Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 25, திங்கட்கிழமை
Johnsan Bastiampillai / 2022 டிசெம்பர் 21 , பி.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
ஒரு சமூகம் தன்னுடன் தொடர்புபட்ட விடயங்களை, ஒருமித்த நிலைப்பாட்டுடனும் காத்திரமாகவும் கையாளத் தவறுகின்ற போது, அவ்விடயங்களில் வெளித்தரப்பினரின் செல்வாக்கு மேலோங்குகின்றது. அதாவது, அவ்விவகாரம் எடுப்பார் கைப்பிள்ளையாக ஆகிவிடுகின்றது.
முஸ்லிம் சமூகம், தனது சமூக, அரசியல், மத விடயங்களில் இவ்வாறான சிக்கல் நிலையை தொடர்ச்சியாக எதிர்கொண்டு வருகின்றது. அப்படியான ஒன்றுதான் முஸ்லிம் தனியார் சட்டம் அல்லது விவாக, விவகாரத்துச் சட்ட மறுசீரமைப்பு விவகாரமாகும்.
தனியார் சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வரவேண்டும் என்பதில் முஸ்லிம் மக்கள் எல்லோருக்கும் உடன்பாடு காணப்படுகின்றது. இருப்பினும், என்ன விடயதானங்களில், எவ்வாறான திருத்தத்தை மேற்கொள்வது என்பதில்தான் கருத்து வேற்றுமைகள் நிலவி வருகின்றன.
முஸ்லிம்களைக் குறிவைத்த சர்வதேச நிகழ்ச்சி நிரல்கள், அமைப்புகள் மற்றும் கடும்போக்கு சக்திகளின் நகர்வுகள் என்பன இந்தத் தனியார் சட்டத் திருத்ததில் தாக்கம் செலுத்தி வருகின்றன. மிக இலகுவாகச் செய்து முடிக்க வேண்டிய காரியத்தை, பூதாகரமாக்கி படாதபாடுபடுத்தி உள்ளனர்.
இந்நிலையில், சட்டத்தரணி ஹலீம்தீன் தலைமையிலான குழுவால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை அடிப்படையாகக் கொண்டு, தனியார் சட்டத் திருத்தத்தை மேற்கொள்வதற்கான அங்கிகாரத்தை அமைச்சரவை வழங்கியிருக்கின்றது. எனவே, மிகக் கிட்டிய காலத்தில், முஸ்லிம் தனியார் சட்டம் திருத்தப்படலாம் என்ற அறிகுறி இப்போது தென்படத் தொடங்கியுள்ளது.
இலங்கையில் பொதுவான சட்டத்துக்குப் புறம்பாக, மூன்று பிரத்தியேக சட்டங்கள் உள்ளன. கண்டியச் சட்டம், தேசவழமைச் சட்டம், முஸ்லிம் தனியார் சட்டம் என்பவையாகும். இவற்றில் பரந்த அளவில் இன்றுவரை பயன்பாட்டில் உள்ள சட்டமாக, முஸ்லிம்களுக்கான பிரத்தியேக சட்டத்தை கூறலாம்.
பல்லின நாடொன்றில் வாழ்கின்ற ஓரின அல்லது மதக் குழுமத்துக்கு மட்டும், அதுவும் குறிப்பாக விவாக விவகாரங்களில் ஒரு தனிச் சட்ட நடைமுறை இருப்பது என்பது, முஸ்லிம்களுக்கு சர்வசாதாரணமாகத் தோன்றினாலும் ஏனைய சமூகங்களுக்கு குறிப்பாக கடும்போக்குச் சிங்களவர்களுக்கு, அது வேறுமாதிரியாகத்தான் தோன்றும். இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.
ஆகவே, இதை முற்றாக நீக்கி, பொதுவான சட்டத்தின் கீழ் முஸ்லிம்களை கொண்டுவர வேண்டும் என்று கடும்போக்காளர்கள் கூறி வருகின்றனர். ஆயினும், இச்சட்டம் களவாக இயற்றப்பட்டது இல்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இது அனைத்து சட்டபூர்வ தன்மைகளைக் கொண்டதாகும். எனவே, காலத்துக்கு ஏற்ற மாற்றங்களை மட்டும் கொண்டு வரவேண்டும் என்பதே முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடாகும்.
இந்தப் பின்னணியிலேயே, 2009ஆம் ஆண்டில் ஓய்வுநிலை நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையில், முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொட இதற்கென ஒரு குழுவை நியமித்தார். மிகச் சிறந்த ஆளுமையுள்ள சலீம் மர்சூப் தலைமையில் திருத்தங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக ஆராயப்பட்டன.
இக்குழுவில், சில திருத்தங்கள் தொடர்பில், சிலர் மாற்றுநிலைப்பாடுகளை எடுத்தனர். அத்துடன் சில வெளிச்சக்திகளும் இதற்குள் மூக்கை நுழைத்துக் கொண்டன. குறிப்பாக, உரிமைசார் அமைப்புகள் தமக்கு வேண்டியதை இதன்மூலம் செய்ய முற்பட்டன.
இந்தப் பின்னணியில், இக்குழுவால் கடைசி மட்டும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வரமுடியவில்லை. கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களின் பின்னர், சலீம் மர்சூப் தலைமையிலான இக்குழு இரண்டாகப் பிரிந்து, இருவேறு அறிக்கைகளை அரசாங்கத்திடம் சமர்ப்பித்தது.
அதாவது, தனியார் சட்டத் திருத்தத்தில் முஸ்லிம் சமூகத்துக்குள் ஒருமித்த நிலைப்பாடு இல்லை என்பதை, எழுத்தில் முன்வைத்த ஓர் ஆவணமாகவும் இதைக் கருதலாம். இதனால், இவ்விவகாரம் ஒரு முடிவுக்கு வரவில்லை.
ஆனால், காலத்துக்கு அவசியமான மற்றும் பல்லின நாட்டுக்கு பொருத்தமான திருத்தங்களை, இச்சட்டத்தில் மேற்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே, முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் உள்ளது. வெளித்தரப்புகள் இச்சட்டத்தை வேறு கண்கொண்டே பார்க்கின்றன என்பது தனிக்கதை.
இந்நிலையில், சில காலத்துக்கு முன்னர் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பில் மறுபரிசீலனை செய்து ஆலோசனைகளை முன்வைப்பதற்காக, சட்டத்தரணி ஹலீம்தீன் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவை நியமித்தார். இந்தக் குழு தனது இறுதி அறிக்கையை, சில நாள்களுக்கு முன்னர் சமர்ப்பித்துள்ளது.
முன்னதாக, பலதார திருமணத்தைத் தடை செய்தல்; பெண்ணின் திருமண வயதெல்லையை 18ஆக உயர்த்துதல் உள்ளிட்ட முன்மொழிவுகளுக்கு 2021 மார்ச்சில் அமைச்சரவை அனுமதி அளித்திருந்தமை நினைவு கொள்ளத்தக்கது.
இந்தப் பின்னணியில், இப்போது ஹலீம்தீன் குழு சமர்ப்பித்துள்ள மிகப் பிந்திய அறிக்கையில், நிபந்தனைகளுடன் பலதார திருமணத்தை அனுமதித்தல்; பெண்களின் திருமண வயதெல்லையை 18ஆக உயர்த்துதல்; பிள்ளை, மனைவி தாபரிப்பு கொடுப்பனவுகள் உள்ளிட்ட பல விடயதானங்களில் பொருத்தமான பல திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஏற்கெனவே, பல்வேறு காரணங்களால் காதி நீதிமன்ற முறைமையை முற்றாக நீக்குவதென்ற நிலைப்பாட்டுக்கு கிட்டத்தட்ட அரசாங்கம் வந்திருந்தது. அதற்குப் பதிலாக ‘பெமிலி கொன்சிலேட்டர்’ என்ற பெயரில் ‘குடும்ப ஆலோசனை சபை’யை உருவாக்கும் யோசனையும் அரசாங்கத்திடம் இருந்தது.
ஆயினும், புதிய சிபாரிசு அறிக்கையின் பிரகாரம், இதனை முற்றாக நீக்காமல், மறுசீரமைத்து பலப்படுத்துவதென இப்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. மிகமுக்கியமாக, இத்திருத்தம் தொடர்பான விடயங்களில், முஸ்லிம் எம்.பிக்கள் இப்போது பெரும்பாலும் ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளதாக அறிய முடிகின்றது.
ஆகவே, முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்த வேண்டும் என்ற முடிவுக்கு சமூகம் எப்போதோ வந்துவிட்டது என்றாலும், இதனை இன்றுவரை செய்ய முடியாமல் போனதற்கு கடும்போக்கு சக்திகளின் அழுத்தம், ஆட்சியாளர்களின் மனோநிலை, மனித உரிமை என்று சொல்லிக் கொண்டு திரியும் வெளிஅமைப்புகள், மதஉரிமை என்று விடாப்பிடியாக இருக்கும் தரப்பு ஆகியோரின் நடவடிக்கைகள் எல்லாம் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், முஸ்லிம் தரப்பில் ஏற்பட்ட ஒருமித்த நிலைப்பாடற்ற நிலை, இதனை எல்லாம் விட முக்கிய காரணியாகியுள்ளது.
தனியார் சட்ட விடயத்தில் மட்டுமன்றி, அரசியல், சமூக விவகாரங்களிலும் முஸ்லிம் தரப்புகள் ஆளுக்கொரு நிலைப்பாட்டை எடுப்பதே, பல்வேறு பின்னடைவுகளுக்கு வழிவகுத்துள்ளன என்பதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.
இலங்கை முஸ்லிம்கள் சில யதார்த்தங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, இது ஓர் அரபு நாடல்ல என்பதையும் அங்குள்ள வரப்பிரசாதங்கள், இங்கு எமக்கு தங்கத்தட்டில் வைத்து வழங்கப்படாது என்பதையும் விளங்கிக் கொள்ளவேண்டும்.
அதற்காக, இன, மத உரிமைகள் எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டு, அடையாளம் இழந்த ஒரு சமூகமாகவும் வாழக்கூடாது; தேவைப்படும் போது போராட வேண்டும். ஒரு பல்லின நாடு என்ற அடிப்படையில், எல்லா விடயங்களையும் யதார்த்த பூர்வமாக நோக்க வேண்டும். அளவுக்கதிகமான ‘மதம் பிடித்தல்’ ஆபத்தானது என்பதைப் புரிந்து கொள்வது அடிப்படையானது.
தனியார் சட்டத்தையும், சரிஆ விதிமுறைகளையும் நடைமுறையில் தக்க வைத்திருப்பது, கட்டாயமான விடயம். ஆனால், இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு அமைய ஒரு முன்மாதிரி சமூகமாக முஸ்லிம்கள் அனைவரும் வாழ்ந்து காட்ட வேண்டும். தவறான காரியங்களுக்காக இஸ்லாமும் அதன் வேதமும் தூக்கிப் பிடிக்கப்படுவதை தண்டனைக்குரிய குற்றமாக முஸ்லிம் சமூகம் நோக்க வேண்டும். இஸ்லாமிய சட்ட நடைமுறைகளின்பால் நின்று, சமூகத்தையும் அரசியலையும் திருத்த வேண்டும். அது பிற சமூக மக்களுக்கு முன்மாதிரியாக அமைவது நல்லது.
மிக முக்கியமாக, ‘ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்’ என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது. அந்த அடிப்படையில், சிவில் சமூகமும் அரசியல்வாதிகளும் ஒற்றுமையாகவும் ஒருமித்த நிலைப்பாட்டுடனும் செயற்பட வேண்டியுள்ளது.
மத அடையாளத்தை முன்னிறுத்தி அரசியல் செய்து விட்டு, பின்னர் இஸ்லாம் கூறுகின்ற போதனைகளை எல்லாம் கணக்கிலெடுக்காமல், மக்களை மறந்து செயற்படுகின்ற போக்கு தவிர்க்கப்பட வேண்டும். மக்களை ஏமாற்றுகின்ற அரசியல், சமூகவாதிகளுக்கு பாடம் புகட்டுவதற்கு முஸ்லிம் சமூகம் ஒருபோதும் பின்னிற்கக்கூடாது.
எனவே, முஸ்லிம் தனியார் சட்டத்தை வெளித்தரப்பினர் விரும்பியவாறு திருத்த முடியாது. அவர்களது நிகழ்ச்சி நிரலும் நோக்கமும் இதனூடாக நிறைவேற இடமளிக்க முடியாது.
மாறாக, பல்லின சமூகத்தினிடையே ஒரு தனித்துவ அடையாளமுள்ள தேசிய இனமான முஸ்லிம்கள் தமது மார்க்க சட்டங்களை மிதமாக கடைப்பிடிக்க வழிவகுக்கும் வகையிலேயே திருத்தங்கள் அமைய வேண்டும். இல்லாவிட்டால் பிரத்தியேக சட்டமொன்று அவசியமே இல்லையே.
ஆனால், இன்று முஸ்லிம்கள் முன்னுள்ள பணி, தனியார் சட்டத்தை திருத்துவது மட்டுமல்ல! அதையும் தாண்டி, அரசியல், சமூக, தேசிய விவகாரங்களில் ஒற்றுமைப்பட்ட ஒரு முன்மாதிரி சமூகமாக வாழ வேண்டியதும் அவசியமாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
24 Nov 2024
24 Nov 2024