Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2023 ஜனவரி 25 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலாய் லாமா: சீன அரசியலால் சுற்றி வளைக்கப்பட்ட ஓர் ஆன்மீகத் தலைவர்
“ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்தல் இயற்கையின் அடிப்படை விதியாகும். மனிதர்கள் போன்ற உயர் ரக உயிரினங்கள் மட்டுமன்றி மதம், கல்வி, சட்டம் எதுவும் அறியா புழு பூச்சிகள் கூட, கூடி வாழ்வதன் அவசியத்தை உணர்ந்து இருக்கின்றன. கடல்கள், மேகங்கள், காடுகள், மலர்கள் எல்லாம் இயற்கையின் இந்தத் தத்துவத்தையே முன் நிறுத்துகின்றன. ஒருவரோடு ஒருவா் சார்ந்து வாழ்தலில் தான் மனித இனத்தின் இருப்பு அடங்கி இருக்கிறது.” இப்படி சொல்லியிருப்பவா் சீனாவுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் 14வது தலாய் லாமா தான்.
தலாய் லாமா இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக கடந்த வாரம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. திபெத்தின் பௌத்த ஆன்மீகத் தலைவராக இருக்கும் தலாய் லாமா இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்ள வேண்டும் என்ற இலங்கையின் பௌத்த பிக்குகள் கோரிக்கை விட்டிருப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இலங்கையின் சுற்றுலாத்துறையை முன்னேற்றவும், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், திபெத்தின் ஆன்மீகத் தலைவரான தலாய் லாமாவை, இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ராமன்ய மகா சங்கத்தின் பிரதம குரு மாஹூல்வேவே விமல தேரர் தலைமையிலான பிக்குகள் குழு அழைப்பு விடுத்திருந்ததாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
தலாய் லாமா இந்தியாவின் புத்தகாயாவுக்கு விஜயம் செய்ததன் பின்னர், அங்கு வருகை தருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையை கருத்தில் கொண்டே, தலாய் லாமாவிற்கு இலங்கை பிக்குகள் அழைப்பு விடுத்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தலாய் லாமா தொடா்பான இந்த தகவல் சீனாவுக்கு பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது. குறித்த செய்தியால் சீற்றம் கொண்ட இலங்கைக்கான சீன தூதரகம் கடும் அதிருப்தியை வெளியிட கண்டி நகருக்கே ஓடிச் சென்றது. மகாநாயக்க தேரா்களிடம் மண்டியிட்டு தனது நிலைப்பாட்டை முன்வைத்தது.
தலாய் லாமா இலங்கைக்கு விஜயம் செய்வது தொடா்பான செய்தி, சீனாவுக்கு ஏன் சா்ச்சைக்குரிய விவகாரமாய் மாறியது? சீனா தலாய் லாமாவை வெறுப்பதின் பின்னால் உள்ள அரசியல் என்ன என்பதை அலசுவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.
கண்டி மல்வத்து பீடத்தின் பிரதம பிக்கு திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை, சந்தித்து கலந்துரையாடிய போதே, இலங்கைக்கான சீன தூதரகத்தின் பொறுப்பதிகாரி ஹூ வெய் தலாய் லாமாவின் இலங்கை வருகை தொடா்பான தனது கடும் ஆட்சேபனையை தெரிவித்தார்.
தலாய் லாமாவின் இந்த விஜயத்தின் காரணமாக சீன – இலங்கை உறவுகள் மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்படலாம் என சீனத் தூதரக அதிகாரி தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்தன.
தலாய் லாமா என்ற பெயரில் உள்ள நபர்களை சர்வதேச நாடுகள் மிக அதிகமாக வரவேற்பதை கண்டிப்பதாக ஹூ வெய் தெரிவித்திருந்தார். 14ஆவது தலாய் லாமா ஒரு துறவியல்ல என்றும், மத ரீதியான வேடம் தரித்த அரசியல் பிரமுகர் எனவும், சீனாவுக்கு எதிரான விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு திபெத்தை சீனாவிலிருந்து பிரிக்க முயற்சிக்கும் ஒருவா் எனவும் ஹூ வெய் மகாநாயக்க தேரரிடம் தொிவித்திருந்தாா்.
சீனா, இலங்கையுடன் தொடர்ந்தும் ஒற்றுமையாக செயற்படுவதாகவும் அதற்கமைவாக இரு நாட்டு பௌத்த மக்களும் தலாய் லாமாவின் விஜயத்தை தடுக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டிருந்ததோடு, சீனாவுக்கும் இலங்கைக்கு இடையிலான வரலாற்று உறவுகளை தலாய் லாமாவின் வருகை பாதிப்படையச் செய்யும் எனவும் அவா் எச்சரிக்கை தொனியில் கருத்து வெளியிட்டிருந்ததாக ஊடக செய்திகள் கூறியிருந்தன.
இது தொடர்பில் கருத்து தொிவித்த மல்வத்த பீட மகாநாயக்கா் திப்பட்டுவாவே சுமங்கல தேரா், சீன-இலங்கை உறவுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தாம் எதனையும் செய்யப்போவதில்லை என சீன அதிகாரிக்கு உறுதி மொழி வழங்கியிருந்தாா்.
தலாய் லாமாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இந்த மோதல்கள் மத, கலாசார, வரலாற்று ரீதியிலான முரண்பாடுகளின் வேர்களை ஆழமாக பதித்த, ஒரு சிக்கலான பிரச்சினையாக பாா்க்கப்படுகிறது.
தலாய் லாமா திபெத்தின் ஆன்மீகத் தலைவராகவும், திபெத்தின் தேசிய அடையாளமாகவும் இருந்து வருகிறார். தலாய் லாமா அவரைப் பின்பற்றுபவர்களால் இரக்கத்தின் அவதாரமாகவும் கருதப்படுகிறார்.
20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து சீனா திபெத்தின் மீது உரிமையைக் கோரி வருவதோடு, பௌத்த ஆன்மீக தலைவரான தலாய் லாமாவை ஒரு பிரிவினைவாத அச்சுறுத்தலாகவும் பாா்த்து வருகிறது.
1950களில், சீனா திபெத்தின் மீது கட்டுப்பாடுகளையும் அடக்குமுறைகளையும் செலுத்தத் தொடங்கியது. இராணுவ தளங்களை திபெத்தில் அதிகமாக நிறுவியது. சீனாவின் பெரும்பான்மை இனமான ஹான் இன சீனர்களை திபெத்தில் அதிகமாக குடியேற்றியது. சீனாவின் இந்த நடவடிக்கைகள் திபெத்திய சுதேச மக்களிடையே பரவலான எதிர்ப்புகள் உருவாக காரணமாகியது. இது திபெத்திய மக்கள் மத்தியில் எழுச்சிகளுக்கு வழிவகுத்தன. இவ்வாறு எழுந்த திபெத்திய மக்களின் எழுச்சியை சீன அரசு அடக்குமுறையைப் பயன்படுத்தி இன்று வரை ஒடுக்கி வருகிறது.
திபெத் மீது நிகழ்த்தப்ட்ட சீனாவின் ஆக்கிரமிப்பிற்குப் பின்னா், 1959ம் ஆண்டு திபெத்தை விட்டு வெளியேறிய தலாய் லாமா இந்தியாவில் அடைக்கலம் பெற்றார். அன்றிலிருந்து, அவர் இந்தியாவில் இமாசல பிரதேச மாநிலத்தில் தர்மசாலாவில் வசித்து வருகிறார்.
தலாய் லாமா சர்வதேச சமூகத்தில் ஒரு முக்கியமான பௌத்த துறவியாக கருதப்படுகிறாா். தலாய் லாமா திபெத்திய மக்களின் உரிமைகள் மற்றும் சுயாட்சிக்காக குரல் கொடுப்பவராக இருந்து வருவதோடு, திபெத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பையும், அதன் அடக்குமுறை கொள்கைகளையும் கடுமையாக எதிா்த்து வருகிறார்.
இதேவேளை, தலாய் லாமா சீனாவிலிருந்து திபெத்தை பிரிக்க முயல்வதாக குற்றம் சாட்டும் சீனா, உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தலாய் லாமாவை சீனா ஓா் ஆன்மீக தலைவராக பாா்க்காமல், ஓா் அரசியல் சதிகாரா் என்ற கண்ணோட்டத்தில் பாா்க்கிறது. தலாய் லாமா தொடா்பான சீனாவின் அணுகுமுறை ஒரு மதப் பிரச்சினை என்பதையும் ஓா் அரசியல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஏனெனில், தலாய் லாமா திபெத்தில் சீனா நிகழ்த்தி வரும் அடக்குமுறை ஆட்சியை கடுமையாக விமர்சிப்பவராக இருக்கிறாா். அதுமட்டுமல்லாமல், திபெத் பிராந்தியத்திற்கு சுயாட்சி வேண்டும் என்று வாதிட்டு வருகிறாா்.
தலாய் லாமாவை பிரிவினைவாதியாக கருதும் சீனா, திபெத்தில் அவா் வன்முறையைத் தூண்டி, கலவரத்தைத் தூண்டி வருவதாகவும் குற்றம் சாட்டி வருகிறது. தலாய் லாமாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த சீனா பலவிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவரது நடமாட்டத்தையும் அவரைப் பின்பற்றுபவர்களின் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்துவதில் சீனா கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறது.
சீனாவுக்கும் தலாய் லாமாவுக்குமிடையிலான இந்த மோதல்கள் பல ஆண்டுகளாக பல முனைகளில் இடம்பெற்று வருகின்றன. இதில் மிகவும் குறிப்பிடத்தக்க வியடமாக பாா்க்கப்படுவது, தலாய் லாமாவின் மறுபிறவி தொடா்பான பிரச்சினையாகும்.
திபெத்திய புத்த மத பாரம்பரியத்தின் படி, தலாய் லாமா என்ற ஆன்மீக தலைமை, தொடர்ச்சியான வருகின்ற ஆன்மீகத் தலைமைத்துவத்தின் மறு அவதாரம் என்று நம்பப்படுகிறது. மேலும், திபெத்தியா்களிடம் அடுத்த தலாய் லாமாவைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு ஒரு முக்கியமான மத, கலாசார, அரசியல் செயல்முறையாக பாா்க்கப்படுகிறது.
இது இப்படியிருக்க, அடுத்த தலாய் லாமாவைத் தேர்ந்தெடுக்கும் விவகாரத்தில் பூரண உரிமை தனக்கே இருப்பதாக சீனா வாதிட்டு வருகிறது. இந்த உரிமைக் கோரல் சீனாவிற்கும் திபெத்திலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களுக்கும் இடையே குரோதத்தையும், பெரும் விரிசலையும், முரண்பாடுகளையும் ஏற்படுத்தியுள்ளது.
தலாய் லாமாவை பின்பற்றுபவா்கள், அடுத்த தலாய் லாமாவை தொிவு செய்வது திபெத்திய பாரம்பரிய, பௌத்த நடைமுறைகளின்படி தேர்வு செய்யப்பட வேண்டும் என்று வாதிட்டு வருவதோடு, சீனாவுக்கு அதற்கான உரிமை கிடையாது என்றும் கூறி வருகின்றனா்.
என்ற போதிலும், கடந்த 2019ம் ஆண்டு சீனா ஓா் அறிவித்தலை வெளியிட்டது. அதில் அடுத்த தலாய் லாமாவை தாமே தெரிவு செய்யப் போதாகவும், அதற்கான உரிமை தனக்கே இருப்பதாகவும் சீனா பகிரங்கமாக அறிவித்தது. அது மட்டுமல்லாமல், இந்த விவகாரத்தில் இந்தியா ஒருபோதும் தலையிடக் கூடாது என்று சீனா இந்தியாவை அந்த அறிக்கையில் எச்சரித்தும் இருந்தது.
தற்போதைய தலாய் லாமா, அந்த வரிசையில் 14வது தலாய் லாமாவாக கருதப்படுகிறாா். அவாின் வயது தற்போது 87 ஐ தாண்டியிருக்கிறது. இதன் காரணமாக அடுத்த தலாய் லாமாவை தோ்வு செய்வதில் இரு தரப்பினரிடையேயும் சா்ச்சைகளையும், முறுகல்களையும் தோற்றுவித்திருக்கிறது.
சீனாவுடனான இந்த மோதல்களின் விளைவாக, திபெத்தில் மனித உரிமை மீறல்களை சீனா அதிகம் நடாத்தி வருவதாக சா்வதேச நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. சித்திரவதைகள், தன்னிச்சையான கைதுகள், அநீதியான தடுப்புக்காவல்கள், மத அடக்குமுறைகள் உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடா்பாக சீனாவின் மீது பரவலான குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
சமீப காலங்களில், தலாய் லாமாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதல்கள் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்.
திபெத்திய போராட்டக்காரா்கள் தமக்குத் தாமே தீமூட்டி தற்கொலை செய்து கொள்ளும் எதிா்ப்பு நடவடிக்கைகள் எழுச்சி பெற்று வருகின்றன. கடந்த 2009 பெப்ரவரி மாதம் 27ம் திகதி முதல் 2022 மே மாதம் வரை, சீன ஆட்சிக்கு எதிராக 160க்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் இவ்வாறு தமக்குத் தாமே தீமூட்டி தீக்குளித்து மரணித்துள்ளனா்.
தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் இந்த செயற்பாட்டை கண்டித்துள்ள தலாய் லாமா, விடுதலைக்கான அவா்களின் துணிச்சலை பாராட்டியும் இருந்தாா். திபெத்தியா்களை இந்த நிலைக்கு தள்ளியுள்ள சீனாவின் அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அவர் கோரி வருகிறாா். எது எப்படியிருப்பினும், தலாய் லாமா திபெத்தின் தேசிய அடையாளமாகவும் மற்றும் எதிர்ப்பின் சக்திவாய்ந்த அடையாளமாகவும் இருந்து வருவதை யாராலும் மறுக்க முடியாது.
தலாய் லாமாவின் இலங்கை விஜயம் தொடா்பாக எழுந்துள்ள சா்ச்சையும், சீனத் தூதரகத்தின் தீவிர எதிர் வினையாற்றலும் மேற் சொன்ன அரசியல் பின்னணிகளோடு பார்க்கப்பட வேண்டும்.
2015ஆம் ஆண்டு கூட தலாய் லாமாவின் இலங்கைக்கான பயணம் ஒன்று ஏற்பாடாகி இருந்தது. இதே போன்று சீனாவின் கடும் எதிா்ப்புக்கு மத்தியில் அன்று அதுவும் கைவிடப்பட்டது. “ஒரே சீனக் கொள்கை” க்கு இணங்கி, இந்த முடிவை எடுத்ததாக அப்போதைய மைத்திரி - ரணில் அரசாங்கம் அறிவித்திருந்தது.
தலாய் லாமாவின் இலங்கை வருகையை தடுப்பதின் பின்னணியில் தொடா்ந்தும் சீன அரசியலே இருந்து வருகிறது. மஹிந்த ராஜபக்ஷ அரசு சீனாவுடனான மிகுந்த நட்பை பாதுகாக்கும் நோக்கில் தலாய் லாமா விவகாரத்தில் எதிர்மறையான நிலைப்பாட்டையே கொண்டிருந்தது. 2015ம் ஆண்டில் ஆட்சியிலிருந்த மைத்திரி - ரணில் நல்லாட்சி அரசும் ராஜபக்ஷா்களின் அதே கொள்கையையும் அணுகுமுறையையும் கடைப்பிடித்தது.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறையில் சீனாவின் நிலைப்பாட்டை எதிா்பாா்த்து நிலைகுலைந்து போயிருக்கும் இலங்கைக்கு தலாய் லாமா விவகாரம் ஒரு புதிய தலை வலியை கொடுக்கவும் வாய்ப்பிருக்கிறது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை சா்வதேச நாணய நிதியத்திலிருந்து பெறுவதற்கு இலங்கைக்கு சீனாவின் கடன் மறுசீரமைப்பு சான்றிதழ் மிகவும் முக்கியமானது.
தலாய் லாமாவுக்கு இலங்கைக்கு விஜயம் செய்வதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், அவர் இலங்கைக்கு பயணம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று திபெத்திய அரசாங்கத்தின் அதிகாரி ஒருவர் அண்மையில் ஊடகமொன்றுக்கு தெரிவித்திருந்தார்.
த பெடரல் செய்தித்தளம் இந்த செய்தியை பிரசுரித்திருந்தது.
“சீனாவின் கடும் ஆட்சேபனையை அடுத்து தலாய் லாமா இலங்கை செல்வது நல்லதா?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள திபெத்தின் அதிகாரி, இந்த கேள்வியை இலங்கை மக்களிடமே கேட்க வேண்டும் என்று பதிலளித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago
4 hours ago
4 hours ago