2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

’ஜெயிக்கப் போவது யார்?

Janu   / 2024 செப்டெம்பர் 18 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

முருகானந்தம் தவம்

நாட்டில் 9ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதி பதவிக்கான  தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் ''ஜெயிக்கப் போவது யார்'' என்பது தொடர்பில் இடையிடையே பல்வேறு கருத்துக் கணிப்புக்கள்  வெளிவந்து கொண்டிருந்தாலும் அவை கட்சி  அல்லது  ஜனாதிபதி வேட்பாளர் ஆதரவு சார்ந்த கருத்துக் கணிப்புகளாகவே உள்ளதை அவதானிக்க முடிகின்றது. சில   கருத்துக்கணிப்புகள்  ஜனாதிபதி வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு தொடர்பில் முன்னுக்கு பின் முரணான முடிவுகளைக் கொண்டதாகவே காணப்படுகின்றன .

அதுமட்டுமின்றி இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் அவர்களின் கட்சிகளும் ,ஆதரவுக்கட்சிகளும் பிரச்சார மேடைகளிலும் ஊடக மாநாடுகளிலும் தமது வேட்பாளரின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து மேற்கொண்டு வரும் பிரசாரங்களும் வெளியிட்டுவரும் தகவல்களும்  வெற்றி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன . எனவே நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் களம் தொடர்பிலும் வெற்றி வாய்ப்புகள் குறித்தும் சற்று  ஆராய்வோம்.

  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட 39 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்திய நிலையில் ஒருவர் மரணமடைந்து விட்டதனால் 38 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் தற்போதைய ஜனாதிபதியும் வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்க , எதிர்க்கட்சித் தலைவரும் வேட்பாளருமான சஜித் பிரேமதாச,தேசிய மக்கள் சக்தி ,ஜே .வி.பி.ஆகியவற்றின் தலைவரும் வேட்பாளருமான அநுரகுமார திசாநாயக்க,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் பொதுஜன பெரமுன வேட்பாளருமான நாமல் ராஜபக்ச ஆகியோரிடையிலேயே பிரதான  போட்டி இடம்பெறும் நிலையில்  தமிழ் பொது வேட்பாளரான அரியநேத்திரனும் இவர்களின் வெற்றி வாய்ப்பில் தாக்கம் செலுத்த கூடியதொரு வேட்பாளராகவே உள்ளார்.

இந்த 38 வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க இம்முறை 25 தேர்தல் மாவட்டங்களில் இருந்து  1 கோடியே 71 லட்சத்து 40,354 பேர் தகுதி பெற்றுள்ளனர்.இவர்களின் வாக்குகளை தமதாக்கிக் கொள்ளவே  தற்போது பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் பெரும் பிரயத்தனங்களில் ஈடுபட்டும் மக்களைக் கவரும் வாக்குறுதிகளை வழங்கியும் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் மக்களுக்கான உத்தரவாதங்களை வழங்கியும் கிராமம், கிராமமாக மக்களின் காலடிக்கு சென்று வாக்கு வேட்டை நடத்தி வருகின்றனர்.

 இவ்வாறான நிலையில் தான் இவர்களில் ரணில் விக்கிரமசிங்க தான் மீண்டும் ஜனாதிபதியாவார், இல்லை சஜித் பிரேமதாச தான் ஜனாதிபதியாவார் .இல்லை ,இல்லை இந்த முறை ஜே .வி.பி. அலை அடிப்பதனால் அநுரகுமார திஸாநாயக்க தான் ஜனாதிபதி ,யார் எதைக் கூறினாலும் ராஜபக்சகளுக்கென ஒரு வாக்கு வங்கி உள்ளது.அவர்கள் தமதுவெற்றிக்காக எதனையும் செய்யத்துணிந்தவர்கள் எனவே நாமல்ராஜபக்சதான் அடுத்த ஜனாதிபதி என்றவாறாக பல்வேறுபட்ட கருத்துக்கள் மக்கள் மத்தியில் உள்ளன. ஆனால் உண்மை நிலவரம் என்ன ?

இந்த ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச,அநுரகுமார திசாநாயக்க,நாமல் ராஜபக்ச ஆகிய 4 வேட்பாளர்களில் 4வது வேட்பாளரான நாமல் ராஜபக்ச போட்டியில் இல்லை என்பதே உண்மை.அதேநேரம் ஏனைய 3 வேட்பாளர்களில் ரணில் விக்கிரமசிங்கவுக்கும்  சஜித் பிரேமதாசவுக்கும் இடையில்தான்  கடுமையான போட்டி உள்ளது. இவர்களில் ஒருவரே அடுத்த ஜனாதிபதியாக வெற்றி பெறும் கள சூழலே உள்ளது. அநுரகுமார திசநாயக்கவுக்கு தென்பகுதியில் அலை அடித்தாலும் வேட்பாளர்களின் வெற்றியை தீர்மானிக்கும் வாக்காளர்களான  தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் வாக்குகளை  அநுரகுமார திசாநாயக்க பெறுவதென்பது குதிரைக் கொம்பாக உள்ளது  .இதற்கு கடந்த சில ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளில்   மீள் பார்வை செலுத்த வேண்டியது அவசியம் .

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் கோட்டாபய ராஜபக்ஷ,சஜித் பிரேமதாச ,அநுரகுமார திசாநாயக்க ஆகிய 3 வேட்பாளர்களே பிரதான போட்டியாளர்களாக இருந்தனர். 1 கோடியே 59 லட்சத்து 92096 வாக்காளர்களில் 1 கோடியே 33 லட்சத்து 87951 பேர்   வாக்களித்த அந்த தேர்தல் முடிவுகளின்படி  கோட்டாபய ராஜபக்ஷ 69 லட்சத்து 24255 வாக்குகளைப்பெற்று ஜனாதிபதியாக தெரிவானார் .சஜித் பிரேமதாச 55 லட்சத்து 64239 வாக்குகளையும் அநுர குமார திசாநாயக்க 4 லட்சத்து 18553 வாக்களையுமே பெற்றிருந்தனர்.

தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் 1 கோடியே 71 லட்சத்து 40354 பேர் வாக்களிக்க உள்ள  நிலையில் ஒரு வேட்பாளர் ஜனாதிபதியாக வெற்றி பெற வேண்டுமானால்   50 வீதத்துக்கும் அதிகமான  வாக்குகளைப் பெற வேண்டும். அதாவது 1 கோடியே 71 லட்சத்து 40354  வாக்காளர்களில் 1 கோடியே 50 லட்சம் வாக்காளர்கள்  வாக்களிப்பார்களேயானால்   அதில் 75 லட்சம் வாக்குகளையாவது பெற வேண்டும். ஆனால் இந்த முறை எந்த வேட்பாளரும் இவ்வளவு தொகை வாக்குகளை பெற முடியாத நிலை இருப்பதனாலேயே விருப்பு வாக்குகளை  பெறுவது தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்கள் தீவிர கவனம் செலுத்துகின்றனர்.

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ 48 லட்சத்து 87152 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற நிலையில்  அவரை எதிர்த்து   போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 47 லட்சத்து 6366 வாக்குகளைப்பெற்று  1 லட்சத்து 86786 வாக்குகளினால் தோல்வியடைந்தார். அந்த தேர்தலை விடுதலைப்புலிகளின் வேண்டுகோளை ஏற்று வடக்கு,கிழக்கு மாகாண தமிழ் மக்கள் புறக்கணித்திருந்தமையே வடக்கு,கிழக்கில் பெரும் வாக்கு வங்கியை வைத்திருந்த ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைய முக்கிய காரணமானது. அவ்வாறிருந்தும் ரணில் விக்கிரமசிங்க வடக்கில் 92344 வாக்குகளையும் மூவினங்களும் வாழும் கிழக்கில் 5 லட்சத்து 88438 வாக்குகளையும் பெற்றிருந்தார்.

2010 மற்றும் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் ரணில் விக்கிரமசிங்கவோ சஜித் பிரேமதாசவோ அநுர குமாரவோ போட்டியிடாத நிலையில் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை  எதிர்த்து சஜித் பிரேமதாசவும் அநுரகுமாரவும் போட்டியிட்டனர் .இதில் கோத்தபாய ராஜபக்ச 69 லட்சத்து 24255 வாக்குகளைப்பெற்று ஜனாதிபதியானார் .சஜித் பிரேமதாச 55 லட்சத்து 64239 வாக்குகளையும் அநுர குமார திசாநாயக்க 4 லட்சத்து 18553 வாக்களையுமே பெற்றிருந்தனர். இதில் சஜித் பிரேமதாச வடக்கில் 4 லட்சத்து 87461 வாக்குகளைப் பெற்ற நிலையில் அநுரகுமார 2531 வாக்குகளையும் கிழக்கில் சஜித் பிரேமதாச 6 லட்சத்து 65163 வாக்குகளைப் பெற்ற நிலையில் அநுரகுமார  13494 வாக்குளை மட்டுமே பெற்றிருந்தார்.

ஆக 2019 ஆம் ஆண்டு  ஜனாதிபதித்  தேர்தலில் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் 15 லட்சத்து 31892 வாக்காளர்கள் வாக்களித்த நிலையில் சஜித் பிரேமதாச 11 லட்சத்து 52624 வாக்குகளைப் பெற்ற நிலையில் அநுரகுமார 16025 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். 2005 ஆம் ஆண்டு மற்றும் 2019 ஆம் ஆண்டு  ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை கவனித்தால் வடக்கு,கிழக்கில் ரணில், சஜித் ஆதரவு நிலையே உள்ளது. இவ்வாறான நிலையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வடக்கில் 8 லட்சத்து 99268 வாக்காளர்களும் ,கிழக்கில் 13 லட்சத்து 21043 வாக்காளர்களுமாக 22 லட்சத்து 20311 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.இந்த வாக்குகளில் அதிக மானவற்றை ரணில்,சஜித் ஆகியோர் பங்கிட உள்ள நிலையில் தமிழ் பொது வேட்பாளருக்கும் கணிசமானளவு ஆதரவு உள்ளதால் வடக்கு,கிழக்கில் அநுரகுமாரவின் நிலை கவலைக்கிடமாகவே உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .