2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

தமிழ் பொது வேட்பாளர் தீர்வுக்கு உதவுவாரா?

Mayu   / 2024 ஜனவரி 23 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏம்.எஸ்.எம். ஐயூப்   

தமிழ் பொது ஜனாதிபதி வேட்பாளர் என்ற எண்ணக்கரு வட மாகாணத்தில் பேசுபொருளாக மாறி வருகிறது. அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் பொதுவான உடன்பாடு ஏற்படு முன்னரே போட்டியிடவும் தயாராகி வருகின்றனர். 

ஆயினும் இலங்கையில் முதலாவது தமிழ் ஜனாதிபதியைத் தெரிவு செய்ய முடியும் என்ற எண்ணத்தில் எவரும் இவ்விடயத்தில் கருத்து தெரிவிக்கவில்லை. தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று கூறுவோரும் தமிழ் வேட்பாளர் ஒருவர் வெற்றி பெறப் போவதில்லை என்ற நிலையிலேயே தமது கருத்தைத் தெரிவித்து வருகின்றனர். 
தமிழ் வேட்பாளர் என்ற கருத்தை ஆதரிப்போரும், எதிர்ப்போரும் உடன்படும் பொதுவான ஒரு நிலைப்பாடு இருக்கிறது. தமிழ் மக்களுக்குச் சிங்களத் தலைவர்கள் மீது எவ்வித நம்பிக்கையும் இல்லை என்பதிலேயே அவர்கள் உடன்படுகின்றனர்.  

ஒரு வகையில் விசித்திரமான விடயம் என்னவென்றால், சிங்களத் தலைவர்களின் மீது நம்பிக்கை இல்லை என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டத் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்று ஒரு சாரார் கூறும்போது, மற்றொரு சாரார் அதனையே உலகுக்கு எடுத்துக் காட்டுவதற்காக ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்றும் வாதிடுகின்றனர். 

வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகளைப் பார்க்கும்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் அரசியல் கூட்டணியொன்று இப்போது நாட்டில் இல்லை. ஏனெனில், இலங்கை தமிழரசுக் கட்சியைத் தவிர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த ஏனைய கட்சிகள் கூட்டமைப்பிலிருந்து விலகிச் செயற்படுகின்றன. 
கூட்டமைப்பில் இருந்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி 

(ஈ.பி.ஆர்.எல்.எப்), எப்போதோ கூட்டமைப்பிலிருந்து விலகிச் செயற்பட்டு வருகிறது. அண்மைக்காலம் வரை கூட்டமைபபில் இருந்த தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளோட்) ஆகிய கட்சிகளும் இப்போது ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசிய கட்சி மற்றும் ஜனநாயக போராளிகள் ஆகியவற்றுடன் இணைந்து ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி என்ற பெயரில் செயற்படுகின்றன. 

 இந்த ஐந்து கட்சி கூட்டணியே இவ்வருட இறுதியில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. அதேவேளை, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற  உறுப்பினரும் முன்னாள் வட மாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் அக்கருத்தை ஆதரிப்பது மட்டுமல்லாது, தமிழ் பொது வேட்பாளராகப் போட்டியிடவும் தயாராக இருக்கிறார்.

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் ஊடக பேச்சாளரான ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் கடந்த டிசம்பர் 28ஆம் திகதி வெளியிட்டு இருந்த அறிக்கையொன்றில், தமது நிலைப்பாட்டை விளக்கியிருந்தார். இதுவரைகாலமும் தமிழ் அரசியல் தலைமைகள், சிங்கள தரப்புக்கள் அல்லது அரச தரப்பின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக எதிர்வினை ஆற்றி வந்துள்ளதே தவிர, தமிழர் தரப்பினரின் அபிலாஷைகளுக்கு ஏற்றவாறு சிங்கள தலைமைகளை மாற்ற முடியவில்லை.

ஆனால், இந்த ஜனாதிபதித் தேர்தல் ஏற்படுத்தியுள்ள சாதகமான சூழ்நிலையைத் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான அனுகூலமான சூழலாக மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும் என அவர் அதில் கூறியிருக்கிறார். 

இன்றைய அரசியல் சூழ்நிலையில், சிங்கள பெரும்பான்மை வாக்குகள் சிதறக்கூடிய நிலை தோன்றியுள்ளதால் எந்தவொரு வேட்பாளரும் தனித்து நின்று 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுக்கொள்வது கடினமாக இருக்கும். இந்நிலையில், தமிழ் மக்கள் தமக்கு இருக்கும் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பேரம் பேசும் வாக்குகளாக மாற்றிக்கொள்வதற்கு முயற்சி செய்வதன் மூலம் இவர்களிடமிருந்து சில உரிமைகளையாவது பெற்றுக்கொள்வதற்கு முயற்சிக்கலாம் என்றும் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்களை எமது நிகழ்ச்சி நிரலை நோக்கி வரவழைக்க முடியும் என்றும் அவர் மேலும் கூறுகிறார்.

தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதில் அர்த்தம் இல்லை என்றும் அது பாதகமானது என்றும் பாராளுமன்ற  உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமை தாங்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அரசாங்கத்தில் இணைந்து செயற்படும் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் போன்றோரும் கூறி வருகின்றனர். 

இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் ஒரு நிலைப்பாட்டை எடுக்காவிட்டாலும் தமக்குக் கிடைக்காத தமிழ் வாக்குகள் தமது போட்டியாளர்களிடம் சென்றடையாமல் இருக்கத் தமிழ் வேட்பாளர் என்ற ஆலோசனையின் பின்னால் ரணில்  விக்ரமசிங்க இருக்கலாம் என்று பாராளுமன்ற  உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் கூறியிருந்தார். அது நல்ல வாதமாக இருந்தாலும், உண்மையாக இருக்க சாத்தியங்கள் குறைவாகவே தெரிகிறது.   

சிங்கள தலைவர்கள் மீது தமிழ் மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போனமை ஒன்றும் நியாயமற்ற விடயம் அல்ல. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ‘தேர்ட்டீன் பிளஸ்’ என்று எத்தனை முறை கூறியிருப்பாரா? மனித உரிமை மீறல்களைப் பற்றி விசாரிக்க எத்தனை ஆணைக்குழுக்களை நியமித்தார். 

அத்தனையும் போலி நாடகம் என்பது அவற்றை அவர் நியமிக்கும்போதே தெளிவாகத் தெரிய இருந்தது. இறுதியில் அவர் நியமித்த ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை ஆராய்ந்து பரிந்துரை சமர்ப்பிக்க அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றோர் ஆணைக்குழுவை நியமித்தார். இறுதி விளைவு என்ன?

இலங்கை அரச தலைவர்களில் இனவாதத்தில் குறைந்தவர் ரணில்  விக்ரமசிங்க என்ற விக்னேஸ்வரனின் கூற்று ஓரளவுக்கு உண்மை தான். ஆனால், அவர் கடந்த சுமார் ஒன்றரை ஆண்டுகளாக இனப் பிரச்சினை விடயத்தில் எத்தனை முறை தமது நிலைபாடுகளை மாற்றிக்கொண்டார்? 

2023 சுதந்திர தினத்துக்கு முன்னர் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதாகக் கூறினார். அந்நாள் வருமுன்னரே நிரந்தர தீர்வு ஒருபுறமிருக்க, 13ஆவது திருத்தத்தை இரண்டு வருடங்களில் அமுல்படுத்துவதாகக் கூறினார்.

பின்னர் 2023ஆம் ஆண்டு முடிவடைவதற்கு முன்னர் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதாக மீண்டும் கூறினார். இரண்டு மாதங்கள் கழித்து மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்காமல் 13ஆவது திருத்தத்தைப் பூரணமாக அமுலாக்கப் போவதாகக் கூறினார்.

இதனையடுத்து, அடுத்த பொதுத் தேர்தலின் பின்னர் ஒரு வருடத்துக்குள் 13ஆவது திருத்தத்தை அமுலாக்குவதாக கூறினார். இறுதியில் வடக்கே சென்று 13ஆவது திருத்தம் பூரணமாக அமுலாக்காவிடாலும் பொருளாதார அபிவிருத்திக்காக மாகாண சபைகளுக்கு இப்போது இருக்கும் அதிகாரம் போதுமானது என்றார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தினாலும் இல்லாவிட்டாலும் தேர்தலைப் பகிஷ்கரித்தாலும் தென்பகுதி அரசியல்வாதிகள் தமிழ் தலைவர்களின் கோரிக்கைகள் விடயத்தில் ஒருபோதும் சத்தகமாக தமது முடிவுகளை மாற்றிக்கொள்வதில்லை, தென்பகுதி வேட்பாளர்கள் சரிசமமாக வாக்குகளைப் பெறும் நிலை ஏற்பட்டு ஒருவரும் சட்டப்படி தேவையான 50 வீத வாக்குகளைப் பெற முடியாத நிலை ஏற்பட்டால் அவர்கள் பிரேமசந்திரன் கூறுவது போல, தமிழ், முஸ்லிம் வாக்குகளை நாடி வரலாம். 
ரணிலின் வட பகுதி விஜயத்தின் நோக்கமும் அதுவாக இருக்கலாம். 

ஆனால், அவர்கள் ஒற்றையாட்சி முறையை நிராகரித்து, சமஷ்டி ஆட்சி முறையை ஏற்றுக்கொள்வார்களா? போர்க் கால மனித உரிமை மீறல்கள் தொடர்பாக முப்படையினருக்கு எதிராக விசாரணை நடத்த முன்வருவார்களா? வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைக்க முன்வருவார்களா? போர்க் காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டுபிடிக்க உண்மையாகவே நடவடிக்கை எடுப்பார்களா? தமிழ் வாக்குகளுக்காக அவர்கள் இவற்றைச் செய்ய முற்பட்டால், அவர்கள் சிங்கள வாக்குகளை இழந்து அதை விட பாரிய அரசியல் நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும். 

தமிழ் கட்சியொன்று இந்த கோரிக்கைகளிலிருந்து சிறிதளவேனும் கீழிறங்கி வந்தால், ஏனைய தமிழ் கட்சிகள் அதனைப் பாவித்து அரசியல் இலாபம் அடைய முற்படும். அதேபோல், இந்த விடயங்களில் தென்பகுதி நிலைப்பாட்டிலிருந்து ஏதாவது ஒரு தென் பகுதி கட்சி சிறிதளவேனும் கீழிறங்கி வந்தால், ஏனைய தென்பகுதி கட்சிகள் அதற்குத் துரோகி பட்டம் சூட்டி அரசியல் இலாபம் அடையும். இதுவே தற்போதைய நாட்டின் உண்மையான இனப் பிரச்சினையாகும். 

இங்கு ஒரு நடைமுறை பிரச்சினையும் இருக்கிறது. பிரேமசந்திரன் கூறுவதுபோல், பொது வேட்பாளரை நிறுத்தி சிங்களத் தலைவர்கள் தமிழர்களுடன் பேச்சுவாரத்தை நடத்தும் நிலையை உருவாக்கிவிட்டு அப்பேச்சுவார்த்தையின்போது, ஏதாவது இணக்கம் ஏற்பட்டால் தமிழர்கள் சம்பந்தப்பட்ட தென்பகுதி வேட்பாளரை அல்லது வேட்பாளர்களை ஆதரிக்கப் போகிறார்களா?
அல்லது இணக்கம் ஏற்பட்டதன் பின்னரும் தமிழர்கள் தமிழ் வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டுமா? அது சரியா? அவ்வாறாயின் சிங்களத் தலைவர்கள் உடன்பட்ட விடயங்களை நிறைவேற்ற முன்வருவார்களா? 

தமிழரசுக் கட்சி இந்த விடயத்தில் ஏன் மௌனமாக இருக்கிறது? அக்கட்சிக்கு இன்னமும் ரணில்  விக்ரமசிங்க மீது நம்பிக்கை இருக்கிறதா? அல்லது இறுதி நேரத்தில் தமது கருத்தை ஏனைய தமிழ் கட்சிகளின் மீது திணிக்க அக்கட்சி நினைக்கிறதா? ஒரு வகையில் இந்த விடயத்தில் எந்த முடிவை எடுத்தாலும் நிலைமைகள் மாறாததால் இதைப் பெரிதாக அலட்டிக்கொள்வதில் அர்த்தமும் இல்லை தான். ஏதுவாக இருந்தாலும் ஒரு கூட்டு முடிவை எடுத்தால் எதிர்காலத்தில் அதில் ஒரு தாக்கம் இருக்கலாம் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மையாகும். அது சாத்தியமா?

10.01.2024


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X