2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

தென்கிழக்கு ஆசியாவின் ஆழமான வேர்கள்

Johnsan Bastiampillai   / 2023 பெப்ரவரி 27 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

 

 

 

வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் - 16: 

 

தென்கிழக்கு ஆசியாவில் அதிவலதுசாரி தீவிரவாதமும் அதன் சித்தாந்த ரீதியில் உந்தப்பட்ட வன்முறையும், இன்றுவரை குறைவான கவனம் பெற்றதொன்றாகவே இருக்கிறது. 

‘ஆசியான்’ (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம்) பிராந்தியத்தில், அரசியல் வன்முறை என்பது, கொலனித்துவ காலத்தில் இருந்து, இடதுசாரி பயங்கரவாதம், கம்யூனிசம், போர்க்குணம் மிக்க இஸ்லாமியவாதத்தை மையமாகக் கொண்டது. 
இஸ்லாமிய அரசின் (IS) தோற்றம் மற்றும் ஜ.எஸ்சுக்கும் பிராந்திய இஸ்லாமியத் தீவிரவாத குழுக்களுக்கும் இடையே வளர்க்கப்பட்ட உறவுகளால், பிராந்தியத்தின் கவனம், அல்-கொய்தா சார்பு ஜெமா இஸ்லாமியா போன்ற வன்முறை ஜிஹாதிச இயக்கங்கள் மீதேயிருந்தது. 

இஸ்லாமிய பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதில் ஈடுபட்டுள்ள மேற்கத்திய நாடுகளைப் போலவே, பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போரில் ஈடுபட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளும், தங்கள் சொந்த கொல்லைப்புறத்தில் அதிவலதுசாரி தீவிரவாதத்தின் அறிகுறிகளைப் புறக்கணித்தன. 

நியூசிலாந்தில் 2019 கிறிஸ்ட்சர்ச் மசூதி தாக்குதலால் ஈர்க்கப்பட்ட 16 வயது சிங்கப்பூர் இளைஞனை பொலிஸார் கைது செய்தமையானது  பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனால், இது போன்ற அதிவலதுசாரி வன்முறை எண்ணம் கொண்டோர் கைது செய்யப்படுவது, இது முதல் முறை அல்ல. 

ஜூன் 2020இல், 19 வயதான சிங்கப்பூர் குடிமகன் ஒருவர், AR-15 ரக தாக்குதல் துப்பாக்கியால் முஸ்லிம்களை சுட்டுக் கொல்லும், தனது  கனவு பற்றி, தனது இன்ஸ்டாகிராமில் இடுகையிட்ட பிறகு, வன்முறையைத் தூண்டியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். இச்சம்பவங்கள் மேற்கத்திய பாணியிலான தீவிர வலதுசாரி தீவிரவாதத்தின் திடீர் அதிகரிப்பைக் குறிப்பதாகத் தோன்றின் அது தவறானது.

பெரும்பாலான தென்கிழக்கு ஆசிய ஆய்வாளர்களும் கொள்கை வகுப்பாளர்களும் தீவிர வலதுசாரி தீவிரவாதத்தை ஏற்கெனவே இருக்கும் தீவிர இஸ்லாத்தின் மீது கவனம் செலுத்துவதன் மூலம் மட்டுமே பார்க்கிறார்கள். அதை ‘பரஸ்பர தீவிரமயமாக்கல்’ என்று அணுகுகிறார்கள். 

பாசிசத்தை, குறிப்பாக தேசிய சோசலிசத்தை பிராந்தியத்தில் ஒரு புதிய நிகழ்வாகக் கருதுகின்றனர். இது வரலாற்றின் மிகை எளிமைப்படுத்தலாகும். இது நீண்டகால தீவிரவாத போக்குகளையும் உறவுகளையும் மறைக்கிறது. 

தென்கிழக்கு ஆசியா முழுவதிலும் உள்ள பல்வேறு அரசியல் மற்றும் சமூக சூழல்களைப் பொதுமைப்படுத்துவது ஆபத்தானது. அதேவேளை, நாஜி தாக்கங்கள் அல்லது பாசிச சித்தாந்தம் செல்வாக்குப் பெற முன்னரே, அதிவலதுசாரிகளின் செல்வாக்கு, இப்பிராந்தியத்தில் இருந்தது என்ற உண்மையை, ஏற்கெனவே புறக்கணிக்கப்பட்ட வரலாற்றை முற்றிலுமாக அழிக்கும் பணியைச் செய்யும் என்பதையும் மறந்துவிடக் கூடாது. 

ஏகாதிபத்திய ஜப்பானியர்கள், 1940இல் தான் ஆளும் முகாமை ஒருங்கிணைக்க ‘ஆசியாவுக்கான ஆசியர்’ என்ற பான்-ஆசியக் கருத்தை பிரசாரம் செய்வதற்கும், நாஜி ஜெர்மனி, பாசிச இத்தாலியுடன் முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கும் நீண்ட காலத்துக்கு முன்பே, இந்தோனேசியாவில் பாசிசக் கட்சிகள் இருந்தன. 

அடல்ப் ஹிட்லர் 1933இல் ஆட்சிக்கு வந்த பிறகு, டச்சு கிழக்கிந்தியத் தீவுகளில் (இப்போது இந்தோனேசியா) உள்ள டச்சு-இந்தோ நாஜி அனுதாபிகள் பட்டேவியாவில் (இப்போது ஜகார்த்தா) Nederlandsche Indische Fascisten Organisatie நிறுவினர். ப்ரிபூமி (பூர்வீகவாசிகள்) உடன் சில உடன்பாடுகளைக் கண்டனர். 

பின்னர், இந்தோனேசிய அறிவுஜீவியும் ஜாவானிய பிரபுவுமான Raden Pandji Wirasmo Notonindito பெர்லினில் பொருளாதாரம் மற்றும் வணிகத்தில் முனைவர் பட்டம் பெற்று தாயகம் திரும்பி, இந்தோனேசிய தேசிய கட்சியில் சேர்ந்தார். ஹிட்லர் மற்றும் பெனிட்டோ முசோலினி இருவராலும் ஈர்க்கப்பட்டு, பின்னர் அவர் தனது சொந்தக் கட்சியை 1933 இல் பாண்டுங்கில், இந்தோனேசிய பாசிஸ்ட் கட்சியை நிறுவினார். ஜாவா மக்களுக்கான அரசியலமைப்பு முடியாட்சியின் கீழான சுதந்திரம் என்ற அதன் சித்தாந்தம் எந்த மக்கள் ஆதரவையும் பெறத் தவறியதால் கட்சி குறுகிய காலமே நீடித்தது. 

ஜலசந்தியின் குறுக்கே, தாய்லாந்து இரண்டாம் உலகப் போரில் ஓர் அச்சு நட்பு நாடாக நுழைந்தது, மேலும் 1938இல் புதிதாகப் பதவியேற்ற பிரதமர் பீல்ட் மார்ஷல் ப்ளேக் பிபுன்சோங்க்ராம் கீழ் ஒரு கலாசாரப் புரட்சியினுள் நுழைந்தது. அவர் தனது  இலட்சிய இராணுவவாத பாசிச அரசு என்ற கோட்பாட்டில், தாய்லாந்தை நவீனமயமாக்க முனைந்தார். 

உலகளாவிய விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கலின் சகாப்தத்தில், பாசிசம் ஆசிய சீர்திருத்தவாதிகளுக்கு அவர்கள் போட்டியிட விரும்பிய ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகளைப் போலவே கவர்ச்சிகரமானதாக இருந்தது. அது தேசிய வலிமை, இராணுவ சக்தி, இன மேலாதிக்கம், கலாசார மேன்மை ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைந்தது.

பாசிசத்துடனான தென்கிழக்கு ஆசியாவின் ஊர்சுற்றல்கள் அங்கு முடிவடையவில்லை. இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பல தசாப்தங்களுக்குப் பிறகு, நாசிசம் தென்கிழக்கு ஆசியாவில் ‘Nazi chic’ (நாஜி சிக்யைப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் நோக்கலாம்) மற்றும் நவநாசிசத்தின் வடிவத்தில் எதிர்பாராத மறுமலர்ச்சியை அனுபவித்தது. 

ஐரோப்பிய இரண்டாம் உலகப்போரின் அனுபவத்தின் வரலாற்று விழிப்புணர்வு இல்லாமை, பல ஆசிய பதின்ம வயதினரை நாஜி அழகியலுடன் நிலைநிறுத்துவதற்கு பங்களித்தது. நியோ-நாஜி இயக்கம் மலேசியாவின் ஹெவி மெட்டல் மற்றும் பங்க் இசைக் குழுக்களின் வழி 1990களில் இருந்து மலாய் இசைக்குழுக்களின் வடிவத்தில் தோன்றியது. 

1980கள் மற்றும் 1990களின் பிற்பகுதியில் அமெரிக்க மற்றும் பிரித்தானிய இசைக் குழுக்களைப் போலவே, இந்தத் தேசிய சோசலிச இசைக்குழுக்கள் மலாய் பாசிச எதிர்ப்பு ஸ்கின்ஹெட் சமூகத்துடன்  மோதல்கள் நிகழ்ந்தன. 

மியான்மரில், 969 இயக்கம் எனப்படும் தேசியவாத பௌத்தக் குழு 2013 இல் ரோஹிஞ்கியா எதிர்ப்பு மற்றும் முஸ்லிம் எதிர்ப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டது.

இவ்வியக்கம் வன்முறை தந்திரோபாயங்களைக் கையாள்வதனூடு தங்களை ஒரு நவநாஜி அமைப்பாக வெளிப்படையாகவே அறிவித்தார்கள். அதேபோன்று தாய்லாந்தில், ஒருபுறம் கடுந்தேசியவாத பௌத்த துறவிகள் இஸ்லாமிய வெறுப்புக் கதைகளுக்கு செயல்வடிவம் கொடுத்தார்கள். இதற்கு எதிர்வினையாக  மறுபுறம் தேசிய புரட்சிகர முன்னணி (வடக்கு மலேசியாவில் உள்ள இஸ்லாமிய பதானி விடுதலை இயக்கம்)  தென் தாய்லாந்தில் உள்ள பௌத்த மதகுருமார்களை குறிவைத்தது.  

தென்கிழக்கு ஆசியாவில் இருக்கும் தீவிர வலதுசாரி, மாற்று வலதுசாரி இயக்கங்கள், பிராந்தியத்தில் வாழும் மக்களைப் போலவே பன்முகத்தன்மை கொண்டவை; வேறுபட்டவை என்பதை அங்கிகரிப்பது முக்கியம். 

இதன் ஒரு பகுதியாக, தென்கிழக்கு ஆசியாவில் அதிவலதுசாரி சித்தாந்தத்தை முன்னெப்போதும் இல்லாத ஒன்றாகக் கருதலாகாது. சில காலமாக இருந்துவரும், பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகவே விளங்க வேண்டும். 

கம்யூனிசம் சோசலிசத்தின் மீதான பொதுவான விரோதம், முக்கியமாக ஆசியான் நாடுகளில், தீவிர வலதுசாரி மற்றும் மாற்றுவலதுசாரி கருத்துகளை சாத்தியமான பிரச்சினைகளாகக் கருதுவதை கடினமாக்குகிறது, குறிப்பாக, சமீபத்திய மேற்கத்திய தீவிர வலதுசாரி எண்ணங்களிலிருந்து பல கருத்துகள் கடன் வாங்கப்பட்டு அவை உள்மயமாக்கப்பட்டன. 

இவை இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு பதில் ‘மேற்கத்திய பாணி தீவிர வலதுசாரி தீவிரவாதத்தை’ அதிவலதுசாரித்துவம் ஏற்றுக்கொண்டுள்ளது என்று முடிவு செய்யத் தூண்டுகிறது. என்றாலும், இது மேலோட்டமான விளக்கம் மட்டுமே. சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து அல்லது வேறு தென்கிழக்கு ஆசிய நாடுகள் எதுவாக இருந்தாலும், தற்போதைய அரசியலில் ஆழமாக மூழ்குவது அவசியம். 

தென்கிழக்கு ஆசியாவில் பல்வேறு நாடுகளில் இருக்கும் தீவிர வலதுசாரி இயக்கங்கள், அந்தந்த தேசங்களின் தூய்மையைப் பாதுகாக்க இன-மத அபிலாஷைகளைப் பகிர்ந்து கொள்கின்றன. 

மேற்கில் உள்ள வெள்ளை மேலாதிக்க தீவிரவாதத்தைப் போலவே, இப்பிராந்தியத்தில் உள்ள இனவாதிகள், தங்கள் தாயகத்தின் சட்டபூர்வமான தன்மை மற்றும் இறையாண்மையின் மீது அதிகாரத்தை விரும்புகிறார்கள். 
உதாரணமாக, இயன் ஸ்டூவர்ட் மற்றும் அவரது ப்ளட் ரூ ஹானர் நெட்வொர்க்கால் ஈர்க்கப்பட்ட மலாய் சக்தி இயக்கம், ‘நுசந்தரா ராயா’ (மலாய் பவர்), மலாய் மேலாதிக்கத்தின் கருத்தை ஊக்குவிக்கிறது. 

சிங்கப்பூரில், தீவிர வலதுசாரி தீவிரவாத சித்தாந்தம் எவ்வளவு ஆழமானது அல்லது பரவியது என்பது பற்றி அதிகம் அறியப்படவில்லை என்றாலும், பயங்கரவாதக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளம்பெண், ஒரு தீவிர கிறிஸ்தவரான இந்திய இனத்தைச் சேர்ந்தவராக இருந்தார். இவர்கள் எல்லோரும் தத்தம் நாடுகளில் சமத்துவத்தைக் கோரும்; சிறுபான்மையினரின் முன்னிலையில் தங்கள் இருப்பு, உயிர்வாழ்வு, சலுகை ஆகியவை அச்சுறுத்தப்படுகின்றன என்று நம்புகிறார்கள்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .