Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 07, செவ்வாய்க்கிழமை
Mayu / 2024 ஏப்ரல் 27 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ
1972 இல் கொண்டுவரப்பட்ட புதிய அரசியலமைப்பு, தரப்படுத்தல், தமிழாராய்ச்சி மாநாட்டு அசம்பாவிதங்கள், துரையப்பா கொலையைத் தொடர்ந்த பொலிஸ் கெடுபிடிகள் ஆகியன தமிழ் இளைஞர்கள் மத்தியில் மிகுந்த கோபத்தையும் வெறுப்புணர்வையும் உருவாக்கியது.
இது பழிவாங்கும் கொலைகளாக ஒருபுறம் நடந்தேற மறுபுறம் தமிழ்த் தேசிய வாத வெறியைத் தமிழரசுக் கட்சியினர் உருவாக்கப் படாத பாடுபட்டுக் கொண்டிருந்தனர். தமிழரசுக் கட்சியினரிடம் தமிழ் மக்களின் உரிமைகளை எவ்வாறு வெல்வது என்பது தொடர்பில் வேலைத்திட்டம் எதுவுமே இருக்கவில்லை.
எனவே, தங்களது அரசியல் எதிர்காலத்தைத் தக்கவைக்க இரண்டு விடயங்களைக் கையிலெடுத்தனர். முதலாவது இளைஞர் வன்முறைக்கான மௌன அங்கீகாரம். இரண்டாவது, தமிழருக்கான தனிநாடு என்ற கோரிக்கை.
தமிழரின் முதலாவது அரசியல் படுகொலை துரையப்பாவினுடையது என்று கொள்ளப்பட்டாலும், அது முதல் கொலையல்ல. ஆனால், இரண்டு காரணங்களுக்காக அதுவே, முதலாவது அரசியற்கொலை என்று சொல்லப்பட்டு வந்திருக்கிறது.
முதலாவது, துரையப்பா தமிழர் நலனுக்கு எதிரானவர் என்று தமிழ்த் தேசியவாதிகள் கட்டமைத்த பிம்பமும் அவர் வகித்த மேயர் பதவியும் கொலையாளியை உயர்ந்த பதவியுடையவராக்கியது.
எனவே, அக்கொலை முக்கியமானது இரண்டாவது, பிரபாகரனே இக்கொலையைச் செய்தவராகையில் அந்த முதன்மையிடத்தை அவருக்கு வழங்கும் நோக்கம். ஆனால், துரையப்பா கொல்லப்படுவதற்கு முதலே 1970ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் இரும்பு மனிதரெனப்பட்ட
ஈ.எம்.வி. நாகநாதனை நல்லூர்த் தொகுதியில் தோற்கடித்த சி.அருளம்பலத்தின் வெற்றிக்குப் பிரதான ஆதரவாக இருந்த நல்லூர் கிராம சபைத் தலைவர் குமாரகுல சிங்கத்தைத் துரோகியெனக் கூறி இளைஞர் பேரவையைச் சேர்ந்தோர் சுட்டுக்கொன்றனர்.
இக்காலப்பகுதியில் ‘துரோகி’ முத்திரை வழங்கப்பட்டவர்கள், கொன்றொழிக்கத் தகுதியானவர்கள் என்று ஒரு கதையாடல் கட்டமைக்கப்பட்டது.
இதில் முதலிடத்தில் அப்போதைய யாழ். மேயராகவும் செல்வாக்குள்ளவராகவும் இருந்த துரையப்பாவும் அடுத்த இடங்களில், அமிர்தலிங்கத்தைத் தோற்கடித்த முன்னாள் பாடசாலை அதிபர் எஸ்.தியாகராசவும்
ஈ.எம்.வி.நாகநாதனைத் தோற்கடித்த. சி.அருளம்பலமும் இருந்தனர். இது ‘துரோகிப்’ பட்டத்தின் நோக்கங்களைத் தெளிவுபடுத்தியது. தமிழரசுக் கட்சி தனது அரசியல்எதிரிகளைத் துரோகியாகச் சித்திரித்து அவர்கள் மீது வன்முறை ஏவுவதை அனுமதித்தது.
1972ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட புதிய அரசியல் யாப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து
எஸ்.ஜே.வி.செல்வநாயகம் பதவி விலகியிருந்தார். (புதிய யாப்பு நடைமுறைக்கு வந்து நான்கு மாதங்களின் பின்னரே அவர் பதவியைத் துறந்தார்) அத்தொகுதிக்கான இடைத்தேர்தலை அரசாங்கம் திட்டமிட்டே தாமதப்படுத்தியது. 1975இலேயே இத்தேர்தல் நடந்தது. இதில்
எஸ்.ஜே.விசெல்வநாயகம் போட்டியிட்டார்.
தேர்தல் பிரசாரத்தின்போது தமிழரசுக் கட்சி ‘தமிழீழம்’ என்ற கருத்தை முன்வைத்தது.
1970கள் வரை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தனி நாட்டையோ, தமிழீழக் கோரிக்கையையோ, ஆதரிக்கவில்லை. 1960களில் தமிழரசுக் கட்சியின் மூளை என வர்ணிக்கப்பட்ட, ஊர்காவற்துறை பாராளுமன்ற உறுப்பினர் வி.நவரத்தினம் இஸ்ரேலை ஒரு முன்னுதாரணமாக நோக்கினர்.
சில தமிழரசுத் தலைவர்களின் இஸ்ரேல் விஜயமும், இஸ்ரேல் உருவாக்கத்தில் சர்வதேச சமூகத்தின் உதவியும் இதற்கு வலுவூட்டின. ஆனால், இந்த முன்னுதாரணத்தைப் புறந்தள்ளிய செல்வநாயகம், தமிழீழம் முடிவை 1970களின் நடுப்பகுதியில் வந்தடைந்தார். அதை அவர் முழு மனதோடு ஏற்றாரா என்பது இன்னமும் விவாதத்திற்குரியது.
இக் காலகட்டத்தில் கிழக்குப் பாகிஸ்தான் தனி நாடாகும் போராட்டம் உச்ச நிலைக்கு வந்திருந்தது. பங்களாதேஷ் என்ற நாடு உருவானது. அதை இயலுமாக்கியவர் அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியாவார். 1971இல் இடம்பெற்ற கிழக்கு பாகிஸ்தான் பிரிவினையும் அது பங்களாதேஷ் எனும் தனி நாடானமையும் தமிழரசுக் கட்சியின் ‘தனி நாட்டுக் கனவுக்கு’ மிகுந்த வாய்ப்பானது.
‘அன்னை’ இந்திராவும் ‘தாய்நாடு’ இந்தியாவும் தமிழ் மக்களுக்குத் தமிழீழம் என்ற தனி நாட்டை உருவாக்கித் தருவார்கள் என்ற நம்பிக்கை ஊட்டப்பட்டது. இடைத் தேர்தலில் செல்வநாயகம் அமோக வெற்றி பெற்றார்.
அது தமிழீழ தனிநாட்டுக் கோரிக்கைக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு எனப் பிரசாரம் செய்யப்பட்டது.
இவ்வாறு தமிழீழம் குறித்து நம்பிக்கையைத் தமிழரசுக் கட்சியினர் மக்கள் மத்தியில் வளர்த்துக் கொண்டிருக்கையில் முற்போக்கு இடதுசாரிகள் தமிழீழம் சாத்தியமில்லை என்று கருத்துரைத்தனர். அதற்கான தமது விளக்கங்களையும் முன்வைத்தனர். இது தமிழீழம் சாத்தியமா சாத்தியமில்லையா என்ற விவாதத்திற்கு வழிகோலியது. இரு தரப்பினரிடையே இரண்டு விவாதங்கள் 1975இல் நடைபெற்றன.
முதலாவது விவாதத்தை ஆனைக்கோட்டை உயரப்புலம் பாரதி சனசமுக நிலையத்தினர் ஒழுங்கு செய்தனர். இதில் தமிழீழம் சாத்தியம் எனத் தமிழரசுக் கட்சி சார்பில் ம.க.ஈழவேந்தனும், சாத்தியமில்லை என மார்க்சிய லெனினிச கம்யூனிசக் கட்சியின் சார்பில் சி.கா.செந்திவேலும் வாதிட்டனர்.
விவாதத்தின் நிறைவில் நடுவர் தமிழீழம் சாத்தியமில்லை என தீர்ப்பளித்தார். இரண்டாவது விவாதம் சுன்னாகம் சந்தை மைதானத்தில் முன்னாள் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அதிபர் ஒறேற்றர் சி.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.
இதில் சாத்தியம் என உடுவில் பாராளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கமும் சாத்தியமில்லை என நா.சண்முகதாசனுக்கும் வாதிட்டனர். இதில் “தமிழீழத்தைப் பெறுவதற்கான உங்களின் வேலைத்திட்டம் என்ன?” என்று சண்முகதாசன் கேட்ட கேள்விக்கு “அது இரகசியம்” என்று மட்டுமே தர்மலிங்கத்தால் பதிலளிக்க முடிந்தது. இவ்விவாதத்திலும் தமிழீழம் சாத்தியமில்லை என்ற கருத்தே வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இவ்வகையான விவாதங்களைத் தமிழரசுக் கட்சி தடைசெய்தது, “தமிழீழம் என்பது முடிந்த முடிவு, அதுவிவாதங்களுக்கு உட்பட்டதல்ல” என அமிர்தலிங்கம் பிரகடனம் செய்தார். இவ்விவாதங்களில் தமிழீழம் சிறுபிள்ளைகளுக்கு நிலாக் காட்டுவது போன்றது, அதன் மூலம் வாக்குகள் பெறமுடியுமே தவிர அதற்கப்பால் வெற்றி பெற முடியாது என்பதை முற்போக்கு இடதுசாரிகள் ஆதாரங்களோடு நிறுவினர்.
இந்நிலையில், இளைஞர் அமைப்புக்களின் அரசுக்கெதிரான தீவிர நிலைப்பாடுகள் அடுத்தாண்டு வரவிருந்த பாராளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கக் கோருவது என்ற திசையில் மெதுவாகப் பயணிக்கத் தொடங்கின. அவ்வாறு நிகழ்ந்தால் முதலுக்கே மோசமாகிவிடும் என்று தமிழரசுத் தலைவர்கள் அறிந்திருந்தனர். அதைத் தவிர்ப்பதற்காகத் தமிழீழக் கோரிக்கையை ஒரு பிரகடனமாக்கித் தேர்தலுக்கு வாக்குக் கேட்கும் பிரதான ஆயுதமாகப் பயன்படுத்த முடிவெடுத்தனர்.
1976 மே 14ஆம் திகதி வட்டுக்கோட்டைத் தொகுதியின் சுண்ணாகத்தில் அமிர்தலிங்கத்தின் வீட்டுக்கு அருகாமையில் புதிதாக உருவான தமிழர் ஐக்கியக் கூட்டணியின் முதலாவது மாநாட்டில் வட்டுக்கோட்டைப் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டணியில் தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்
(இ.தொ.கா.) என்பன இணைந்திருந்தன.
இம்மாநாடு தமிழர் ஐக்கியக் கூட்டணி என்ற பெயரை, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி என மாற்றியது. அதேபெயரில் கட்சிப் பதிவு பெற்று உதயசூரியன் சின்னத்தைத் தன் தேர்தல் சின்னமாகப் பெற்றது.
இவ்விடத்தில் ஒருமுக்கியமான நிகழ்வை நினைவூட்டல் தகும். ஒருபுறம் 1970களின் தொடக்கம் முதல் தனித் தமிழீழம் பற்றிப் பேசிக்கொண்டிருந்த தமிழரசுக் கட்சி தனது 1975ஆம் ஆண்டு மாநாட்டுக்கு
ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை பிரதம விருந்தினராக அழைத்திருந்தது. பிரதமவிருந்தினராக அழைக்கப்பட்ட ஜே.ஆர்.ஜெயவர்த்தன மல்லாகத்திலிருந்து காங்கேசன்துறை வரை ஊர்திப் பவனியில் செல்வநாயகத்துடன் அழைத்துச் செல்லப்பட்டார். இது தமிழரசுக் கட்சியினரின் இரட்டை நிலைப்பாட்டை எடுத்துக்காட்டியது.
வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு வாக்களிக்கும்படி கேட்டே தமிழர் விடுதலைக் கூட்டணி 1977 தேர்தலில் போட்டியிட்டது. தாம் தமிழீழத்தை வென்று தருவோம் என அமிர்தலிங்கம் மேடையெங்கும் பேசினார். தமிழர் கூட்டணிக்குப் பதினெட்டு ஆசனங்கள் கிடைத்தபோதும், அவர்கள் கோரிய தமிழீழத்திற்கான ஆணைக்குக் கிடைத்த வாக்கு விகிதம் ஐம்பத்திரண்டு சதவீதமாக மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்களின் வாக்குகள் அவர்களுக்குத் தமிழீழத்தைப் பெற்றுத் தரவில்லை. ஆனால், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு பதினெட்டு ஆசனங்களைப் பெற்றுக்கொடுத்ததோடு, பாராளுமன்ற வரலாற்றில் முதல் முறையாகத் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராகவரவும் வழி செய்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமான அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவரானார்.
தனி நாட்டுக்கு ஆணை கேட்டு எதிர்க்கட்சித் தலைவராகி அரசியல் செய்த அவலம் தமிழர் விடுதலைக் கூட்டணியினுடையது. எதிர்க்கட்சித் தலைவராகத் தனது முதலாவது பாராளுமன்ற உரையில் அமிர்தலிங்கம் ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்த வெற்றியை ‘ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி’ என்றும் பிரதமர் ஜே.ஆர். ஜெயவர்தனவை ‘மிகச் சிறந்த ஜனநாயகவாதி’ என்றும் தெரிவித்தார். தனி நாடு கேட்ட அரசியலின் அவலம் இவ்வாறு தான் தொடங்கியது.
29.04.2024
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago