பாதாள உலகக் குழுக்களின் கொலை வெறியாட்டங்கள், பாதாளக் குழுக்கள், குற்றங்கள், சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டுள்ள முப்படைகள், அரிசித் தட்டுப்பாடு, தேங்காய்களின் விலையேற்றம், ‘புது மாப்பிள்ளைகள்’ போல, அமைச்சர்கள் சிலர் செய்யும் அலப்பறைகள், அனுபவமற்ற பேச்சுக்கள், செயற்பாடுகள் என நாட்டு மக்களிடையில் கடும் எதிர்ப்புக்களையும் விமர்சனங்களையும் சந்தித்துவரும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போது தனது அமைச்சர்கள், எம்.பிக்களினால் கட்சிக்குள்ளும் ‘புதிய நெருக்கடி’ ஒன்றை எதிர்கொண்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி அரியணையைக் கைப்பற்றவும் பாராளுமன்றத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றவும் தேர்தல் பிரசார மேடைகளிலும் தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை ஏற்படுத்திய எதிர்பார்ப்புக்களை, அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற எந்த வித நடவடிக்கைகளையும் எடுக்காததால் கட்சிக்கு வெளியே கடும் விமர்சனங்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டு வரும் அனுரகுமார அரசாங்கம், தேர்தல் காலத்தில் தமது கட்சி தொடர்பில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியதாலேயே கட்சிக்குள் இந்த புதிய நெருக்கடிகளையும் முரண்பாடுகளையும் எதிர்ப்புக்களையும் எதிர் கொண்டுள்ளது.
ஜனாதிபதி, பாராளுமன்றத் தேர்தல் பிரசார மேடைகளில் “நாம் ஆட்சிக்கு வந்தால் ஜனாதிபதியோ, அமைச்சர்களோ, எம்.பி.க்களோ எந்தவித சிறப்பு சலுகைகளையும் அனுபவிக்க மாட்டோம். தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதிகளை பெற மாட்டோம், எமது சம்பளங்களை மக்கள் அபிவிருத்திக்கு செலவிடுவோம்” என வழங்கிய வாக்குறுதிகள் மூலம் மக்களின் நம்பிக்கையைப்பெற்று ஆட்சி பீடம் ஏறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அனைத்து சலுகைகளும் ஏற்கெனவே தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கமைய இல்லாமலாக்கப்பட்டுள்ளமையால் ஏற்பட்டுள்ள அதிருப்தியில் 15க்கும் மேற்பட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை விட்டுச் செல்வது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளமையாலேயே இந்த புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு (என்.பி.பி.) 159 ஆசனங்கள் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், இவற்றில் 107 பேர் தேசிய மக்கள் சக்தியையும் 52 பேர் நேரடியாக
ஜே.வி.பியையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். எனினும், தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 107 பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் கலாநிதி பட்டம் மற்றும் பேராசிரியர் பட்டங்களை வகிப்பவர்கள். அதேபோல, பெரிய நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்து அதிக சலுகைகள் மற்றும் அதிக சம்பளத்துடன் பணியாற்றிய நிலையில் தற்போது தங்களுடைய பாராளுமன்ற உறுப்புரிமைக்காக அவற்றைக் கைவிட்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தங்களது பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பளம், சலுகைகள், வாகனங்கள், எரிபொருள், ஊழியர்கள் போன்றவற்றைப் பெற மாட்டார்கள் என தேர்தல் காலத்தில் மக்களுக்கு வாக்குறுதியளித்துள்ளமையால், அவர்கள் இப்போது அதைப் பெற முடியாது சிரமப்படுகின்றார்கள். முழு நேர
ஜே.வி.பி. உறுப்பினர்கள் அத்தகைய சலுகைகள் இல்லாமல் வாழ முடிந்தாலும், உயர்மட்ட சம்பளம், வேலைகள் மற்றும் சலுகைகளை ஒதுக்கி வைத்து விட்டு பாராளுமன்றத்திற்கு வந்த ஒரு குழுவினருக்கு இது இப்போது ஒரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. சம்பளம், சலுகைகளா அல்லது கட்சிக்கான தியாகமா என்ற குழப்பத்திலும் விசனத்திலும் இந்த அமைச்சர்கள், எம்.பிக்கள் உள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி அரசின் ஜனாதிபதி பிரதமர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்கள் கூட
‘மக்கள் அபிவிருத்திக்காக’ என்ற பெயரில் ஜே.வி.பி. கட்சியின் கணக்கிற்கே செல்கின்றன. உதாரணமாக ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு அடிப்படை சம்பளமாக 54,500 ரூபாவும் பிரதி அமைச்சர்களுக்கு 65,000 ரூபாவும் அமைச்சர்களுக்கு 85,000 ரூபாவும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளபோதும், அவர்களுக்கான விசேட கொடுப்பனவுகளை உள்ளடக்கி ஒவ்வொருவரும் 3 இலட்சம் ரூபாய் முதல் 4 இலட்சம் ரூபாய் வரை பெற்று வந்த நிலையில், இவர்களின் அடிப்படைச் சம்பளம் மட்டுமே பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதி அமைச்சர்கள், அமைச்சர்களுக்கு வழங்கப்படுவதுடன் மிகுதி பெரும் தொகையான கொடுப்பனவுகள் ஜே.வி.பி. கட்சியின் கணக்கிற்கே செல்வதாகக் கூறப்படுகின்றது.
இதற்கமைய பாராளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு (என்.பி.பி.)159 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில் ஒரு மாதத்தில் மட்டும் 4 கோடி ரூபாவுக்கு மேல் ஜே.வி.பி. கட்சியின் கணக்கிற்கே செல்கின்றது.பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் ,விசேட கொடுப்பனவுகளை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களினால் மக்கள் சேவைக்கு, அபிவிருத்திக்குப் பயன்படுத்த முடியாது அது ஜே.வி.பி. கட்சிக்குச் செல்வது ஜே.வி.பி.-தேசிய மக்கள் சக்தி கூட்டுக்குள் முரண்பாடுகளை, வெறுப்புக்களை ஏற்படுத்தியுள்ளதுடன், மக்கள் மத்தியிலும் விவாதங்களையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தி வருகின்றது.
எனவே, சம்பளம், வாகனங்கள், எரிபொருள் மற்றும் சிறப்புரிமைகள் உள்ளிட்ட சலுகைகள் இல்லாமல் ஐந்து ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தொடர்ந்து பதவி வகிப்பதா அல்லது பாராளுமன்றத்தை விட்டு வெளியேறி, தங்களுடைய முன்னைய பணியையே தொடர்வதா என்பது குறித்து விரக்தியடைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது ஆராய்ந்து வருகின்றனர். தற்போது அந்த விவாதம் உச்சத்தை எட்டியுள்ளமையால் விரைவில் ஒரு குழுவினர் தேசிய மக்கள் சக்தி அரசிலிருந்து வெளியேறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக தெரியவருகின்றது.
ஒருவேளை, கட்சிக் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படாது எமக்கு சம்பளம், சலுகைகள்தான் முக்கியம் எனக்கூறி பாராளுமன்ற உறுப்பினர்கள் யாராவது பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளிலிருந்து விலகினால் இவ்வாறான நிலையை எதிர்கொள்ள தங்களது பதவிகளை இராஜினாமா செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடங்களுக்கு முழு நேர ஜே.வி.பி. உறுப்பினர்களை நியமிக்க கட்சித் தலைமை தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
படித்து பட்டம் பெற்றாலும், ஆட்சி செய்த அனுபவமின்றி அமைச்சர்கள் முட்டாள்கள் போன்று அல்லது மக்களை முட்டாள்களாக நினைத்துக் கூறி வரும் கருத்துக்கள் அனுரகுமார அரசின் ‘கல்விமான்கள் அதிகம் உள்ள அரசு’ என்ற விம்பத்தை உடைத்து ‘அரசியல் கோமாளிகள்’ உள்ள அரசு என்ற விமர்சனத்தை உருவாக்கி வரும்
நிலையில், சிறப்பு சலுகைகளை அனுபவிக்க மாட்டோம்,
வாகன அனுமதிக்கான பெர்மிட் பெற மாட்டோம், ஆடம்பர செலவுகளை செய்ய மாட்டோம், எமது சம்பளங்களை, விசேட கொடுப்பனவுகளை கட்சிக்கே வழங்குவோம் என தேர்தல் காலத்தில் வெற்றி பெறுவதற்காகக் கொடுத்த வாக்குறுதிகள் அனுரகுமார அரசாங்கத்துக்கு தற்போது பெரும் உள்ளக நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த நெருக்கடியைத் தவிர்க்க இவ்வாறு குழம்பும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சில நம்பிக்கைகளைக் கொடுத்து ‘தாஜா’ பண்ணும் வேலையில் கட்சித் தலைமை ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
முருகானந்தம் தவம்