Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
Johnsan Bastiampillai / 2023 மார்ச் 08 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ
வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் - 17:
இன்றைய நவீன காலத்தில் அதிவலதின் இயங்குதளங்கள் மாறி வருகின்றன. குறிப்பாக, ஆசிய சூழலில் இவை புதிய சவால்களாக உருவெடுத்துள்ளன.
நவ-நாசிச சிந்தனைகள், வெள்ளை மேலாதிக்க அரசியல் என்பன ஆசிய இளைஞர்களால் கேள்விகளின்றி ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அவர்கள் புவியியல் எல்லைகளால் வரம்பற்ற ‘ஒன்லைன்’ பயனர்களாக உள்ளனர். இதனால் அவர்களால் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நடப்பதை இலகுவில் உள்வாங்க முடிகிறது.
ஆனால், இங்கு கவனிப்புக்கு உள்ளாக வேண்டியது யாதெனில், இவ்வாறு மேற்குலக அதிவலது சித்தாந்தத்தால் கவரப்படுகின்ற இவ்விளைஞர்கள் வெள்ளையர்களோ ஆரியர்களோ அல்ல. நவ-நாசிசம், வெள்ளை இனம் அல்லது ஆரிய இனமே இனப்படிநிலையில் ஆதிக்கம் செலுத்துகிறது என்ற வலியுறுத்தலில் தன்னைக் கட்டமைத்தது. ஆனால் வெள்ளையராகவோ ஆரியராகவோ இல்லாத இளைஞர் கூட்டத்தை, இக்கருத்தாக்கம் எவ்வாறு கவர்ந்தது?
இந்த வினா மிகவும் முக்கியமானது. இதை விளங்கிக் கொள்வது இலங்கையின் அதிவலதின் இயங்குதளங்களையும் புரிந்து கொள்ள உதவும். ஏனெனில், இலங்கையிலும் அதிவலதின் செல்வாக்கு கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்துள்ளது. அவை பெரும்பாலும் மதரீதியாகக் கட்டமைக்கப்பட்டாலும் அதன் இயங்கியல் பெரும்பாலும் ஏனைய ஆசிய நாடுகளின் அதிவலதின் பாணியை ஒத்திருக்கிறது.
ஆரிய வெள்ளை நிறவெறியை மையமாகக் கொண்ட நவ-நாசிசச் சிந்தனைகள், உள்ளூர் சூழலுக்கு ஏற்றவகையில் எளிதில் மாற்றி அமைக்கப்படுகின்றன. ஆரிய மேன்மை என்பது, தேசியவாத மேன்மையாக முன்னெழுகிறது. இனத்தூய்மை என்ற கருத்தாக்கம் அதற்குப் பயன்படுகிறது.
இவ்வாறு மாற்றியமைக்கவும் பரப்பவும் இச்சிந்தனைகள் பாசிசவாத எண்ணம் கொண்டோரை அடையவும் இணையம் மிகப்பெரிய வாய்ப்பாயுள்ளது. இந்த வாய்ப்பு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது; எவ்வாறு இளைஞர்களைக் கவருகிறது என்பதே இந்தக் கட்டுரை பேசவிளைகின்ற புதிர். இந்தப் புதிருக்கு நான்கு முக்கியமான அம்சங்கள் உள்ளன.
முதலாவதாக, கொலனித்துவ காலத்துக்குப் பின்பு வெள்ளை நிறத்துக்கும் அதிகாரத்துக்கும் இடையிலான தொடர்பு பற்றிய புரிதல் இன்னமும் எட்டப்படவில்லை. அது முக்கியமானது. குறிப்பாக கொலனியாதிக்கத்துக்கு உட்பட்ட நாடுகளின் அனுபங்களின் வழி, இது ஆழமாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.
உதாரணமாக, இந்தோனேசியாவில் வளர்ந்த முந்தைய பாசிச இயக்கங்கள் கொலனித்துவ எதிர்ப்புப் பிரதிபலிப்பாக வளர்ந்தன. தீவிர தேசியவாதத்தின் வடிவத்தில் அரசை ஆட்சிசெய்வது என்ற நிலைப்பாட்டை எடுத்தன. அது வெள்ளைக் கொலனியவாதிகளுக்கு எதிரான இயக்கமாக இருந்தது. ஆனால், கொலனியாதிக்க விடுதலையின் பின்னர் தோற்றம்பெற்ற அதிவலது வேறுபட்டதாக இருந்தது. அது மேற்கத்தைய அதிவலது சித்தாந்தத்தை அடியொற்றியது. வெள்ளை நிறவெறியைத் தனது உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப இனவாத, மதவாத, பிரதேசவாத வெறியாக உருமாற்றியது. இவை இன்னமும் பரந்த தளத்தில் ஆய்வுக்குட்படவில்லை.
இலங்கை சூழலில் அநகாரிக தர்மபாலவின் பௌத்த மீளெழுச்சியின் அடித்தளம், கொலனியாதிக்க எதிர்ப்பு. அவரது தொடர்ச்சி இன்று, ‘சிங்கலே - சிகல - ராவண- பொதுபலசேனா’ ஆகியவற்றின் இயங்கியல் தொடர்ச்சியாக உருமாறியுள்ளதை இந்தோனேசியாவுடன் ஒப்பிட்டு நோக்கவியலும்.
அநகாரிக தர்மபால போலவே ஆறுமுகநாவலரின் இயங்கியலும் கொலனியாதிக்க எதிர்ப்பில் மையம்கொண்டது. இலங்கை அனுபவம் தருகின்ற பாடம் யாதெனில், அநகாரிக தர்மபாலவும் ஆறுமுகநாவலரும் கொலனிய அடக்கமுறைக்கு எதிரான எதிர்ப்புக்கு எடுத்துக்கொண்ட கருவிகளும் காலப்போக்கில் அடக்கமுறையின் ஆயதங்களாகின என்பதாகும்.
இரண்டாவதாக, கலாசார அவநம்பிக்கையின் பிரதிபலிப்பாக பேரினவாத தூண்டுதல்கள் எவ்வாறு எழுகின்றன என்பதை சிந்திக்க வேண்டும். ‘நவீனத்துவத்தை’ நிராகரிப்பதற்கும் தூய்மையானதாகவும் பாரம்பரியமானதாகவும் கருதப்பட்ட இனத்தைக் காத்துக் கொள்ளவும் நாட்டுக்குரிய விசுவாசத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு மூலோபாயமாக அதிவலதை ஏற்றுக்கொள்வதற்கும் இடையில் ஆழ்ந்த தொடர்பு உள்ளது.
உதாரணமாக, 2021இல் நடந்த சதிப்புரட்சியின் வழி பதவிக்கு மீண்ட மியன்மாரின் இராணுவ ஆட்சிக் குழுவை, மியன்மார் தேசபக்திச் சங்கம் (அதிதீவிர பௌத்த பிக்குக்களின் அமைப்பு) அரவணைத்துக்கொண்டது. 2015இல் இராணுவ ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, ஜனநாயக அடிப்படைகள் மெதுமெதுவாக மீண்ட நிலையில், சமத்துவமும், நீதியும் நிலைப்பதற்கான அடிப்படைக் கட்டமைப்புகள் தோற்றம் பெறத் தொடங்கின. இதை அதிதீவிர பிக்குகள் விரும்பவில்லை. அவர்கள் 2015 முதல் நாட்டை மாற்றியமைத்த நவீனமயமாக்கலைத் திரும்பப் பெற விரும்புகிறார்கள்.
இலங்கையில் ‘வியத்மக’வின் வழிகாட்டலில் ஆட்சிபீடம் ஏறிய கோட்டாபயவின் கதையும் மியன்மாரிய உதாரணம் போன்றதே. இந்த உதாரணங்கள், தெளிவாக எடுத்துரைப்பது யாதெனில், தென்கிழக்காசிய தீவிர வலதுசாரிகள் மற்றும் தீவிர தேசியவாதிகள் சமத்துவம், பெண்ணியம் போன்ற மதிப்புகள் நிராகரிக்கப்படும். அந்நியர்கள் வெளியேற்றப்படும் ஒரு தேசத்தை கற்பனை செய்கிறார்கள். அந்தத் தேசத்தை உருவாக்குவதற்காக வன்முறையை வரன்முறையின்றிப் பயன்படுத்துவதை ஆதரிக்கிறார்கள்.
அதேனநேரத்தில் பாரம்பரிய ஆண்பால் மதிப்புகள் மேநிலையாக்கம் அடைந்து சமூகத்தில் நிலைநிறுத்தப்படுகின்றன; போற்றப்படுகின்றன. ஆண்மேலாதிக்கத்தை சர்வவியாபகமான ஒரு சூழலை நோக்கி நகர்த்துகிறார்கள். இவை தீவிர வலதுசாரி மற்றும் வலதுசாரி ஜனரஞ்சக சித்தாந்தங்களின் மிக உடனடியாக அடையாளம் காணக்கூடிய அம்சங்களாகும்.
இதற்கு ஓர் உதாரணத்தை நோக்கலாம். 2014இல் கலிபோர்னியாவில் ஆறுபேரை கொலைசெய்த அதிவலது கொலையாளி எலியட் ரோட்ஜர், மலேசிய வேர்களைக் கொண்டிருந்தார். அவரது தாயார் சீன இனத்தைச் சேர்ந்த மலேசியர்; அவரது தந்தை வெள்ளை பிரிட்டிஷ். ரோட்ஜர் தனது சிக்கலான இன அடையாளம் மற்றும் ஆண்மையை இலட்சியப்படுத்துவது பற்றிய ஆழமான சமூக கவலைகளால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் அவர், தீவிரமான பெண் வெறுப்பைக் கொண்டிருந்தார். அவரது அறிக்கையானது, அவரது ஆசிய அடையாளத்தை நிராகரித்தது. வெள்ளை மேலாதிக்கத்தை உள்வாங்கியதைப் பிரதிபலித்தது. அவ்வறிக்கை இனப் படிநிலைக் கருத்துடன் ஆரோக்கியமற்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது.
கலாசாரம் குறித்த அதீத கரிசனையும், கலாசாரம் நெருக்கடியில் இருக்கிறது. கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டியது என்ற கவலையும் ஒருங்கே பலரை அதிவலதுடன் இணைகின்றது. அதற்கு சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகள், படங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. அவற்றில் பெரும்பான்மையானவை தவறானவையாக இருந்தபோது அப்புரிதல் பொதுவில் மக்களுக்கு இருப்பதில்லை. அவர்கள் அத்தகவல்களைக் கண்டு உணர்ச்சிபொங்கி இன்னும் பலருக்கு அச்செய்தியைப் பகிர்கிறார்கள். இவ்வாறுதான் அதிவலது தனது ஆதரவுத்தளத்தைப் பெற்றுக்கொள்கிறது.
இளைஞர்களை கவருகின்ற மூன்றாவது அம்சம் மிக முக்கியமானது. இது அதிவலதின் ‘தாயகம்’ என்ற பழைமைவாத கற்பனாவாதத்தில் கவனம் செலுத்துகிறது. இது உண்மையாக தேசியவாதிகளின் முக்கியமான களம். அங்கு அவர்கள் தேர்ந்தெடுத்த மதம் உயர்ந்ததாக இருக்கும். மற்றும் பாரம்பரிய மதிப்புகள் எந்தவொரு வெளிப்புற தாக்கத்தினாலும் சவால் செய்யப்படாத, கறைபடாத மற்றும் அழிக்கப்படாமல் இருக்கும்.
இத்தாயகத்திற்கு ஊறுவிளைவிப்பர்கள், வெளிநபர்கள், இத்தாயகத்தைக் கேள்விக்குட்படுத்துபவர்கள் அனைவருமே அதிவலதின் எதிரிகளாகிறார்கள். தாயகம் என்ற அதிவலதின் சித்தாந்தத்தை எதுவித கேள்விகளுமின்றி ஏற்றுக்கொண்டவர்கள், போற்றுபவர்கள் ‘தேசபக்தர்கள்’. எதிர்க்கேள்வி கேட்பவர்கள், ஏற்கமறுப்பவர்கள், விமர்சிப்பவர்கள் ‘துரோகிகள்’. சாமுவல் ஜோன்சனின் ‘தேசபக்தி, அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்’ என்ற வரிகளை இங்கு நினைவூட்டுவது பொருத்தம்.
நான்காவதாக, தென்கிழக்கு ஆசியாவில் உள்ள அதிவலது அரங்காடிகளும் தீவிர தேசியவாதிகளும் ‘விழிப்பு’, ‘பெண்ணியம்’, ‘மனித உரிமைகள்’ ஆகியவை பாரம்பரிய ஆசிய மதிப்புகளுக்கு இணங்காத மற்றும் அவற்றுடன் ஒத்துப்போகாத தாராளவாத மேற்கத்திய கசப்பு என்று விளக்கமளிக்க முயலுகின்றனர்.
ஆணாதிக்க கடுந்தேசியவாத கடும்பழைமைவாத மதிப்புகள் செல்வாக்குப் பெற்றுள்ள பகுதிகளில் இந்தப் பிரசாரம் வெற்றியளிக்கிறது. இது நகர்புறமாக அன்றி கிராமப்புற இளைஞர்களைக் கவர்வதற்கான முக்கிய அம்சமாயுள்ளது. பாரம்பரிய சமூகச் சிந்தனைகளில் இருந்து விடுபடும் புதிய கருத்தாக்கங்கள் அவர்களை சங்கடத்துக்கு உள்ளாக்குகின்றன. ‘சமூகத்துக்கு ஒவ்வாத’ என்ற அதிவலதின் கதையாடல் இவர்களை ஈர்க்கிறது. அதேவேளை மேற்சொன்ன தாயகம் குறித்த கற்பனை, கலாசாரம் குறித்த கரிசனை ஆகிய இரண்டும் இக்கதையாடலுக்கு வலுச்சேர்க்கின்றன.
மறுபுறத்தில், இந்தக் கதையாடல் பெரும்பாலும் தங்கள் சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரலை எதிர்க்கும் எந்தவொரு பார்வையையும் கட்டுப்படுத்தும் தணிக்கை செய்யும் எதேச்சாதிகார அரசியல் நிறுவனங்களின் முயற்சிகளுடன் ஒன்றுடன் ஒன்று இணைகின்றது. இதன் காரணமாக, தேச அரங்காடிகளின் நலன்கள் பாதுகாக்கப்படுவதற்கு அதிவலது உதவுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago