Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை
Johnsan Bastiampillai / 2021 ஜனவரி 09 , மு.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-புருஜோத்தமன் தங்கமயில்
யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய மேயராக, விஸ்வலிங்கம் மணிவண்ணன், டிசெம்பர் 30ஆம் திகதி தெரிவானார். மேயருக்கான போட்டியில், முன்னாள் மேயரான இம்மானுவேல் ஆர்னோல்டை, ஒரு வாக்கு வித்தியாசத்தில் அவர் தோற்கடித்திருந்தார்.
2020ஆம் ஆண்டின் இறுதியில், அப்போதைய மேயர் ஆர்னோல்ட் சமர்ப்பித்த 2021ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டம், இரண்டு தடவைகளும் தோற்கடிக்கப்பட்டது. அதனால், அவர் பதவியிழக்க வேண்டி வந்தது.
குறிப்பாக, வரவு-செலவுத் திட்டத்தின் குறைநிறைகள் தாண்டி, ஆர்னோல்ட் மேயர் பதவிக்குத் தகுதியானராகத் தன்னை, கடந்த மூன்று ஆண்டுகளிலும் நிரூபிக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் (ஈ.பி.டி.பி) வரவு - செலவுத் திட்டத்தைத் தோற்கடித்தன; அதன்மூலம் அவரைப் பதவி நீக்கின.
யாழ்ப்பாண மாநகர சபை 45 உறுப்பினர்களைக் கொண்டது. இதில், த.தே.கூ 15, முன்னணி 13, ஈ.பி.டி.பி 10, ஏனைய கட்சிகள் ஏழு உறுப்பினர்கள் வீதம் உறுப்பினர்களைக் கொண்டிருக்கின்றன. இதில், அறுதிப் பெரும்பான்மை என்பது, 23 ஆசனங்களைப் பெறுவதன் மூலம் சாத்தியமாகும். ஆனால், அது எந்தவொரு கட்சிக்கும் இல்லை.
அப்படியான நிலையில், மாநகர சபையின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு, கட்சிகளுக்கு இடையிலான இணக்கப்பாடு அவசியமானது. அது, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, மக்கள் நலனை முன்னிறுத்தி ஏற்படுத்தப்பட வேண்டும்.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான புதிய தேர்தல் சட்டத்தில் காணப்பட்ட குறைபாடுகளால், நாடு பூராவும் பெரும்பாலான சபைகளில், அறுதிப்பெரும்பான்மை என்கிற நிலை ஏற்பட்டிருக்கவில்லை. அதனால், சபைகளை முன்கொண்டு செல்வதற்கு, கட்சிகளுக்கு இடையிலான இணக்கப்பாடு தவிர்க்க முடியாததாகவும் ஆகிவிட்டிருந்தது.
ஆர்னோல்ட் தோற்கடிக்கட்ட பின்னணியில், புதிய மேயர் வேட்பாளரைத் தெரிவு செய்வதில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செய்த தவறு, மாநகர மேயர் போட்டிக்கான களத்தைத் திறந்தது ஆகும். அது, ஒவ்வொரு கட்சிக்குள்ளும் காணப்படுகின்ற அதிகாரப் போட்டி, பலத்தை நிரூபிக்கும் தன்முனைப்பு (ஈகோ) உள்ளிட்ட விடயங்களை அரங்கேற்றியது.
ஜனநாயக வழியிலும், மரபு ரீதியாகவும் பதவி நீக்கப்பட்ட மேயர் ஒருவர், தேர்தலொன்றை எதிர்கொண்டு வெற்றிகொள்ளாமல், மீண்டும் மேயர் தெரிவுக்காகப் போட்டியிடுவது முறையல்ல. ஆனால், அந்த மரபை மாற்றுவது என்கிற முடிவுக்கு ஆர்னோல்ட்டும், அவரை முன்னிறுத்தி, தங்களது தனிப்பட்ட அரசியல் விளையாட்டை விளையாடுவதற்கு, தமிழரசுக் கட்சியின் தலைமையும் முடிவுக்கு வந்தனர். அதுதான், இலகுவாக வென்றிருக்க வேண்டிய மாநகர சபையை, இன்னொரு கட்சியிடம் தரைவார்க்கும் நிலைக்கு இட்டுச் சென்றது.
தமிழ்த் தேசிய அரசியல், அர்ப்பணிப்புகளின் வழியாக எழுச்சி பெற்ற ஒன்று. ஆனால், இன்றைக்கு தமிழ்த் தேசிய அரசியலின் பெயரால், தமிழ்த் தேசிய கட்சிகள் எல்லாமும், சுயநல அரசியலையே செய்து வருகின்றன. குறிப்பாக, கட்சிகளின் தலைமைகள், எந்தவித அறமும் இன்றித் தனிப்பட்ட வெற்றிகளை (நலன்களை) இலக்காகக் கொண்டு செயற்பட ஆரம்பித்துவிட்டன.
தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தை மாவை சேனாதிராஜா ஏற்றது முதல், தமிழரசுக் கட்சி செங்குத்தான வீழ்ச்சியைக் கண்டு வருகின்றது. கடந்த பொதுத் தேர்தலில், பிரதான கட்சியொன்றின் தலைவராக இருந்து கொண்டே, அவர் தோற்றுப்போனார். அவர் அடைந்த தோல்வி என்பது, அவரின் தனிப்பட்ட விடயம் மாத்திரமல்ல; அது, ஒரு கட்சியின் மீதான அதிருப்தியின் வழியிலும் வருவது.
அப்படியான நிலையில், கடந்த காலத்தின் தவறுகளைச் சரி செய்வது சார்ந்து, மாவை சிந்தித்திருக்க வேண்டும். ஆனால், அவரோ, தன்னை இந்த நிலைக்கு இட்டுச் சென்றவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து கொண்டு, மீண்டும் மீண்டும் தவறிழைக்கின்றார். அதிக நேரங்களில், தானொரு கட்சித் தலைவர் என்பதையே மறந்து, யார் யாரினதோ ஏவல்களுக்கு எல்லாம் ஆடும் பொம்மைபோல செயற்படுகின்றார்.
ஆர்னோல்ட் பதவியிழந்ததும், அந்த இடத்துக்குப் பொருத்தமான இன்னொருவரைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக மாவை முன்னொழிந்திருக்க வேண்டும். ஏற்கெனவே, ஆர்னோல்ட் தவிர்ந்த இன்னொருவருக்கு ஆதரவளிக்கத் தயார் என்று முன்னணி அறிவித்திருந்தது. ஆனால், ஆர்னோல்ட்டின் மரபுகளுக்கு அப்பாலான ‘அழுகுணி’ ஆட்டத்துக்கு, ஒரு கட்சியைப் பலிக்கடாவாக்கி இருக்கின்றார்கள்.
அரசியலில் குறைந்தபட்ச அறத்தையும் மரியாதையையும் பேணுவது சார்ந்து, ஆர்னோல்ட் செயற்பட்டிருக்க வேண்டும். மேயராக அவர் தோற்கடிக்கப்பட்டு இருக்கின்றார். அதை ஏற்றுக்கொண்டு, தன்னுடைய கட்சிக்குள் இன்னொருவருக்கு வாய்ப்பை வழங்கியிருக்க வேண்டும். அதுதான், ஜனநாயகத்தின் அடிப்படை. ஆனால், அவரோ, மேயர் பதவியை விட்டால் தன்னுடைய அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்று கூறி, நடந்து கொண்ட விதம், என்றைக்குமே ஏற்றுக்கொள்ள முடியாதது.
தமிழரசுக் கட்சிக்குள் நீடிக்கும் குழப்பங்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, முன்னேறியது மணிவண்ணன் அணிதான். ஏற்கெனவே, முன்னணிக்குள் கஜேந்திரர்கள் அணி, மணிவண்ணன் அணி என்கிற செங்குத்துப் பிளவு ஏற்பட்டிருக்கின்றது.
மாநகர சபை மேயர் பதவியைக் கைப்பற்றுவதன் மூலம், தன்னுடைய பலத்தை நிரூபிக்கலாம் என்று மணிவண்ணன் நினைத்தார். சரியாகக் காய் நகர்த்தி, அதை வென்றுவிட்டார். யாழ். மாநகர சபையிலுள்ள முன்னணியின் 13 உறுப்பினர்களின், 10 பேர் கஜேந்திரகுமாரின் நிலைப்பாடுகளுக்கு எதிராக நின்று, மணிவண்ணனுக்கு ஆதரவளித்து இருக்கிறார்கள்.
இதுபோன்றதொரு நிலை, நல்லூர் பிரதேச சபையிலும் நடந்தது. அங்கும், மணிவண்ணனின் ஆதரவு அணியைச் சேர்ந்தவரே தவிசாளராக வென்றிருந்தார். இதன்மூலம், பொதுத் தேர்தல் காலத்தில், முன்னணிக்குள் ஏற்பட்ட பிளவு, அடுத்த கட்டத்தை அடைந்திருக்கின்றது. பொதுத் தேர்தல் காலத்தில் கஜேந்திரர்கள் வென்றாலும், கட்சிக்குள் உறுப்பினர்களின் ஆதரவு ரீதியான பலப்பரீட்சையில், மணிவண்ணன் அணி வென்றதாகத் தற்போது நிரூபணமாகி இருக்கின்றது.
இந்த விடயத்தில், தன்னையொரு சாணக்கிய நிலையில் பேணிக்கொண்டது டக்ளஸ் தேவானந்தா தான். யாழ். மாநகர சபை மேயர் போட்டியில், தமக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று மாவை அவரிடம் குறுந்தகவல் மூலம் கோரியிருக்கின்றார். எனினும், அதை நிராகரித்து, ஆற்றலுள்ள ஒருவருக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில், மணிவண்ணனை ஆதரித்ததாக அவர் கூறியிருக்கின்றார். அத்தோடு, “...தோழர் கஜேந்திரகுமார் உள்ளிட்டவர்கள், மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்களில் எங்களோடு இணைந்து பணியாற்றுகிறார்கள். கொள்கைகள் வேறாகினும், மக்கள் நலனை முன்னிறுத்தி இணங்கிச் செயற்படுகின்றோம். அதைக் கருத்தில் கொண்டே மாநகர சபை மேயர் தெரிவிலும், மணிவண்ணன் ஆதரவு கோராமலேயே அவருக்கு ஆதரவளித்தோம்...” என்றிருக்கின்றார்.
மணிவண்ணன் மேயராகத் தெரிவு செய்யப்பட்டது தொடக்கம், முன்னணியின் இரண்டு அணியினரும் சமூக ஊடகங்களில் மாறி மாறி, ஒருவரை ஒருவர் துயிலுரிகிறார்கள். ‘துரோகி, தோழர்’ பட்டங்களை வகை தொகையின்றி வழங்கி, ஊடக சந்திப்புகளின் வழி, மன உளைச்சல்களைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.
தமிழரசுக் கட்சிக்குள்ளேயோ, தோல்விக்கு யார் பொறுப்பு என்று கடிதங்கள் வாயிலாகவும் தொலைக்காட்சி நேர்காணல்களிலும் முட்டி மோதுகிறார்கள். இதில், தமிழரசுக் கட்சியின் நிலை, இன்னும் சிரிப்புக்கிடமாக மாறி இருப்பதற்கான சாட்சி, கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், மாநகர சபை மேயர் வேட்பாளர் தெரிவு குறித்து, தன்னிடம் எதுவுமே ஆலோசிக்கப்படவில்லை என்கிற வெளிப்படுத்தல் ஆகும்.
அரசியல் என்பது, அடிப்படையில் மக்களுக்கானது. அதன் பிறகுதான் கட்சிகளுக்கானது. ஆனால், உட்கட்சிகளுக்குள் காணப்படும் குழறுபடிகள், முரண்பாடுகள் போன்றவற்றால், எதிர்த்தரப்பினரை வெட்டி வீழ்த்துவதற்கான கட்டமாக, மாநகர சபை மேயர் தெரிவைக் கையாண்டிருக்கிறார்கள்.
எஞ்சியுள்ள பதவிக் காலத்தையாவது, மாநகர சபை ஆக்கபூர்வமான வழியில் கடக்க வேண்டும். அதற்குத் தனிப்பட்ட நலன்களை மறந்து, மாநகர சபை உறுப்பினர்களும் கட்சிகளும் தலைமைகளும் செயற்பட வேண்டும்.
இல்லையென்றால், “மாநகர சபையையே ஆட்சி செலுத்த வக்கற்ற தமிழர்கள், சமஷ்டி கோருகிறார்கள” என்கிற எள்ளல்களைத் தென் இலங்கை இனவாதிகளிடம் இருந்து, மீண்டும் மீண்டும் கேட்க வேண்டியிருக்கும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
45 minute ago
2 hours ago
2 hours ago