2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

தியாகத்தை போற்றும் பெருநாள்

Editorial   / 2024 ஜூன் 17 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகமட்

உலகெங்கும் இருந்து சுமார் இருபது இலட்சம் ஹஜ்ஜாஜிகள் சவூதியில் உள்ள இஸ்லாத்தின் புனிதத் தலங்களில் ஹஜ் கடமைக்காக குழுமிருக்கின்ற நிலையில், உலக நாடுகள் எங்கும் வாழ்கின்ற 1.9 பில்லியன் முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் நேற்றும், இன்னும் ஒரு பகுதியினர் இன்றும் 

(பிறைக் கணக்கின்படி) ‘ஈதுல் அல்ஹா’  (தியாகத் திருநாள்) எனும் ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.

இந்தத் தியாகத் திருநாள் இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான ஒரு தியாகத்தை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகின்றது.

இறைத் தூதர்களுள் ஒருவரான இப்ராஹிம் நபி அவர்களினதும் அவரது மனைவி ஹாஜரா (அலை) மற்றும் மகன் இஸ்லாமில் (அலை) ஆகியோரின் தியாகத்தை, அதன் பின்னர் வந்த முஸ்லிம் மக்கள் அனைவரும் நினைவு கூர வேண்டும், போற்ற வேண்டும் என்ற அடிப்படையிலேயே ஹஜ் கடமையும், பெருநாளும் அதனையொட்டிய சமய நிகழ்வுகளையும் இறைவன் கடமையாக்கியிருக்கின்றான்.
இப்ராஹிம் நபியின் தியாகம் என்பது,  இறை நம்பிக்கையாளர்களுக்கு மிகப் பெரும் உதாரணமாக அமைகின்ற ஒரு முக்கியமான வரலாற்றுச் சம்பவமாகும். அதுமட்டுமன்றி, இறைவனுக்காக மனிதன் செய்த உன்னதமான தியாகத்தை உலக மக்களுக்கு எடுத்துக் காட்டுவதாகும்.

இப்ராஹிம் (அலை) அவர்களுக்கும் அவரது துணைவியாரான ஹாஜரா (அலை) அவர்களுக்கும் நீண்ட நாட்களாகப் பிள்ளைப் பாக்கியம் இருக்கவில்லை. மிகவும் வயது முதிர்ந்த பருவத்தில் அல்லாஹ் அவர்களுக்குப் பிள்ளையொன்றைக் கொடுத்தான். அவர்தான் பிற்காலத்தில் இறைத் தூதரான இஸ்மாயில் (அலை) ஆவார்கள்.

இப்ராஹிம் நபிக்கு இறைவன் தொடர்ச்சியாகப் பல கஷ்டங்களைக் கொடுத்து அவரைச் சோதித்துக் கொண்டே இருந்தான்.

அந்த வகையில், குழந்தை இஸ்மாயில் (அலை) பிறந்து சிறிது காலத்தின் பின்னர் அல்லாஹ்வின் உத்தரவின் பேரில் தம் மனைவி ஹாஜிரா அம்மையாரையும்,  மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களையும் பாலைவனத்தில் தகிக்கும் சுடு மணலில் தன்னந்தனியாக விட்டுப் பிரிந்து செல்கின்றார்கள்.

அந்தப் பாலைவனத்தில் தண்ணீர் கேட்டழுத குழந்தைக்காக நீர் தேடி ஹாஜரா (அலை) அவர்கள் ஓடியதை நினைவுகூரும் முகமாகவே இன்றும் ஹஜ்ஜூக்கு செல்கின்ற பயணிகள் சபா - மர்வா மலைகளுக்கு இடையில் தொங்கோட்டம் ஓடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

அதுமட்டுமன்றி, அன்று தண்ணீர் கேட்டு அழுத குழந்தை இஸ்லாமாயில் அலைஹிவஸல்லம் அவர்களுக்காக அல்லாஹ்வின் அருளால் மலைகள் நிறைந்த அந்தப் பாலைவனத்திலிருந்து ஊற்றெடுத்த நீர்தான் இன்று வரை ‘ஸம் ஸம்’ என்ற வற்றாத ஊற்றாகக் காணப்படுகின்றது.

இவ்வாறிருக்கும் போது, இப்ராகிம் (அலை) அவர்கள், தனது மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களை அறுத்துப் பலியிடக் கனவொன்று கண்டார்கள். இது இறைவனின் கட்டளை ஆகும்.

ஆகவே, அதற்கு கீழ்படியும் வகையில் தனது அன்பு மகனைப் பலியிட இப்ராஹிம் (அலை)அவர்கள் துணிந்தார்கள். ‘இது இறைவனின் கட்டளை என்றால் அதனை நிறைவேற்றுங்கள்’ என்று தாயார் ஹாஜராவும் சொன்னார்கள். இது அவர்களது இறை நம்பிக்கையையும் தியாகத்தையும் எடுத்துக் காட்டுகின்றது. 
“என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். 
நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு’ என்று இப்ராஹிம் நபி தன் மகனிடம் கேட்டார்.

“என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்” என்று மகன் இஸ்மாயில் பதிலளித்தார்.

அதுமட்டுமன்றி, தனது தந்தை இறை கட்டளைப்படி தன்னை அறுப்பதற்கு ஏதுவாக மகன் இஸ்மாயில் இடமளித்தார்கள்.

சிறுபிள்ளையாக இருந்தபோதும், அவர் கொண்டிருந்த மிகப் பெரிய இறை நம்பிக்கையினதும் பொறுமையினதும் வெளிப்பாடாக இது அமைகின்றது.
இப்ராஹிம் (அலை) அவர்கள் தனது அருமை மகனை அறுத்துப் பலியிடத் தயாரானார்கள். கழுத்தில் கத்தியை வைத்தார்கள். ஆனால், இறைவன் அந்தக் கத்திக்கு அறுக்கும் சக்தியை இல்லாமலாக்கியிருந்தான். அந்த நேரத்தில் இன்னுமொரு இறை கட்டளை வானத்திலிருந்து வந்தது.

“குழந்தைக்குப் பதிலாக ஒரு ஆட்டை அறுத்துப் பலியிடுமாறு” அல்லாஹ் அவர்களுக்குக் கட்டளையிட்டான்.

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் இப்ராஹிம் நபியும் அவரது மனைவி ஹாஜரா (அலை) அவர்களும் இஸ்லாமில் (அலை) அவர்களும் செய்த இந்த தியாகத்தை நினைவு கூருமாறு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.

ஹஜ் பயணமும், தியாகத் திருநாள் எனப்படும் ஹஜ்ஜூப் பெருநாளும், இந்த நாட்களில் இடம்பெறுகின்ற உழ்ஹிய்யா உள்ளிட்ட வேறு பல சமய நடைமுறைகளும் இப்ராஹிம் நபியின்  குடும்பம் செய்த தியாகத்தை மையமாகக் கொண்டே இடம்பெறுகின்றன.

இறை நம்பிக்கையும் மனிதனின் தியாகமும் இறைவனிடத்தில் எந்தளவுக்கு உயர்ந்தது என்பதையும்,  அதனை அல்லாஹ் எந்தளவுக்கு நேசிக்கின்றான் 
என்பதற்கும் இந்த  தியாகத் திருநாளும் ஹஜ் கடமையும், பல நூற்றாண்டுகள் 
கடந்தும் உலகுக்கு எடுத்தியம்பிக் கொண்டே இருக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X