Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 ஜூலை 30 , மு.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேர்தல் எங்கள் கண்முன்னே நிற்கின்றது. இன்னொரு தேர்தல் என்று, வெறுமனே புறந்தள்ளிவிட முடியாதபடி, எதிர்காலம் குறித்த கேள்விகளைத் தன்னுள் உட்பொதித்து, இத்தேர்தல் எம்முன்னே வந்து நிற்கிறது.
தமிழ் மக்கள், தங்களுக்குள் கேட்கவேண்டிய கேள்விகளும் அதற்கு, அவர்கள் தேட வேண்டிய பதில்களும் உள்ளன. துரதிர்ஷ்டவசமாகத் தமிழ் மக்களின் கேள்விகளுக்கான எந்தவொரு விடையும், தமிழ்த் தேசிய கட்சிகள் என்று தங்களை அறிவித்துள்ள கட்சிகளிடம் இல்லை. ஆனால், தமிழ் மக்கள், சில கேள்விகளைக் கேட்டேயாக வேண்டும்.
இந்தத் தேர்தல் மூன்று அடிப்படைகளில் தமிழர்களுக்கு முக்கியமானது. அதில் பிரதானமானதும் அவசரமானதும், இலங்கை ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்த நெருக்கடியாகும். அரசாங்கம், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. அதைத் தேர்தலின் மூலமோ, தேர்தலுக்குப் பின்னரோ பெற்றுக் கொள்வது என்ற முடிவில், அரசாங்கமும் ஜனாதிபதியும் தீவிரமாக இருக்கிறார்கள்.
இது சாத்தியமாகும் போது, இலங்கை இதுவரை பயணிக்காத புதிய பாதையில் பயணிக்கும். அது, கடந்தகால ராஜபக்ஷ ஆட்சி வெளிக்காட்டிய மென்மையான சர்வாதிகாரத் தன்மையில் இருந்து விலகி, வெளிப்படையாகவே கடுமையான சர்வாதிகாரத்தன்மையை நோக்கி நகரும். இந்த மாற்றம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியமான மாற்றமாக இருக்கும்.
1962ஆம் ஆண்டில், ஐ.தே.க ஆதரவான பொலிஸாரினதும் இராணுவ அதிகாரிகளினதும் சதிப் புரட்சியின் தோல்விக்குப் பிந்திய பல்வேறு நெருக்கடிகளின் போதும், மூன்று தசாப்த உள்நாட்டுப் போரின் போதும், இலங்கை ஒரு ஜனநாயக நாடாக நிலைத்துள்ளது.
எனினும், இலங்கை அரசு, கடந்த அரை நூற்றாண்டில் பல முறை, சர்வாதிகாரப் போக்குகளுடன் இயங்கி இருக்கிறது. ஆனால், வியக்கத்தக்கவாறு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஜனநாயகக் கட்டமைப்பைத் தக்கவைத்துள்ளது. அரசாங்கங்களுக்கு எதிரான வன்முறைகளும் கலகங்களும், அரசாங்கத்தின் உறுதிநிலைக்கு அச்சுறுத்தலாக அமைந்த போதும், இலங்கை அரசாங்கம், ஜனநாயக நிறுவனக் கட்டமைப்புக்குள் இயங்கும் அரசாங்கமாக நிலைத்து வந்துள்ளது.
சுதந்திரமடைந்த, கொலனியத்துக்குப் பிந்திய இலங்கையில், இரண்டு முரண்பட்ட அரசு வடிவங்கள் சகவாழ்வு நடத்துகின்றன. நாடாளுமன்ற அரசியல் என்ற அரசு வடிவமும் சர்வாதிகாரம் என்ற அரசு வடிவமும் கூடி, வாழ்வதற்கான சமசரம் ஒன்றை ஏற்படுத்தின.
நாடாளுமன்ற ஜனநாயகம், தூக்கிவீசப்பட வேண்டும்; அது ஒழிக்கப் படவேண்டும் என்று சர்வாதிகாரம் வற்புறுத்தவில்லை. நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரம் தேவையாக இருந்தது. ஜனநாயகமும் சர்வாதிகாரமும் அறவே முரண்பட்டவையல்ல; சர்வாதிகாரம் தனது சட்டரீதியான அங்கிகாரத்துக்கு, ஜனநாயகத்தை நாடுகிறது. ஜனநாயகம் தனது இருப்புக்கும் சவால்களுக்கும் முகங்கொடுக்க சர்வாதிகாரத்தைத் துணைக்கு அழைக்கிறது.
1970களின் இறுதிப் பகுதியில், அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கையும் 1990களில் இலங்கையைச் சூழ்ந்த உலகமயமாக்கலும் ஜனநாயக-சர்வாதிகார இணைவுக்கு உதவின. எனவே, இலங்கைச் சூழலில் இரண்டும் ஒன்றோடொன்று இணங்கி, நவகொலனிய தாராண்மை ஜனநாயக வடிவம் பெற்றுள்ளன. ஏற்கெனவே, தீவிர வலதுசாரித் தேசியவாதத்தின் எழுச்சியால், நெருக்கடிக்குள்ளாகி இருந்த ஜனநாயகம் என்ற எண்ணக்கரு, கொவிட்-19 பெருந்தொற்றால், மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கி உள்ளது.
இந்த ஜனநாயகத்தைத் தூக்கி நிறுத்திய தாராண்மைவாதப் பொருளாதாரம், சரிவில் உள்ளது. எனவே, ஜனநாயகம் பலவழிகளில் காலம் கடந்துவிட்டதால், ஜனநாயகம் என்ற முகமூடி, இனித் தேவைப்படாது. எனவே, வெளிப்படையாகவே இராணுவ மய்ய சர்வாதிகாரத்தை நோக்கி நகர்வது, தவிர்க்க இயலாததாகும்.
கொவிட்-19 பெருந்தொற்றுக்கு முன்னரே, இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளாகி இருந்தது. இப்போது நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. பொருளாதாரத்தைச் சீர்செய்வதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் கொண்டிருக்கவில்லை. எனவே, வலியின் உதவியுடனேயே எதிர்ப்புணர்வைச் சமாளிக்க வேண்டி வரும். அரசாங்கம் தேர்தலுக்கு அவசரப்படுவதற்கான காரணங்களில் இது பிரதானமானது. சுருங்கப்போகும் ஜனநாயக இடைவெளியை, தமிழ்மக்கள் எவ்வாறு கையாளப் போகிறார்கள் என்பது முக்கியமான கேள்வி.
இந்தத் தேர்தல், தமிழ் மக்களுக்கு முக்கியமானதாக இருப்பதற்கான இரண்டாவது காரணி, போர் முடிந்து ஒரு தசாப்தகால தேர்தல் அரசியலின் படிப்பினைகளுடன், மக்கள் இந்தத் தேர்தலை எதிர்நோக்கியுள்ளார்கள். எனவே, போருக்குப் பிந்தைய ஈழத்தமிழ் அரசியலின் செல்நெறி, எமக்குக் கற்றுத்தந்த பாடங்கள் என்ன என்பது பற்றி, நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். இதில் குறிப்பாக, தமிழ்த் தேசியத்தின் நெருக்கடியை, நாம் நோக்கியாக வேண்டும்.
போர் முடிந்ததற்குப் பின்னரான அரசியலில், தமிழ்த் தேசியம் நெருக்கடியை எதிர்நோக்கியது. கொள்கை ரீதியானதாக அன்றி, உணர்ச்சிப் பேச்சுகளாலும் வெற்றுக் கோசங்களாலும் தகவமைக்கப்பட்ட தமிழ்த் தேசியம், தவிர்க்கவியலாது கடும் நெருக்கடிக்கு உள்ளானமை இயல்பானது.
போரின் முடிவின் பின்னர், சர்வதேச உதவியுடன் தமிழ் மக்களுக்குத் தீர்வு என்ற வீர முழக்கத்துடன், சர்வதேச போர்க்குற்ற விசாரணையில் தொடங்கி, தமிழ் மக்களுக்குத் தீர்வு என்பது வரை, அனைத்துக்கும் சர்வதேசத்திடம் கையேந்தி, இலங்கை அரசாங்கத்துடன் முரண்பட்டு, சர்வதேசத்தை நண்பனாக்கி, உரிமைகளை வெல்லலாம் என்று போட்ட கணக்கு, பொய்யாகிப் போனதால், நெருக்கடியின் தீவிரம் இரு வழிகளில் வெளிப்படுகிறது. இந்த நெருக்கடியின் ஒரு விளைவே, நல்லாட்சியிலும் அதன் பின்னரும், தமிழ்த் தேசிய அரசியல் அரங்கில் நிகழும் இணக்க அரசியல், எதிர்ப்பு அரசியல் முரணின் அடிப்படை. இது புதிதல்ல!
தமிழ்த் தேசிய அரசியலில், நெடுங்காலம் நிலைத்த இரண்டு போக்குகளில் ஒன்று, தமிழ்க் காங்கிரஸ் மரபு. அது எப்போதும், ஐக்கிய இலங்கையை வற்புறுத்தி, சமஷ்டிக் கோரிக்கையை ஏளனம் செய்தது. அதே தமிழ்க் காங்கிரஸ், இன்று விடுதலைப் புலிகளின் வாரிசுகளாகத் தம்மைச் சாடை காட்டுவோருக்கு நெருக்கமாகிச் சீரழிந்து, சர்வதேசத்தை நம்பும், எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கிறது.
தமிழரசுக் கட்சி, சமஷ்டிக் கோரிக்கையில் தொடங்கி, சத்தியாக்கிரகத்தின் படுதோல்விக்குப் பின்னர், தேர்தல் உபாயமாகப் பிரிவினைக் கோரிக்கையுடன் விளையாடிச் சீரழிந்த, ஏறத்தாழ நான்கு தசாப்தங்களின் பின்பு, தமிழ்ப் பிரதேசங்களின் நிலப்பரப்பு கணிசமாகச் சுருங்கி, தமிழரில் கணிசமானோர் போரில் அழிந்து, அவர்களில் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்த பிறகு, வேறு வழியின்றி, ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை ஏற்கும் இணக்க அரசியலை முன்னெடுக்கிறது.
இந்த நெருக்கடியின் இன்னொரு கட்டமே, தமிழ்த் தேசிய கட்சிகள், இப்போது சில்லறைச் சண்டைகளை முன்னிறுத்தி மூன்றாகப் பிரிந்து, தேர்தலில் போட்டியிடுகின்றன. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதற்கான வழிமுறைகள், இந்தக் கட்சிகளிடம் இல்லை; வேலைத்திட்டங்களும் இல்லை.
இப்போது தேர்தலில் போட்டியிடுவோரின் நோக்கம், தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்றுவிட வேண்டும் என்பதேயாகும். இம்முறை தேர்தலில், கட்சி சார்ந்து அன்றி, ஒரு தேர்தல் கூட்டணியாகவே போட்டியிடுகிறார்கள். இது வெறும், தேர்தலுக்கு வசதியான கூட்டணியேயன்றி, அரசியல் கட்சியல்ல. தெரிவாவோர், நாளை அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுக்கமாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை, யாராலும் வழங்கிவிட முடியாது. இதுதான் இன்றைய ஈழத்தமிழ் தேர்தல் அரசியலின் யதார்த்தம். இந்தப் பின்புலத்தில் யாருக்கு வாக்களிப்பது?
இனி, இந்தத் தேர்தல், தமிழருக்கு முக்கியத்துவம் பெறுகின்றமைக்கான மூன்றாவது காரணிக்கு வருவோம். ஒடுக்கப்பட்ட மக்கள், உழைக்கும் மக்கள், இந்தத் தேர்தலில் முதன்முறையாகத் தனியாகப் போட்டியிடுகிறார்கள். கடந்த உள்ளூராட்சித் தேர்தலில், வடபுலத்தில் அவர்கள் பெற்ற வெற்றிகள், அவர்களை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வைத்திருக்கிறது. இது, தமிழ்த் தேசியத்துக்கு விடுக்கப்படும் சவால். தமிழ்த்தேசியம், அதன் தொடக்கம் தொட்டுப் புறக்கணித்து வந்த சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள், இன்று புதிய பாதையில் புறப்பட்டு இருக்கிறார்கள்.
இது, தமிழ்ச் சமூகத்தில் உள்ள உள்முரண்பாடுகளைக் கணிப்பில் எடுக்காமல், மேலாதிக்க சிந்தனையுடன் செயற்பட்டு வந்த தமிழ்த் தேசிய செல்நெறிக்கு விழுந்த அடி. தமிழ்ச் சமூகத்தின் ‘ஒற்றுமையின் பெயரால்’, புறக்கணிக்கப்பட்ட தமிழர்களைத் தொடர்ச்சியாக ஒதுக்கும் தமிழ்த் தேசிய அரசியல், மக்களுக்கானதா?
இந்த மூன்றும், தமிழ்மக்கள் தங்களைத் தாங்களே கேட்க வேண்டிய கேள்விகள் ஆகும். இவை கேட்கப்படாத, கேட்க விருப்பப்படாத, இன்னொரு வகையில் கேட்கக்கூடாத கேள்விகள் ஆகும். சமூக நீதியையும் சமத்துவத்தையும் முன்னிறுத்தி, வாக்கு அரசியலுக்கு வெளியிலான அரசியல் வெளியைப் பற்றி, தமிழ் மக்கள் நிதானமாகச் சிந்திக்க வேண்டும்; மக்கள் மய்ய அரசியலை நோக்கி நகரவேண்டும்.
மாற்று அரசியல் என்பது, தலைகளை மாற்றுவதல்ல; அது ஒரு செல்நெறி. தேர்தலில் தமிழ் மக்களுக்கு ஏமாற்றங்கள் காத்திருக்கின்றன. அதை நாம் எதிர்பார்க்கலாம். அதன் பின்னர், இலங்கையின் தேசிய அரசியலில் ஏற்படும் மாற்றங்களுக்கு நாம் எப்படி முகங்கொடுப்பது? அனைத்துத் தமிழ் மக்களையும் உள்ளடக்கிய முற்போக்கான திசையில், தமிழ்த் தேசியத்தை நகர்த்துவது எப்படி? இவ்விரு கேள்விகளுக்குமான பதிலிலேயே, தமிழ் மக்களின் இருப்பும் எதிர்காலமும் தங்கியிருக்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
8 hours ago