Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Mayu / 2024 பெப்ரவரி 28 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஐயூப்
சிங்கள மக்கள் எதனையும் இரண்டு வாரங்களில் மறந்துவிவார்கள் என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுபிள்ளைபிரபாகரன் கூறியதாக சிங்களத் தலைவர்கள் அடிக்கடி கூறுவார்கள். அவர் எப்போது எங்கு அதனைக் கூறினார் என்று எவரும் கூறுவதில்லை. எனினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்களவர்கள் மட்டுமன்றி, நாட்டில் அனைவரும் எதனையும் இரண்டு வாரங்களில் மறந்து விடுவதாக நினைத்துக் கொண்டே செயற்படுகிறார் போலும்.
அதனால் தான் அவர் அடிக்கடி முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். இனப் பிரச்சினை தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துக்களை நாம் பல கட்டுரைகளில் சுட்டிக்காட்டி இருந்தோம். 2023 சுதந்திர தினத்துக்கு முன்னர் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக 2022 நவம்பர் மாதம் அவர் வரவு-செலவு திட்ட விவாதத்தின்போது கூறினார்.
மக்கள் அதனை மறந்து விட்டதாக நினைத்தோ என்னவோ 2023 தைப்பொங்கல் அன்று இரண்டு வருடங்களில் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தைப் பூரணமாக அமுலாக்குவதாகக் கூறினார். மீண்டும் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாகக் கூறினார். ஜூலை மாதம் இந்தியாவுக்கு செல்லும்முன் மீண்டும் 13ஆவது திருத்தத்தைப் பற்றிய வாக்குறுதியொன்றை வழங்கினார்.
இதைப்போல், கடந்த வருடம் நவம்பர் 13ஆம் திகதி வரவு-செலவு திட்டத்தைப் பாராளுமன்றத்தில் முன்வைத்து உரையாற்றும்போது, 2024இல் ஜனாதிபதி தேர்தலும், பொதுத் தேர்தலும் நடைபெறும் எனக் கூறினார்.
ஒன்பது நாட்களுக்குப் பின்னர் பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றிபோதே அவ்வாறு கூறினார். அவரை நம்பி ஊடகத்துறை அமைச்சர்
கலாநிதி பந்துல குணவர்தனவும் அந்த இரண்டு தேர்தல்களும் இவ்வாண்டு நடைபெறும் என்று இம்மாதம் 6ஆம் திகதி ஊடகவியலாளர்களிடம் கூறினார். ஆனால், அவரது கூற்றை மட்டுமல்லாது அதற்கு முன்னர் ஜனாதிபதி தெரிவித்த கருத்தையும் மறுத்து இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தல் மட்டுமே நடைபெறும் என்றும் அதற்கு மட்டுமே வரவு-செலவுத் திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி செயலகம் அறிக்கையொன்றின் மூலம் கூறியது. அடுத்த பொதுத் தேர்தல்
2025 ஆண்டே நடைபெறும் என்றும் அதற்கு அடுத்த வரவுசெலவு திட்டத்தின் மூலமே நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டு இருந்தது. தேர்தல்களை நடத்தும் பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழவிடமே இருப்பதாகவும் அவசியம் ஏற்பட்டால் அதுதொடர்பாக ஜனாதிபதி செயலகம்
அவ்வாணைக்குழுவுடன் தொடர்புகொள்ளும் என்றும் அறிக்கை மேலும் கூறியது. ஜனாதிபதி அலுவலகத்தின் அறிக்கையில் புதிதாக எதுவும் இல்லை. சாதாரண சட்டத்தையே அது குறிப்பிட்டு இருந்தது.
அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் அவர் தேர்தல்கள் விடயத்தில் தலையிடாது இருந்தால் தேர்தல்கள் ஆணைக்குழுவே தேர்தல் தினத்தை நிர்ணயிக்கும். அரசியலமைப்பின் 19, 20 மற்றும் 21ஆவது திருத்தங்களின் படி ஜனாதிபதியினதும் பாராளுமன்றத்தினதும் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகளாகும். இறுதியாக 2019 நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தலும் 2020 ஓகஸ்ட்மாதம் பொதுத் தேர்தலும் நடைபெற்றது.
எனவே, ஜனாதிபதி தலையிடாவிட்டால் இவ்வருடம் ஜனாதிபதத் தேர்தலும் அடுத்த வருடம் பொதுத் தேர்தலும் நடைபெறவேண்டும். ஆனால், ஜனாதிபதி தலையிட்டு பாராளுமன்றத்தின் பதவிக் காலம் முடியும் முன் அதனைக் கலைத்து விட்டால் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரே பொதுத் தேர்தலை நடத்த வேண்டிய நிலை ஏற்படலாம். இவ்வருடத்தில் ஒரு தேர்தலுக்கு
மட்டும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளமையே அதற்குள்ள ஒரே தடையாகும். ஏனெனில், ஒரு தேர்தலுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி அலுவலகமே கூறுகிறது. இவ்வருடம் ஒரு தேர்தலை நடத்த மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவும் தகவலறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலாகத் தெரிவித்துள்ளது.
அந்நிதி ஜனாதிபதித் தேர்தலுக்கே உபயோகிக்க வேண்டும் ஏனெனில் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கச் சட்டத்தில் இடமில்லை. அதனைப் புறக்கணித்து ஜனாதிபதி பாராளுமன்றத்தை இவ்வருடத்திற்குள் கலைத்தால் அரசியல் நெருக்கடியொன்று உருவாகும் ஆபத்து இருக்கிறது. விந்தையான விடயம் என்னவென்றால் நிதியமைச்சர் என்ற வகையில், இந்த வருடத்தில் ஒரு தேசிய மட்ட தேர்தலை மட்டும் நடத்துவதற்காக வரவு-செலவுத் திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்த ஜனாதிபதி ரணில் இந்த வருடம் ஜனாதிபதித்
தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகிய இரண்டும் நடைபெறும் என்று தமது வரவுசெலவுத் திட்ட உரையிலேயே குறிப்பிட்டு இருந்தமையாகும். அதனை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் கவனிக்கவில்லைபோலும். ஜனாதிபதிக்கு மட்டுமே இந்த முரண்பாட்டை விவரிக்க முடியும்.
ஆனால், ஜனாதிபதியின் மீதான தமது விசுவாசத்தை வெளியிடுவதைப் போல் இந்த முரண்பாட்டைத் தீர்க்க ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன மேற்படி தமது ஊடகவியலாளர் மாநாட்டின் போது முன்வந்தார். ஒருதேர்தலுக்கு 1000 கோடி ரூபாதேவை என்றாலும் நாட்டு நிலைமையைக் கருத்திற்கொண்ட ஒதுக்கப்பட்ட 1000 கோடி ரூபாவைக் கொண்டு இரண்டு தேர்தல்களையும் சமாளித்து நடத்த வேண்டும் என்று அவர் கூறினார். ஒன்பது நாட்கள் தான் சென்றடைந்தது,
ஒரு தேர்தலுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் எனவே, ஜனாதிபதித் தேர்தல் மட்டுமே இவ்வருடம் நடைபெறும் என்றும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்தது. தேர்தல்களுக்கு நிதி வழங்குவது தொடர்பான மற்றுமொரு பிரச்சினையும் அரசாங்கத்தின் தலையில் விழகாத்திருக்கிறது. கடந்த வருடம் மார்ச் மாதம் 9ஆம்
திகதி நடைபெறவிருந்து அரசாங்கம் நிதிவழங்காமையால் நடத்த முடியாமல் போய்விட்ட உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டனவேயன்றி, இரத்துச் செய்யப்படவில்லை.
அத்தேர்தல்களை ஒத்திவைக்கக் கட்டளையிடுமாறு கோரி ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தார். அவ்வாதிகாரி அண்மையில் உயிரிழந்தார்.
அவருக்குப் பதிலாக மற்றொருவரை மனுதாரராக ஏற்றுக் கொண்டு வழக்கைத் தொடரவேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பாக
நீதிமன்றம் இன்னமும் தீர்ப்பு வழங்கவில்லை.
அது நிராகரிக்கப்பட்டால் அல்லது அது ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் வழக்கு தோல்வியடைந்தால் தேர்தலை நடத்த வேண்டியநிலை ஏற்படலாம் அப்போதுமீண்டும் நிதிப் பிரச்சினை எழலாம்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான நிதியைத் தடுத்து வைத்துக்கொள்ளக்கூடாது என்று நீதிமன்றம் கடந்த வருடம் மார்ச் மாதம் 3ஆம் திகதி நிதியமைச்சரின் செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்தது. அச்செயலாளர் அத்தரவை நிதியமைச்சரான ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்தார். ஜனாதிபதி அந்நீதி மன்ற உத்தரவைப் பொருட்படுத்தாமல் இருக்கிறார். அது நீதிமன்றத்தை அவமதிப்பதாகும்.
ஆனால் அது தொடர்பாக எவரும் இது வரை நீதிமன்றம் செல்லவில்லை. அமெரிக்காவில் போல் வருடத்தில் குறிப்பிட்டதோர் நாளில் தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் என்று இலங்கையில் சட்டம் இல்லை. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஜனாதிபதித் தேர்தலும் பொதுத் தேர்தலும் நடத்தப்படவேண்டும் என்று இந்நாட்டு சட்டத்தில் பொதுவாக இருந்தபோதிலும்,ஜனாதிபதி நினைத்தால் அதனையும் மாற்ற அவருக்கு அரசியலமைப்பால் அதிகாரம்வழங்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றம் முதலாவதாகக் கூடிய நாளிலிருந்து இரண்டரை ஆண்டுகள் சென்றடைந்ததன் பின்னர் ஜனாதிபதி நினைத்தால் பாராளுமன்றத்தைக் கலைத்து புதிதாக பொதுத் தேர்தலை நடத்த முடியும்.
தேர்தல் மூலம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ஒருவர் தமது பதவிக் காலம் முடிவடையும் முன் இரண்டாவது முறையாகத் தேர்தலில் போட்டியிட விரும்பினால் அவரது பதவிக் காலத்தில் நான்கு ஆண்டுகள் முடிவடைந்ததன் பின்னர் புதிதாக ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியும். ஜனாதிபதிகள் அந்த அதிகாரத்தைப் பாவித்து தமது கட்சிக்குச் சாதகமான சந்தர்ப்பத்தைப் பாரத்துத் தேர்தல்களை நடத்துகிறார்கள். இது எந்த வகையிலும் ஜனநாயகமல்ல.
ஜே.ஆர்.ஜயவர்தன 1978ஆம் ஆண்டிலேயே முதலாவதாக ஜனாதிபதியாகப் பதவியேற்றார். எனவே 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் பிரகாரம் 1984ஆம் ஆண்டிலேயே அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டியிருந்தது.
இதற்கிடையே ஜே.ஆரின் பிரதான அரசியல் எதிரியான சிரிமா பண்டாரநாயக்கவின் குடியியல் உரிமை 1980ஆம் ஆண்டு ஏழாண்டுகளுக்கு இரத்துச் செய்யப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பாவித்து ஜே ஆர். 1982ஆம் ஆண்டிலேயே (உரிய காலத்துக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னரே) தேர்தலை நடத்தி மீண்டும் ஜனாதிபதியானார்.
தற்போது அரசியல் களத்தில் எதிர்க்கட்சிகள் முன்னணியில் இருக்கும் நிலையில் தேர்தல்களை ஒத்திப் போடுவதற்காக அதுபோன்ற சூழ்ச்சிகள் இடம்பெறலாம். அச்சூழ்ச்சி எதுவாக
இருக்கும் என்பதை எவராலும் முன்கூட்டியே கூற முடியாது. சிலவேளை நாட்டில் பாரியளவில் வன்செயல்கள் வெடிக்கலாம், இனக் கலவரங்களும் வெடிக்கலாம்.
28.02.2024
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
5 hours ago