2024 நவம்பர் 25, திங்கட்கிழமை

தமிழ் அரசியலில் திட்டமிடல், தூரநோக்குக்கான தேவை

Johnsan Bastiampillai   / 2021 செப்டெம்பர் 14 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

என்.கே. அஷோக்பரன்

http://www.twitter.com/nkashokbharan

 

உலகத்தையே, ஏறத்தாழ ஒன்றரை வருட காலத்துக்கு மேலாக, ‘கொவிட்-19’ பெருந்தொற்று ஆட்டம் காணச் செய்துகொண்டிருக்கிறது. 

‘கொவிட்-19’ இன் கோரமுகத்தை, இலங்கை எதிர்நோக்கியிருக்கும் இந்த நிலையில், இலங்கை வாழ் மக்கள், ஆரோக்கிய ரீதியான சவாலை மட்டுமல்ல, வாழ்வாதார ரீதியான சவாலையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ‘கொவிட்-19’ வெறும் பெருந்தொற்று நோய் மட்டுமல்ல; அதன் விளைவுகள், இந்நாட்டின் உற்பத்தியையும் பொருளாதாரத்தையும் தள்ளாட்டம் காணச்செய்துள்ளது. 

பொருளாதார வீழ்ச்சியின் விளிம்பில், இலங்கை நின்று கொண்டிருக்கிறது. உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஒருபுறமிருக்க, தொடர் முடக்கங்களால், பிரயாணத் தடைகளால் பல குடிமக்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது.

  பல குடும்பங்களின் தப்பிப்பிழைத்தலைக் கூட, பெருஞ்சவாலுக்குள் தள்ளியிருக்கிறது. மறுபுறத்தில், பணவீக்கமும் விலைவாசி அதிகரிப்பும், மக்களின் கழுத்தை நெரித்துக்கொண்டிருக்கின்றன. 

‘கொவிட்-19’ பெருந்தொற்று, ஏதோ ஒரு வகையில் முடிவுக்கு வந்தாலும், அதனால் ஏற்பட்ட பொருளாதார காயங்கள்  குணப்படுவதற்கு, பல ஆண்டுகள் தேவைப்படலாம்.

இந்தச் சூழ்நிலையில்தான், இலங்கை வாழ் தமிழ் மக்களின் நிலைமை பற்றி சிந்திக்க வேண்டியதாக இருக்கிறது. தரவுகளின்படி, பொருளாதார ரீதியில் ஆகப் பின்தங்கிய மாவட்டங்களாக வடக்கும் கிழக்கும் இருக்கின்றன.

யுத்தம் பிரதான காரணம் என்றாலும், யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, ஒரு தசாப்தம் கடந்தும், பெருமளவுக்கு உற்பத்தித் துறை வடக்கு-கிழக்கில், குறிப்பாக வடக்கில் அபிவிருத்தி செய்யப்படவில்லை. 

உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் செய்யப்பட்டாலும், அதன் பலாபலனைப் பெற்றுக்கொள்ளத்தக்க வகையிலான உற்பத்தித் துறையொன்றின் வளர்ச்சி அங்கு ஏற்படுத்தப்படவில்லை. 

இதற்கு 2009இன் பின்னர் ஆட்சி செய்த எல்லா அரசாங்கங்களும் பொறுப்பேற்க வேண்டும் என்பது ஒருபுறமிருக்க, அந்த மக்களின் பிரதிநிதிகளாகத் தம்மை முன்னிறுத்திக்கொள்வோரும், அதற்காக அம்மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்தவர்களும் கூட பொறுப்பாளிகளே! 

நீங்கள் ஆளுங்கட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியில் இருந்தாலும், உங்களுடைய பிரதான கடமை உங்களைத் தேர்ந்தெடுத்த, நீங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களின் நலன். அந்த நலனைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையும் செயற்றிட்டங்களையும் முன்னெடுக்க வேண்டியது அத்தியாவசியத் தேவை. 

இந்த இடத்தில், தமிழ் அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விடயம், தமிழ் மக்கள் இருக்கின்ற வரை தான் உங்கள் அரசியல். 

ஆகவே, அந்த மக்களைப் பாதுகாப்பதும், அவர்களது நலனோம்பலும், உங்கள் அரசியல் மூலதனத்தைப் பாதுகாப்பதற்கான அடிப்படை. 
அதனிலிருந்து நீங்கள் விலகினால், அது ஒட்டுமொத்த தமிழ் மக்களை மட்டுமல்ல, உங்களுடைய அரசியலையும் சூனியத்துக்குள் தள்ளுவதாக அமையும். நிற்க!

வடக்கு-கிழக்கு தமிழ் அரசியலில் ஒரு பாணி தொற்றிக்கொண்டுவிட்டது. தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள், பகட்டாரவாரப் பேச்சின் ஊடாக, ‘உணர்ச்சி அரசியலை’ மட்டும் முன்னெடுப்பதும், பெருந்தேசியக் கட்சி சார்ந்தவர்கள் ஆதரவுத்தள அரசியலை, ‘அபிவிருத்தி அரசியல்’  என்ற பெயரில் முன்னெடுப்பதுமே இங்கு காலகாலமாக நடந்து வருகிறது. 

தமிழ்த் தேசியம் பேசுவோரிடம் தமிழ்த் தேசத்தை கட்டமைப்பது, தேசக்கட்டுமானம் பற்றிய எந்தத் திட்டமோ, உபாயமோ இல்லை. ‘மூச்சுக்கு முந்நூறு முறை’ “தமிழ்த் தேசம்... தமிழ்த் தேசம்” என்று உச்சரிப்பது மட்டுமே, அவர்களது அரசியல். 

‘மந்திரத்தாலே எங்கும் மாங்கனி வீழ்வதுண்டோ’ என்று பாரதி கேட்டது போல, “தமிழ்த் தேசம்.... தமிழ்த் தேசம்” என்று சொல்வதால் மட்டும், தமிழ்த் தேசம் கட்டமைந்து விடாது. முதலில் அதற்கான ஒரு தூரநோக்குத் திட்டம் அவசியம். 

அதற்கு தமிழ்த் தேசிய அரசியல், சில அடிப்படைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். 
முதலாவது, இலங்கைத் தீவில் பிரிவினை என்பது சாத்தியமில்லை. எத்தகைய தீர்வாயினும் அது ஓர் அரசுக்கு உட்பட்டதாக அமைய வேண்டும். 

இந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு, இலங்கை என்ற ஓர் அரசுக்குள் பன்மைத் தேசங்களைக் கட்டியெழுப்புவது பற்றி சிந்திப்பதுதான், தமிழ்த் தேசிய அரசியல் தமிழ் மக்களுக்கும் தமிழ்த் தேசத்துக்கும், ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் செய்கின்ற பெரும் நன்மையாக அமையும். 

வெற்றுப் பகட்டாரவாரங்களை விட்டுவிட்டு, திடமான தொலைநோக்குத் திட்டமொன்றை வகுக்கவும் அதனை அடையப்பெறுவதற்கான முறையான செயற்றிட்டங்களைத் திட்டமிட வேண்டும்.

அவற்றை, ஐந்தாண்டு, பத்தாண்டு, பதினைந்தாண்டு, இருபதாண்டு, இருபத்தைந்தாண்டு திட்டங்களாக, பொருத்தமான அடைவுகளை இலக்குகளாக அடையாளப்படுத்தி செயற்படுத்துவதன் மூலம், விளைபயன் தரக்கூடிய அரசியலை தமிழ்த் தேசிய பரப்பில், தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் முன்னெடுக்கலாம். 

இத்தனை வருட தமிழ்த் தேசிய அரசியலில், இன்று வரை தமிழ்த் தேசமொன்றைக் கட்டமைப்பதற்கான முறையான திட்டமோ, செயற்றிட்டமோ ஒரு தமிழ் அரசியல் கட்சியிடம் கூட இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. 

1976இல், வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றி, “தனிநாடே தீர்வு” என்று சொன்னபோது கூட, செல்வநாயகத்திடமோ அமிர்தலிங்கத்திடமோ, எந்தவொரு தமிழ்க் கட்சியிடமோ, அதற்கான திட்டமோ, செயற்றிட்டமோ காணப்படவில்லை. 
அன்றிலிருந்து இன்று வரை, தமிழ்த் தேசிய அரசியல், வெறும் வாய்ச்சொல் அரசியலாகவே இருக்கிறது.

இதுதான், தமிழ்த் தேசிய அரசியலின் தோல்விக்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்று. தமிழ்த் தேசியம் பேசும் அரசியல்வாதிகள், தேர்தலில் வெல்கிறார்கள்; ஆனால், தமிழ்த் தேசியமும் தமிழ் மக்களும் தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள்.

தமிழ்த் தேசிய அரசியலின் இந்த நிலைதான், ஆதரவுத்தள அரசியலைச் செய்பவர்களுக்கும். அவர்கள், தாம் ‘அபிவிருத்தி அரசியல்’ செய்வதாகக் காட்டிக்கொண்டு, ‘ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை’ என்பது போல, உலா வந்துகொண்டிருக்கிறார்கள். 

தேசக்கட்டுமானம், உட்கட்மைப்பு அபிவிருத்தி, கல்வி, கலை, கலாசார மேம்பாடு, பொருளாதார அபிவிருத்தி என எவற்றிலும் அக்கறை கொள்ளாத தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் உள்ள ஊரிலே, அரசாங்கத்தின் அல்லது தேசியக் கட்சியின் ஆதரவில் இயங்குவதால், பத்துப் பேருக்கு வேலை வாங்கிக்கொடுக்கும், நான்கு வீதிகளுக்கு தார்போடும், மக்களுக்கு சைக்கிள், அடுப்பு, ஓட்டுக்கூரை வழங்கும், அந்நிய உதவியுடனான வீட்டுத்திட்டங்கள் மூலம் சிறிய வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் அரசியல்வாதிகள், ‘அபிவிருத்தி அரசியல்’  செய்வதைப் போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்குகிறார்கள். 

இந்த அபிவிருத்தி அரசியல்வாதிகளின் எழுச்சிக்கு, முக்கிய காரணமே தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளின் அலட்சியமும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் பற்றிய அக்கறையற்ற அரசியலும்தான்.

எல்லாவற்றுக்கும் இந்தியாவே சரணாகதி என்று இருப்பதே, தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளின் வழக்கமாக உள்ளது. 

குறைந்தபட்சம், இந்தியாவிடம் பேசியாவது, வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு இந்தியாவில் உற்பத்திசெய்யும் ‘கொவிட்-19’ தடுப்பூசிகளைப் பெற்றுக்கொடுக்க முடிந்ததா? அதைக் கூடச் செய்ய முடியாவிட்டால், இந்தியாவுடனான உங்கள் சரணாகதி உறவின் அர்த்தம்தான் என்ன? 

இது, ஓர் உதாரணம் மட்டும்தான். வடக்கு-கிழக்கு வாழ் தமிழ் மக்களின் தேவைகள் அதிகம். இலங்கையில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய இரண்டு மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் அவர்கள். 

ஆகவே, தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் மக்கள் பிரதிநிதிகள், மிகுந்த இராஜதந்திரத்தோடு செயற்பட்டு, தமது மக்களின் தேவைகளை இனங்கண்டு நிறைவேற்ற வேண்டும். 

நீண்டகாலத்தில், அம்மக்களின் பொருளாதார மேம்பாடு, கல்வி, கலை, கலாசார மேன்மை, வேலைவாய்ப்பு, உற்பத்திப் பெருக்கம் ஆகியவற்றை விளைபயனாகத்தரும் செயற்றிட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும். அதுதான் தேசக்கட்டுமானத்தின் அடிப்படை.

தன் வாழ்நாள் முழுதும், கோமாளிக் கூத்தில் ஆடிய குதிரையை, திடீரென்று குதிரையோட்டத்தில் பங்கெடுக்கவைத்தால், அதனால் ஒருபோதும், குதிரைப் பந்தயத்தில் சாதிக்க முடியாது. அது கோமாளிக் கூத்துக்குப் பழக்கப்பட்ட குதிரை. அதன் இரத்தம், நாடி, நரம்பெங்கும் கோமாளிக் கூத்துத்தான் ஆழப்பதிந்திருக்கும். 

ஆகவே, குதிரைப் பந்தயத்துக்கு எனப் பழக்கப்பட்ட குதிரைதான் வேண்டும். இல்லையென்றால், புதிய குதிரைகள் அதற்கெனப் பழக்கப்பட வேண்டும். 

தமிழ்த் தேசிய அரசியலின் நிலையும் இதுதான். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைப் போல, வெற்றுவாய்ஜால பகட்டாரவார அரசியல் செய்யும், தமிழ்த் தேசிய அரசியல் பாணியில் வளர்ந்த அரசியல்வாதிகளை, ஓய்வுக்கு அனுப்ப வேண்டிய கால கட்டம் வந்துவிட்டது. 

தமிழ்த் தேசிய அரசியலுக்கு புதிய சிந்தனையும் தூரநோக்குப் பார்வையும் திட்டமிடலும் செயற்றிட்டங்களை முன்னெடுக்கும் திறனும் கல்வியறிவும் நிபுணத்துவமும் இராஜதந்திரமும் தமிழ் மக்களை உண்மையாக நேசிக்கும் தன்மையும் கொண்ட புதிய தலைமைகளுக்கான தேவை ஏற்பட்டுள்ளது. 

தமிழ் மக்கள் இதனை உணராவிட்டால். தமிழ்த் தேசம், இனி மெல்லச் சாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .