Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மார்ச் 06, வியாழக்கிழமை
Johnsan Bastiampillai / 2021 ஒக்டோபர் 21 , பி.ப. 02:52 - 0 - 141
எம்.எஸ்.எம். ஐயூப்
அரசியல்வாதிகள் குறைந்தபட்சம் தம்மைப் பதவியில் அமர்த்தும் மக்களையாவது ஏமாற்றக் கூடாது. ஆனால், அவர்கள் ஏமாற்றுகிறார்கள்.
மக்களில் பெரும்பாலானவர்கள் அரசியல், பொருளியல் போன்ற விடயங்களைப் படிக்காதவர்கள். படித்தவர்களும்கூட, அரசியல்வாதிகள் எதைக் கூறினாலும் சுயநலத்துக்காக ‘ஆமாம் சாமி’ போடுகிறார்கள்; அல்லது, எதையும் எதிர்க்கிறார்கள். எனவே, அரசியல்வாதிகள் இலகுவில் மக்களை ஏமாற்றலாம்.
ஆனால், இலங்கையில் அரசியல்வாதிகள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்களையும், படிக்காதவர்களாகவோ அல்லது, ‘ ஆமாம் சாமி’ போடுபவர்களாகவோதான் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் போலும்!
இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயம் தொடர்பாக, புலம்பெயர்ந்த தமிழர்களோடு பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக, வெளிநாட்டில் கூறிய அரசாங்கம், இப்போது “அது முடியாது” என்று கூறுவதன் மூலம், சர்வதேச அமைப்புகளின் தலைவர்களையும், படிக்காதவர்களாகவும் ‘ ஆமாம் சாமி’ போடுபவர்களாகவும்தான் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கடந்த மாதம் 19ஆம் திகதி, ஐ.நா செயலாளர் நாயகம் அண்டோனியோ குட்டரெஸ்ஸையும் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது, “நாட்டின் உள்விவகாரங்கள், உள்நாட்டுப் பொறிமுறையொன்றின் மூலமே தீர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய, இந்த விடயம் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்காக, புலம்பெயந்துள்ள தமிழர்களை அழைப்பதாகத் தெரிவித்தார்.
ஆனால், இப்போது, “புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்புகள், இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளதால், அவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்துவது சட்டவிரோதமாகும். அதனால், அவற்றுடன் பேச்சுவாரத்தை நடத்தப் போவதில்லை” என்று, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், ‘டெய்லி மிரர்’ பத்திரிகைப் பேட்டியொன்றில் தெரிவித்திருக்கின்றார். இப்பேட்டி, அப்பத்திரிகையில் சனிக்கிழமை (16) பிரசுரிக்கப்பட்டு இருந்தது.
இது போன்ற முரண்பாடுகளை, மக்கள் அறிந்தவுடன், தமது முன்னைய செய்தியை மறுத்து, தமது கருத்தை ஊடகங்கள் திரித்துக் கூறியிருப்பதாகக் கூறுவது, அரசியல்வாதிகளின் வழமையாகும். ஆனால், ஜனாதிபதி அவ்வாறு கூறவில்லை; கூறவும் முடியாது.
ஏனெனில், ஐ.நா செயலாளர் நாயகத்துடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் தொடர்பான செய்தி, ஜனாதிபதி செயலகத்தால் தான் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டது. இந்தக் கருத்தை, ஐ.நா செயலாளர் நாயகத்திடம் கூறுவதற்கு முன்னர், ஜனாதிபதி, இதைப் பற்றி தமது வெளிவிவகார அமைச்சரோடாவது கலந்துரையாடவில்லை? மறுபுறம், வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதியின் ஆலோசனையின்றி அதை மறுத்திருப்பாரா?
உண்மையிலேயே, புலம்பெயர் தமிழர்களுடன் பேச வேண்டும் என்று எவரும் கேட்கவில்லை. அவ்வாறு இருக்க, வலிந்து சென்று அவ்வாறானதொரு வாக்குறுதியை அளித்துவிட்டு, அதைப் பின்னர், முடியாது என்று கூறி, வலிந்து தமது நம்பகத்தன்மையை இழகும் நிலைமை தேவையா?
தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த, சட்டத்தில் இடமில்லை என வெளிவிவகார அமைச்சர் கூறுகிறார். அவ்வாறாயின், அதையாவது தெரியாமலா ஜனாதிபதி மேற்படி கருத்தை, ஐ.நா செயலாளர் நாயகத்திடம் தெரிவித்தார்?
ஐ.நா. செயலாளர் நாயகத்துடன் ஜனாதிபதி கலந்துரையாடல் நடத்திய உடனேயே, அரசாங்கம் அக்கருத்தை மாற்றிக் கொண்டு இருக்கிறது போலும்! எனவே தான், ஜனாதிபதி அக்கருத்தை மூன்று நாள்களுக்குப் பின்னர், அதாவது செப்டெம்பர் 22ஆம் திகதி, ஐ.நா பொதுச்சபையில் நிகழ்த்திய தமது உரையில் தெரிவிக்கவில்லை.
2001ஆம் ஆண்டுக்கு முன்னர், ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கத்தில், அரசியலமைப்புத்துறை அமைச்சராக ஜீ.எல். பீரிஸ் இருந்தார். அக்காலத்தில், தமது அரசாங்கம், புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என, சந்திரிகா தெரிவித்து இருந்தார். அப்போது, புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்டு இருந்தது.
இதைப் பற்றி ஊடகவியலாளர்கள் பீரிஸிடம் கேட்ட போது, “பேச்சுவார்தை நடத்த புலிகளும் விரும்பினால், தடையை நீக்கிவிட்டுப் பேச்சுவார்த்தை நடத்தலாம்” என்று அவர் பதிலளித்தார்.
அவ்வாறாயின், இப்போது மட்டும் புலம்பெயர்ந்த தமிழர் அமைகள் மீதான தடை, எவ்வாறு பேச்சுவார்த்தைக்குத் தடையாகும்? தடையை நீக்கிவிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டியது தானே?
கடந்த பல வருடங்களாக, அரச தலைவர்கள் வெளிப்படையாகவே இவ்வாறு சர்வதேச சமூகத்தையும் உலகத் தலைவர்களையும் ஏமாற்றலாம் என்ற எண்ணத்தில் செயற்பட்டு வருகிறார்கள். உதாரணமாக,புலிகளுடனான போர் முடிவடைந்தவுடன் அதாவது, 2009 ஆம் ஆண்டு மே மாதம் ‘பொறுப்புக் கூறல்’ என்ற விடயத்தில், அப்போதைய ஐ.நா செயலாளர் நாயகம் பான் கி-மூனுடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக் கொண்டார். ஆனால், அந்த உடன்பாட்டின்படி பொறுப்புக்கூறும் விடயத்தில், அவர் எதையும் செய்யவில்லை. இது, உலகை ஏமாற்றும் செயல் என்று அவர் கருதவில்லை.
எனவே, 2010ஆம் ஆண்டு, இலங்கையின் மனித உரிமைகள் விடயத்தில், தமக்கு ஆலோசனை வழங்க நிபுணர்கள் குழுவொன்றை, ஐ.நா செயலாளர் நாயகம் நியமித்தார். அதனை நியமிக்க அவர் நடவடிக்கை எடுக்கும் போதே, கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை மஹிந்த நியமித்தார்.
2011ஆம் ஆண்டு, அந்த ஆணைக்குழுவின் அறிக்கை வெளியாகியது. அந்தப் பரிந்துரைகளை நிறைவேற்றுவதை, மஹிந்த புறக்கணித்தே வந்தார். அப்போதும், தாம் உலகை ஏமாற்றுகிறோம் என, அவர் நினைத்ததாகத் தெரியவில்லை.
அதன் காரணமாகவே, 2012ஆம் ஆண்டு முதல், ஐ.நா மனித உரிமைகள் பேரவை, வருடாந்தம் இலங்கை தொடர்பாக பிரேரணைகளை நிறைவேற்றுகிறது. அந்தப் பிரேரணைகளிலும், இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இராஜதந்திர விடயங்களில், ஒரு நாட்டின் நம்பகத்தன்மையானது பெரிதும் முக்கியமானதாகும். வல்லரசுகள் நம்பகத்தன்மையோடு நடந்து கொள்ளாமை வேறு விடயம். ஆனால், இலங்கை போன்ற சிறிய நாடுகள், சர்வதேசங்களுடன் உறவுகளைப் பேணும் போது, நாம் நம்பகத்தன்மையோடு நடந்து கொள்ளாவிட்டால், அது எம்மைப் பாதிக்கலாம். இதைத் தற்போதைய தலைவர்கள் மட்டுமல்லாது, கடந்த அரசாங்கத்தின் தலைவர்களும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.
2015ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்குச் சென்ற, கடந்த அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பொறுப்புக் கூறல் விடயத்துக்காக இலங்கை மற்றும் பொதுநலவாய அமைப்பு நாடுகளின் நீதிபதிகளைக் கொண்ட பொறிமுறையை அமைக்க உடன்பட்டார்.
அதன் பின்னர், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சர்வதேச ரீதியில் பெரிதும் பாராட்டப்பட்டார். ஆனால், மூன்று மாதங்களக்குப் பின்னர், பி.பி.சி பேட்டியொன்றில், “வெளிநாட்டு நிதிபதிகளுக்கு இடமளிப்பதில்லை” என்றார். சில மாதங்களுக்குப் பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அதேபோல் மாறிவிட்டார்.
காணாமல் போனவர்கள் தொடர்பாக, நடவடிக்கை எடுப்பதற்காக ஓர் அலுவலகத்தை நிறுவுவதாக, முன்னைய அரசாங்கத்தின் தலைவர்கள் 2015 ஆண்டு மனித உரிமைகள் பேரவைக்கு வாக்குறுதி அளித்தனர். எனினும், 2018ஆம் ஆண்டே அதனை நிறுவினர். அவர்கள் இதயசுத்தியுடன் அந்த வாக்குறுதியை அளிக்கவில்லை என்பதையே இந்தத் தாமதம் காட்டுகிறது.
கோட்டாபய ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் முதலாவது கூட்டம், கடந்த வருடம் பெப்ரவரி- மார்ச் மாதங்களில் நடைபெற்றது. அப்போது, பொறுப்புக் கூறல் தொடர்பாக இது வரை நியமிக்கப்பட்ட குழுக்கள், ஆணைக்குழுக்கள் ஆகியவற்றின் பரிந்துரைகளை ஆராய்ந்து, அவற்றில் நிறைவேற்றக்கூடிய பரிந்துரைகளைக் கண்டெடுத்து, பரிந்துரை செய்வதற்காக ஆணைக்குழு ஒன்றை நியமிப்பதாக, அப்போதைய வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்தார்.
கடந்த வருடம் முடிவடையும் வரை, அந்த ஆணைக்குழு நியமிக்கப்படவில்லை. இந்த வருடம், மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் நெருங்கிய போதே, அதாவது ஜனவரி 22 ஆம் திகதியே, அந்தக் குழு நியமிக்கப்பட்டது. அந்தக் குழுவைப் பற்றிய வாக்குறுதியை அளித்து, ஒன்றரை வருடங்களாகியும் அக்குழு இனிமேல் தான் தமது பரிந்துரைகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப் போகிறது.
மனித உரிமைகள் பேரவையும் அந்தக்குழுவின் பரிந்துரைகளை எதிர்ப்பார்த்து இருக்கிறது என்பது, மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகர், இம்முறை மனித உரிமைகள் பேரவையில் ஆற்றிய உரை மூலம் தெரிகிறது. இலங்கைத் தலைவர்கள், போர் முடிவடைந்து 12 வருடங்களாக எதையும் செய்யாது, அப்படியும் இப்படியும் தள்ளிவிட்டார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
7 hours ago
7 hours ago