Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 25, திங்கட்கிழமை
Johnsan Bastiampillai / 2021 ஒக்டோபர் 04 , பி.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
புருஜோத்தமன் தங்கமயில்
தமிழ்த் தேசிய கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியொன்றை முன்னெடுத்துள்ளதாக திருமலை ஆயர், தென் கயிலை ஆதீனம் ஆகியோரின் தலைமையிலான குழுவொன்று, கடந்த வாரம் அறிவித்தது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, அரசியல் கட்சிசாரா பிரபல சட்டத்தரணிகள் அடங்கிய குழுவொன்றை நியமிக்க உள்ளதாகவும் அந்தக்குழு குறிப்பிட்டிருந்தது. ஆனால், அந்த அறிவிப்பு, ஊடகங்களில் ஒருநாள் செய்தியாக மட்டுமே இடம்பெற்றிருந்தது. அதற்கு மேல் அந்த அறிவிப்புக்கான முக்கியத்துவத்தை, அரசியல் கட்சிகளோ ஊடகங்களோகூட வழங்கியிருக்கவில்லை.
தமிழ்த் தேசிய கட்சிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் ஒற்றுமையையும், அதன் ஊடாக ஒருங்கிணைவையும் ஏற்படுத்தும் நோக்கத்துடன், உளப்பூர்வமாக யார் ஈடுபட்டாலும் அது வரவேற்கக் கூடியது.
ஆனால், தமிழ் அரசியல் பரப்பில் ‘ஒற்றுமை’, ‘ஓரணி’, ‘ஒருங்கிணைவு’ என்கிற சொற்களுக்கான அர்த்தம், அரசியல்வாதிகளாலும் சில சிவில் அமைப்புகளாலும் அரசியல் ஆய்வாளர்களாலும் மலினப்படுத்தப்பட்டுவிட்டன.
தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தளவில் கட்சிகள், தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு இடையிலான ஒருங்கிணைவும் அதனூடான தொடர் ஊடாட்டமும் அவசியமான ஒன்று.
தமிழ்த் தேசிய அரசியலில் தனியாவர்த்தனம் என்பது, கட்சிகளுக்கு மாத்திரமல்ல, தமிழ் மக்களுக்கும் நன்மை பயக்காது. வேண்டுமென்றால், ஒருசில நபர்களுக்கு தனிப்பட்ட இலாபங்களை வழங்கலாம்.
அப்படியான நிலையில், தமிழ்த் தேசிய கட்சிகள், தலைவர்களுக்கு இடையிலான ஒற்றுமைக்கான அழைப்பு என்பது, கவனிக்கப்பட வேண்டியது. ஆனால், அவ்வாறான நிலையொன்று திட்டமிட்ட ரீதியாக, இன்று இல்லாமல் செய்யப்பட்டு இருக்கின்றது என்பதுதான் பெரும் வேதனையானது.
தமிழ்த் தேசிய அரசியலில் தனியாவர்த்தனம் செய்து கொண்டிருந்த கட்சிகள், பெரும்பான்மையினக் கட்சிகளிடம் தோற்றுப்போக ஆரம்பித்த தருணங்களில் எல்லாம், ஒற்றுமையாக ஓரணியில் இணைந்திருக்கின்றன. அதன்மூலம், தமிழ்த் தேசிய அரசியலை உறுதிப்படுத்தி இருக்கின்றன.
தமிழர் விடுதலைக் கூட்டணியாக தமிழரசுக் கட்சியும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸும் அப்படித்தான் ஆரம்பத்தில் இணைந்தன.
அதுபோல, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கமும் தமிழ்த் தேசியத்தைப் பேசும் கட்சிகளை பாராளுமன்றத்துக்குள் பலப்படுத்தும் நோக்கிலேயே நிகழ்ந்தது. தமிழ்த் தேசிய அரசியலில் நிகழ்ந்தப்பட்ட இருபெரும் ஒருங்கிணைவுகள் என்றால், தமிழர் விடுதலைக் கூட்டணியினதும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினதும் உருவாக்கம்தான்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் ஓர் அங்கமாக மாறிய தமிழர் விடுதலைக் கூட்டணி, வீ. ஆனந்தசங்கரியின் நிலைப்பாடுகளின் நிமித்தம் அதிலிருந்து வெளியேற, கூட்டணிக்குப் பதிலாக தமிழரசுக் கட்சியை தூசு தட்டிக் கொண்டுவந்து கூட்டமைப்புக்குள் இணைத்தார்கள்.
இன்றைக்கு தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய பரப்பில் முதன்மைக் கட்சியாகத் தாக்கம் செலுத்துவதற்கும், அதன் கட்சிக் கட்டமைப்பை அடிமட்டத்திலிருந்து பேணுவதற்கும் கூட்டமைப்பின் உருவாக்கம் பாரிய பங்களிப்பைச் செய்தது.
அதுபோல, கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சியின் ஆதிக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மாறிய போது, கூட்டமைப்புக்குள் இருந்து பல தரப்புகளும் காலத்துக்கு காலம் பிரிந்து சென்றன. இன்றைக்கு, கூட்டமைப்புக்கு வெளியிலுள்ள தமிழ்த் தேசிய கட்சிகள், அந்தக் கட்சிகளின் மூலம் பாராளுமன்றம் சென்றவர்கள் எல்லோரும் கூட்டமைப்பில் இருந்தவர்கள்தான்.
கூட்டமைப்புக்குள் இருந்து, தமிழரசுக் கட்சித் தலைவர்களின் நிலைப்பாடுகளில் அதிருப்தியுற்று வெளியேறிய தரப்புகளை எல்லாம் ஒருங்கிணைத்து, பலமான மாற்று அணியொன்றை அமைக்கும் முயற்சிகள், 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னரான நாள்களிலேயே ஆரம்பித்துவிட்டன.
தமிழ் சிவில் சமூக அமையமும் அதன் இணக்க சக்திகளும் கூட்டமைப்புக்கு எதிரான மாற்று அணியை அமைப்பதில் குறிப்பிட்டளவு வெற்றியை, தமிழ் மக்கள் பேரவை ஆரம்பித்ததன் மூலம் எட்டின.
ஆனால், பேரவையோ, மாற்று அணியை அமைப்பதற்குப் பதிலாக, சி.வி.விக்னேஸ்வரனுக்கான அரசியல் எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பதில் அக்கறை காட்டியதால், பேரவையில் புதிய நம்பிக்கையோடு ஆரம்பத்தில் இணைந்த கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஒரு கட்டத்தில் விலகி விட்டது.
பின்னரான நாள்களில், விக்னேஸ்வரன் தலைமையில் சுரேஷ் பிரேமசந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எப் இன்னும் சில உதிரிக் கட்சிகளும் இணைந்து, ஒரு கூட்டணியை அமைத்தன. அந்த அணி, யாழ்ப்பாணத்தில் ஒரு பாராளுமன்ற ஆசனத்தை வெற்றி கொண்டது.
தமிழ்த் தேசிய அரசியலுக்குள் புது இரத்தம் பாய்ச்சி, நம்பிக்கையை விதைக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டு வந்த பேரவை, ‘எழுக தமிழ்’ என்கிற எழுச்சிப் பேரணிகளை வடக்கு - கிழக்கில் பெருமெடுப்போடு நடத்தியும் காட்டியது.
‘எழுக தமிழ்’ பேரணிகளில் கட்சி ஆதரவு, எதிர்ப்பு நிலைப்பாடுகளைத் தாண்டி, தமிழ் மக்கள் பங்கெடுத்தார்கள். ஆனால், பேரவையும் அதன் முக்கியஸ்தர்களும் ஒரு சில தனிநபர்களின் அரசியல் எதிர்காலத்துக்காக இயங்கி, தமிழ் மக்களின் நம்பிக்கையைச் சிதைத்தன.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவாக்கத்துக்குப் பிறகு, தமிழ் மக்கள் பேரவையிலேயே தமிழ்த் தேசிய கட்சிகள் பலவும் ஓரணியில் இணைந்தன. ஆனால், அவ்வாறான அரிய வாய்ப்பை, சில மாதங்களுக்குள்ளேயே பேரவை வீணடித்தது.
இன்றைக்கு யாழ்ப்பாணத்திலிருந்து மூன்று தமிழ்த் தேசிய கட்சிகள், பாராளுமன்ற அங்கத்துவத்தைப் பெற்றிருக்கின்றன. ஆனால், பெரும்பான்மையினக் கட்சியான சுதந்திரக் கட்சி, சில தசாப்தங்களுக்குப் பின்னர் ஆசனமொன்றை வெல்வதற்கும் அது குறிப்பிட்டளவு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.
கூட்டமைப்புக்கு மாற்றான அணியொன்றை, பேரவையில் உருவாக்கும் நோக்கமாவது, உருப்படியாக முன்னெடுக்கப்பட்டிந்தால், தமிழ்த் தேசிய வாக்குகள் கூட்டமைப்பு, மாற்று அணி என்கிற இரண்டு அணிகளுக்கு இடையில் மாத்திரமே பகிரப்பட்டிருக்கும்; தமிழ்த் தேசிய வாக்குகளின் திரட்சி, குறிப்பிட்டளவு காக்கப்பட்டிக்கும்.
ஆனால், அவ்வாறான நிலை ஏற்படவில்லை. கூட்டமைப்பு, முன்னணி, விக்னேஸ்வரன் அணி என்று, மூன்று அணிகளாகப் பிரிந்து நின்றபோது, பெரும்பான்மையினக் கட்சிகளுக்கும், அதன் இணைக் கட்சிகளுக்கும், அது சாதகமாக அமைந்துவிட்டது.
பேரவையினது உருவாக்கம், எதைச் சாதித்தது என்றால், இவ்வாறான நிலையை ஏற்படுத்தியதைச் சொல்லலாம்.
அதுதவிர்ந்து, ஒற்றுமை, ஓரணி போன்ற கோரிக்கைகளை மலினப்படுத்தியதைச் சொல்ல முடியும்.
மக்களுக்கான நோக்கம் என்பது, தனிநபர்கள் சார்ந்து உருவாக்கப்பட முடியாது. விக்னேஸ்வரனைத் தனி ஆளுமையாக முன்னிறுத்திக் கொண்டு பேரவை செயற்பட்டதும், அதனால் ஏற்பட்ட விளைவுகளும்தான் இதுவாகும்.
தமிழ் சிவில் சமூக அமையத்தின் அங்கத்தவர்கள், அதன் ஆலோசகர்கள் உள்ளிட்ட தரப்பினர்தான், பேரவையின் உருவாக்கத்தில் இருந்தார்கள். கிட்டத்தட்ட தமிழ் சிவில் சமூக அமையத்தின் பெயர் மாற்றப்பட்ட அமைப்பாகவே பேரவை செயற்பட்டு மறைந்தது. மக்கள் திரட்சிக்கான நம்பிக்கைகள் எல்லாவற்றையும் சிதைத்துவிட்டு ஒதுங்கிவிட்டார்கள்.
கடந்த பொதுத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரும், தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சிகளை மாவை சேனாதிராஜா உள்ளிட்ட தமிழரசுக் கட்சியின் (பாராளுமன்ற பதவிகளை இழந்த) தலைவர்களும் பிறிதொரு தருணத்தில் டெலோவும் முன்னெடுத்தன.
மாவை அணி முன்னெடுத்த ஒற்றுமைக்கான அழைப்பை நிராகரித்த டெலோ, சில நாள்களின் பின்னர், தானே அப்படியான அழைப்பொன்றை விடுத்தது.
இந்த இரண்டு அழைப்புகளுக்குள்ளும் தனிப்பட்டவர்களின் பதவி ஆசை, தங்களை முன்னிறுத்தும் நோக்கங்கள் ஆகியவையே முனைப்புப் பெற்று இருந்தன. அதனால், அவ்வாறான முயற்சிகள் ஆரம்பத்திலேயே பிசுபிசுத்துப் போய்விட்டன.
இவ்வாறான நிலையில்தான், திருமலை ஆயர் மற்றும் தென் கயிலை ஆதீனம் ஆகியோர் தலைமையிலான குழுவின், ஒற்றுமைக்கான அழைப்பும் மதிக்கப்படாமல் போயிருக்கின்றது.
தமிழ்த் தேசிய அரசியல், தேர்தல் அரசியலுக்குள் சுருங்கிய பின்னர், பதவி, பகட்டு போன்றவற்றுக்காக அலையும் கும்பல், தமிழ்த் தேசிய அரசியலை ஆக்கிரமித்துவிட்டது.
அதனால்தான், அர்த்தமுள்ள ஒற்றுமையும் ஒருங்கிணைவும் கானல் நீராகிவிட்டன. அந்த நிலையை மாற்றுவது அவ்வளவு இலகுவான ஒன்றல்ல.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago