Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Mayu / 2024 ஓகஸ்ட் 18 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஐயூப்
ஜனாதிபதியின் பதவிக் காலம் ஐந்து வருடங்கள் அல்ல, ஆறு வருடங்கள் என்று தீர்ப்பளிக்குமாறும் அதுவரை ஜனாதிபதித் தேர்தலை நடத்தக் கூடாது என்று தேர்தல் ஆணைக்குழுவுக்கு கட்டளையிடுமாறும் கோரி, கடந்த 3ஆம் திகதி சி.டி.லேனவ என்ற சட்டத்தரணியால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் கடந்த 8ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே நிராகரித்தது.
அதேபோல், அருண லக்சிறி உணவட்டுன என்ற மற்றொரு சட்டத்தரணியும் கடந்த 12ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் அதேபோன்றதோர் அடிப்படை உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்தார். 19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்தி முறையாக நிறைவேற்றப்படவில்லை என்பதே அவரது வாதமாகியது.
சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்தி முறையாக அதனை நிறைவேற்றும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்தக் கூடாது என்று கட்டளையிடுமாறும் அவர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார். அதனையும் நீதிமன்றம் கடந்த 15ஆம் திகதி (கடந்த திங்கட்கிழமை) நிராகரித்தது.
சட்டப்படி, இவ்விரண்டு மனுக்களையும் உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவே முடியாது என்பதை சட்டத்தரணிகளான சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் அறிந்திருக்க வேண்டும். ஏனெனில், இவ்விரண்டு மனுக்கள் மூலமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்றே அவர்கள் கோரியிருக்கின்றனர்.
அவ்வாறு நிறைவேற்றப்பட்ட சட்டங்களை மீள்பரிசீலனை செய்ய இலங்கையில் அமுலில் உள்ள எந்தவொரு சட்டத்திலும் இடமில்லை.
2017 மாகாண சபைகள் விடயத்தில் கலப்பு தேர்தல் முறையை அறிமுகப்படுத்திய சட்டம் முறையாக நிறைவேற்றப்படவில்லை என்றும் எனவே, அந்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்றும் கோரி முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்தார்.
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமொன்றை மறுபரிசீலனை செய்யும் அதிகாரம் தமக்கு இல்லை என்று நீதிமன்றம் அம்மனுவை நிராகரித்தது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அல்லது ஒக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்றும் அல்லது ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை போட்டியின்றி அப்பதவிக்குத் தெரிவு செய்யும் வகையில் ஏனைய வேட்பாளர்கள் ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்றும் ரணிலின் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்கள் கடந்த வருடம் ஆரம்பத்திலிருந்தே கோரி வரும் நிலையிலேயே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
எனவேதான், பின்னால் இருந்து இம்மனுக்களை இயக்கியவர் ரணில் விக்ரமசிங்கவே என்று எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்.
தமக்கும் லேனவவின் மனுவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் ஜனாதிபதியின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் என்றே தாமும் நம்புவதாகவும் ரணில் கடந்த 4ஆம் திகதி கூறியிருந்தார். எனினும், எதிர்க்கட்சிகள் இன்னமும் அவர் கூறியதை நம்புவதாகத் தெரியவில்லை.
மற்றைய மனுவைப் பற்றி ஜனாதிபதியோ அரசாங்கமோ அல்லது ஐக்கிய தேசிய கட்சியோ எதையும் கூறவில்லை.
இச்சட்டத்தரணிகளின் மனுக்களுக்குப் புறம்பாக ஜனாதிபதித் தேர்தலைப் பாதிக்கக்கூடிய வகையில் அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜனாதிபதியின் பதவிக் காலம் ஐந்தாண்டுகள் என்ற போதிலும், அது ஆறு வருடங்கள் என்ற அர்த்தத்தை வழங்கக் கூடிய வாசகம் ஒன்று அரசியலமைப்பில் இருப்பதாகவும் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட போது, அது மாற்றப்படவில்லை என்றும் அதனை முறையாகத் திருத்தி ஜனாதிபதியின் பதவிக் காலம் ஐந்து வருடங்கள் என்பதை உறுதிப்படுத்துவதே இந்த அரசியலமைப்புத் திருத்தத்தின் நோக்கமாகும் எனவும் அரசாங்கமும் ஐ.தே.கவும் கூறுகின்றன.
லேனவ என்ற சட்டத்தரணியின் மேற்படி மனு நிராகரிக்கப்பட்டதற்கு மறுநாளே அதாவது கடந்த 9ஆம் திகதி இந்த அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான பிரேரணையை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே அதனை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.
19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் முறையாக நிறைவேற்றப்படவில்லை என்பதை இந்த சட்டத்தரணிகளும் ஐ.தே.க.வும் இம்முறை ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிய போதே உணர்ந்துள்ளனர் போலும். அதுதான் இங்குள்ள விசேட அம்சமாகும். அந்த இரண்டு மனுக்களும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதால் உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தையே நாம் இங்கு ஆராயப் போகிறோம்.
ஜனாதிபதியின் பதவிக் காலம் ஐந்து வருடங்கள் என்று அரசியலமைப்பின் 30(2) வாசகம் கூறுகிறது. பாராளுமன்றத்தின் பதவிக் காலம் ஐந்து வருடங்கள் என்று 62(2) வாசகம் கூறுகிறது.
ஆனால், ஜனாதிபதியினதோ அல்லது பாராளுமன்றத்தினதோ பதவிக் காலத்தை ‘ஆறு வருடத்துக்கு’ மேல் நீடிப்பதற்கான திருத்தம் ஒன்றை முன்வைப்பதாக இருந்தால், அதற்குப் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலம் மக்கள் அதற்கு தமது ஒப்புதலை வழங்க வேண்டும் என்று அரசியலமைப்பின் 80 (இ) வாசகம் கூறுகிறது.
ஜனாதிபதியின் பதவிக் காலம் ஐந்து வருடங்கள், ஆனால், அதனை ‘ஆறு வருடங்களுக்கு மேல் நீடிப்பதற்கு’ சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும் என்று ஏன் கூற வேண்டும்? அது பொருத்தமில்லை. அது ‘ஐந்து வருடங்களுக்கு மேல் நீடிப்பதற்கு’ என்றே கூறப்பட வேண்டும்.
அவ்வாறில்லாமல், ‘ஆறு வருடங்களுக்கு மேல் நீடிப்பதற்கு’ என்று கூறும் போது, ஜனாதிபதியின் பதவிக் காலம் ஆறு வருடங்கள் என்றும் அர்த்தம் வழங்கப்படுகிறது. எனவே, பதவிக் காலத்தை நீடிப்பதைப் பற்றிக் கூறும் 83 (இ) வாசகத்தில் ‘ஆறு வருடங்கள்’ என்பதற்குப் பதிலாக
‘ஐந்து வருடங்கள்’ என்ற சொற்களைச் சேர்ப்பதே இந்த அரசியலமைப்புத் திருத்தத்தின் நோக்கமாகும் என்று அரசாங்கம் கூறுகிறது. அது நியாயமான வாதம் தான்.
ஆறு வருடங்களாக இருந்த ஜனாதிபதியின் பதவிக் காலம் 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலமே ஐந்து வருடங்களாகக் குறைக்கப்பட்டது. 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைத் தயாரித்தவர்களும் அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய பாராளுமன்ற உறுப்பினர்களும் அதற்கமைய 83 (இ) வாசகத்தைத் திருத்தத் தவறியுள்ளனர் என்றே கருத வேண்டியுள்ளது.
அது அப்போது மட்டுமல்லாது 2020ஆம் ஆண்டு 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்ட போதும், 2022ஆம் ஆண்டு 21ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்ட போதும் கவனிக்கப்படவில்லை என்பதும் தெளிவாகிறது.
சட்டத்தரணி லேனவ இந்தக் காரணத்தின் அடிப்படையிலேயே தமது மனுவைச் சமர்ப்பித்து இருந்தார். அதாவது 83 (இ) வாசகத்தின் படி, ஜனாதிபதியின் பதவிக் காலம் ஆறாண்டுகள் என்று வாதிடலாம் எனவே, அதனை ஏற்று ஜனாதிபதியின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அவரது கருத்தாகியது.
ஆனால், 83 (இ) வாசகத்தில் ஜனாதிபதியின் பதவிக் காலம் ஆறு ஆண்டுகள் என்பது தெளிவாகவே கூறப்படவில்லை. ஆயினும், 30 (2) வாசகத்தில் ஜனாதிபதியின் பதவிக் காலம் ஐந்தாண்டுகள் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. தெளிவாகக் கூறப்படாத ஒரு கருத்தை ஏற்றுத் தெளிவாகக் கூறப்பட்ட ஒரு கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றே அவர் வாதிட்டார். அதனை நீதிமன்றம் ஏற்கவில்லை.
இங்கு இரண்டு விடயங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. 83 (இ) வாசகத்தின் படி, ஜனாதிபதியின் பதவிக் காலம் ஆறு வருடங்கள் என்று ஏற்றுக் கொள்வது பிழையாகும்.
அது ஆறு வருடங்களுக்கு மேல் பதவிக் காலத்தை நீடிப்பதாக இருந்தால் சர்வஜன வாக்கெடுப்பொன்றையும் நடத்த வேண்டும் என்றே கூறுகிறது. அவ்வாறாயின் ஐந்து வருடங்களாக இருக்கும் ஜனாதிபதியின் பதவிக் காலத்தை ‘ஆறு வருடங்களுக்கு மேல்’ நீடிக்காது ‘ஆறு வருடங்கள்’ வரை நீடிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பொன்று தேவையில்லையா என்ற கேள்வி எழுகிறது.
ஆயினும், அந்த வகையிலும் ரணில் விக்ரமசிங்கவின் பதவிக் காலத்தை நீடிக்க முடியுமா என்பது சந்தேகமே. ஏனெனில், பதவி துறந்த ஜனாதிபதி ஒருவரின் வெற்றிடத்தை நிரப்பத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ஒருவர், பதவி துறந்த ஜனாதிபதியின் பதவிக் காலத்தில் மீதமாக உள்ள காலத்துக்கு ‘மட்டுமே’ பதவியியல் இருக்கலாம் என்று அரசியலமைப்பில் 40 (1) (அ) வாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சரி, அதனையும் மாற்றலாம் என்று வைத்துக்கொள்வோம். ஆயினும், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படாமல் மேலே கூறப்பட்டதைப் போல், ஆறு வருடங்கள் வரை பதவிக் காலத்தை நீடிப்பதற்கும் அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும். அதற்கு தற்போதைய பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு கிடைக்குமா என்பது சந்தேகமே.
83 (இ) வாசகத்தில் ஆறு வருடங்களுக்கு மேல் என்பதை ஐந்து வருடங்களுக்கு மேல் என்று மாற்றுவதற்கென அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பு திருத்தமும் பாராளுமன்றத்துக்கு வருமுன் உயர் நீதிமன்றத்தினால் ஆராயப்பட வேண்டும்.
அப்போது எவரும் மனுக்கள் மூலம் அதில் தலையிடலாம். அந்த இடத்தில் ஐ.தே.க. என்ன செய்யப் போகிறதோ தெரியாது. ஏனெனில், இவ்வளவு காலம் கவனத்திற்கொள்ளப்படாத இந்த சொல் முரண்பாட்டை ஜனாதிபதித் தேர்தலொன்று நடத்தப்படப்போகும் இத்தருணத்தில் அக்கட்சி ஏன் தூக்கிப் பிடிக்க வேண்டும்?
07.17.2024
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago