Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 25, திங்கட்கிழமை
Johnsan Bastiampillai / 2021 ஒக்டோபர் 25 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ. ரமேஸ் மதுசங்க
நான்காம் வருடம்,
ஊடகக் கற்கைகள் துறை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
rameshmadhusanka96@gmail.com
பாரம்பரிய கைத்தொழில் வரிசையில் தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் பொருட்களின் உற்பத்திக்கு நல்லதொரு கிராக்கி உண்டு என்பதை யாவரும் அறிந்ததே. தென்னை மரத்தின் அனைத்துப் பகுதிகளும் ஒவ்வொர் உற்பத்திக்கும் பயன்பட்ட போதிலும் தும்புக் கைத்தொழிலுக்கே தென்னை மிகக்கூடுதலாகப் பயன்படுகின்றது. இதன்மூலம் பாரம்பரிய முறையிலான சிறு கைத்தொழிலாளர்கள் கூடுதலான வருமானத்தை பெற்று வருகின்றனர்.
பண்டைய காலத்தில் தும்புக் கைத்தொழிலே கிராமத்தின் முதன்மைப் பொருளாதார நடவடிக்கையாக இருந்திருக்கலாமென சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆரம்பகாலத்தில் இருந்து உபகரணங்கள் இல்லாது கையினால் அனைத்து பொருட்களையும் செய்து வந்தார்கள். ஆனால் தற்போதைய சூழலில் இயந்திரங்களின் வருகையினால் வேலைப்பழு குறைவடைந்து வருகின்றது. குறிப்பாக கயிறு தரித்தலும், தும்புச்சோற்றை தயாரிக்கவும் நிலத்தை சுத்தப்படுத்தும் தும்புத்தடி வரை இதன் தயாரிப்புக்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
முதலில் தேங்காய் மட்டைகளை லொறிகள் மூலம் ஏற்றி வந்து தும்புக்கான மூலப்பொருளாக தேங்காய் மட்டை பயன்படுத்தப்படுகின்றது. தேங்காய் மட்டைகளை, உரிமட்டைகளை குளங்கள், நீர்நிலைகள், குட்டைகள் என்பவற்றில் ஊறவிட்டு சில நாள்களின் பின்னர், இயந்திரத்தின் உதவியுடன் தும்புச்சோற்றை பிரித்தெடுப்பர். இதற்காக சிறு ஓடைகளை வெட்டி நீர் பாய்ச்சி மட்டைகளை புதைத்து வைப்பது வழக்கம். பின் பதப்படுத்தப்பட்ட தும்பை வெயிலில் உலரவிட்டு அடுத்தகட்ட உற்பத்திக்கான தும்பாக மாற்றுவார்கள்.
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தும்பானது தடித்த, நீளமான, தூய்மையான இழைகளைக் கொண்டிருப்பதாக உலகசந்தையில் அங்கிகரிக்கப்பட்டு உள்ளது. இன்று கயிற்றுக்கான கேள்வி அதிகரித்து வருகின்றது. தென்னை உற்பத்திப் பொருட்களில் முதன்மையானது தும்பிலிருந்து திரிக்கப்படும் கயிறுகளாகும்.
புத்தளம் மாவட்டத்தின் கொட்டகை பிரதேசத்தின் தும்புக் கைத்தொழில் மேற்கொள்ளப்படுகின்றது. கொரோனா தொற்றின் காரணமாக இக்காலப்பகுதியில் இக்கைத்தொழில் வீழ்ச்சி கண்டு வருகின்றது. தும்பிற்கான சந்தைவிலை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் குறைவடைந்து உள்ளது. கொரோனாவிற்கு முன் ஒரு கிலோகிராம் தும்பின் விலை ரூபாய் 45 ஆக காணப்பட்டது. தற்போது ரூபாய் 30 ஆக குறைந்து உள்ளது.
இருப்பினும் தும்பு சார்ந்த கைத்தொழிலுக்கு கூடுதலான சந்தைவாய்ப்பு இருந்த போதிலும் தென்னை சார்ந்த பொருட்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் தொழிலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை, தற்போது இங்கு குறைந்து வருகின்றது. ஏனெனில் அவர்களது வருமானமும் விருத்தியடைந்ததாக தெரியவில்லை. உள்ளூர் கிராம மக்கள் தமது வாழ்வாதாரத்தை நடத்துவதற்கான ஒரு தொழில் அவசியம் என்பதற்காகவே ஆகும்.
தொழிலாளி திருமதி. சுமதி அவர்களிடம் வினவிய போது,
“தும்புக் கைத்தொழிலை மேற்கொள்வதற்கு அதற்கான முதலீடு தேவை. அவற்றை பெறுவது சவாலாகவே உள்ளது. இதனால் தொழிலை விருத்தி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது. தும்புக் கைத்தொழிலுக்கென்று தனியான பயிற்சிகள் வழங்கப்படுவதுமில்லை; நம் தொழிலாளர்கள் பரம்பரையில் கற்றுக் கொண்டதன் வழியாகவே தொழிலில் ஈடுபடுகின்றனர். ஆனால் இயந்திரத்தின் உதவியில் தும்புப்பிரித்தெடுப்பு இலகுவான போதும் அதற்காக பயிற்சிகள், வழிகாட்டல்கள் இதுவரை திட்டமிடப்பட்ட ஒழுங்குமுறைகள் ஊடாக வழங்கப்படாமலே உள்ளது”.
எனவே உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்க வங்கிகள் இலகு கடன் வழங்களை அறிமுகம் செய்ய வேண்டும். மற்றும், தொழிற்பயிற்சி நிறுவனங்கள், தொழில் வழிகாட்டல் அலகுகள் என்பன தும்புக் கைத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு ஊக்கமும், பயிற்சியும் அளிக்க வேண்டும். தும்புக் கைத்தொழிலுக்கு உரிய தொழிற்பயிற்சிகளை பயிற்சி நெறியிலும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மழைக்காலங்களிலும் தும்புச்சோற்றை உலர வைக்க முடியாததால் தொழிலாளர்கள் வேறு வேலைகள் நிமிர்த்தம் செல்வதால் நிரந்தரமான வேலை பயின்ற தொழிலாளர்களை தக்கவைத்துக் கொள்வது கடினமாகவும் உள்ளது. ஒருபுறம் இக்காலத்தில் சீவியத்திற்கு வேறு தொழில்களையும் பெறுவதும் பாரிய சவாலாகவே உள்ளது.
தொழிலாளி திரு. ராஜேந்திரன் கூறுகையில், “இயந்திரங்களின் மத்தியில் தும்பைப் பிரித்தெடுக்கும் போது, உடல் ரீதியான அபாயங்களையும் சந்திக்க நேரிடுகின்றது. அதாவது நீர்நிலைகளில் தேங்காய் மட்டைகள் நன்கு ஊறிய பின்னர், அந்நீரானது அழுகல் நிலையை அடைந்து விடும். அந்நீர் நிலைகளுக்கு இறங்குபவர்களது கால்கள் அவிந்து, நகங்கள் கழண்டும் காணப்படுகின்றன. தும்புத் தூசுகளால் சிலர் சுவாச நோய்களுக்கும் ஆளாகியுள்ளர். இயந்திரத்திற்குள் கைகளும் சிக்குண்ட வேதனைகள் ஒன்றா?” என தன் கருத்தை முன்வைத்தார்.
இதிலிருந்து தெளிவாவது யாதெனில் முறையான பாதுகாப்பு கவசங்கள், உடைகள் கூட இல்லாத நிலையில் ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என தொழிலின் வேதனையை, மனதளவில் தொலைந்து விட்டு வாழ்கின்றனர்.
இலங்கையில் முல்லைத்தீவு, பருத்தித்துறை, மருதமுனை, குருநாகல், புத்தளம் போன்ற இடங்களில் தும்புக் கைத்தொழில் மேற்கொள்ளப்படுகின்றது. ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் தும்புக்கான கேள்வி இன்னும் குறையவில்லை. இருப்பினும் சந்தையில் நிலவும் கேள்விக்கேற்ப அபிவிருத்தியில் பல படிகளை தாண்ட வேண்டியுள்ளது. தும்புக் கைத்தொழிலைப் பொறுத்தவரையில் பணியாளர்கள் குறைந்த கூலியில் வேலை செய்வதா? என சிலர் விலகியும் செல்கின்றனர்.
உலகளாவிய ரீதியில் முன்னணி வகிக்கும் வெளிநாட்டு வெற்றியாளர்களையும் முயற்சியாளர்களையும் ஆச்சரியத்தோடு பாராட்டுகின்றோம்; பார்க்கின்றோம். ஆனால், கடுமையான அனுபவங்களை வெற்றிக்குரிய படியாகக் கொண்டு முன்னேறும் எத்தனையோ முயற்சியாளர்கள், எம் பிரதேசத்தில் உள்ளனர் என்பதை நாம் அறிய வேண்டும்.
அந்தவகையில் தும்புக் கைத்தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட வேண்டும். அத்தோடு அரசாங்கம் அறிமுகம் செய்த திவிநெகும வாழ்வின் எழுச்சித்திட்டம் ஊடாகவும் இவ்வாறான பாரம்பரிய சிறு கைத்தொழில்களுக்கு அபிவிருத்திகள் வழங்கப்பட்டால் சந்தைப்படுத்தலில் உள்நாட்டு உற்பத்திகளுக்கான கேள்வி அதிகரிக்கப்படுவதோடு தொழில் வாய்ப்புகளையும் எட்டிக்கொள்ளவும் முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago
1 hours ago
9 hours ago