2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

ஜெனீவா அரங்கில் இலங்கையை தக்கவைத்தல்

Johnsan Bastiampillai   / 2022 செப்டெம்பர் 15 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

புருஜோத்தமன் தங்கமயில்

 

 

 

இந்த ஆண்டின் இறுதி ஜெனீவா அரங்காற்றுகை, தற்போது நிகழ்த்தப்படுகின்றது. வழக்கத்துக்கு மாறாக, தென் இலங்கையில் இருந்தும் பிரதான எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட சிங்கள பெரும்பான்மை எண்ணங்களை பிரதிபலித்து வருகின்ற தரப்புகள் சிலவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரை நாடிச் சென்றிருக்கின்றன. 

ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான தென் இலங்கையின் கிளர்ச்சிப் போராட்டங்களுக்குப் பின்னரான நாள்களில் இடம்பெற்றுவரும் சட்டத்துக்குப் புறம்பான கைதுகள், கடத்தல்கள் பற்றி முறையிடுவதற்காக, சிங்களத் தரப்புகள் ஜெனீவாவில் நடமாடி வருகின்றன. 

 இலங்கையில் இடம்பெற்று வரும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், மனித உரிமைகள் மீறல்கள்  தொடர்பாக, தமிழ் மக்களின் பிரதிநிதிகளே தொடர்ந்தும் ஜெனீவாவில் முறையிட்டு வந்திருக்கிறார்கள். 

அதுவும், முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னரான நாள்களில் தமிழ் மக்களுக்கு எதிரான நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கான நீதியை, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும் என்று, தமிழ்த் தரப்புகள் ‘தலையால் நடந்து’ கேட்டு வருகின்றன. ஆனால், அதற்கான உறுதி மொழியை தென் இலங்கையின் எந்தவோர் அரசாங்கமும் எந்தத் தருணத்திலும் வழங்குவதற்குத் தயாராக இருந்ததில்லை. 

2015இல் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம், ஜெனீவாவோடு இணைந்து வேலை செய்வதற்கான சாதகமான சமிக்ஞை காட்டுவதாகக் கூறி, கால நீடிப்பு என்னும் ஏமாற்று நாடகத்தை அரங்கேற்றுவதற்கான வேலைகளையே பார்த்து வந்தது. மற்றப்படி, பொறுப்புக் கூறலுக்கான எந்தவொரு தன்மையையும் எந்த அரசாங்கமும் வெளிப்படுத்தவில்லை. 

நல்லாட்சி அரசாங்கத்துக்கு முன்னும் பின்னும், தென் இலங்கையின் பெரும் இனவாதத் தரப்பான ராஜபக்‌ஷர்களே ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். இலங்கையின் குற்றங்களில் அதிகமானவை, ராஜபக்‌ஷர்கள் ஆட்சியில் இருக்கும் போது நிகழ்த்தப்பட்டவை. பொறுப்புக் கூற வேண்டியவர்களில் பிரதானமானவர்கள் அவர்களே! அதனால், ஜெனீவாவில் நிகழும் எதையும், ராஜபக்‌ஷர்கள் நிராகரித்தே வந்திருக்கிறார்கள். 

தற்போது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்தாலும், ஆட்சி ராஜபக்‌ஷர்களாலேயே நடத்தப்படுகின்றது. அப்படியான நிலையில், ஜெனீவாவை நிராகரிப்பது என்பது, தவிர்க்க முடியாதது. அதையே, இம்முறையும் அலி சப்ரியை வைத்து அரசாங்கம் செய்திருக்கின்றது. 

 நீதியை உறுதிப்படுத்துவதற்கான பொறுப்புக்கூறலுக்கான கடப்பாடு, இலங்கையால் தொடர்ந்தும் தட்டிக் கழிக்கப்பட்டு வருவதாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அண்மைய அறிக்கையிலும் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கின்றது. 

இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதியை வழங்குவதற்கான கடப்பாட்டைத் தட்டிக்கழிக்கின்ற அனைத்துச் சந்தர்ப்பங்களும், நாட்டையும் மக்களினது வாழ்க்கையையும் படுமோசமான வழிகளை நோக்கி நகர்த்தும் என்பதற்கான உதாரணமாக, இலங்கை தொடர்ந்தும் இருந்து வருகின்றது. அதன் விளைவே, நாடு இன்று சந்தித்து நிற்கின்ற பொருளாதார பின்னடைவு என்பது, சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் குற்றச்சாட்டாகும். 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையிலும், பொறுப்புக் கூறலுக்கான கடப்பாட்டை, இலங்கை தட்டிக்கழித்து வருவதால்த்தான் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கின்றது. அதனால், பொறுப்புக் கூறலுக்கான கடப்பாட்டை உறுதிப்படுத்துமாறு, ஆணையாளரின் அறிக்கை வலியுறுத்தி இருக்கின்றது. 

ஆனால், ரணில் - ராஜபக்‌ஷர்களின் பிரதிநிதியாகச் சென்றிருக்கின்ற அலி சப்ரி, ஆணையாளரின் அறிக்கையை முற்றாக நிராகரித்துள்ளதுடன், இலங்கையின் இறைமை பற்றி வகுப்பும் எடுத்திருக்கின்றார். 

 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில், இலங்கை தொடர்பிலான விவாதம் திங்கட்கிழமை (12) இடம்பெற்றது. இதன்போது, மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் இந்தியா தவிர்ந்த அனைத்து ஆசிய நாடுகளும் ஆபிரிக்க நாடுகளும், இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டையே முழுமையாக வெளிப்படுத்தின. 

குறிப்பாக, இலங்கையின் இறைமைகளில் தலையீடுகளை எந்தவோர் அமைப்பும் செய்யக் கூடாது என்றன. அத்தோடு, கடந்த சில ஆண்டுகளாக, இலங்கை முன்னேற்றப் பாதையில் பயணிப்பதாக வாதிட்டன. 

இந்தியா, இலங்கையை தூரிகையால் அடித்துத் தண்டித்திருக்கின்றது. அதாவது, மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற விடயத்தை, பிரதானமாகக் கூறியிருக்கின்றது. அதனோடு சேர்ந்து, அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று மேம்போக்காகச் சொல்லியிருக்கின்றது. 

 இலங்கை தொடர்பில், அமெரிக்காவும் மேற்கு நாடுகளுமே கடந்த காலங்களில் வெளிப்படுத்திய நிலைப்பாட்டை இம்முறையும் பிரதிபலித்தன. அத்தோடு இம்முறை, இலங்கையில் இடம்பெறும் ஊழல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் வாதிட்டன. 

ஆனால், வழக்கமாக இலங்கை தொடர்பிலான தீர்மானங்களை மேற்கு நாடுகளே முன்வைத்து, ஆதரவு நாடுகளைத் திரட்டி வந்திருக்கின்றன. ஆனால், இம்முறை நடைபெற்ற இலங்கை தொடர்பிலான அமர்வில், இலங்கை மீதான புதிய தீர்மானமொன்றை மேற்கு நாடுகள் கொண்டு வந்தாலும், அதற்கான ஆதரவைப் பெற்றுக் கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுகின்றது. 

ஏனெனில், கடந்த காலங்களில் இலங்கைக்கு  எதிராக வாக்களித்த பல நாடுகளும், இம்முறை இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருப்பதைக் காண முடிகின்றது. குறிப்பாக, சீனாவின் கடன் பொறிக் கட்டுப்பாட்டில் இருக்கின்ற பல ஆபிரிக்க நாடுகளும், ஆசிய நாடுகளும் இலங்கைக்கான ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருக்கின்றன. 

 இலங்கை தொடர்பிலான புதிய தீர்மானத்தை வரையும் பணிகளை, மேற்கு நாடுகளும் மனித உரிமைகள் அமைப்புகளும் ஆரம்பித்துவிட்டன. 

இந்தப் பத்தி எழுதப்படும் வரையில், புதிய தீர்மானத்தின் வரைபு என்பது, கடந்த காலங்களில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஒத்ததாகவே இருக்கும் என்றும், புதிதாக ஊழல்களுக்கு எதிரான விசாரணை அல்லது பொறுப்புக்கூறல் என்கிற விடயம் அமெரிக்காவின் ஆலோசனையுடன் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகின்றது.

 இம்முறை ஜெனீவாவை நோக்கி ஓடிய தென் இலங்கையின் பெரும்பான்மை அரசியல் சக்திகள், தற்போதையை அரசாங்கத்துக்கு எதிராக முறைப்பாடுகளைச் செய்யவே சென்றன. அதனால், அந்தத் தரப்புகளால் பெரியளவில் இலங்கையை பொறுப்புக்கூறப் பணிக்கும் கட்டங்களை செய்ய முடியாது. அதனை அந்தத் தரப்புகள் விரும்பவும் இல்லை. 

மாறாக, எதிர்கால தேர்தல்களுக்கான வாக்கு அரசியலை பலப்படுத்தவே அவை சென்றிருக்கின்றன. அந்தச் சக்திகள், ஒப்புக்காக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தமது அணிக்குள் இணைத்துக் கொண்டு சென்றிருக்கின்றன. 

மாறாக, அந்தச் சக்திகள், தமிழ், முஸ்லிம் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் குற்றங்கள் தொடர்பில், எந்தவித முறைப்பாடுகளையும் செய்யவில்லை. அவை, தென் இலங்கையின் இனவாத அரசியலின் ஆணிவேரை அறுக்கின்ற எந்த முயற்சிகளுக்கும் தயாராக இல்லை. 

ஏனெனில், அந்தத் தரப்புகளின் அரசியல் இருப்பும், இனவாத அரசியலிலேயே தங்கியிருக்கின்றது. அப்படியான நிலையில், பொறுப்புக்கூறல் கடப்பாடுகளை வலியுறுத்தும் அவசியம் பாதிக்கப்பட்ட தரப்பாக, தமிழ் மக்களைச் சார்ந்ததாக இருக்கின்றது. 

 தமிழ் மக்களின் பிரதிநிதிகள், ஜெனீவாவை நோக்கி ஓடிய அனைத்துச் சந்தர்ப்பங்களிலும், தென் இலங்கை இனவாத சக்திகளும் அதன் இணக்க சக்திகளும், ‘பிரிவினைவாதிகள்’ என்ற கோசத்தையே முன்வைத்திருக்கின்றன. 

ஆனால், தமிழ் மக்கள் ஒவ்வொரு தருணத்திலும் வலியுறுத்தி வந்தது, இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதியும், மீளநிகழாமைக்கான உறுதிப்பாட்டையுமே ஆகும். அதுதான், மனித உரிமைகளைப் பாதுகாக்கின்ற உறுதிப்பாடுடைய நாட்டை உருவாக்குவதற்கான அடிப்படை ஆகும்.

அந்த அடிப்படையில் பயணிக்கும் தரப்பாகத் தமிழ் மக்களும் அவர்களின் பிரதிநிதிகளும் மேற்கொள்ளும் பயணத்தை எந்தக் காரணங்களுக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது. 

சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு, இலங்கையை தொடர்ந்தும் ஜெனீவாவில் வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். இல்லையென்றால், ‘நூல் அறுந்த பட்டத்தின் நிலை’யே ஏற்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .