2025 ஜனவரி 09, வியாழக்கிழமை

தமிழனுக்குத் தமிழனே எதிரி

Mayu   / 2024 டிசெம்பர் 25 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

முருகானந்தம் தவம்

ரணில் விக்ரமசிங்கவின் கடந்த  ஆட்சியில் அரசியலமைப்பு பேரவைக்குச் சிறிய கட்சிகள்  சார்பில் தமிழ் பிரதிநிதியாக ஒருவரை  நியமிக்கப் பேரினவாதக் கட்சிகள் காட்டிய எதிர்ப்பும்  அரசியலமைப்பு பேரவையின் சிறிய கட்சிகளின் பிரதிநிதியாகத்  தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவரும் தமிழீழ விடுதலைக் கழகத்தின் தலைவரும் யாழ் மாவட்ட  எம்.பியுமான தர்மலிங்கம் சித்தார்த்தனின் பெயரை பிரேரித்து விட்டு, அவரை நியமிக்குமாறு  தமிழ் தேசியக் கட்சிகள் நடத்திய  போராட்டமும்  ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி கலையும் வரை சித்தார்த்தன் நியமிக்கப்படாமையும் வரலாறு. பாராளுமன்றத்தில் சிறிய கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பல சிங்களக் கட்சிகளும் இருப்பதால் தமது தரப்பிலிருந்தே ஒரு பிரதிநிதியைத் தெரிவு செய்ய வேண்டுமெனத் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் 

எம்.பி யுமான  விமல் வீரவன்ச, பிவிதுரு ஹெல உறுமயவின்  தலைவரும் எம்.பியுமான  உதய கம்பன்பில ஆகிய இரு இனவாதிகள் போர்கொடிதூக்கியதை காரணமாக  வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் சித்தார்த்தனை நியமிக்காது இறுதிவரை இழுத்தடித்து இறுதியில் ஆட்சியிலிருந்தே காணாமல் போயுள்ளார். அவருடன் சேர்த்து விமல் வீரவன்சவும் உதயகம்பன் பிலவும்  அரசியலிலிருந்தே காணாமல்  போயுள்ளனர்.

இவ்வாறான நிலையில்தான் ஜனாதிபதி அனுரகுமார  திசாநாயக்கவின் ஆட்சியில் அரசியலமைப்பு பேரவைக்குச் சிறிய கட்சிகளின் பிரதிநிதியாக இரகசிய வாக்கெடுப்பின் மூலம் இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட எம்.பியான சிவஞானம் சிறீதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.  அனுரகுமார திசாநாயக்க அரசில் இது ஒரு சிறந்த மாற்றமாக இருந்தாலும், அரசியலமைப்பு பேரவைக்கு சிறீதரன் எம்.பி. தெரிவாகி விடக்கூடாது என்பதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசியல் வாரிசான நாமல் ராஜபக்‌ஷவும் தமிழ்த் தேசியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரு கறுப்பு ஆடுகளும் சதி செய்த போதும் அது வெற்றியளிக்கவில்லை.

அண்மையில் பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு பேரவையின்  உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அரசியலமைப்பு பேரவையில் 10 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பர்   இதன்தலைவராகச் சபாநாயகர் அசோக ரன்வல செயற்படுவார். 

பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இதில் நிரந்தர உறுப்புரிமையைபெற்றிருப்பர்.  ஜனாதிபதியின் பிரதிநிதியாகத் தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் எம்.பியான ஆதம்பாவா  நியமிக்கப்பட்டார்  எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதியாக ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட எம்.பியான அஜித் பி.பெரேரா நியமிக்கப்பட்டார்.

பிரதமரும் தனது பிரதிநிதியாக ஒருவர் நியமிக்க முடியும். பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சாராத கட்சி உறுப்பினர் ஒருவருக்கும்  இடமளிக்க வேண்டும்.   இதற்கு மேலதிகமாக  கட்சி சாராத மூன்று சிவில் பிரதிநிதிகளும் நியமிக்கப்படுவார்கள்.

இவ்வாறான நிலையில்தான் சிறிய கட்சிகளின் பிரதிநிதியாக ஒருவரை  தெரிவு செய்ய வேண்டியநிலையில் அரசியலமைப்பு பேரவையின் சிறிய கட்சிகளின்  பிரதிநிதியாக இலங்கைத் தமிழரசுக் கட்சியை சேர்ந்த யாழ்.  மாவட்ட எம்.பியான சிவஞானம் சிறீதரனின் பெயரை  அதே கட்சியைச் சேர்ந்த அம்பாறை மாவட்ட எம்.பியான கவீந்திரன் கோடீஸ்வரன் முன்மொழியத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்  தலைவரும் யாழ். மாவட்ட எம்.பியுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழிமொழிந்தார்.

இதனையடுத்து, சிறீதரன் நியமிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகச் செயற்பட்ட மஹிந்த ராஜபக்‌ஷவின் வாரிசான பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம்.பி. 
நாமல் ராஜபக்‌ஷ   சிறீதரனை தோற்கடிக்க வேண்டும்.

அதேவேளை, மலையகத் தமிழர்களுடன் தமிழர்களை மோதவிட வேண்டும் என்ற ஒருகல்லில் இரு மாங்காய்கள் அடிக்கும் இனவாத சிந்தனையில் அரசியலமைப்பு பேரவையின்   சிறிய கட்சிகளின்  பிரதிநிதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்  செயலரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட எம்.பியுமான ஜீவன் தொண்டமானின் பெயரை  முன்மொழிய ரணில் விக்ரமசிங்கவின் புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட எம்.பியான  சாமர சம்பத் வழி மொழிந்தார்.

இதற்கிடையில் யாழ். மாவட்டத்தில் சுயேச்சைக் குழு 17இல் போட்டியிட்டு  எம்.பியானவரும் தனது கோமாளித் தனங்களினால் பாராளுமன்றத்தில் ஒரு ஜோக்கராக பார்க்கப்படுபவருமான இராமநாதன்  அர்ச்சுனா அரசியலைப்பு பேரவைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் கூட்டத்திலும் விதிமுறைகள் தெரியாது வழக்கம் போலவே முட்டாள்தனமாகச்  செயல்பட்டு  அரசியலைப்பு பேரவையின் சிறிய கட்சிகளின் பிரதிநிதியாக தானும் போட்டியிடப் போவதாகக் கூறியபோதும் அவரை முன்மொழியவோ வழிமொழியவோ எவருமே இல்லாத நிலையில், அர்ச்சுனா  எம்.பி. வேறு வழியின்றி போட்டியிலிருந்து தானாகவே விலகிக்கொண்டார். 

இவ்வாறான நிலையில், அரசியலமைப்பு பேரவையின் சிறிய கட்சிகளின் பிரதிநிதியாக இலங்கை தமிழரசுக் கட்சியின் எம்.பியான சிறீதரனை தெரிவு  செய்வதா? அல்லது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஜீவன் தொண்டமானை தெரிவு செய்வதா? என்பதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. இந்த இரகசிய  வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது, 25 எம்.பிக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த போதும் 21 எம்.பிக்கள் மட்டுமே வாக்களித்த நிலையில் சிறீதரன் எம்.பி. 11 வாக்குகளையும் ஜீவன் தொண்டமான் எம்.பி. 10 வாக்குகளையும் பெற்ற நிலையில், சிறீதரன் எம்.பி. அரசியலமைப்பு பேரவையின் சிறிய கட்சிகளின்  பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய ரோஹித அபேகுணவர்தன், அனுராத ஜயரத்ன மற்றும் இரு எம்.பிக்கள் பங்கேற்கவில்லை. அதேவேளை, இந்த வாக்களிப்பில் தமிழ்த் தேசியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய இரு கறுப்பு ஆடுகள்  ஜீவன் தொண்டமானுக்கு வாக்களித்துள்ளமை  வெளியே கசிந்துள்ளது.

அதாவது சிறீதரன் எம்.பி. தெரிவாகி விடக்கூடாது என்பதில் இந்த இரு தமிழ்த் தேசிய கறுப்பு ஆடுகளும் உறுதியாகவிருந்த நிலையில், இரு முஸ்லிம் எம்.பிக்களின் ஆதரவுடனேயே சிறீதரன் எம்.பி. வெற்றிபெற்றார் என உள் ‘வீட்டு’ தகவல்கள் தெரிவித்தன.

இந்த  அரசியலமைப்பு பேரவையில் சிறிய கட்சிகளின் பிரதிநிதியாகத் தமிழ் பிரதிநிதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில்,  அரசியலமைப்பு பேரவை என்றால் என்ன, அதில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் யார், அப்பேரவை ஊடாக முன்னெடுக்கப்படும் பணிகள் எவை, 21ஆவது திருத்தச் சட்டமூலத்தில் அது எந்த அடிப்படையில் உள்வாங்கப்பட்டுள்ளது என்பதை அறியப் பலரும் ஆர்வமாக இருப்பர் என்பதனால்   அது தொடர்பிலும் ஒரு சிறு விளக்கம் .

அரச சேவையில், அரசியல் தலையீடுகளைத் தவிர்த்து, சுயாதீனத் தன்மையை உறுதிப்படுத்திறக்கொள்ளும் பிரதான நோக்கிலேயே அரசியலமைப்பு பேரவை உருவாக்கப்பட்டது. அரசியலமைப்பின் 17ஆவது திருத்தச் சட்டத்தில் இதற்கான ஏற்பாடுகள் உள்ளடங்கியிருந்தாலும், 18ஆவது திருத்தச் சட்டம் ஊடாக அந்த ஜனநாயக ஏற்பாட்டுக்கு மஹிந்த ராஜபக்‌ஷவால் 
இறுதிக் கிரியை   செய்யப்பட்டது.

இந்நிலையில், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற   ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்ற பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்தி, பாராளுமன்றத்தின்  அதிகாரத்தை மேம்படுத்துவதற்கும், நீதித்துறையின் சுயாதீனத் தன்மையை உறுதிப்படுத்திக்கொள்வதற்கும் 19ஆவது திருத்தச்  சட்டம் முன்வைக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. அதன்மூலம் அரசியலமைப்பு பேரவையும் மீள உருவாக்கப்பட்டது.

அரசியலமைப்பு பேரவையில்  10 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பர் . இதன் தலைவராகச் சபாநாயகர் செயற்படுவார்.  பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இதில் நிரந்தர பொறுப்புரிமையைப் பெற்றிருப்பர். 

ஜனாதிபதியின் பிரதிநிதியொருவரும்  நியமிக்கப்படுவார் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் தமது சார்பில் மேலும் இருவரின் பெயரை முன்மொழியலாம். அதற்கு மேலதிகமாக கட்சிசாராத மூன்று சிவில் பிரதிநிதிகளுக்கும்   இடமளிக்கப்படும். 
பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்  சாராத சிறிய கட்சி உறுப்பினர் ஒருவருக்கு இடமளிக்க வேண்டும். 

தேசிய தேர்தல் ஆணைக்குழு,  அரச சேவை ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு,  மனித உரிமைகள் ஆணைக்குழு,  இலஞ்சம், ஊழல் ஆணைக்குழு,  நிதி ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு,  கணக்காய்வு ஆணைக்குழு,  தேசிய பெறுகை ஆணைக்குழு, ஆகியவற்றுக்கான  உறுப்பினர்களின் பெயர்களை, அரசியலமைப்பு பேரவையே ஜனாதிபதிக்குப் பரிந்துரைக்கும்.

அதேபோன்று, பிரதம நீதியரசர்,  உயர்நீதிமன்ற நீதியரசர்கள், மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் மற்றும் நீதிபதிகள், சட்டமா அதிபர்,  பொலிஸ் மா அதிபர், கணக்காய்வாளர் நாயகம்,  ஒம்புட்ஸ்மன்,  பாராளுமன்ற  செயலாளர் நாயகம் ஆகிய  நியமனங்கள், அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடனேயே ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்படும். 

ஜனாதிபதி தன்னிச்சையான முறையில் முடிவெடுப்பதை, அரசியலமைப்பு பேரவை என்ற இந்த ஏற்பாடு தடுத்துள்ளது. அதனாலேயே அரசியலமைப்பு  பேரவையும் அதில் சிறிய கட்சிகளின் பிரதிநிதியாகத் தமிழ் பிரதிநிதித்துவமும் முக்கியம் பெறுகின்றது.

எனவே, மைத்திரி-ரணில் நல்லாட்சியில், அதன் பின்னரான ரணிலின்  ஆட்சியில் நியமிக்கப்படமுடியாத, நியமிக்கப்பட  விடாத சிறிய கட்சிகளுக்கான தமிழ் பிரதிநிதித்துவம் அனுர அரசில் கிடைத்தமை சிறந்த மாற்றமாக இருந்தாலும், அதனைத் தடுக்க தமிழ்த் தேசியம் என்ற போர்வை போர்த்திய  வடக்கு, கிழக்கு  கறுப்பு ஆடுகளே சதி செய்தமை தமிழனுக்குத் தமிழனே எதிரி என்பதையே மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.  

12.17.2024


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X