Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 31, திங்கட்கிழமை
R.Tharaniya / 2025 பெப்ரவரி 26 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த புதன்கிழமை புதுக்கடை நீதிமன்றத் தொகுதியில், ஒரு நீதிமன்ற அறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சுடு சம்பவத்தில் ‘கனேமுல்லே சஞ்ஜீவ’ என்ற பாதாள உலக நபர் கொல்லப்பட்டமை அவ்வாறான முதலாவது சம்பவமல்ல.
கம்பஹ மாவட்டத்தில் வீரங்குல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் அவரது மாமனாரும் 1990இல் ஆரம்பத்தில் அத்தனகல்ல நீதிவான் நீதிமன்றத்தினுள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதேபோல், பிரபல வர்த்தகரும் பிற்காலத்தில் அரசியல்வாதியுமான திலங்க சுமத்திபாலவுக்கு எதிரான வழக்கொன்றின் பிரதான சாட்சியான தம்மிக்க அமரசிங்க என்னும் பாதாள உலக நபர் 2004இல் புதுக்கடை நீதிமன்றமொன்றில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அத்தனகல்ல நீதிமன்றத்தில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாவது கிளர்ச்சியின் போது, 12 இளைஞர்களையும் ஒரு யுவதியையும் கைது செய்து கம்பஹ மாவட்டத்தில் வவுலகெலே என்னும் இடத்தில் சித்திரவதை செய்து சுட்டுக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.
கடந்த புதன்கிழமையும் 2004இல் சம்பவத்தின் போதும் கொல்லப்பட்டவர்கள் பாதாள உலகத்தோடு சம்பந்தப்பட்டவர்களாவர். இரண்டு சம்பவங்களின் போதும் கொலைகாரர் சட்டத்தரணியைப் போல் உடை அணிந்தே நீதிமன்றத்தினுள் வந்திருந்தார். இரண்டு சம்பவங்களிலும் கொலைகாரர் இராணுவத்தில் கடமையாற்றி பின்னர் தலைமறைவானவர்கள் என்றே கூறப்பட்டது. இரண்டும் புதுக்கடை நீதிமன்றத் தொகுதியில் இடம்பெற்றன.
வழமை போல், தற்போதைய எதிர்க்கட்சிகளும் எதற்காவது அரசாங்கத்தைக் குறை கூறிக்கொண்டு இருக்கவே காரணங்களைத் தேடிக்கொண்டு இருக்கின்றன. குற்றச் செயல்கள் எப்போதும் ஒரே மாதிரியாக இடம்பெறுவதில்லை. அவை அடிக்கடி அலைகளாகத் தான் இடம்பெறுகின்றன. 1970களின் இறுதியிலிருந்து இச்சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
குற்றச் செயல்களை முற்றாகத் துடைத்தெறிந்த நாடுகள் உலகில் இல்லை. அதேபோல, தமது நாட்டில் கொலைகள் போன்ற குற்றச் செயல்கள் இடம்பெறாது என்ற நூறு வீத உத்தரவாதத்தை ஏந்தலொரு நாட்டுத் தலைவர்களாலும் வழங்க முடியாது.
2019 உயிர்த்த ஞாயிறுத் தினத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்ற போது, lone wolf attacks (தனி ஓநாய் தாக்குதல்கள்) உலகில் எந்தவொரு நாட்டிலும் எந்த நேரத்திலும் இடம்பெறலாம் என்று அப்போதைய இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க கூறினார். ஏனெனில், பாரிய படையணிகளைப் பாவித்து நடத்தும் தாக்குதல்களைப்போலன்றி, அவ்வாறான தாக்குதலொன்றுக்கு மன உறுதியுள்ள ஒரு நபரும் பாதுகாப்பு இயந்திரத்தில் சிறியதோர் ஓட்டையும் மட்டும் இருந்தாலே போதுமானதாகும்.
ஆயினும், கடந்த புதன்கிழமை இடம்பெற்ற சம்பவமானது சிறியதாகக் கருத முடியாத ஒன்றாகும். நீதிமன்றங்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்கப்பட்ட இடங்களாகவே கருதப்படுகின்றன. ஆயினும், ஒரு துப்பாக்கிதாரி அச்சமின்றி அத்தனை தடைகளையும் மீறிச் சென்று பெருந்திரளானோர் கூடியிருக்கும் ஒரு இடத்தில் எவ்வித தடையுமின்றி, மற்றொருவரைச் சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பிச் செல்ல முடியுமாக இருந்தால் அது பாரதூரமான நிலைமையாகும்.
ஆனால், அது பலர் கூறுவதைப் போல், தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூற முடியாது. அரசு என்ற அமைப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தால் மட்டுமே ஒரு நிலைமையைத் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது. புலிகளின் தாக்குதல்களும் மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சியின் போது, இடம்பெற்ற சம்பவங்களும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தன. ஆயினும், இரண்டு பாதாள உலக கும்பல்களுக்கிடையிலான போட்டாபோட்டியால் தேசியப் பாதுகாப்புக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் ஏற்படுவதில்லை.
இன்னும் பாதாள உலக குழுக்களுக்கும் சில அரசியல்வாதிகளுக்கும் இடையே உறவு இருப்பதால் அவ்வாறான தாக்குதல்கள் காலப்போக்கில் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையலாம். சிலவேளைகளில் அரச தலைவர்கள் கொல்லப்படுகிறார்கள். ஆயினும் தனிச் சம்பவங்களாக இடம்பெற்றால் அவை தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாவதில்லை.
1984 ஒக்டோபர் மாதம் ஐ.ஆர்.ஏ. அமைப்பு அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் மாரகரெட் தட்சரை குறிவைத்து பிரிட்டனில் கிரான்ட் ஹோட்டலில் குண்டு வைத்தது. குண்டு வெடித்தாலும் தட்சர் தப்பித்துக்கொண்டார். 1981இல் ஈரான் ஜனாதிபதி அலி ரஜாயியும் பிரதமர் ஜவாத் பஹோனாரும் மேலும் அறுவரும் குண்டுத் தாக்குதலால் கொல்லப்பட்டனர். 1984இல் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவரது மெய்ப் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மேலும், 1991இல் அவரது மகனும் முன்னாள் பிரதமருமான ராஜிவ் காந்தி புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். இவை மிகவும் பாரதூரமான சம்பவங்களாக இருந்த போதிலும், தனிச் சம்பவங்களான அவற்றை அந்தந்த நாட்டுத் தலைவர்கள் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதவில்லை.
அதேவேளை, ஒரு காலத்தில் பாதாள உலக கும்பல்களுக்குத் துணையாக இருந்தவர்கள் உள்ளிட்ட இலங்கையின் முன்னைய அரசாங்கங்களின் தலைவர்கள் புதன்கிழமை நீதிமன்றத்தில் இடம்பெற்ற சம்பவம் வரலாற்றில் முதன்முறையாக இடம்பெற்ற ஒன்றைப் போல கருதி, தமது அதிர்ச்சியைத் தெரிவித்திருப்பது மற்றவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வுருவதற்கு முன் இலங்கையில் பாதாள உலக நடவடிக்கைகள் இடம்பெறாததைப் போல் தான் அவர்கள் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
பாதாள உலகம் என்பது 1977இல் ஜே.ஆர்.ஜயவர்தன பதவிக்கு வந்தது முதல் உருவான பயங்கர கும்பல்களாகும். அதற்கு முன்னர் கொழும்பில் ‘சொப்பே ஐயா’ போன்ற சண்டியர்கள் இருந்த போதிலும், அவர்கள் குழுக்களாக இயங்கிய துப்பாக்கிதாரிகள் அல்லர். ஜே.ஆரின் காலத்துக்குப் பின்னர் பாதாள உலக குண்டர்கள் அரசியல்வாதிகளால் பணமும் ஏனைய வசதிகளையும் வழங்கி பராமரிக்கப்படலாயினர். சொத்தி உபாலி மற்றும் கோனவல சுனில் ஆகியோர் அக்காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற குண்டர்களாவர்.
அக்கால குண்டர்கள் தான் 1981இல் ஆசியாவிலேயே மிகவும் சிறந்த நூலகமொன்றான யாழ். நூலகத்தை எரித்தார்கள். அவர்களே 1983இல் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளின் போது பல இடங்களில் முன்னணியில் இருந்தனர். 1982இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு ஆகியவற்றின் போது குண்டர்கள் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று அதிகாரிகளை மிரட்டி வாக்குப் பத்திரங்கள் அடங்கிய புத்தகங்களைப் பறித்து தாம் விரும்பியவாறு வாக்குப் பெட்டிகளை நிரப்பினர்.
அதன் பின்னர் பதவிக்கு வந்த ஆட்சியாளர்களும் தமக்கென பாதாள உலக கும்பல்களை வைத்திருந்தனர். பிற்காலத்தில் அவர்கள் ஆயுதப் படை வீரர்களையும் முன்னாள் தமிழ் போராளிகளையும் அரசியல் கொலைகளுக்காக பாவித்தனர்.
சொத்தி உபாலி, கொனவல சுனில் ஆகியோர் ஜே.ஆரின் காலத்தில் பாதாள உலக குண்டர்கள், பெத்தகானே சஞ்ஜீவ சந்திரிகாவின் காலத்தில் பாதாள உலகை நடத்தியவர், அவர் ஜனாதிபதியின்
பாதுகாப்பு அணியிலும் இடம்பெற்றார். ஜூலம்பிட்டிய அமரே மஹிந்தவின் காலத்தில் அரச ஒத்துழைப்பைப் பெற்ற குண்டர். இரண்டு அரசியல் கொலைகளுக்கு குற்றவாளியாகிய அவருக்கு அண்மையில் மரண தண்டனை வழங்கப்பட்டது.
நடராஜா ரவிராஜ், தியாகராஜா மகேஸ்வரன் மற்றும் ஜோசப் பரராஜசிங்கம் ஆகிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அக்காலத்திலேயே மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.
போதைப் பொருள் வியாபாரி ஒருவரின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி ஒருவர் கலந்து கொண்டதாகவும் ஒரு காலத்தில் செய்திகள் வெளியாகின. பாலியல் குற்றமொன்றுக்காகச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கொனவல சுனிலுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டு பின்னர் சமாதான நீதிவான் பதவியும் வழங்கப்பட்டது. பெத்தகானே சஞ்ஜீவ அலரி மாளிகையை தமது தலைமையகமாகப் பயன்படுத்தினார். ஜே.ஆரின் காலத்தில் பியகம் மற்றும் மஹியங்கன போன்ற பிரதேசங்கள் எதிர்க்கட்சிகளுக்குத் தடைசெய்யப்பட்ட பிரதேசங்களாகவே கருதப்பட்டன.
மஹிந்தவின் காலத்தில் பிரதேச சபைத் தலைவர்கள் தாமாகவே குண்டர்களாக மாறினர். அக்குரஸ்ஸ பிரதேச சபைத் தலைவராக இருந்த ஒருவர் 100 பெண்களை பாலியல் வன்முறைக்குள்ளாக்கி அதனை தமது நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். மற்றொரு பிரதேச சபைத் தலைவரும் அவரது ஆதரவாளர்களும் பிரிட்டிஷ் பிரஜை ஒருவரைக் கொலை செய்து, அவரது காதலியைக் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கினர். ஆனால், அப்போது இளவரசராக இருந்த தற்போதைய பிரிட்டிஷ் மன்னர் சார்ள்ஸ் தலையிடும் வரை ஒரு வருட காலமாக அந்த பிரதேச சபைத் தலைவர் கைது செய்யப்படவில்லை. தண்டனையின்மை அப்போது நியதியாகியிருந்தது.
தோட்ட முகாமையாளர் ஒருவரை கொன்றமைக்காக தெரனியகல பிரதேச சபைத் தலைவராக இருந்த ‘அத்த கொட்டா’ என்றழைக்கப்பட்ட அணில் சம்பிக்க விஜேசிங்க உள்ளிட்ட 18 பெருக்கு 2019இல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. தற்போதைய எதிர்க்கட்சிகள் நாட்டை ஆட்சி புரிந்த கடந்த காலங்களில் இது போன்ற சம்பவங்களால் வரலாறு நிறைந்திருக்கிறது.
இப்போது பாதாள உலக கொலைகாரர்களுடன் சில பொலிஸ் மற்றும் இராணுவ வீரர்களும் இணைந்து செயற்படுவதாக அண்மையில் கூறப்பட்டது. இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரசியல் உறுதியுடன் கவனமாகத் திட்டமிட்டுக் கையாள வேண்டிய விடயமாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
5 hours ago