Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 02, புதன்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 12 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘அரசியல்வாதிகளுக்கான அரசியல்’ முன் கையெடுத்துள்ள நிலையில், முஸ்லிம்களுக்கான அரசியல் அதாவது சமூகத்தின் நலன்களை முன்னுரிமைப்படுத்திய பிரத்தியேக அரசியல் பற்றிப் பேசி வருகின்றோம். இது காலத்தின் தேவையாகவும் மாறியிருக்கின்றது.
ஒரு தனித்துவமான இன, மத குழுமமாக இருக்கின்ற முஸ்லிம் சமூகம் அந்த அடிப்படையிலேயே தோற்றம்பெற்ற பிரச்சினைகளையும், தங்களுக்கு மட்டுமே உரிய விவகாரங்களையும் பிரத்தியேக வழிமுறை ஒன்றின் ஊடாகவே அணுக வேண்டியிருக்கின்றது. இதற்குப் பொதுப்படையான அணுகுமுறை சரிவராது.
அந்த வகையில், முஸ்லிம்கள் தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பெருந்தேசியக் கட்சிகளுடன் இணைந்து அரசியல் செய்வதற்கு சமாந்திரமாக தமக்கான பிரத்தியேக அரசியல் கட்சிகளையும் ஒழுங்கையும் பேணி வருவது நீண்டகால அடிப்படையில் அவசியமானது.
வாடகை வீடுகளில் தொடர்ந்து வசிப்பதை விடச் சொந்தமாக ஒரு குடிசை வீட்டைத்தானும் கட்டிக் கொள்வது நல்லது.
அது இக்கட்டான நேரத்தில் உதவுவது மட்டுமன்றி எப்போதும் ஒரு அடைக்கலமாக அமையும். அதுபோலதான் இந்த ஏற்பாட்டையும் பார்க்க வேண்டும்.
முஸ்லிம் சமூகம் இந்த தேவைப்பாட்டை உணர்ந்து கொள்வது மிக முக்கியமானது. கடந்த தேர்தலில் முஸ்லிம் சமூகம் கண்ட நடைமுறைச் சாத்தியமற்ற கனவுகள் கலைய ஆரம்பித்துள்ளதால், முஸ்லிம்களுக்கான அரசியலை மீளக் கட்டியெழுப்புவது
அறவே சாத்தியப்படாத விடயம் என்று கூறுவதற்கும் இல்லை.
ஒரு விடயத்தைக் கவனிக்க வேண்டும்.
கொழும்பு போன்ற தென்னிலங்கையின் பல பகுதிகளில் வாழ்கின்ற முஸ்லிம்கள் தங்களுக்காகப் பிரத்தியேக கட்சிகளோ அரசியலோ தேவையில்லை என்று கருதுவதையும் அவ்வாறே கருத்துரைப்பதையும் நீண்டகாலமாகக் கவனிக்க முடிகின்றது.
முஸ்லிம் கட்சிகள் வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்களுக்குத்தான் தேவை என்ற கருத்தியலும் நீண்டகாலமாகக் கட்டமைக்கப்பட்டு வந்திருக்கின்றது.
இவ்வாறு அவர்கள் கருதுவதில் நியாயங்கள் இருந்தாலும், ஒரு சமூகமாக நோக்குகின்ற போது இது ஆரோக்கியமான கருத்தியல் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம் அரசியல் என்று நாம் பேசிக் கொள்வதில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்று, முஸ்லிம் கட்சிகளை மையப்படுத்திய அரசியல். இரண்டாவது, வேறு கட்சிகளில் இருந்து கொண்டு முஸ்லிம் சமூகத்திற்காக தம்மால் முடியுமான அரசியலை முன்னெடுப்பது. இதில் கட்சிசார் அரசியலே முதன்மையானதும் தனிப் பலம் பொருந்தியதும் ஆகும்.
முஸ்லிம் கட்சிகளை சமூகத்திற்குப் பயன்தரக் கூடியதாக மாற்றியமைப்பதில் இங்கிருக்கின்ற முக்கிய தடை முஸ்லிம் கட்சிகளும் அதன் தலைவர்கள், தளபதிகளும் இன்னும் திருந்தாமல் இருக்கின்றமைதான். தமது கடந்தகால தவறுகளை மீள் வாசிப்புச் செய்து, புதிய ஒழுங்கிற்கு தம்மைத் தகவமைத்துக் கொள்ளாமல் இருக்கின்றமைதான்.
முஸ்லிம்களுக்காக பிரதானமாக மூன்று முஸ்லிம் கட்சிகள் இருக்கின்றன. முஸ்லிம் காங்கிரஸும், மக்கள் காங்கிரஸும் இதில் முக்கியமானவை. தேசிய காங்கிரஸ் மூன்றாவது இடத்தில் இருக்கின்றது.
இது தவிரத் தேசிய ஐக்கிய முன்னணி, ஐக்கிய சமாதான கூட்டமைப்பு என்ற சில சிறு கட்சிகளும் பெயரளவில் இயங்கிக் கொண்டு இருக்கின்றன.
எம்.எச்.எம்.அஷ்ரப் உயிருடன் இருக்கும் வரைக்கும் முஸ்லிம் சமூகம் சரியான வழியில் வழிநடத்தப்பட்டது எனலாம். அவர் மரணித்த பிறகுதான் அந்த தலைமைத்துவ வெற்றிடம் உணரப்பட்டது. இன்று வரை இந்த நிலைமை மாறவில்லை.
அவரது மரணத்திற்குப் பிறகு மு.காவிற்கு இணைத் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். அதன் பின்னர் றவூப் ஹக்கீம் தனியான தலைவராக இன்று வரை பதவி வகித்து வருகின்றார்.
தற்கால முஸ்லிம் அரசியலில் ஹக்கீம் முக்கியமானவர். பாராளுமன்றத்தில் ஒரு கட்சித் தலைவராக, எம்.பியாக அவர் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
ஹக்கீம் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும், தேசிய ரீதியாக முஸ்லிம்களின் அரசியல் விடயங்களை முன்கொண்டு செல்வதில் அவருக்குள்ள பல்வகை அறிவும் அனுபவமும் குறைத்து மதிப்பிட முடியாதது. ஜனாஸா எரிப்பு தொடர்பான தனிநபர் பிரேரணையைக் கொண்டு வந்தமை அதற்குக் கடைசி எடுத்துக்காட்டாக அமையும்.
ஆனால், முஸ்லிம் காங்கிரஸின் அரசியலை அஷ்ரபின் வழியில் றவூப் ஹக்கீம் செய்யவில்லை. என்றும் வடக்கு, கிழக்கை மையப்படுத்திய முஸ்லிம் காங்கிரஸின் பிரபலமும் மக்கள் செல்வாக்கும் குறைவடைந்து போனதற்கு அஷ்ரபின் பாணியில் ஹக்கீம் செயற்படாமையே
முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டுப் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.
மக்களை ஏமாற்றும் பாணியிலான வாக்குறுதிகளும். முன்னுக்குப் பின் முரணான அரசியல் நகர்வுகளும் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளை விலகிச் செல்லும் போக்கும், வடக்கு கிழக்கிற்கு வெளியில் ஒரு விதமாகவும் கிழக்கில் ஒரு விதமாகவும் செயற்படும் தன்மையும் என அவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் உள்ளன.
இதற்கு அவர் மட்டுமே காரணமல்ல. கடந்த 2000ஆம் ஆண்டில் இருந்து இந்தக் கட்சியின் செயலாளராக, தவிசாளராக, எம்.பியாக இருந்த, இருக்கின்ற எல்லோருக்கும் இதில் பங்குள்ளது. தாங்களும் ஒரு பிராந்தியத்தின் அரசியல் தலைமைகள் என்பதை இவர்கள் விளங்கிச் செயற்படவில்லை.
இதேவேளை, மக்கள் காங்கிரஸ் கட்சிதான் அஷ்ரபின் மரணத்திற்குப் பிறகு பெரு வளர்ச்சி பெற்ற கட்சி என்று சொல்லலாம். இதற்கு முழு முதற்காரணம் அதன் தலைவர் றிசாட் பதியுதீன் ஆவார். வடபுல மக்களுக்கு இப்படியொரு கட்சி அவசியமானது என்பதையும் மறுக்க முடியாது.
றிசாட் பதியுதீள் அடிப்படையில் சமூகம் சார்ந்த பார்வையுள்ளவராக இருந்த போதும் அவருடன் இருந்த அரசியல்வாதிகள் சரிவர அவரை வழிநடத்தவில்லை. ஒவ்வொரு பிரதேசத்திலும் நிலையாகக் கால் ஊன்றுவதற்குப் பதிலாக இலங்கை முழுவதும் கட்சியை வளர்ச்சியடையச் செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
இதனால் மக்கள் காங்கிரஸில் பணம், பதவி விரும்பிகள் என்று சமூகத்திற்குப் பொருத்தமற்ற சிலரும் வந்து இணைந்தனர். முஷாரப் எம்.பியாக தெரிவு செய்யப்பட்டதால், உருவான பலம், சிறிது காலத்திற்குள்ளேயே அக்கட்சியின் மீதான பலவீனமாக மாறிப் போனதையும் அறிவோம்.
ஒரு கட்சி என்றால் எல்லாக் காலத்திலும் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், மக்கள் காங்கிரஸ் கட்சி தேர்தல் மைய அரசியலில் மட்டும் கூடிய கவனம் செலுத்துவதாகத் தெரிகின்றது. கட்சிக்கு ஆள் சேர்ப்பதை விட, இருக்கின்ற களத்தைப் பயன்படுத்தி சமூகத்திற்கான அரசியலை முன் நகர்ந்தும் தேவையை றிசாட் எந்தளவுக்கு உணர்ந்திருக்கின்றார் என தெரியவில்லை.
றிசாட் பதியுதீனுக்கு முஸ்லிம் மக்களிடையே ஒரு அனுதாபமும், அபிமானமும் இருந்தது. அவர் மீதான போலிக் குற்றச்சாட்டுக்களும் இதற்குக் காரணமாகக் கொள்ளப்படலாம். இதுதவிர, தனிப்பட்ட இவரது தொடர்புகளும் மக்களுடன் பழகும் விதமும், ஏனையவரின் கருத்துக்குச் செவிமடுக்கும் தன்மையும் சாதகமாக அமைந்துள்ளன.
இதனைப் பயன்படுத்தி கட்சியை முதன்மை நிலைக்குக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால், அது நடக்கவில்லை. கட்சிக்குள் இருந்த சிலரே இதனைச் செய்ய விரும்பவில்லை. இந்தப் பின்னணியில் இப்போது கட்சி ஒருவித தேக்கநிலையில் இருக்கின்றது. முன்னைய எழுச்சி நிலை இல்லை. ஆகவே, மீள் வாசிப்பொன்றை வேண்டி நிற்கின்றது.
முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ்
கிழக்கில் மட்டும் அரசியல் செய்யும்
ஒரு கட்சியாகும். அதாவுல்லா அதிகாரத்திலிருந்த காலத்தில் இன, மத பேதங்கள் கடந்து எல்லா பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கும் சேவை செய்தார் என்றாலும் அவர் கட்சியை வளர்க்கவில்லை.
அஷ்ரபிற்குப் பிறகு, கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் நிலைப்பாட்டை ஓரளவுக்குச் சரியாக முன்வைத்தவர் அதாவுல்லா எனலாம். வடக்கு, கிழக்கு இணைப்பையும் தமிழ் ஆயுதக் குழுக்களையும் நேரிடையாக எதிர்த்தார். ஆனால், பெருந்தேசியக் கட்சிகளை, இனவாதிகளை ஏனோ
அவர் எதிர்க்கவில்லை.
இதுதான் அவர் மீது முன்வைக்கப்படும் பிரதான விமர்சனமாகும்.
மக்களுக்கு நிறைய அபிவிருத்தி சார் சேவைகளைச் செய்துள்ள தேசிய காங்கிரஸ் தலைமை உரிமைகளுக்காகப் பெரியளவில் குரல் கொடுக்கவில்லை. அதிகாரத்திலிருந்த காலத்திலும் இல்லாத காலத்திலும் மக்கள் தொடர்புகளைச் சரிவரப் பேணவில்லை. அவரைச் சூழ இருந்தவர்களும் இதற்குக் காரணம்.
இவ்வாறான காரணங்களால், ஒரு குறிப்பிட்ட ஊர்களுக்குள்ளேயே இக்கட்சி மட்டுப்படுத்தப்பட்டதுடன், கிழக்கு மாகாண சபையில் பல உறுப்பினர்களையும்,
ஒரு எம்.பியையும் பெற்றிருந்த கட்சி இப்போது மேற்சொன்ன எல்லாவற்றையும் இழந்து நிற்கின்றது.
முஸ்லிம் அரசியலில் எம்.பிக்களாகவும் மாகாண சபை உறுப்பினர்களாகவும் இருந்த பலர் இருந்த இடம் தெரியாமல் போயுள்ளனர். அல்லது, அரசியலில் தலைமறைவாகி இருக்கின்றனர்.
ஆகவே, கட்சித் தலைவர்கள் மட்டுமல்ல, ஏனைய சிறு கட்சிகளை வைத்துக் கொண்டு சீசன் அரசியல் செய்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமது அரசியல் போக்குகளை மீளமைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல், எல்லாக் கட்சிகளையும் சேர்ந்த பிராந்திய முஸ்லிம் தலைவர்கள் முன்னாள், இந்நாள்
எம்.பிக்கள் பலரும் தம்மை மீள் வாசிப்புச்
செய்ய வேண்டியிருக்கின்றது.
எனவே, முஸ்லிம்களுக்கான பிரத்தியேக அரசியலைச் சரியான விதத்தில் மீளக் கட்டியெழுப்ப வேண்டுமாயின், எல்லா மட்டங்களிலும் உள்ள முஸ்லிம் அரசியல் தலைமைகள் தம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால்
மட்டுமே சமூகத்திற்கான தனித்துவ அரசியலை நோக்கி முஸ்லிம் மக்கள்
மீளத் திரும்பி வருவார்கள்.
மோஹமட் பாதுஷா
12.02.2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .