Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை
Mayu / 2024 மே 29 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஐயூப்
இனப் பிரச்சினைக்கு தீர்வாகவே 1987 ஆம் ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் கீழ் மாகாண சபை முறைமை அறிமுகபப்டுத்தப்பட்டது. ஆரம்பத்தில் தமிழ் அரசியல் கடசிகள் அந்தத் தீர்வை ஏற்றுக்கொண்டன. பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள், மாகாண சபை முறையை நிராகரித்தது முதல் அவையும் மாகாண சபைகளை விட கூடுதலான அதிகாரம் கொண்ட அதிகார பரவலாக்கல் முறையொன்றை கோரி வருகின்றன.
2017 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க தலைமையிலான 'நல்லாட்சி' அரசாங்கம் மாகாண சபைத் தேர்தல்களையும் கலப்புத் தேர்தல் முறையின் கீழ் நடத்துவதற்காகவென சட்டத் திருத்தம் ஒன்றை கொண்டு வந்தது. அதன் கீழ் ஒவ்வொரு மாகாணத்துக்குள்ளும் தேர்தல் தொகுதி எல்லைகளை நிர்ணயம் செய்து அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் சமரப்பிக்கப்பட்டது. பாராளுமன்றம் அதனை நிராகரித்தது. அவ்வறிக்கையை சபையில் சமர்ப்பித்த அமைச்சரும் அதற்கு எதிராக வாக்களித்தார்.
எனவே, சட்டப்படி பிரதமர் (ரணில் விக்ரமசிங்க) அவ்வறிக்கையை மீளாய்வு செய்து மற்றோர் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் அவர் அதனை செய்யவில்லை. ஆகவே, ஏழாண்டுகள் கழிந்தும் இன்று வரை மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்த முடியாமல் இருக்கிறது. ஐக்கிய தேசிய கட்சித் தலைமையே அந்த நிலைமையைத் தோற்றுவித்தது.
2017 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மேற்படி சட்டத் திருத்தத்தை இரத்துச் செய்து பழைய விகிதாசார முறையில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனி நபர் சட்டமூலமொன்றை பாராளுமன்றத்தில் அண்மையில் சமர்ப்பித்தார். உயர் நீதிமன்றமும் அதனை அங்கீகரித்தது. எனினும் ரணில் தலைமையிலான அரசாங்கம் அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதில்லை. இறுதியில் இனப்பிரச்சினைக்கு மற்றொரு தீர்வும் இல்லை. மாகாண சபைகளும் இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது.
இலங்கை ஜனநாயக நாடு என்று கூறப்படுகிறது. சுதந்திரமானதும் நியாயமானதுமான முறையான தேர்தல்களே ஜனநாயகத்தின் அடிப்படை என்றும் கூறப்படுகிறது. ஆயினும் இலங்கையில் தனித்தனித் தேர்தல்களை மட்டுமன்றி தேர்தல் தொடரொன்றையே நடத்த விடாமல் தடுக்க அரசியல்வாதிகளால் முடியும் என்பதற்கு இந்த வரலாறு சிறந்த உதாரணமாகும்.
தேர்தல் மற்றும் சர்வஜன வாக்கெடுப்புக்கள் சுதந்திரமாகவும் சமமாகவும் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் நடத்தப்பட வேண்டும் என்று அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த சமநிலையை மீறுவதற்கு ஆளும் கட்சிகளுக்கும் ஜனாதிபதிகளுக்கும் வாய்ப்பளிக்கும் வாசகங்களும் அதே அரசியலமைப்பில் உள்ளன.
உதாரணமாக, ஜனாதிபதி மக்களால் தெரிவு செய்யப்படுவதோடு அவர் ஐந்தாண்டு காலத்துக்கு பதவியில் இருப்பார் என்று அரசியலமைப்பு கூறுகிறது. அத்தோடு பதவியில் இருக்கும் ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிவடையும் நாளிலிருந்து பின்னோக்கி இரண்டு மாதங்களுக்கும் ஒரு மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்றும் அது கூறுகிறது. அதன் அடிப்படையிலேயே அடுத்த ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடம் செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதிக்கும் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த 9 ஆம் திகதி அறிவித்தது.
எனினும், அவ்வாறே நடைபெறும் என்று எதிர்க் கட்சிகளுக்கு நம்பிக்கையில்லை. 1982 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்தி 1983 ஆம் ஆண்டு நடைபெற வேண்டியிருந்த பொதுத் தேர்தலை மேலும் ஆறு வருடங்களுக்கு தள்ளிப் போட்டதைப் போல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலம் இவ்வருடம் நடைபெற வேண்டிய ஜனாதிபதித் தேர்தலை ஒத்திப் போடலாம் என்று அக்கட்சிகள் நினைக்கின்றன. அவ்வாறு ஜனாதிபதித் தேர்தல் ஒத்திப் போடப்பட்டால் இரண்டாவது 'அரகலய' வெடிக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அண்மையில் எச்சரித்திருந்தார்.
இது போன்று சட்டத்தை மீறாமலே திருகுதாளங்கள் மூலமாக தமக்கு சாதகமான நேரத்தில் தேர்தலை நடத்த ஜனாதிபதியால் முடியும் அதேவேளை தமக்கு சாதகமான நேரம் முன்கூட்டியே வருமேயானால் தேர்தலை முன்கூட்டியே நடத்த அரசியலமைப்பும் ஜனாதிபதிக்கு இடமளித்துள்ளது. அதாவது தமது பதவிக் காலத்தில் நான்கு ஆண்டுகள் முடிவடைந்ததன் பின்னர் இரண்டாவது மக்கள் ஆணையை பெறுவதற்காக அவர் தமது பதவிக் காலம் முடிவடையும் வரை காத்திராது அடுத்த தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவை பணிக்கலாம்.
ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவே இதற்கான அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டு வந்தார். அவர் தமது பிரதான போட்டியாளரான சிறிமா பண்டாரநாயக்கவின் குடியியல் உரிமையை 1980 ஆம் ஆண்டு ஏழு வருடங்களுக்கு இரத்துச் செய்தார். அதனை அடுத்து தமது அரசாங்கம் மக்கள் ஆதரவை இழந்து வருவதை கண்ட அவர் பலம் வாய்ந்த போட்டியாளர் இல்லாத நிலையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி மீண்டும் பதவிக்கு வருவதற்காக இந்த திருத்தததை கொண்டு வந்தார். அதன் படி 1982 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அவர் இலகுவாகவே வெற்றிபெற்றார்.
ஒரு நாட்டின் சட்டங்கள், குறிப்பாக அந்நாட்டின் அடிப்படை சட்டமான அரசியலமைப்பானது அந்நாட்டின் அரசியல் சமூக, பொருளாதார மற்றும் கலாசார நிலைமைகளின் அடிப்படையில் அதன் நீண்ட எதிர்க்காலத்தை கருத்தில் கொண்டே வரையப்பட வேண்டும். 1787 ஆம் ஆண்டு, அதாவது 237 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்ட அரசியலமைப்பே 27 திருத்தங்களுடன் அமெரிக்காவில் இன்னமும் அமுலில் இருக்கிறது.
அவ்வளவு நீண்ட காலமாக அவ்வரசிலமைப்பு செல்லுபடியாவதற்குக் காரணம் அதுவும் அதன் திருத்தங்களும் குறிப்பிட்ட அரசியல் கட்சியொன்றினதோ குறிப்பட்ட அரசியல்வாதியினதோ நலனை கருத்தில் கொள்ளாது நாட்டு நலனை மட்டுமே கருத்திற்கொண்டு வரையப்பட்டமையாகும். ஆனால் இலங்கையில் பல சட்டங்கள் குறிப்பிட்ட அரசியல் கட்சியினதோ அல்லது ஓர் அரசியல்வாதியினதோ தேவைக்காக வரையப்பட்டுள்ளன.
ஜே. ஆர். நிறைவேற்றிக்கொண்ட மேற்படி சட்டத் திருத்தத்தை பாவித்து அதன் பின்னர் பதவிக்கு வந்த ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க 1999 ஆம் ஆண்டிலும், மஹிந்த ராஜபக்ஷ 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளிலும் தமது பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்னரே அடுத்த ஜனாதிபதித் தேர்தலை நடத்தினர்.
ஐந்தாண்டுகளுக்கே பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யபப்டுகிறார்கள். எனினும், பதவியில் இருக்கும் ஜனாதிபதி விரும்பினால் தமது கட்சிக்கு சாதகமான நிலைமை இருக்கும் பட்சத்தில் அதற்கு முன்னரே பொதுத் தேரதலை நடத்தலாம். 1978 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இரண்டாவது குடியரசு அரசியலமைப்பின் ஆரம்பத்தில் தேர்தல் மூலம் பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டு ஒரு வருடத்தில் அதனை கலைத்து புதிதாக தேர்தல் நடத்த ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருந்தது.
2001 ஆம் ஆண்டு சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கத்திலிருந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் விலகியதை அடுத்து சந்திரிகாவின் கட்சி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்து நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை எதிர்நோக்கிய நிலையில் அவர் அந்த அதிகாரத்தை பாவித்து ஒரு வருடத்திலேயே பாராளுமன்றத்தை கலைத்தார். 2004 ஆம் ஆண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக இரண்டு வருடமும் நான்கு மாதங்களில் மீண்டும் அவர் பாராளுமன்றத்தை கலைத்தார்.
பின்னர் 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நிறைவேற்றப்பட்ட 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டு நாலரை ஆண்டுகளிலேயே ஜனாதிபதி அந்த பாராளுமன்றத்தை கலைக்க முடியும் என்று கூறப்பட்டது. இதனை புறக்கணித்து 2018 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்ததை அடுத்து பெரும் அரசியலமைப்பு நெருக்கடி உருவாகியது.
2022 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம் இரண்டரை ஆண்டுகளில் பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்க முடியும். ஜனாதிபதித் தேர்தலை விட பொதுத் தேர்தலே தமது கட்சிக்கு சாதகமானது என்று கருதும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ இந்த அதிகாரத்தை பாவித்து பாராளுமன்றத்தை கலைக்குமாறு ஜனாதிபதி ரணிலுக்கு இப்போது அழுத்தம் கொடுத்து வருகிறார்.
இதேபோல் ஆளும் கட்சிக்கு சாதகமான நிலையிலேயே அனேகமாக உள்ளுராட்சிமன்றத் தேர்தல்கள் நடைபெறுகின்றன. அதற்கு வசதியாக தமக்குத் தேவையான நேரத்தில் அம்மன்றங்களை கலைக்க உள்ளூராட்சி அமைச்சருக்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது. அவ்வாறான தேவை ஏற்படும் போது அவர் ஏதாவது போலியான காரணத்தை முன்வைத்து அம்மன்றங்களை கலைத்து தேர்தலை நடத்துவார்.
கடந்த வருடம் அதற்கு மாற்றமானதொரு நிலைமை ஏற்பட்டது. தேரதல்கள் ஆணைக்குழு, உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களை அறிவித்த போதிலும் தமது கட்சி படுதோல்வி அடையும் என்பதை அறிந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலை ஒத்திப் போட விரும்பினார். ஆனால் அதற்கு சட்டத்தில் இடம் இல்லாததால் அவர் திறைசேரியில் பணம் இல்லை என்று கூறி தேர்தலுக்கு தேவையான நிதியினை வழங்க மறுத்துவிட்டார். தேர்தல் தாமாகவே பிற்பேடப்பட்டது.
இந்த நிலைமை மாற வேண்டும். தேர்தல் திகதி சட்டத்தால் மட்டுமே நிர்ணயிக்கப்பட வேண்டும். அதனை மாற்றி முன்கூட்டியோ அவற்றை நடத்தவும் அவற்றை ஒத்திப் போடவும் ஜனாதிபதிக்கும் அமைச்சர்களுக்கும் சட்டத்தால் வழங்கப்பட்டு இருக்கும் அதிகாரம் இரத்துச் செய்யப்பட வேண்டும்.
29.05.2024
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago