Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
இலச்சுமணன் கந்தையா / 2020 ஜூலை 23 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைத் தமிழ் இனத்துக்கு எதிராக, ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐ.தே.க அரசாங்கத்தின் உச்சபட்ச ஆசிர்வாதத்துடன், 1983.07.23 அன்று அரங்கேற்றப்பட்ட நாடு தழுவிய, இன வன்முறையாகிய ‘கறுப்பு ஜூலை’ யின் 37 ஆவது நினைவு தினம் இன்றாகும்.
யாழ்ப்பாணம், திருநெல்வேலி, தபால்பெட்டிச் சந்திக்கு அருகில், தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் எரியூட்டப்பட்டதுடன் வீதியில் போவோர் வருவோர் மீது எழுந்தமானத்துக்குத் துப்பாக்கிப்பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது.
இராணுவத்தின் அடாவடித்தனங்கள் மிக மோசமான முறையில் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட வேளையில், கொல்லப்பட்ட இராணுவத்தின் உடல்கள் தென்னிலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின்னணியில், இலங்கைத் தீவு முழுவதும் தமிழருக்கு எதிரான வன்முறைகள் வெடித்தன.
கொழும்பு, மலையகம், காலி, கம்பஹா, கண்டி எனப் பல்வேறு இடங்களிலும் வசித்த தமிழர்களின் உடைமைகள் அழிக்கப்பட்டன; சொத்துகள் கொள்ளையிடப்பட்டு, தமிழ்ப் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டு, தமிழர்கள் உயிருடன் எரியூட்டப்பட்டனர். வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய இடங்களில் வசித்த அனைத்துத் தமிழர்களும் வடக்கு, கிழக்கு நோக்கி, அகதிகளாக வந்து சேர்ந்தனர். இந்த அவலம், சிங்கள இனவாத அரசாங்கத்தால் திட்டமிட்டு, ஒழுங்குபடுத்தப்பட்டு அரங்கேற்றப்பட்டிருந்தது.
இதன் எதிரொலிகளின் வெடிப்புத்தான், வடக்கிலும் கிழக்கிலும் பாதிக்கப்பட்ட மலையக்தின் ஒரு பகுதியினரிடமும் ஆயுதப் போராட்டத்தின் மீது பற்றுறுதியை ஏற்படுத்தியது.
அன்றைய காலகட்டத்தில், சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்ற இருந்தவர்களும் தோற்றியவர்களும் க.பொ.த உயர் தரத்தில் கற்கப்புகுந்தவர்களும் பல்கலைக்கழக அனுமதிபெற்றவர்களும் தங்கள் கல்வியைத் தியாகம் செய்து கொண்டு, அலை அலையாக ஆயுதப்போராட்டப் பயிற்சிக்காக இந்தியாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் கிழக்கின் காடுகளுக்குள்ளும் புகுந்தனர்; ஆயுதப் பயிற்சிகளில் ஈடுபட்டனர். இந்த இன உணர்வும் ஆக்ரோஷமும் தமிழினத்தின் விடுதலையையும் உரிமைகளையும் அபிலாசைகளையும் உறுதிப்படுத்துவதற்கு அடிகோலியது.
விடுதலை உணர்வும் உணர்ச்சிக் கொந்தளிப்பும் உணர்ச்சிகளின் உச்சமும் இளைஞர்களை ரௌத்திரமும் ஆக்ரோஷமும் கொள்ளத் தூண்டியது. இதன் எதிரொலி, இலங்கை தீவு 1984 நடுப்பகுதியில் ஆயுதப் போராட்டத்தின் வெளிப்பாடுகளை இனங்காணத் தொடங்கியது.
இயக்கங்களின் அரசியல் பிரசாரங்களும் இயக்கங்கள் தொடர்பான கருத்தாடல்களும் இயக்கப் பிரசாரங்களும் அணி திரட்சிகளும் பயிற்சிகளும் இலங்கை இராணுவத்துக்கு எதிரான தாக்குதல்களும் படிப்படியாக வளர்ச்சியும் உக்கிரமும் கொள்ளத் தொடங்கின.
வீடுகளில் முடங்கிக் கிடந்த பெண்கள் தங்கள் விடுதலை பற்றியும் தங்களுக்கு எதிரான ஒடுக்கு முறை பற்றியும் சிந்திக்கத் தொடங்கினர். ‘கிடுகுவேலி’ கலாசாரத்தைத் தகர்த்து, பெண்களும் தமிழர் தேசிய விடுதலையில் புதுயுகம் படைக்கப் புறப்பட்டனர்; அரசியல், ஆயுதப் பயிற்சிகள் பெற்றனர்; களமாடினர். புதுமைப் பெண்களாக, சாதியம் தகர்த்து முன் நகர்ந்தனர். தமிழினத்தின் வீரப் பெண்கள், புறநானூற்று பாடல்கள் புகழ்ந்த பெண்கள், இருபதாம் நூற்றாண்டில் உற்பத்தி செய்யப்பட்டனர்; புரட்சி படைக்கப் புறப்பட்டனர்.
தமிழ்த் தேசியத்தில் புரையோடிப் போயிருந்த சாதியமும் அதற்கெதிரான கொடுமைகளும் தகர்க்கப்பட்டன. ஈழப்போராட்டம், வெறுமனே ஓர் இனவாதப் போராட்டம் அல்ல. மாறாக, ஒரு புரட்சிகரமான அரசியல், சமூக, பண்பாட்டு, கலை மறுமலர்ச்சிக்கான, வரலாற்று விடுதலைப் போராட்டம் ஆகும். தமிழினத்தின் புரட்சிகர சமூக விடுதலைப் போராட்டம், சுயநிர்ணய விடுதலைப் போராட்டம் எனப் பல்வேறு பரிணாமங்களைப் பெற்றது.
இந்தப் பின்புலத்தில் உருவெடுத்த விடுதலைப் போராட்டம், பல்வேறு கட்ட வளர்ச்சிகளைக் கண்டு, சர்வதேச மட்டத்தில் புகழ்படைத்தபோதும், விடுதலைப் போராட்ட வரலாற்றில் இடம்பெற்ற இயக்க உள்முரண்பாடுகள், அதிகாரப் போட்டிகள் சகோதரப் படுகொலைகளுக்கு வித்திட்டன. அத்துடன், விடுதலை போராட்ட வரலாற்றில், துரோக அரசியல் பதிவுகளையும் பதிவிட்டுள்ளது.
ஏதும் அறியாது, இனவிடுதலை ஒன்றே இலட்சிய வேள்வி என்ற தாயகக் கனவுடன், சாவைத் தழுவத் தயாரான அத்தனை உள்ளங்களும் அதிகார மமதை கொண்டவர்களால், தவறாக வழிநடத்தப்பட்டும், சகோதரப் படுகொலைகளுக்குள் சிக்கிச் சின்னாபின்னப்பட்டதுடன், தாயக விடுதலையை நேசித்த ஏதுமறியாத சக போராளிகள், ‘துரோகி’கள் என்ற பட்டங்களாலும் அலங்கரிக்கப்பட்டனர்.
இதன் விளைவு, விடுதலைப் போராட்டம் ஒரு மைல்கல் பின் தங்கியது. திம்பு பேச்சுவார்த்தையின் பின் நிகழ்ந்த இயக்க மோதல்களும் அதன் பின் நடைபெற்ற 1987 இந்திய- இலங்கை ஒப்பந்தம், 1989இல் இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறிய போது இடம்பெற்ற தமிழரின் சகோதரப் படுகொலைகள், 1990 இன் பின் இந்திய இராணுவ காலத்தில் இடம்பெற்ற கட்டாய ஆட்சேர்ப்பு முறையை யொத்த ஆட்சேர்ப்பு முறைகளும் போராட்ட அரசியலில் விடுதலை தொடர்பான தெளிவான அரசியல் இராணுவ மூலோபாயம் பற்றிய இளந்தலைமுறைக்கான அரசியற் கருத்தாடல்களும் இராணுவ வெற்றிகளும் மாற்று ஜனநாயக கட்சிகள் அற்ற நடைமுறைகளும் ஜனநாயகம் பற்றிய எண்ணக்கருவையும் சிந்தனைகளையும் இளம் தலைமுறையினரிடம் மழுங்கடித்துவிட்டிருந்தது.
மாற்றுக் கருத்துக்கான சிந்தனைகள் துளிர்விடுவதற்கானதும் சிந்திப்பதற்கானதுமான இடைவெளிகள் பகிர்வுகள் வெடிப்புகளுக்கான சந்தர்ப்பங்கள் வழங்குவதற்கு வாய்ப்புகள் இருக்கவில்லை. அல்லது வழங்கப்படவில்லை என்பது ஜனநாயக அரசியல் விமர்சகர்களின் கருத்தாகும்.
இந்தப் பின்புலத்தில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் ஓரணியில் தீரத்துடன் வளர்ச்சி கண்ட போதும் 2002 இல் ரணில்- பிரபா ஒப்பந்தத்தின் பின் சர்வதேச தலையீடுகள் குத்து வெட்டுகள் போராட்ட சக்திகளின் உட்கட்டு முரண்பாடுகள், புரிந்துணர்வின்மை, பிரதேச முரண்பாடுகள் எனப் பல்வேறு காரணிகள் போராட்ட ஓய்வில் போராட்டத்தை பலவீனப்படுத்தியதுடன் போராட்டத்தை 2009 உடன் மௌனிக்கவும் வைத்தது. அந்த மௌனிப்பின் ஆயுதப்போராட்டம் சரணாகதியாக்கப்பட்டது.
இந்த பின்புலத்தில் ஆயிரக்கணக்கான தமிழினத்தின் உயிரிழப்புகள், காணாமல் போதல், கைதுகள் என யுத்தத்தின் கோர விளைவுகள் உலக யுத்த நியதிகளையும் மீறி நடந்தேறின. அவற்றுக்கான நியாயங்கள் கேட்டவர்கள் இன்றும் கேட்டு நிற்பவர்கள் சலித்துப்போனவர்கள், அதற்கு எதிராகப் போராடியவர்கள், போராடுபவர்கள், மறுப்பவர்கள், இரப்பவர்கள் என இலங்கைத் தீவிலும் சர்வதேசத்திலும் இத்தீவில் வாழும், புலம் பெயர்ந்தவர்களும் இலங்கை இனத்துவ அடையாளங்களை நிரூபிப்பதற்கு குரல் கொடுத்த வண்ணம் உள்ளனர். போராட்டம் மௌனித்து ஒரு தசாப்தம் நிறைவுற்ற வேளையில், போராட்டத்தை உச்ச பலத்துடன் வழிநடத்தியவர்கள் உருவாக்கிய தமிழினத்தின் அரசியல் சக்தியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அச்சக்திகளின் இருப்பில் இரு தேர்தல்களில் ஒற்றுமையை வலியுறுத்தினார்.
அவர்களின் மௌனிப்பின் பின் நடந்த முதல் தேர்தலில் ஒரு கட்சி அரசியலுக்கான சுயநல அரசியல் ஆரம்பமாகியது. இன்று 2020 தேர்தலில் அந்த சுயநல இருப்பின் உச்சகட்டம் ஒரு கட்சிக்குள் விருப்பு வாக்கு மோசடியில் பல்வேறு குழி பறிப்புகள், பழிவாங்கல்கள் குத்து வெட்டுகள் நடந்து கொண்டு இருக்கின்றன.
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் பங்குதாரர்களில் எஞ்சியவர்கள் பலர் மௌனித்து நடப்பவற்றை அவதானித்துக் கொண்டிருக்கின்றனர். போராடியவர் இங்கு நடக்கும் நாடகங்களை வலி சுமந்த நெஞ்சம் கனத்துப் பார்த்து பேசா மடந்தையாகி நிற்கின்றனர். போராடாத சக்திகள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஆக்கிரமித்து போராட்ட வரலாற்றில் தங்களைத் தாங்களே தியாகிகளாகப் பிரகடனப்படுத்தி போராட்ட வரலாற்றை திரிபுபடுத்தி, கொச்சைப்படுத்தி தமிழ்த் தேசிய அரசியலையும் அது கடந்து வந்த பாதைகளையும் அவமானப்படுத்தி நிற்கின்றனர்.
இன்று கடந்த கால வரலாற்றின் பெயரால், வரலாற்றை அறியாத ஓய்வின் பின் உழைப்புக்குத் தொழில் தேடியவர்கள் ஒருபுறமும் தமிழ்த்தேசியத்தின் தியாகங்களில் தங்கள் பிழைப்பு நடத்துவதற்கு வருபவர்களும் இத்தேர்தல் இலாப நட்டங்களை கணக்குப் பார்த்துக் களமிறங்கியுள்ளனர்.
தமிழ் மக்கள் கொள்கையுடனும் தியாகங்களுடனும் இருப்புகளுடனும் உரிமைகளுடனும் உங்களுக்காக செயற்பட்டவர்கள் யார் என்பதை இனங்கண்டு தமிழ்த் தேசியத்தையும் அதன் செயற்பாட்டாளர்களையும் ஆதரிப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஏனெனில், உரிமை என்பது உணர்வு. தமிழரின் தியாகம், இழப்புகள் வீண் போகக்கூடாது. தமிழ்த் தேசியம் வாழ வேண்டுமானால் தமிழ்த்தேசியத்தின் மாபெரும் சக்தி தொடர்ச்சியாகத் தமிழினத்தின் தன்னடையாளத்தை தெளிவுபடுத்தும் சக்தி. அதன் பாதையும் கடமையும் தொடர பச்சோந்திகளை நிராகரித்து, உண்மையான செயற்பாட்டாளர்களை இதயசுத்தியுடன் தெரிவுசெய்து களமிறக்குவதே தமிழ் மக்களுக்குள்ள யதார்த்தமான பணியாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
8 hours ago