Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூலை 19 , பி.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமென்ற சிறந்த கொள்கைப் பிடிப்பிலேயே அரசியலில் இறங்கியுள்ளேன். தன்னாட்சி, தன்னிறைவு, தற்சார்பு போன்ற மூன்று அடிப்படைக் கொள்கைகளுடன் பின்னிப் பிணைந்து அரசியல், பொருளாதார ரீதியாகத் தீர்வைப் பெறவேண்டுமென, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளரும் அரசியல்துறைப் பொறுப்பாளருமான ஆத்மலிங்கம் இரவீந்திரா (ரூபன்) தெரிவித்தார்.
தமிழ்மிரருக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே, மேற்கண்டவாறு கூறினார்.
அதில் அவர் மேலும் கூறியதாவது,
கேள்வி - உங்களைப் பற்றிய அறிமுகமும் அரசியல் பிரவேசம் தொடர்பான நிலைப்பாடும் என்ன?
எனது பெயர் ஆத்மலிங்கம் இரவீந்திரா. கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருக்கும்போது, ரூபன் என இயற்பெயர் சூட்டப்பட்டது. 1985ஆம் ஆண்டு முதல், 35 வருடங்களாகவே ரூபன் எனும் பெயர் இற்றை வரைக்கும் நிலைத்திருக்கிறது. 1990, 1995, 2001 மூன்று முக்கிய காலகட்டங்களில், திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராகக் கடமையாற்றியுள்ளேன்.
2020 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுமாறு, ஸ்ரீகாந் ஐயா ஊடாக முழு மனதளவிலான வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. இதனால், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளராகக் களமிறங்கியுள்ளேன்
கேள்வி - திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெறும் அத்துமீறிய குடியேற்றங்கள், சிறுபான்மை மக்களின் நில அபகரிப்பு தொடர்பில் உங்களது தீர்வுத் திட்டங்கள் ஏதாவது உண்டா?
திருகோணமலையில் தமிழ்ப் பிரதிநிதித்துவ இழப்புக்கு, இவ்வாறான சட்டவிரோதக் குடியேற்றங்கள், காணி அபகரிப்புகள் போன்றனவே முக்கிய காரணங்களாகும். திருகோணமலையில் மூவின மக்களும் வாழ்ந்து வருகின்ற நிலையில், அத்துமீறிய பெரும்பான்மையினக் குடியேற்றத்தினால், தமிழ், முஸ்லிம்களின் பாரம்பரிய பூர்வீக இடங்கள் இழக்கப்பட்டு வருகின்றன.
பெரும்பான்மை மக்களுக்காக அரசாங்கத்தின் ஆதரவுடன் காணி உரிமைப் பத்திரம் வழங்கப்பட்டாலும், சிறுபான்மை மக்கள் இதனைப் பெறுவதில் சிக்கல் உள்ளது. பெரும்பான்மை மக்களின் ஆதாரமற்ற அத்துமீறல் குடியேற்றங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. எமது மக்களின் இப்படியான பிரச்சினைகளுக்கு, நாடாளுமன்ற அதிகாரத்தின் பின் முதல் திட்டமாக, இதற்கான தீர்வைப் பெறவுள்ளேன்.
கேள்வி - திருகோணமலையில் உள்ள மூவின மக்களுக்கும் இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தால், அதனோடு இணைந்த அரசியல் நகர்வுகள் தொடர்பிலான திட்டங்கள் என்ன?
1990களில், அரசியல் துறைப் பொறுப்பாளராக செயற்பட்டுள்ளேன். அந்தக் காலங்களில், சண்டே டைம்ஸ் பத்திரிகை, எண்ணை நேர்கண்டது. “திருகோணமலையில் மூவினங்கள் வாழ்கின்ற நிலையில், உங்களது நடவடிக்கைகள் எவ்வாறாக இருக்கும்?” என்ற கேள்வி அதன்போது கேட்கப்பட்டது. “அரசியல் துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டது, தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல; தமிழ், சிங்களம், முஸ்லிம், பறங்கியர் என மூவினச் சமூகத்துக்குமே ஆகும். அதனால், இதனைப் பொறுப்பாக நின்று, இன, மத பேதமின்றியே பணியாற்றுவேன். அம்மக்களுக்கான சேவைகளைச் செய்ய தயார்படுத்திக் கொண்டுதான், இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்” என்று அன்று சொன்னேன். இன்றும் அதையே சொல்கிறேன்.
கேள்வி - கோணேஸ்வரர் கோவில் என்பது, கோகண்ண விகாரை என அண்மையில் மேதானந்த தேரரால் கூறப்பட்டு வந்தது இது தொடர்பில்?
இலங்கையில் ஏழாம் நூற்றாண்டுக்குப் பின்பே, சிங்களவர்கள் வந்துள்ளார்கள். அதற்கு முன்பே, இராவண திரூத்தலமான கோணேஸ்வரம் உருவாக்கப் பெற்றுள்ளது. இப்படி ஆதாரமற்ற முறையில் இழிவுபடுத்துவதோ இன ஒற்றுமைக்கான சீர்குழைவுகளை ஏற்படுத்த முயற்சிக்கவோ கூடாது. மதத்தை மதிக்க வேண்டும். இன ஒற்றுமையை ஏற்படுத்த அரசாங்கம் இவ்வாறான விடயங்களில் தெளிவுபடுத்த வேண்டும்.
கேள்வி - முன்னாள் போராளியாக இருந்து, புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை பெற்ற நீங்கள், அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கவுள்ள எதிர்காலத் திட்டங்கள் எவை?
நானும் அரசியல் கைதியாக 2 வருடங்கள் சிறை வாழ்க்கை அனுபவித்து, பல துன்பங்களைச் சுமந்து, நீதிமன்றம் ஊடாக விடுதலைப் பெற்று வெளியே வந்தவன். அரசியல் கைதிகளாக இருப்போர்களும், என்னுடைய சகோதரர்களே. அவர்களும் விடுதலைபெற, நூற்றுக்கு நூறு வீதம் பங்களிப்புகளை வழங்குவேன். அரசியல் கைதியாக இருக்கும்போதும் சிறைவாசத்தில் இருக்கும்போதும், பல உரிமைகளை இழந்து துன்பங்களை அனுபவித்துவிட்டு விடுதலை ஆனேன். பல விசாரணைகளுக்கு முகங்கொடுத்துச் சிறை வாழ்க்கையில் அனுபவங்கள் ஏற்பட்டது. அதனால், சக அரசியல் கைதிகளின் விடுதலைக்காகத் தொடர்ந்தும் என்னாலான முயற்சிகளை அவர்களுக்கு வழங்குவேன்.
கேள்வி - தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் தீர்வுத் திட்டத்தில் உங்களது பங்களிப்பு எப்படி அமையப் போகின்றது?
மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமென்ற சிறந்த கொள்கைப் பிடிப்பிலேயே அரசியலில் இறங்கியுள்ளேன். தன்னாட்சி, தன்னிறைவு, தற்சார்பு போன்ற மூன்று அடிப்படைக் கொள்கைகளுடன் பின்னிப் பிணைந்து அரசியல், பொருளாதார ரீதியாகத் தீர்வைப் பெறவேண்டும்.
இதனை மய்யமாக வைத்த கொள்கையின் அடிப்படையில், மக்களுக்கான சுபீட்சமிக்க பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்கவும் சுதந்திர தேசமாக வழிவகுக்கவும், திறம்படத் திட்டங்களை உருவாக்கியுள்ளோம்.
கே: வடக்கு, கிழக்கிலிருந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றுக்கான தீர்வுகள் யாவை?
2009இல் சிறையில் இருந்தபோதே, அரசியல் கைதிகளாக இருந்தவர்களுள், காணாமற்போனவர்கள் என்ற நிலைப்பாட்டிலும் அவர்களின் பெயர்களும் அந்தப் பட்டியலில் உள்ளதாக அறியமுடிகிறது. முள்ளிவாய்க்கால் தொடக்கம் வட்டுவான் வரை காணாமல் ஆக்கப்பட்டோர்கள் உள்ளார்கள். அந்தப் பகுதியில் இராணுவ முகாமுக்குள் நுழைந்தவர்களை எனது கண்களால் கண்டுகொண்டேன்.
அதிகளவாக வட்டுவான் ஓமந்த இடையே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உள்ளார்கள். இவர்களின் தீர்வுக்காக, இங்கு ஓரிரு வரிகளில் அதை, இதை செய்வேன் என்று சும்மா சொல்ல முடியாது. பொறுத்தமான இடம்வருகின்ற போதும் இதனைக் கூறலாம். அலட்சியப்படுத்த விரும்பவில்லை.
அரசியல் கைதிகள், காணாமற்போன உறவுகள் இருண்டும் எனது மனதுக்குள் ஆழமாகப் பதிந்துள்ளது.
2020 தொடக்கம் 2025க்குள் நாடாளுமன்ற அதிகாரம் கையில் கிடைக்கின்ற போது, அதிகளவாக முன்னுரிமைப்படுத்தி இந்த பிரச்சினைகள் தொடர்பில் தீர்வுகளை இதற்கான விடைகளை தேடலாம். 2009க்கு பிறகு காணாமற்போன உறவுகள் விடயம் ஆரம்பித்து ஐந்தாவது மாதம் முடிந்த நிலையில், 11 வருடங்கள் கடந்து 12ஆவது வருடத்தில் காலடி வைத்து தேடுதல் நடவடிக்கைகள் தொடர்கிறது. இதற்கான முடிவுகளுக்காக தொடர்ச்சியாகக் குரல் கொடுக்க என்றும் உறுதுணையாக உள்ளேன்.
கேள்வி - திருமலை நகர்ப்புற மக்களின் வாக்குகள் உங்களுக்கு ஆதரவாக அமையுமா?
மூதூரில் 80 சதவீதமான ஆதரவு இருக்கிறது. திருகோணமலை - பட்டிணமும் சூழலும் பிரதேசம் தொடக்கம் நகர்புறம் புல்மோட்டை வரை ஆதரவு இருந்து கொண்டே இருக்கிறது. சம்பூர், மூதூர் மக்கள் மட்டுமல்ல, தமிழ் மக்கள் மட்டுமல்ல, முஸ்லிம் மக்களும் இன்று என்னைத் தெரியாதவர்கள் யாரும் இல்லை. நிலாவெளி - ஏழாம் கட்டை, ஆறாம் கட்டை என முஸ்லிம்கள் கூட எங்களுடைய ரூபன் என்றே சொல்வார்கள். ஒரு போதும் பிரித்துப் பேசமாட்டார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
8 hours ago