே வந்திருக்கின்றீர்கள். ஆனால், மிகக் கிட்டிய காலத்தில், ஒரு சமூகம் சார்ந்த அரசியல் கட்சிக்காக உழைக்கிறீர்கள். எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்தது?

நீங்கள் கூறுவது சரி, பல்லினச் சமூகம் வாழும் இந்த நாட்டில், இனங்களுக்கிடையில் கூறுபோட்டு சின்னாபின்னப்படுத்தும் செயற்பாட்டை வெறுக்கின்ற சிந்தனையோடு நான் மிக உறுதியாக இருந்தேன்.

நான், ஐ.தே.கவின் மாவட்ட அமைப்பாளராகச் செயற்பட்டிருக்கின்றேன். 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்ட தருணத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐக்கிய தேசிய கட்சியை வழிநடத்தும் முழுப் பொறுப்பையும் அவர் என்னிடமே ஒப்படைத்திருந்தார்.

2008ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல் வந்தது. அதிலே, கிழக்கு மாகாணத்தை ஐ.தே.க கைப்பற்றுவதாக இருந்தால், முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெறவேண்டும் என்பதற்காக, அந்தத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸோடு ஐ.தே.க பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டு அடிப்படையில் வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

அந்த வகையில், ஐ.தே.க சார்பில் தமிழ் வேட்பாளர்களைக்கூட நான் தான் அழைத்துச் சென்றிருந்தேன். அங்கு, பலகட்டப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற தறுவாயிலும், என்னை வேட்பாளராக நியமிக்கக் கூடாது என்பதில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் விசேடமக அதன் தவிசாளர் பதவியிலிருந்த பஷீர் சேகுதாவூத் (இப்பொழுது முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பை உருவாக்கியிருப்பவர்) உட்பட பலர், மிகத் தீவிரமாக இருந்தார்கள். அதனால், ஐ.தே.க என்னை, அம்பாறை மாவட்டத்திலே ஒரு வேட்பாளராக நிறுத்தி, போனஸ் ஆசனம் தருவதாகச் சொன்னார்கள். ஆனால், அந்த வாய்ப்பு எனக்குத் தரப்படவில்லை. இருப்பினும், 2010இல் சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட தருணத்திலும், நானே மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐ.தே.கவுக்குப் பொறுப்பாக இருந்து செயற்பட்டேன்.

பிற்பட்ட காலத்திலே, ஐ.தே.கவிலே சிறுபான்மைச் சமூகக் கட்சிகளின் பலம் மேலோங்கியது. ஆயினும், இங்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சிறுபான்மை மக்கள், ஐ.தே.கவில் முன்னிலை வகிக்க முடியாத ஒரு நிலை இருந்து வந்தது. ஐ.தே.கவுக்கு நாங்கள் தேவையாக இருந்தோம். ஆனால், தேர்தலென்று வந்தால், நாங்கள் ஒதுக்கப்பட்டு அவர்களுக்குப் பின்னால் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது.

இவ்வாறான கையறு நிலையிலேதான், ஒரு கட்டத்திலே சமூகம் சார்ந்த கட்சிகள் குறிப்பாக, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகள் என்னை அழைத்தன. அந்த அடிப்படையிலேதான், சமூகச் சேவைக்கான அரசியல் அங்கிகாரம் பெறும் நோக்கோடு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எனும் சமூகக் கட்சியோடு இணைந்துகொண்டேன்.

கேள்வி -  ஒரு காலத்தில், மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பலமிக்க அரசியல் பிரமுகராகச் செயற்பட்ட நீங்கள், இப்பொழுது பிளவுபட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் சஜித் தலைமையிலான அணியோடு களமிறங்கியுள்ளீர்கள். ஆனால், ஐ.தே.க பல கூறுகளாகப் பிளவுபட்டுள்ளதால், அதன் ஆதரவாளர்களும் பல கூறுகளாகப் பிரிந்து நிற்கிறார்களே..?

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், சிறுபான்மையினர் சஜித் பிரேமதாஸவுக்கு கட்சி பேதமின்றி தங்களது அமோக ஆதரவை வழங்கியிருந்தனர். ஆனால், சிறுபான்மையினரின் ஆதரவு தேவையில்லை எனக் கூறிய இனவாதத் தரப்பினர், அதனை நிரூபித்து ஆட்சிக்கு வந்துள்ளனர் என்று சிலர் வாதிடுகின்றார்கள்.

கேள்வி - சிங்களப் பெரும்பான்மையின மக்கள் மத்தியில், இந்தப் பொதுத் தேர்தலிலும் இந்த நிரூபணம் இருக்குமல்லவா?

நீங்கள் கேட்டிருக்கின்ற இந்தக் கேள்வி, மக்களைச் சிந்திக்க வைக்கக் கூடியதுதான். பொதுவாகவே, ஐ.தே.க பிளவுபட்டிருக்கின்றது என்பது உண்மைதான். இருந்தாலும், சுமார் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஐ.தே.க முக்கியஸ்தர்களும் ஆதரவாளர்களும், தற்போது நாங்கள் அணி திரண்டிருக்கும் சஜித் பிரேமதாஸவுடனான அணியில் இணைந்திருக்கின்றார்கள்.

2015 தொடக்கம் 2019 வரையான நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலே, ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பொறுப்பற்ற தன்மையினால், மத்திய வங்கியில் ஊழல் இடம்பெற்றது.

எனவே, இத்தகைய ஊழலுக்குத் துணைபோகும் தலைமையின் செயற்பாடு, மக்களால் நிராகரிக்கப்பட வேண்டியது.புதியவர்களுக்கு, குறிப்பாக அரசியல் பின்னணியையும் ஆளுமையையும் கொண்ட சஜித் பிரேமதாஸ போன்றவர்களுக்கு ரணில் வாய்ப்பளிப்பார் என நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை. கட்சி சின்னாபின்னமானாலும் பறவாயில்லை, தனது அரசியல் அதிகாரத் தலைமைப் பதவி பறிபோய்விடக் கூடாது என்பதில், நாட்டு நலன், கட்சி நலன், மக்கள் நலன்பற்றி சிந்திக்காதவராக சுயநலமிக்கவராகவே ரணில் இருந்து வருகின்றார்.

இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும்கூட, ஐ.தே.க சார்பாகக் களமிறங்குமாறு வேண்டுகோள் விடுத்து, ஐ.தே.க தலைமையிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் நான், ஐதேக வழி செல்லும் முடிவிலிருந்து விலகிவிட்டேன் என்று பதிலளித்தேன்.

உங்களது கேள்விக்கு நான் நேரடியாகப் பதிலளிப்பதாயின், கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், ஐ.தே.க என்றால் சஜித் பிரேமதாஸவுடைய ஐக்கிய மக்கள் சக்தி அணி என்றுதான் மக்கள் கருதிக் கொண்டிருக்கின்றார்கள். இப்படியாக எமது பிரசார வேலையின்போது தமிழ், முஸ்லிம் மக்களின் உணர்வு தெளிவாகத் தெரிகின்றது.

அதேவளை, இலங்கையின் புரட்சிமிக்க தலைவனாக இருந்த முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸவின் சேவைகளும், அவரது புதல்வனான சஜித்தின் செல்வாக்கை மேலோங்கச் செய்திருக்கின்றது. தென்னிலங்கையிலும் இந்த மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். அந்த வகையிலே, நாடாளுமன்றத்தின் அதிகாரம் சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்திக்குக் கிட்டும்.

கேள்வி - சமூக சட்டங்கள், முஸ்லிம்களுக்கான சட்டம், தமிழர்களுக்கான தேச வழமைச் சட்டம், கண்டியச் சட்டம் இதுபோன்ற எந்தவொரு சமூகம் சார்ந்த சட்டங்களும் இனித் தேவையில்லை; நாட்டிலே ஒரு சட்டம்தான் வேண்டும் என்று ஒரு சாரார் கூக்குரலிடுகிறார்கள். அதனை முறியடிக்கவும் சமூக, கலாசார, பண்பாட்டு, பூர்வீக உரிமைகளைப் பாதுகாக்கும் வண்ணம் சிறுபான்மையினரான தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைய வேண்டும் என்று நீங்கள் பிரஸ்தாபித்து வருகிறீர்கள் இதன் அர்த்தம் என்ன?

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், சிறுபான்மை மக்களுக்கெதிராக, குறிப்பாக முஸ்லிம்களைக் குறி வைத்துப் பல கோஷங்கள் எழுப்பப்பட்டு, முஸ்லிம் சமூகத் தலைவர்கள், அரசியல் தலைவர்களெல்லாம் பல்வேறு நெருக்குவாரங்களுக்கும் ‪தொல்லைகளுக்கும் ஆளாக்கப்பட்டார்கள். அப்போதைய ஜனாதிபதி வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டபாய ராஜபக்‌ஷவின் ‪பிரசாரமும்கூட, சிறுபான்மை இனங்களுக்கு எதிராகவே அமைந்திருந்ததை உலகம் அறியும். இப்போதும்கூட, அந்த ஆளும் கட்சியிலுள்ள பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், சிறுபான்மை மக்களை மலினப்படுத்தவதில் ஈடுபட்டுள்ளார்கள்.

இதனை முன்னிறுத்தியே, வருகின்ற நாடாளுமன்றத்திலே சிறுபான்மை மக்களின் கணிசமான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். அந்த அடிப்படையிலேதான் சிறுபான்மை மக்கள் ஒன்றுபட்டு தங்களது சமூக கலாசார பாரம்பரியங்களைப் பாதுகாக்கும் பிரயத்தனத்தை மேற்கொள்ள வேண்டும் என்று நான் வலியுறுத்துகின்றேன்.

அப்பொழுதுதான், சிறுபான்மையினரின் தனித்துவம் நிலைநாட்டப்படும். சமூக, கலாசார, பண்பாட்டு, பூர்வீக உரிமைகளைப் பாதுகாக்கும் இந்த முயற்சியிலே, சிறுபான்மையினரான தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைய வேண்டும்.

கேள்வி - மட்டக்களப்பில், இனங்களுக்கிடையில் அமைதியின்மை ஏற்படுத்தப்படும்பொழுது, நீங்கள் தொடர்ச்சியாக மக்களுக்கிடையில் அமைதியை நிலைநாட்டுவதில் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வந்திருக்கிறீர்களே...

தேர்தல் பிரசாரக் களத்தில், இனவாதக் குரல்களும் மேலோங்கும் அதேவேளை, சமூக சகவாழ்வுக்கான சமிக்ஞைகளும் ஆங்காங்கே தெரிகின்றன.

கேள்வி - மட்டக்களப்பில் தொடர்ந்தும் சமூக அமைதியை நிலைநாட்ட தமிழ், முஸ்லிம் மக்களுக்கு நீங்கள் விடுக்கும் செய்தி என்ன?

வடக்கு, கிழக்கிலே வாழ்கின்ற முஸ்லிம் மக்களின் வம்சாவழியைப் பின்னோக்கிப் பார்த்தால், தமிழ்த் தாய்மார்களிலிருந்துதான் முஸ்லிம்களின் பூர்வீகம் ஆரம்பிக்கிறது. எனவே, அடிப்படையில் நாங்கள் சகோதரர்கள். தமிழர்களும் முஸ்லிம்களும் தமிழையே பேசுகின்றோம். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதற்கு, இதைவிடச் சிறந்த வழி இருக்காது. மார்க்கக் கடமையில் மாத்திரம் முஸ்லிம்கள் வேறுபட்டு நிற்கின்றனர். ஆகவே, தமிழ் முஸ்லிம் என்று பிரித்து வன்முறையைத் தூண்டுவதே அடிப்படை மானுட நேயத்துக்கு முரணானது. தமிழ், முஸ்லிம் மக்களின் உறவு, நகமும் சதையும் போன்றது.

ஆயுதக் குழுக்கள் உருவானதன் பின்னரே, தமிழ் - முஸ்லிம் கலகங்கள் தூண்டிவிடப்பட்டன. ஆயுதங்களோடும் வன்முறையோடும் வாழ்ந்துப் பழக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமைக்காகப் பாடுபட்ட போராளிகள் என்று தங்களை அழைத்துக்கொண்டு இப்பொழுது பேரினவாதத்தோடு கைகோர்த்திருக்கும் ஒரு சில புல்லுருவிகள், இன்னமும் தமிழ், முஸ்லிம் இனங்களுக்கிடையில் பகைமையை வளர்ப்பதில் தீவிரம் காட்டுகின்றார்கள். இது, அவர்களின் ஈனத்தனமான செயற்பாடு. கீழ்த்தரமான இந்த நபர்களின் செயல்களால், இப்பொழுதும் இன விரிசலுக்கு எண்ணெய் வார்க்கப்படுகிறது.

ஆனால், உண்மையை உணரும் நல்ல தமிழ் உள்ளங்கள், பொதுமக்கள், கற்றறிந்தவர்கள், சமூக நலன் விரும்பிகள், இந்த உலுத்தர்களின் செயலை நிராகரிக்கறார்கள்.

மக்கள் இனிமேலும் இந்த இழிநிலை அரசியல் வங்குறோத்து துரோகிகளின் செயலில் சிக்குண்டு, நிதானமிழக்க மாட்டார்கள். தமிழ் மக்களோடு வர்த்தகம், தொழில்கள், வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம், நிர்வாகம் உள்ளிட்ட பல விடயங்களில் முஸ்லிம்கள் இணைந்தே வாழ்கின்றார்கள். தற்காலிகமாகத் தமிழ், முஸ்லிம் மக்களைப் பிரித்தாலும் துரோகிகள், வெகு சீக்கிரமே இயல்பாகவே இணைந்து விடுவார்கள். இது, கடந்த கால சமகால வரலாறு. தமிழ், முஸ்லிம் இன நல்லுறவைச் சீர்குலைக்க நினைக்கும் விஷமிகள் தோல்வியையே தழுவுவார்கள்.

கேள்வி - போருக்குப் பிந்திய சமகால இலங்கையின் அரசியல் நகர்வில், இந்த 16ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது.?

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்றதன் பின்னர், இனங்களுக்கிடையில் நிம்மதியும் பாகுபாடற்ற அபிவிருத்தியையும், பாரபட்சமற்ற கவனிப்பையுமே மக்கள் எதிர்பார்த்து நின்றார்கள். ஆனால், மாறி மாறி எந்தப் பெரும்பான்மை அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. தென்னிலங்கையில், இனவாதச் சிந்தனை விரும்பி விதைக்கப்படுகிறது. சிறுபான்மையினரை அல்லோலகல்லோலப்படுத்த கங்கணம் கட்டி நிற்கிறார்கள். இலங்கை அரசியலின் இந்த இனவாத, மதவாத, பாரபட்சமான முன்னெடுப்புகள், சர்வதேச மட்டத்திலும் கவனத்தைப் பெற்றிருக்கின்றன.

ஆகவே, இந்தப் போக்கில் சர்வதேசத்தையும் பகைத்துக் கொள்ளாது, சர்வதேச உதவிகளையும் பெற்றுக்கொண்டு, எங்களுடைய பல்லினச் சமூகத்தையும் சரி சமமாக நோக்கி, அபிவிருத்தி செய்து நாட்டைக் கட்டியெழுப்பும் நாடாளுமன்றமாக வரப்போகின்ற நாடாளுமன்றம் அமைய வேண்டும்.

தற்போதைய ஜனாதிபதியோடு இணைந்துள்ளவர்களில் அதிகமானோர், இனவாதச் சிந்தனை கொண்டவர்கள். எனவே, நாடாளுமன்றம் இனவாதமற்றவர்களின் கைகளுக்குக் கிட்ட வேண்டும் என்பது, எல்லா மட்டத்திலும் எதிர்பார்ப்பாக உள்ளது.

உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள அபகீர்த்தியைப் போக்க வேண்டும் என்பதால், இந்த நாடாளுமன்றத் தேர்தலும் அமையப் போகின்ற நாடாளுமன்ற அதிகாரமும், மிக முக்கியமானது என்று நான் கருதுகின்றேன்.

கேள்வி - உங்களது ஆதங்கம் என்ன?

தமிழ், முஸ்லிம் மக்கள், தங்களது பாரம்பரிய மத, மொழி, பூர்வீகக் கலாசார பண்பாட்டு விழுமியங்களைக் கடைப்பிடித்து, மனித உரிமைகளுடன் அரசியல் அதிகார உரிமைகளையும் பெற்றுக் கௌரவமாக வாழ வேண்டுமாயின், சிறுபான்மையினரை அரவணைத்துச் செல்கின்ற நாடாளுமன்றமும் பிரதமரும் அமைய வேண்டும். அதுவே எனது எதிர்பார்ப்பாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X