Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூன் 18 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-இலட்சுமணன்
கொரோனா தொற்றிலிருந்து நாடு வழமைக்குத் திரும்பி வருகின்ற வேளையில், அரசியலில் தேர்தல் அரங்கு சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்களை வழங்கியுள்ள தேர்தல் ஆணைக்குழு, தேர்தல் ஒத்திகைகளையும் மாவட்டம் தோறும் நடத்தி வருகிறது.
இத்தகைய சூழலில், நாடு என்றும் எதிர்நோக்காத அளவு பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதுடன், அதிலிருந்து மீண்டெழுவதற்கான மாற்று உபாயங்களைத் தேடிக்கொண்டிருக்கிறது. அதற்கேற்ற வகையிலேயே, மத்திய வங்கி மீதான ஜனாதிபதியின் கண்டனம் அமைந்துள்ளது.
தேசிய அரசியல் சூழல் இவ்வாறிருக்க, தமிழ்ப் பிரதேசங்களின் அரசியல் நிலைமைகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. வழமையைவிட தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளைச் சிதறடிக்கும் வண்ணம், பல்வேறு அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் களமிறங்கியுள்ளன. களமிறக்கப்பட்டுள்ளன.
தொல்லியல் தொன்மங்களைக் கண்டறிதல், வனப் பிரதேசங்களைக் கண்காணித்தல், மேய்ச்சல் தரை, விவசாயப் பூமிகளைக் கையாளுதல் முதலான பல்வேறு செயற்பாடுகள் ஏற்கெனவே முன்னெடுக்கப்பட்டுள்ள வேளையில், தொல்லியல் தொன்மங்கள் இருப்பதாகவும்; இருந்ததாகவும் நிறுவும் முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றன. அத்துடன், இருப்பதைச் சிதைக்கும் முயற்சிகள் மறுதலையாக நடைபெறப்போகும் சூழல் உருவாவதாகவும் படிப்படியாக இராணுவ மயப்படுத்தலை நோக்கி இலங்கை அரசாங்கம் நகர்வதாகவும் குற்றம் சுமத்தப்படுவதுடன், கண்டனங்களும் பரப்புரைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
1987இல், தமிழ் மக்களைப் பாதுகாக்கும் இந்திய நலன் கருதி செய்யப்பட்ட சர்வதேச ஒப்பந்தமான இலங்கை - இந்திய ஒப்பந்தம், 33 ஆண்டுகள் கடந்த நிலையில், அதனை நீக்குவதற்கான அல்லது தற்போது நடைமுறையில் இருக்கும் பலத்தை இல்லாதொழிப்பதற்கான முஸ்தீபுகள், மறுபுறம் நடந்து கொண்டிருப்பதாகவும் கருத்தாடல்கள் வெளிக்கிளம்பியுள்ளன.
இவ்வொப்பந்தமானது, தமிழ் மக்களுக்கு ஒரு முழுமையான தீர்வாக அமையாதென, தமிழீழ விடுதலைப் புலிகளால் நிராகரிக்கப்பட்டது. அதன் விளைவே, புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்குமான மோதலுக்கு வித்திட்டது. அதனைத் தொடர்ந்து யுத்தம் 2009இல் மௌனிக்கும் வரை நடந்த மோதல்களும் அவற்றின் எதிரொலியாகப் புலிகள் அளிக்கப்பட்டதும், தமிழின அரசியல், சமூக, பொருளாதார, கல்வி ரீதியான பாரிய பின்னடைவைச் சந்தித்ததும், எழுதப்படாத வரலாறு ஆகிவிட்டது.
யுத்தம் நிறைவுற்று 11 ஆண்டுகளாகின்ற சூழ்நிலையில், 2015இல் தமிழ் மக்களது பிரச்சினையைத் தீர்ப்பதாகக் கூறிக்கொண்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய நல்லாட்சி அரசாங்கம், தனது நல்லாட்சி மூலம் சிங்கள தேசிய அபிமானத்தைப் பெறுவதற்காகவும் யுத்தத்தின் மூலம் சர்வதேச அரங்கில் இலங்கை அடைந்த அபகீர்த்தியைத் துடைப்பதற்கும், ஜெனிவா மனித உரிமைக் கருத்தாடல்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கும், யுத்தக் குற்றவாளிகளைக் காப்பாற்றிக் கொள்வதற்கும் காணாமல் போனோரின் உறவுகளை ஏமாற்றுவதற்கும், தமது ஆட்சி அதிகாரத்தை முறையாகப் பயன்படுத்தியது.
மேலும், தனது அரசியல் எதிரிகள் மீண்டெழா வண்ணமும் ஜனநாயகத்தைக் காப்பாற்றும் வகையிலும், 19ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி, “வயலுக்கு இறைத்த நீர், வாய்க்கால் வழி வழிந்தோடி புல்லுக்கும் கசியுமாம்” என்பதற்கமைய, சிறுபான்மை சமூகத்துக்கும் சில ஆறுதலைப் பெற்றுக்கொடுத்தது.
இந்த நல்லாட்சி நடைமுறையில் கிடைத்த சில சலுகைகள், சிறுபான்மைச் சமூகத்துக்கு ஓரளவு ஆறுதல் அளித்தபோதும், மறுபுறம் தேசியவாத உணர்வு உத்வேகத்துடனும் வீரியத்துடனும் வளர்ச்சிபெறக் காரணமாயிற்று. அது, கடந்த ஜனாதிபதித் தேர்தலில், கோட்டாபயவின் வெற்றி மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து எழுந்துள்ள அரசியல், சமூக, பொருளாதாரச் சூழ்நிலை என்பது, நாடாளுமன்றக் கலைப்புடன் மேலும் விஸ்வரூபம் எடுக்க, கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் கூட்டப்படுவதற்கும் தேர்தலைப் பிற்போடுவதற்கும் எடுக்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் வியூகங்களும் சிந்தனைகளும், நடவடிக்கைகளும், அதன் தோல்வி நிலைகளும், தேர்தல் ஆணைக்குழு அங்கத்தவர்கள் எதிர்நோக்கிய விமர்சனங்கன் போன்றவை, எமது நாடு எதைநோக்கிப் பயணிக்கிறது என்பதற்குச் சிறந்த சமிக்கைகளாகும்.
இத்தகையதோர் அரசியல் பின்புலத்தில், தமிழ்த் தேசிய அரசியல் எதிர்வரும் தேர்தலைச் சந்திக்கப் போகிறது. இம்முறை தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிராகவே வடக்கு, கிழக்கின் அனைத்துக் கட்சிகளினதும் பரப்புரைகள் அமையப்போகின்றன. அதேவேளை, தமிழ்த் தேசிய அரசியலில், தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக் கூட்டமைப்பு நடந்துகொண்ட விதமும் தமிழ்த் தேசிய அரசியலுக்கு எதிராக, குறிப்பாக சுமந்திரன் போன்றோர் நடந்துகொண்ட முறையும், கடந்த முறை வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்ற அனேகமான உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய விடுதலையைப் புரிந்துகொண்டுள்ள விதமும் அவர்கள் தம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறித்துரைத்த விடயங்களை எவ்வாறு எந்தளவு எப்படிக் கையாண்டார்கள், நிறைவேற்றி வைத்திருக்கிறார், வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதெலலாம் இம்முறை தேர்தலில் தமிழ் மக்களால் கருத்தில் கொள்ளப்படும்.
ஏனெனில், அந்தளவுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் மீதான அதிருப்தி உணர்வு, படிப்படியாக முளைவிட்டு அக்கினிக் குஞ்சாய் பரவத் தொடங்கியுள்ளது. ஆயினும், கூட்டமைப்புக்கு எதிரான அதிருப்தியாளர்களின் பிளவே மறுபுறம் கூட்டமைப்பை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லும் வாய்ப்பை வழங்குகின்றது. காரணம், கூட்டமைப்புக்கு எதிரான மாற்றுக்கட்சிகள் ஒன்றுபடாமல் பலவாறாகப் பிரிந்திருப்பதால், கூட்டமைப்புக்கு எதிரான வாக்குகளால் வரக்கூடிய நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இக்காட்சிகள் பெறாமல் அந்த வாக்குகளைச் சிதறடிக்கப் போகின்றன.
அதேவேளை, கடந்த நல்லாட்சியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வாக்குக் கொடுத்த முறையில் சிறைக் கைதிகள் விடுதலை, அது தொடர்பான உண்ணாவிரதப் போராட்டம் போன்றவற்றைக் கண்டுகொள்ளவில்லை. வன்னி மக்களுக்கு வீடே இல்லாத நிலையில் கிடைத்த பொருத்து வீட்டுத் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதன் மூலம் கிடைத்ததையும் இல்லாமல் செய்துவிட்டது.
வெறும் வானம் பார்த்தவனுக்கு பொருத்து வீடாவது கிடைத்திருக்கும் - நாயும் வைக்கோல் பட்டறையுமாய் அத்திட்டத்தைக் குறுகிய அரசியல் நலனுக்காக நிராகரித்ததன் மூலம், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நடுத்தெருவில் விட்டார்கள். மாறாக, நிபந்தனைகள் அற்ற முறையில் நல்லாட்சி அரசை ஆதரித்தார்கள். அதற்கும் ஒருபடி மேலே சென்று ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் அவர்கள் ஆயுதப் போராட்டத்தை ஏற்கவில்லை. புலிகளின் போராட்டம் தவறானது என்றார். சுமந்திரன் சொன்னது சரியே என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் கூறினார்.
2002ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பதுகூட அறியாதவர்போல், கடந்த 70 வருடகாலமாகக் கூட்டமைப்பு தமிழர் உரிமைக்காகப் போராடி வருவதாக அண்மையில் ஞா.சிறிநேசன் கூறியிருக்கிறார். அவ்வளவுதான் அவரது அரசியல் அறிவு. அவர் கூறுவதுபோல் அரசாங்கத்துடன் முட்டி மோதிக் கொள்ளாமல் நடப்பது என்றால், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான பெரும்பாலான கட்சிகள், குறிப்பாக விக்னேஸ்வரனது கட்சி, கஜேந்திரகுமாரது காட்சிகள் தவிர அனைத்தும், அரசாங்கத்துடன் இணைந்த கட்சிகளும் அரசு சார்புக் கொள்கைக் கட்சிகளுமே தேர்தல் கேட்கின்றன. அவற்றின் கூட்டமைப்புக்கு எதிரான தேர்தல் பிரசாரமும் அதுதான்.
மொட்டுக் கட்சியும் மட்டக்களப்பில் பிள்ளையானின் கட்சியும், கருணாவின் கட்சியும் இதைத்தான் சொல்கின்றன. கூட்டமைப்பு சலுகை கேட்டாலும் உரிமை கேட்டாலும், தியாகம்; ஏனையவர்கள் கேட்டால் துரோகம். வடக்கு, கிழக்கு இணைந்த மாகாண சபை, அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியால் துரோகமாகப் பார்க்கப்பட்டது. வடக்கு மாகாணம் வேறு; கிழக்கு மாகாணம் வேறு எனக் கிழக்கில் தேர்தல் நடந்தபோது, அதில் போட்டியிட்டால் துரோகமாக பார்க்கப்பட்டது. வடக்கில் எந்த தேர்தல் வந்தாலும், அது உரிமையாகவும் கிடைப்பதைப் பெற்று முன்னேறுவோம் எனச் சொல்லப்படுகிறது.
எனவே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்குச் சலுகை, உரிமை என்ற தொனியில் தேர்தல்கால, ஆட்சிகால ஊடக அறிக்கை அரசியல் நடத்தாமல் எதைச் செய்யப் போகிறது. எவ்வாறு பயணிக்கிறது என்பதை, தன்னைச் சுய விமர்சனம் செய்துகொண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைக்க வேண்டும். அதன்படி செயற்பட வேண்டும். ஏனெனில், தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக எண்ணற்ற தியாகங்களை செய்துள்ளனர்.
யுத்தம் முடிந்தபின், தமிழர்களின் பிரதிநிதிகளாக அரசியலில் பங்கேற்ற உங்களில் பலர், தமிழ் மக்களின் உணர்வுகளில் குளிர்காய நினைக்காதீர்கள். ஏனெனில், 70 ஆண்டுகாலம் அஹிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடிச் சாதிக்காத எதை நீங்கள் சாதிக்கப் போகிறீர்கள். கதைசொல்லிக் காலம் கடத்த தமிழர் வெறும் பேயர்கள் அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள். தேசியத்தின் பெயரால் தியாகத்தின் பெயராலும் கிடைக்கும் வாக்குகளில் விருப்பு வாக்கு வாங்கி நாடாளுமன்றம் செல்லலாம் என எண்ணாதீர்கள்,
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
2 hours ago