2024 நவம்பர் 25, திங்கட்கிழமை

திருமலை விவகாரம்: இன, மத சகிப்புத் தன்மையின் அவசியம்

Johnsan Bastiampillai   / 2022 பெப்ரவரி 09 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

பல்லின, பல்மதம், பல்கலாசாரங்களைக் கொண்ட நாடுகளில் வாழ்கின்ற ஒவ்வொரு மக்கள் கூட்டத்துக்கும் இடையில் அவர்கள் தனித்துவங்கள், கலாசாரம் பற்றிய பரஸ்பர புரிதல் அவசியமாகின்றது. இதற்கு இன, மத சகிப்புத்தன்மை மிகவும் அடிப்படையான விடயமாகும்.

இலங்கையில் இன, மத சகிப்புத்தன்மையில் ஏற்பட்ட பின்னடைவே பல்வேறு இன முரண்பாடுகளுக்கும் தேவையற்ற நெருக்கடிகளுக்கும் வித்திட்டுள்ளது. இருப்பினும், சகோதர இனத்தின் பிரத்தியேகமான பழக்க வழக்கங்களை நேரிய மனதுடன் சகித்துக் கொள்ளவதில், இன்னும் முன்னேற்றம் வேண்டும் என்பதையே அண்மையில் திருகோணமலையில் உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற கசப்பான நிகழ்வு உணர்த்தி நிற்கின்றது.

குறிப்பிட்ட பாடசாலையில் முஸ்லிம் கலாசார ஆடையுடன் கடமைக்கு வந்த ஓரிரு ஆசிரியைகளுக்கு எதிராக, 2017ஆம் ஆண்டு பாடசாலைச் சமூகம் போர்க்கொடி தூக்கியது. இது பெரும் விவகாரமாக ஆகியிருந்த நிலையில், அதில் ஓர் ஆசிரியை, முஸ்லிம் சிவில் சமூக அமைப்பொன்றின் ஒத்துழைப்புடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடியிருந்தார்.

மனித உரிமை ஆணைக்குழு, மேற்படி ஆசிரியரின் உரிமையை மதித்து, குறிப்பிட்ட ஆடையுடன்  பாடசாலைக்கு வருவதற்கு இடமளிக்குமாறு சிபாரிசை வழங்கியிருந்தது. இருப்பினும் பிரச்சினை தீரவில்லை.

அதன்பிறகு இவ்விவகாரம் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.  
இந்நிலையில், நீதிமன்றத்தில் வழக்கின் வாதிக்கும் பிரதிவாதிகள் தரப்புக்கும்  இடையில், இந்த ஆடை தொடர்பாக ஏற்பட்ட இணக்கப்பாட்டையடுத்து, குறிப்பிட்ட ஆசிரியையை ‘அபாயா’ அணிந்து பாடசாலைக்குச் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்திருந்து என்று இதற்கான முன்னின்ற ‘குரல்கள்’ இயக்கம்  தெரிவித்துள்ளது. 

இந்தப் பின்னணியில், பாடசாலைக்கு சென்ற ஆசிரியைக்கு எதிராக அங்குள்ள நிர்வாகத்தினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில் தன்னை (கழுத்தைப் பிடித்து) தாக்க முற்பட்டதாக ஆசிரியை கூறி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தன்னை, ஆசிரியர் தாக்கியதாக அதிபரும் அதே வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சென்றார்.

முதலாவது விடயம் இன, மத சகிப்புத்தன்மையும் ஒவ்வொருவரினதும் தனித்துவங்களை அங்கிகரிக்கின்ற மனப்பாங்கும் பக்குவமும் எல்லா மக்களிடத்திலும் ஏற்பட வேண்டும். இலங்கை போன்ற சிறிய பல்லின நாட்டில், அது மிகவும் இன்றியமை யாததாகும்.

ஒருவரது இன தனித்துவத்தை, மத ரீதியான பழக்க வழக்கங்களுடன் நமக்கு உடன்பாடு இல்லை என்றாலும், அது அவர்களின் கலாசாரம் என எண்ணிக் கொண்டு பொறுமையுடன் இருப்பதையே இது குறித்து நிற்கின்றது. ஆனால், இதுபற்றிய பிழையான கற்பிதங்கள் நம்மிடையே உள்ளன.

இந்துக் கோவிலில் காலை வேளையில் நாதஸ்வர ஒலியும் பக்தி கீதங்களும் ஒலிக்க விடப்படுவதும் விகாரைகளில் ‘பன’ ஓதப்படுவதும், பள்ளிவாசல்களில் அதான் (பாங்கு) ஒலிப்பதும் வழக்கமாகும். இதனை ஏனைய சமூகங்களின் மக்கள் சற்று பொறுமையுடன் சகித்துக் கொள்கின்றார்; சகித்துக் கொள்ளவே வேண்டும். அதற்கெதிராகப் போர்க்கொடி தூக்க முடியாது. அதுதான் பக்குவப்பட்ட மக்களுக்கு அழகாகும்.

ஒரு தமிழ் ஆசிரியை முஸ்லிம் பாடசாலைக்கு புடவை உடுத்தி, பொட்டு வைத்துக் கொண்டு வருகின்றார் என்பதற்காக அங்குள்ள முஸ்லிம்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. அது அவரது மத, இன, கலாசாரம் என்பதற்குமப்பால் ஆடை அணிவது இலங்கையின் அரசியலமைப்பில் அவருக்கு இருக்கின்ற உரிமையும் ஆகும். இது ஏனைய இனங்களுக்கும் பொருந்தும். 

இவ்வாறு, மாற்று இன, மத குழுமத்தின் தனித்துவத்தை, உரிமைகளை மதிக்க வேண்டிய கடப்பாடும், இந்தச் சகிப்புத்தன்மையை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டிய பொறுப்பும் ஒவ்வோர் இனத்துக்கும் இருக்கின்றது.

ஆனால், திருமலைச் சம்பவம் இதற்கு மாற்றமாக இடம்பெற்றிருக்கின்றது. நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குத் தீர்ப்பைத் தொடர்ந்து, முகத்தை மூடாத ஆடை அணிந்து வந்த குறிப்பிட்ட முஸ்லிம் ஆசிரியைக்கு அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பரஸ்பர வாக்குவாதத்தையடுத்து பிரச்சினை முற்றியுள்ளது.
இந்த விவகாரத்தை பாடசாலைச் சமூகம் மிகவும் பக்குவமாகக் கையாண்டிருக்கலாம் என்பதே, இப்போது பொதுவாக முன்வைக்கப்படுகின்ற அபிப்பிராயமாகும்.

நீதிமன்ற உத்தரவை மதித்திருக்க வேண்டும் என்பது முதலாவது விடயமாகும். ஆனால், அதையும் தாண்டி, இந்த ஆசிரியையுடன் அல்லது அவரது அபாயாவுடன் உடன்பட முடியவில்லை என்றால், இவ்விடயத்தை இதைவிடக் கவனமாக வேறு வழியில் சட்டத்துக்குட்பட்டு கையாண்டிருக்க வேண்டும்.

ஆனால், மனித உரிமைகள் ஆணைக்குழு, நீதிமன்றத்தின் சிபாரிசுகளை மதிக்கத் தவறியது மட்டுமன்றி, இதில் மாணவர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை மிக மோசமான முன்னுதாரணமாகவே கருதப்படுகின்றது.

எவ்வாறிருப் பினும், இது முஸ்லிம் சமூகத் திற்கும் தமிழ் சமூகத்தி ற்கும் இடையிலான ஒரு பிரச்சினை யல்ல. முஸ்லிம்க ளுக்கும்  தமிழ் சமூகத்தில் உள்ள ஒரு குழுவின ருக்கும் இடையிலான விவகாரம். இதனை வைத்து தமிழ் - முஸ்லிம் உறவில், முரண்பா டுகளை வளர்த்துக் கொள்ளக் கூடாது.

இலங்கை வரலாற்றில் பாடசாலைகள் இன, மத ரீதியாக பிரிக்கப்பட்டிருப்பது தவறு என்றாலும், அவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக கல்விக் கட்டமைப்புக்குள் இன, மத பேதங்கள் இதுகாலவரை பெரிதாகத் தோற்றம்பெறவில்லை.

முன்னைய காலங்களில் முஸ்லிம்களில் கணிசமானோர் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பில் உள்ள பாடசாலைகளிலும் உயர் கல்வியகங்களிலும் தமிழ் ஆசிரியர்களிடமே கற்றனர். பல நூற்றுக்கணக்கான தமிழ் ஆசிரியைகள் மட்டுமன்றி, ஏனைய அரச,  தனியார் உத்தியோகத்தர்கள் கூட, முஸ்லிம் பாடசாலைகள் மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தான அல்லது முஸ்லிம் பிரதேசங்களில் தங்களுக்கு விருப்பமான அடையுடன் பணிக்கு வருகின்றனர். இதனை யாரும் எதிர்க்கவில்லை.

அதுபோல, தமிழ்ப் பிரதேசங்களில் உள்ள சிறிய, பெரிய பாடசாலைகளில், ஆயிரக்கணக்கான முஸ்லிம் ஆசிரியைகள் தமது கலாசார ஆடையுடன் இன்றும் பணிக்குச் செல்கின்றனர். முகத்தை மூடாத ஆடையான ‘அபாயா’ உடுத்தி அரச அலுவலகங்களில் பணியாற்றுகின்றனர்.

இதற்கெதிராக யாரும் போர்க்கொடி தூக்கவில்லை. ஏனெனில், அவர்களது அடிமனதில் ‘மற்றவர்களின் கலாசாரத்தை, பழக்க வழக்கங்களை மதிக்க வேண்டும்’ எண்ணமும் புரிதலும் உள்ளது. தமக்கு உடன்பாடில்லாத விடயங்களைக் கூட சகித்துக் கொள்ளும் மனப்பாங்கு உள்ளது.

சுமார்  25 வருடங்களுக்கு முன்னர், தமிழ் ஆசிரியை ஒருவருக்கு பொட்டு வைப்பதில் ஏற்பட்ட பிரச்சினைக்கு, மறைந்த தலைவர் எம்.எச். எம்.அஷ்ரப் குரல் கொடுத்ததை இங்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது. அதேபோல், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நெருக்கடிக்காக தமிழ், சிங்கள முற்போக்கு அரசியல்வாதிகளும் குரல் எழுப்பியதை குறிப்பிட்டாக வேண்டும்.

இனக் குழுமங்களுக்கு இடையிலான உறவு என்பது, மிகவும் நீண்ட வரலாற்றைக் கொண்டதும் தொன்மையானதும் ஆழமானதும் ஆகும். எந்த இனமாயினும் அற்பத்தனமான விடயங்களுக்காக அடுத்த சமூகத்துடன் முரண்பட்டுக் கொள்வது ஒருபோதும் நல்ல பெறுபேறுகளைத் தரப் போவதில்லை.

அதேநேரம், இன உறவு பற்றியும் நல்லிணக்கம் பற்றியும் பேசிவருகின்ற சூழலில், பாடசாலைகள் ஊடாகவும் ஏனைய வழிகளிலும் இளைய தலைமுறையினரிடையே இன ஐக்கியத்திற்கான விதைகளைத் தூவ வேண்டிய தேவை இலங்கை சூழலில் அதிகமாக உள்ளது.

அந்த வரிசையில், அடுத்த தலைமுறையினருக்கு நல்ல விடயங்களை எடுத்துக் கூறும் கல்விக் கூடமொன்றில் இடம்பெற்ற மேற்படி சம்பவத்தை, இந்த வரிசையில் ஒரு நல்ல முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளவே முடியாது.

முஸ்லிம்களும் தமிழர்களும் இணைந்து செயற்பட வேண்டும் என்ற குரல்கள் உரக்க ஒலிக்கின்ற ஒரு காலகட்டத்தில், எங்கோ ஒரு புள்ளியில் ஏற்படுகின்ற மனமுறிவு, நம்பிக்கையீனம் தமிழ்-முஸ்லிம் உறவில் ஒரு நஞ்சாக அகத்துறுஞ்சப்படும் என்பதை மறந்து விடக் கூடாது.

உண்மையில், சக மனிதனுக்காக, சக இனத்தின் உரிமைக்காகவும் குரல்கொடுக்கும் மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டியுள்ளது. நல்ல முன்மாதிரிகளை வெளிப்படுத்த வேண்டியுள்ளது. சட்டத்தை மதிக்கின்ற, மனித உரிமைகளுக்கு கௌரவம் அளிக்கின்ற, சக இனத்தின் உணர்வுகளை, கலாசாரத்தை, நடை உடை பாவனைகளை சகித்துக் கொள்கின்ற பண்புகளையே அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டியிருக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .