Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை
Mayu / 2024 மார்ச் 19 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
ஒவ்வொரு தரப்பினரும் தாங்கள் செய்கின்ற நல்ல, கெட்ட காரியங்கள் தொடர்பில் தம் பக்க நியாயங்களை வைத்திருப்பார்கள்.
ஆயுதக் குழுக்கள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், கள்வர்கள், கொலைகாரர்கள், அரசியல்வாதிகள், தொடக்கம். பெரும் தலைவர்கள் வரை எல்லோருக்கும் இது பொருந்தும். ஆனால், அநேகமான தரப்பினர் தம் பக்கமுள்ள நியாயங்களை அவர்களாகக் கூறுவதில்லை. அவர்களை நோக்கி கேள்விகள் முன்வைக்கப்படும்போது, மட்டுமே வெளிப்படுத்துகின்றனர்.
இருப்பினும், அரசியல்வாதிகள் இதற்கு விதிவிலக்கு எனலாம் அவர்கள் தமது செயல்களுக்கான நியாயப்படுத்தல்களை, காரணங்களைக் கற்பிதங்களைத் தாமாகவே முன் வந்து வெளியிடுவார்கள். அது அவர்களுக்கு ஒரு சுய திருப்தியைக் கொடுக்கும்.
இருப்பினும், அவர்கள் அப்படிச் செய்கின்றார்கள் என்பதற்காக அவையெல்லா ம் உண்மையென்றோ நியாயம் என்றோ ஆகிவிட மாட்டாது. இவ்வாறு கூறுவதால், அவர்களது நடவடிக்கைகளால்நாட்டுக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட பாதகமான விளைவுகளுக்குப் பிராயச்சித்தம் கண்டதாகவும் ஆகிவிடாது. முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அண்மையில் புத்தகம் ஒன்றை ஆங்கிலமொழியில்வெளியிட்டிருக்கின்றார். சமூக வலைத்தளங்களில் இது பற்றிய பலவிதமான கருத்துக்களே வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டவுடன், அவர்களுக்கு சுகவீனம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதும், சிறையிலோ அல்லது ஓய்வு நிலையிலோ இருக்கின்றபோது, சரித்திரம் எழுகிறதுவும் உலக வழக்கம் என்பதை நாம் மறக்க முடியாது. அந்த வகையிலேயே கோட்டாவின் புத்தகத்தையும் நோக்க வேண்டியுள்ளது.
‘நான் ஜனாதிபதிப் பதவியைப் பறிகொடுப்பதற்கான காரணம்’, ‘எனது ஆட்சி; கவிழ்க்கப்பட்டதன் பின்னணி’, ‘எனக்கெதிரான மக்கள் கிளர்ச்சிக்கான அடிப்படைகள்’ என்று ஏதாவது ஒரு தலைப்பை அவர் இந்த நூலுக்கு இட்டிருக்கலாம். அப்படிச் செய்திருந்தால், தனது நியாயங்களுக்கு அப்பால் மக்களின் பக்கமுள்ள நியாயங்களையும் களநிலை யதார்த்தங்களையும் அவர் புரிந்துள்ளார் என்ற பிம்பத்தை இது ஏற்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது.
ஆனால் அவர், ‘என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றுவதற்கான சதி’ என்று இந்த நூலுக்குத் தலைப்பிட்டுள்ளதன் மூலம், குழுஉக்குறியாக ஒரு விடயத்தைச் சொல்லியிருக்கின்றார் எனலாம். அதாவது, ஒரு சதி மூலம் தான் தனது பதவி பறிக்கப்பட்டது என்பதைச் சொல்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்.
அப்படி என்றால், இதற்கப்பால் தனது ஆட்சியில் ஏற்பட்ட குழப்பங்கள், ஊழல்கள், மோசடிகள், வீழ்ச்சிகள், இனவாதம், நெருக்கடிகள் போன்றவை இது விடயத்தில் எந்தச் செல்வாக்கையும் செலுத்தவில்லை என்று அவர் நியாயப்படுத்த முனைகின்றாரா? என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது. அப்படி அவர் முற்படுகின்றார் என்ற அனுமானம் உண்மையாயின், தனது ஆட்சி கவிழ்க்கப்படுவதற்கு உண்மையிலேயே அடிப்படைக் காரணம் என்ன என்பதை இதுவரையும் நூலாசிரியர் விளங்கிக் கொள்ளவில்லை என்றோ அல்லது அதனை நன்கு அறிந்திருந்தும் அதனை மூடி மறைத்து ஒரு கதையைச் சொல்ல முற்பட்டிருக்கின்றார் என்றுமே கருத வேண்டியுள்ளது.
இந்த இரண்டாவது கருதுகோளும் உண்மையாக இருக்கும் பட்சத்தில், வழக்கமான ஆட்சியாளர்களைப் போலத் தனது தவறுகளை நியாயப்படுத்திலிட்டு, வேறு ஒரு தரப்பின் மீது பழியைப் போடும் ஒரு முயற்சியாகவே இதனை அரசியல் நோக்கர்கள் வகைப்படுத்துவார்கள். இதன்மூலம், தனக்கு ஒரு அனுதாபத்தையும் ராஜபக்ஷ குடும்பத்திற்கு அடுத்தடுத்த தேர்தல்களில் ஆதரவையும் தேட கோட்டபாய முயன்று பார்த்திருக்கின்றார் என்றும் கருத இடமுள்ளது.
இந்த நூலில் குறிப்பாக, சிறுபான்மைச் சமூகங்கள் பற்றி கோட்டபாய எழுதியுள்ள வசனங்கள் கவனிப்பைப் பெற்றுள்ளது. ‘தான் தொடர்ந்து ஆட்சியதிகாரத்தில் இருந்தால் சிறுபான்மையினருக்குப் பாதகமாக அமையக்கூடியதாக சிங்கள பௌத்தர்கள் பலம் பெறுவார்கள் என்ற அச்சத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் அரகலயவில் இணைந்து கொண்டார்கள்’ என இதில் குறிப்பிட்டுள்ளார்.
இது கவனிக்கப்பட வேண்டியது. இவ்வாறு கூறுவதன் மூலம் தமிழர்களும் முஸ்லிம்களும் இதில் கூடிய பங்கு வகித்திருக்கின்றார்கள் என்பதையும் சிங்கள பௌத்தம் பலப்படுவதை அவர்கள் விரும்பவில்லை என்றும் உட்கிடையாக அவர் சொல்லியுள்ளதாகக் கருதலாம்.
இதன் ஊடாக சிங்கள பெரும்பான்மைச் சமூகத்திற்கும் சிறுபான்மையினருக்கும் இடையில் இனப் பாகுபாட்டுச் சிந்தனையை மீண்டும் உசுப்பேற்றி விட்டு, சிங்கள மக்களின் காவலனாகத் தன்னை மீள நிலைநிறுத்த முற்பட்டிருக்கின்றார் எனலாம்.
பெருந்தேசிய ஆட்சியாளர்களும் கணிசமான அரசியல்வாதிகளும் சிறுபான்மைச் சமூகங்களை தமது அரசியலுக்காக எவ்வாறு பகடைக்காயாக அடையாளப்படுத்துகின்றார்கள் என்பதற்கும் சிங்கள மக்களிடையே எவ்விதம் காட்சிப் படுத்துகின்றார்கள் என்பதற்கும் மிகப் பிந்திய ஒரு உதாரணமாக இதனைக்கொள்ளலாம்.
முழுப்பூசணிக்காயை ஒரு பீங்கான் சோற்றில் மறைப்பது போல ஏனைய சிங்கள தலைவர்களின் வழியில்கோட்டபாயவும் நடந்த உண்மைகள், களநிலை யதார்த்தங்கள் யாவற்றையும் தனக்குச் சாதகமான ஒரு கண்ணாடியை அணிந்துகொண்டு நோக்கியிருக்கின்றார்.
அதனை மக்களையும் நம்பவைக்க ஆசைப்பட்டிருக்கின்றார். தனது ஆட்சி கவிழ்க்கப்பட்டதன் பின்னணியில்வெளிநாட்டுச் சக்திகள் இருந்தன என்று கோட்டபாய கூறியுள்ளார்.
இது முற்றாகப் புறக்கணிக்கப்பட முடியாதது. ஏனெனில், இலங்கையில் நடந்த, நடக்கின்ற எல்லா பெரிய சம்பவங்களுக்கும் பின்னால் ஒரு வெளிநாட்டுப் பின்புலம் தொடர்ச்சியாக இருந்து வருகின்றது. மஹிந்த ராஜபக்ஷவை ஆட்சி பீடமேற்றியதிலும், 2015 தேர்தலில் மைத்திரிபாலவை ஆட்சிக்குக்கொண்டு வந்ததன் பின்னணியிலும், ஏன் 2019 – 2020 இல்கோட்டபாய ஆட்சியை நிறுவியதிலும் பலவெளிநாடுகளின்செல்வாக்கு இருந்திருக்கின்றது என்பது நாடறிந்த ரகசியம்தான்.
ஏன், ஆட்சி மாற்றத்தை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல்கள் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விட அரகலய ஒரு பெரிய நாசகார சதித்திட்டம் என்று யாராவது கூற முடியுமா? இப்படி ஒவ்வொரு ஆட்சியை நிறுவுவதிலும் முக்கிய ‘சம்பவங்களை’ நிகழ்த்துவதிலும் வெளிநாட்டு சக்திகள் பங்கேற்றிருக்கின்றன. கோட்டாவை ஆட்சிக்கு கொண்டுவர ஏதாவது ஒரு வெளிநாட்டு சக்தி உதவியிருக்குமென்றால் அப்போது அவருக்கு எதிராக போட்டியிட்ட சஜித் பிரேமதாச இதனை ‘சதி’ என்றுதான் கருதுவார்.
மீண்டும் அதேசக்தி அல்லது வேறு ஒரு சக்தியானது கோட்டாவை பதவியிறக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் அது அவரைப் பொறுத்தமட்டில்சதியாகத் தோன்றினாலும் மற்றைய தரப்பிற்கு அது ஒரு ஒத்துழைப்பாகவே தோன்றியிருக்கும்.
இதுதான் யதார்த்தம். மக்களுக்கு எதிராக அரசியல், சதிகளை எல்லா ம் நடத்திவிட்டு, மக்களையும் நாட்டையும் அதள பாதாளத்தில் தள்ளிவிட்டு அதற்காக ஒரு துளிகூட இன்று வரையும் மளம்வருந்தாமல், உண்மையான காரணங்களைப் பற்றிப் பேசாமல்வெறுமனே மக்களுக்குக்கதை சொல்வதிலுள்ள அரசியல் மக்களுக்குப் புரியாமல் இல்லை. இதனை ‘கதையளத்தல்’ அல்லது ‘கதைவிடுதல்’ எனக் கூறுவார்கள்.
கோட்டபாய ராஜபக்ஷ தனது கருத்தைச் சொல்வதற்கான உரிமை அவருக்குள்ளது. அதன்படி அந்தப் புத்தகத்தில் உள்ள எல்லா ம் முற்றாகச் சோடிக்கப்பட்டவை என்று கூறுவதற்கில்லை. நமக்குத் தெரியாத பல விடயங்களும் அதில் உள்ளதாகவே தெரிகின்றது.
ஆயினும், அதுவல்ல இங்குள்ள பிரச்சினை.. அரகலய போராட்டம் மற்றும் ஆட்சிக்கவிழப் பின் அடிப்படைகாரணங்கள் பற்றிய பிழையான கற்பிதங்களை, காரணங்களை பிம்பம்படுத்த இதனூடாக முயற்சிக்கப்பட்டுள்ளதாகவே அவதானிகள் கூறுகின்றனர். இப் புத்தகத்தில் உள்ள ஒரு சில பந்திகள் அதற்கு பதச்சோறாக முன்வைக்கப்படுகின்றன.
இந்த நாட்டில் அரகலய என்ற மக்கள் எழுச்சி தோற்றம் பெற்றதற்கு அடிப்படைக் காரணம் கோட்டபாய தலைமையிலான ராஜபக்ஷக்களின் ஆட்சியாகும். இனவாதம், பொருளாதார நெருக்கடி, மக்களை மறந்த எகத்தாளமான அரசியல், தலைக்களமான ஆட்சி எனப் பலவிதமான நெருக்கடிகள் ஏற்பட்ட பிறகே மக்கள் வீதிக்கு வந்தனர்.
சிங்கள மக்கள் ஏற்கெனவே மஹிந்த ராஜபக்ஷவை இரண்டு தடவை 10 வருடங்கள் ஆட்சியில் அமர்த்தினார்கள். 2019 ஜனாதிபதித் தேர்தலில்கோட்டாவுக்கு 69 இலட்சம் வாக்குகள் கிடைத்தன. இவற்றுள் 95 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் சிங்கள மக்களின் வாக்குகளாகும்.
அதுபோலவே 2020 பொதுத் தேர்தலிலும் சிங்கள மக்கள் மொட்டுக்கட்சியை ஆட்சி பீடமேற்றினார்கள். இந்;த சிங்கள மக்கள்தான் முதலில் ராஜபக்ஷக்களுக்கு எதிராக வீதியில் இறங்கினர். பிறகு சிறுபான்மையினரும் இணைந்து கொண்டனர்.
அனைத்து இலங்கையருக்குமான ஒரு போராட்டமாக இது மாறியது. கோட்டபாய கூறுவது போல இனம், மதம் என்ற பாகுபாடுகள் இதில் இருக்கவில்லை.
அதேநேரம், இந்தசந்தர்ப்பத்தை உள்நாட்டு வெளிநாட்டுச் சக்திகளும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தியிருக்கும் என்பதை அவர் புதிதாகக் கூறவேண்டியதில்லை. அது அப்போதே அனுமானிக்கப்பட்ட சங்கதிதான். ஆனால், மக்கள் வெறுப்படைய அடிப்படைக் காரணம் ராஜபக்ஷக்களின் ஆட்சிமுறைதான் என்பதை மறுக்க முடியாது.
இருப்பினும், ஏதோ அடிப்படையில் தாம் விட்ட தவறுகளுக்காககோட்டபாய உள்ளிட்ட ராஜபக்ஷக்கள் மக்களிடம் மனம் வருந்தவில்லை என்பதைத்தான் இந்த புத்தகம் குறிப்புணர்த்துகின்றது.
கோட்டபாய மட்டுமல்ல, எந்த ஆட்சியாளரும் அரசியல்வாதியும் ஒருபோதும் தமது தவறுகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதேகசப்பான யதார்த்தமாகும். இதனை மக்கள் புரிந்துகொண்டால் சரி.
19.03.2024
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago