Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை
Mayu / 2024 ஜூலை 18 , பி.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்எம்.ஐயூப்
ஜனாதிபதியின் பதவிக் காலம் ஆறு வருடங்கள் என்று தீர்ப்பு வழங்குமாறும் அது வரை தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதை இடைநிறுத்துமாறும் கோரிக்கை விடுத்து கடந்த 3ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
மொரட்டுவையைச் சேர்ந்த சமின்திர டி.லேனவ என்ற வர்த்தகரே இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். கடந்த திங்கட்கிழமை அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் ஒரு சில மணித்தியாலங்களிலேயே அதனை நிராகரித்தது.
உண்மையிலேயே உயர் நீதிமன்றம் அந்த மனுவை ஏற்றுத் தீர்ப்பை வழங்க வாய்ப்பே இருக்கவில்லை.
ஏனெனில், உயர் நீதிமன்றமே இதற்கு முன்னர் ஜனாதிபதியின் பதவிக் காலம் பற்றிய தற்போதைய அரசியலமைப்பின் வாசகங்களை இரண்டு முறை அங்கீகரித்துள்ளது. ஆறு வருடங்களாக இருந்த அப்பதவிக் காலம் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் ஐந்து வருடங்களாகக் குறைக்கப்பட்டபோது அத்திருத்தம் உயர் நீதிமன்றத்தால் பரிசீலித்து அங்கீகரிக்கப்பட்டது.
அதன் பின்னர் தமது பதவிக் காலம் ஐந்து வருடங்களா அல்லது ஆறு வருடங்களா என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2017ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தைக் கோரியிருந்தார். அம்மனுவை விசாரித்தும் உயர் நீதிமன்றம் ஜனாதிபதியின் பதவிக் காலம் ஐந்து வருடங்களே என்று விளக்கமளித்து இருந்தது. எனவே, இரண்டு முறை தாமே வழங்கிய தீர்ப்புக்கு முரணாக உயர் நீதிமன்றம் இம்முறை தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இந்த வழக்கு எங்கிருந்து வந்தது என்றும் இதன் பின்னால் இருப்பது யார் என்றும் எதிர்க் கட்சியினர் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றனர்.
இக்கோரிக்கை நிறைவேற்றப்பட்டு இருந்தால் வழக்கைத் தாக்கல் செய்தவர், உண்மையிலேயே எதனையும் அடையப் போவதில்லை. ஆனால், ஜனாதிபதியின் பதவிக் காலம் ஆறு வருடங்கள் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தால் தற்போது பதவியியல் இருக்கும் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க நிச்சயமாக அத்தீர்ப்பின் மூலம் நன்மை அடையவே போகிறார். அதாவது அவரது பதவிக் காலம் பொதுவாக நம்பப்படுவதைப் பாரக்கிலும் ஒரு வருடத்தால் அதிகரிக்கப்பட்டு இருக்கும். அந்த நிலையில் வேண்டுமென்றால் லேனவ பல வழிகளில் ஜனாதிபதியிடம் உதவிகளைப் பெற முடியும்.
எனவே தான், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போது இதன் பின்னால் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க இருக்கிறார் என்று பலர் நினைத்தனர். ஆயினும் அடுத்த நாளே அதாவது ஜூலை 4ஆம் திகதியே ஜனாதிபதி விக்ரமசிங்க இந்த வழக்குக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று டுவிட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டு இருந்தார்.
சட்டப் படி ஜனாதிபதியின் பதவிக் காலம் ஐந்து வருடங்களே என்று தாம் நம்புவதாகவும், எனவே, இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தலை நடத்தத் தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்த முடிவு சரியென்றும் இந்த வழக்கைத் தாக்கல் செய்த லேனவ வழக்கைத் தாக்கல் செய்யுமுன் தம்மையோ தமது சட்டத்தரணிகளையோ அந்த விடயம் தொடர்பாகக் கலந்தாலோசிக்கவில்லை என்றும் ஜனாதிபதி மேலும் அந்த டுவிட்டர் பதிவில் தெரிவித்து இருந்தார்.
ஆனால், எதிர்க்கட்சியினர் அதனை ஏற்பார்களா என்பது சந்தேகமே. ஏனெனில், கடந்த வருடம் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடத்தப்பட இருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை பிற்போட ஜனாதிபதி பல வகையில் முயற்சிகளை மேற்கொண்டார். இதேபோல் வழக்கொன்றின் மூலமே அத்தேர்தல்கள் முதன்முதலாக இரண்டு மாதங்களுக்கு மேல் ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் தேர்தலுக்காக வழங்கப் பணம் இல்லை என ஜனாதிபதியின் கீழ் இயங்கும் நிதி அமைச்சு தெரிவித்தது. அத்துடன், அத்தேர்தல்களை ஒத்திவைத்தமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தது. எனவே, அத்தேர்தல்கள் இது வரை நடத்தப்படவில்லை.
இதேபோல் ஜனாதிபதித் தேர்தலும் ஒத்திவைக்கப்படலாம் என்று எதிர்க்கட்சிகள் கடந்த வருடத்திலிருந்தே அச்சம் தெரிவித்து வருகின்றன. ஜனாதிபதிக்கும் அவரது கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் மக்கள் ஆதரவு இல்லை என்று பல கருத்துக் கணிப்புக்கள் மூலம் கடந்த வருடம் முதல் தெரிய வருகிறது.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி முதலிடத்திலும் ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாம் இடத்திலும் இருப்பதாகவே கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் சுகாதார கொள்கை நிறுவனம் என்ற நிறுவனத்தினால் நடத்தப்பட்டு வந்த கருத்துக் கணிப்புக்களால் தெரிய வந்தது.
எனவே தான் 1982ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலம் பொதுத் தேர்தலை ஆறு வருடங்களுக்கு ஒத்திவைத்ததைப் போல் ஜனாதிபதித் தேர்தலையும் சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலம் ஒத்திவைக்க வேண்டும் என்று ஐ.தே.கவின் தவிசாளர் வஜிர அபேவர்தன கடந்த வருடம் கூறியிருந்தார். அதே கருத்தைக் கடந்த மே மாதம் 28ஆம் திகதி ஐ.தே.கவின் பொதுச் செயலாளர் பாலித்தத ரங்கே பண்டாரவும் தெரிவித்து இருந்தார். ஆனால் ஐ.தே.க. ஏதோ ஒரு காரணத்தினால் அக்கருத்தை முன்னெடுக்கவில்லை.
ஜனாதிபதித் தேர்தலில் வெல்ல முடியாத ஐ.தே.க. சர்வஜன வாக்கெடுப்பொன்றில் வெற்றி பெறவும் முடியாது என்பது அதற்கான காரணமாக இருக்கலாம். அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான செலவே சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கும் போகும்.
இந்த நிலையில், தான் ஜனாதிபதி எவ்வளவு தான் மறுத்தாலும் திங்கட்கிழமைஉயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட வழக்கின் பின்னாலும் ஐதேகவே இருந்திருக்கும் என்று பலர் நம்புகிறார்கள்.
இதற்கு முன்னர் பதவியிலிருந்த ஜே.ஆர்.ஜயவர்தன, சந்திரிகா குமாரதுங்கரூபவ் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகிய ஜனாதிபதிகளும் தமது பதவிக் காலத்தை நீடித்துக் கொள்ளக் குறுக்கு வழிகளைத் தேடினர். ரணசிங்க பிரேமதாசரூபவ் டி.பி.விஜேதுங்க மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகிய ஜனாதிபதிகள் அவ்வாறு செயற்படவில்லை.
பிரேமதாச தமது முதலாவது பதவிக் காலத்தின் இறுதிக் கட்டத்தில் புலிகளின் தற்கொலை குண்டுதாரி ஒருவரால் கொல்லப்பட்டார்.
கோட்டாபய தமது முதலாவது பதவிக் காலத்திலேயே பொதுமக்களால் விரட்டியடிக்கப்பட்டார். அவர்களும் தமது இரண்டாவது பதவிக் காலம் முடியும் வரை பதவியியல் இருந்திருந்தால் சிலவேளை இதேபோல் குறுக்கு வழிகளில் தொடர்ந்து பதவியியல் இருக்க முயன்று இருக்கலாம். விஜேதுங்க ஒரு அப்பாவி என்பதால் அவர் அவ்வாறு செய்திருக்க மாட்டார். அவர் அவ்வாறு செய்யவும் இல்லை.
ஜே.ஆர்.ஜயவர்தன முதன் முறையாக மக்களால் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படவில்லை.
அரசியலமைப்பு மாற்றம் ஒன்றின் மூலமாகவே 1978இல் ஜனாதிபதியானர். பின்னர் 1982ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக ஜனாதிபதியானார். அவரது இரண்டாவது பதவிக் காலம் 1988ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அப்போது தாம் ஒரு முறை மட்டுமே மக்களால் ஜனாதிபதியாகத் தெரியப்பட்டதாகவும் எனவே தமக்குத் தேர்தல் மூலம் மற்றொரு முறை ஜனாதிபதியாக முடியும் என்றும் அவர் தமது கட்சி சகாக்களுடன் கூறியுள்ளார்.
அவரது வாதம் சரியாக இருந்த போதிலும் 1988ஆம் ஆண்டு ஜனாதிபதியாவதற்குக் காத்திருந்த பிரேமதாச அதனை ஏற்கவில்லை. தமக்கு 1988ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட இடமளிக்காவிட்டால் தாம் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுவதாக அவர் ஜயவர்தனரைவ மிரட்டியுள்ளார்.
பிரேமதாசவும் மிகவும் பலமான நிலையில் இருக்க இருவரும் போட்டியிட்டால் தம்மால் 1980ஆம் ஆண்டு குடியியல் உரிமை ஏழாண்டுகளுக்கு இரத்துச் செய்யப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவி சிறிமா பண்டாரநாயக்க பதவிக்கு வருவார் என்று பயந்த ஜயவர்தன பிரேமதாசவுக்கு விட்டுக் கொடுத்தார்.
சந்திரிகா தமது முதலாவது பதவிக் காலம் முடியுமுன் 1999ஆம் ஆண்டு இரண்டாவது மறையாக ஜனாதிபதித் தேர்தலை நடத்தி மீண்டும் ஜனாதிபதியானர். அவர் ஒரு வருடத்துக்குப் பின்னர் தமது முதலாவது பதவிக் காலம் முடிவடைந்த பின்னர் 2000ஆவது ஆண்டிலேயே சத்தியப் பிரமாணம் செய்ய வேண்டும். ஆனால் அவர் 1999ஆம் ஆண்டு தேர்தல் முடிவடைந்த உடனேயே சத்தியப் பிரமாணம் செய்தார்.
அதன் பிரகாரம்; 2005ஆம் ஆண்டு தேர்தல்கள் திணைக்களம் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முற்பட்ட போது தாம் 2000ஆம் ஆண்டும் மற்றொரு முறை பதவிப் பிரமாணம் செய்ததாகப் பொய்யைக் கூறி 2006ஆம் ஆண்டு வரை பதவியில் இருக்க முயன்றார். உயர் நீதிமன்றம் அதனைத் தடுத்தது.
மஹிந்த ராஜபக்ஷ அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் மூன்றாவது முறையும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பை பெற்றார்.ஆனால், அவர் அத்தேர்தலில் தோல்வியடைந்தார்.
மைத்திரிபால தமது காலத்தில் ஜனாதிபதியின் பதவிக் காலம் ஆறாண்டுகளிலிருந்து ஐந்தாண்டுகளாகக் குறைக்கப்பட்ட போதிலும் தாம் பதவிக்கு வரும் போது பதவிக் காலம் ஆறாண்டுகள் என்று இருந்தமையால் தமக்கு ஆறாண்டுகள் பதவியில் இருக்க முடியுமா என்று உயர் நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தைக் கேட்டார் நீதிமன்றம் அதனை நிராகரித்தது. பதவி ஆசை எவரையும் விடாது. எனவே, இம்முறை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் வரை அது நடைபெறும் என்று உத்தரவாதமளிக்க முடியாது.
10.07.2024
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago