Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 25, திங்கட்கிழமை
Editorial / 2023 ஜனவரி 05 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
காயத்ரி விக்கிரமசிங்க
(கொழும்பு மாநகரசபை உறுப்பினர்)
வெளிநாடு வாழ் இந்தியர்களை ஒன்றிணைக்கும் 'பிரவாசி பாரதிய திவாஸ்' (Pravasi Bharatiya Divas) அமைப்பின் 17 ஆவது மகாநாடு 2023 ஜனவரி 8ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரில் நடைபெறவிருக்கிறது.
இந்திய வெளியுறவு அமைச்சும் மத்தியப்பிரதேச மாநில அரசாங்கமும் இணைந்து நடத்தும் இந்த மகாநாட்டின் தொனிப்பொருள் 'புலம்பெயர் சமூகம்; நற்காலத்தில் இந்தியாவின் முன்னேற்றத்துக்கான நம்பகமான பங்காளர்கள்' (Diaspora ; Reliable Partners for India's Progress in Amrit Kaal) என்பதாகும். நற்காலம் (அம்றிற் கால்) என்பது அடுத்த 25 வருடங்கள் மீது கவனத்தைச் செலுத்துகிறது. இந்த சொல்லை முதலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2021 ஒக்டோபரில் பயன்படுத்தினார்.
இந்திய நிதியமைச்சர் நிர்மலா கீதாராமன் பாராளுமன்றத்தில் 2022 --2023 மத்திய பட்ஜெட்டை சமர்ப்பித்தபோது 'அம்றிற் கால்' சொல்லைப் பயன்படுத்தினார். அடுத்த 25 வருடங்களை குறிப்பிடுவதற்கு இந்த சொல் பொதுவில் பயன்படுத்தப்படுகிறது.
இரு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் 'பிரவாசி பாரதிய திவாஸ்' மகாநாடு இந்திய அரசாங்கத்துடனான வெளிநாட்டு இந்திய சமூகத்தின் ஊடாட்டத்தை பலப்படுத்துவதற்கும் தங்களது வேர்களுடன் அவர்களை மீள இணைப்பதற்கும் உதவுகிறது.
தெரிவுசெய்யப்பட்ட இந்தியர்களுக்கு இந்த மகாநாட்டின்போது கீர்த்திமிகு 'பிரவாசி பாரதிய சம்மான்' விருது வழங்கிக் கௌரவிக்கப்படுகிறது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அவர்கள் பல்வேறு துறைகளில் ஆற்றிய பங்களிப்புகளை அங்கிகரித்து கௌரவிப்பதற்கே இந்த விருது வழங்கப்படுகிறது.
இதுவரையில் ஸ்ரீகிருஷ்ணா கோர்ப்பரேசன் தலைவரும் கார்சன்; குழுமத்தின் பணிப்பாளருமான மனோ செல்வநாதன் ஆகியோர் இந்த விருதைப் பெற்ற இலங்கையராக விளங்குகிறார். அதனால் தங்களது துறைகளில் சாதனைகள் படைத்த மேலும் பல இலங்கையர்களுக்கு விருது வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. இவ்வாறு வலியுறுத்தியவர்களில் மலையக மக்கள் முன்னணியின் காலஞ்சென்ற தலைவர் பெரியசாமி சந்திரசேகரன் குறிப்பிடத்தக்கவர். இப்போது அதன் தலைவர் பெ. இராதாகிருஷ்ணன் அவ்வாறு கோரிக்கை விடுத்துவருகின்றார்.
இத்தடவை எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் கோபியோ இலங்கை அமைப்பின் தலைவருமான சிவகுமார் நடேசன் அவர்களுக்கு 'பிரவாசி பாரதிய சம்மான்' விருது வழங்கப்படவிருக்கிறது.
இந்தூர் மகாநாட்டில் பங்குபற்றும் பேராளர்கள் ஜனவரி 26 நடைபெறவிருக்கும் இந்திய குடியரசு தினக்கொண்டாட்டங்களிலும் பங்கேற்க வாய்ப்பிருக்கிறது.
மகாநாட்டின் முதல் நாள் 'இளைஞர் பிரவாசி பாரதிய திவாஸ்' வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரினால் ஆரம்பித்து வைக்கப்படும். தொடக்கவுரையை மத்திய இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சர் அநுராக் சிங் தாகூர் நிகழ்த்துவார். மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகானும் அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் சனீட்டா மஸகாரினாஸும் கௌரவ அதிதிகள் என்ற வகையில் சிறப்புரைகளை நிகழ்த்துவர்.
இந்த ஆரம்ப கூட்டத்தொடரில் 'புத்தாக்கம் மற்றும் நவீன தொழில்நுட்பவியலில் புலம்பெயர் இந்திய சமூக இளைஞர்களின் வகிபாகம்' குறித்து கலந்துரையாடப்படும்.
இந்தியாவின் மென்சக்தியைப் பயன்படுத்துதல், சிறு தொழில்கள், உணவு தயாரிப்பு மற்றும் படைப்பாற்றல் ஊடாக நல்லெண்ணத்தை பரப்புதல் ,இந்திய தொழிற்படையின் உலகளாவிய நகர்வை மேம்படுத்துதல் - புலம்பெயர்ந்த இந்தயர்களின் பங்கு, தேசத்தின் கட்டமைப்பில் அனைவரையும் உள்வாங்கும் அணுகுமுறை ஊடாக புலம்பெயர்ந்த பெண் தொழில் முயற்சியாளர்களின் வலுவாற்றலை பயன்படுத்திக்கொள்ளல் ஆகிய தலைப்புக்களில் கலந்துரையாடல்கள் இடம்பெறும்.
இரண்டாம் நாள் கௌரவ அதிதியாக கலந்துகொள்ளும் சூரினாம் குடியரசின் ஜனாதிபதி சந்திரகிபெர்சாட் சன்டோக்கியும் பிரதம அதிதியான கயான கூட்டுறவு குடியரசின் ஜனாதிபதி கலாநிதி முஹமட் இர்ஃபான் அலியும் உரை நிகழ்த்துவார்கள்.
முக்கிய உரையை இந்திய பிரதமர் மோடி நிகழ்த்துவார். அதை தொடர்ந்து 'இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு புலம்பெயர் இந்திய சமூகத்தின் பங்களிப்பு' என்ற தொனிப்பொருளிலான கண்காட்சியை பிரதமர் திறந்துவைப்பார்.
இரண்டாம் நாளின் முதற் கூட்டத்தொடர் 'இந்திய சுகாதாரப் பராமரிப்பு, அம்றிற் கால் மற்றும் நோக்கு 2047 மேம்படுத்தலுடன்' தொடர்புடைய விவகாரங்களை கையாள ஒதுக்கப்பட்டுள்ளது.
மாலை நேர கூட்டத்தொடரில் ஜி -20 நாடுகளின் இந்திய தலைமைத்துவம் குறித்து ஆராயப்படும். ஜி 20 தலைமை என்ற வகையில் இந்தியாவின் உலகளாவிய அணுகுமுறை பற்றி ஜி -20 பிரதம ஒருங்கிணைப்பாளர்களான ஹர்ஷ்வர்தன் சிறிங்லாவும் அமாதாப் காந்தும் உரையாற்றுவர்.
பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிவரும் வெளிநாட்டு இந்தியர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இவர்கள் இந்தியாவுடனான தொடர்புகளையும் இந்தியாவின் புகழையும் மேம்படுத்தவும் இந்திய வம்சாவளி மக்களின் வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்புச் செய்தவர்கள். முன்னென்றும் இல்லாதவாறு இந்திய மத்திய அரசின் கவனம் அண்மைக்காலமாக வெளிநாடுகளில் சிறப்பாக பணியாற்றும் இந்திய வம்சாவளியினர் மீது திரும்பியிருக்கிறது. 2003 ஆம் ஆண்டு தொடக்கம் 2021 ஆம் ஆண்டில் இறுதியாக நடைபெற்ற மகாநாடுவரை 269 வெளிநாட்டு இந்தியர்கள் விருதுகளைப் பெற்றிருக்கிறார்கள்.
பிரவாசி பாரதிய சம்மான் விருதுகள் விழாவின் இறுதி நாளன்று இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவினால் வழங்கப்படும். பிரியாவிடை உரையையும் அவரே நிகழ்த்துவார்.
குமார் நடேசன் தலைமையில் இந்திய வம்சாவளி மக்கள் மகாசபையின் ( Global Organisation of People of Indian Origin ) கோபியோ இலங்கைப்பிரிவின் இருபது பேராளர்களைக் கொண்ட குழு 17 ஆவது பாரவாசி பாரதிய திவாஸ் மகாநாட்டில் பங்கேற்கிறது. இந்த மகா நாட்டை தொடர்ந்து பல வரப்பிரசாதங்கள் விருதுகள் பலருக்கு கிடைக்க வாய்ப்பிருப்பதாக வெளிநாடுவாழ் இந்திய பிரசைகளின் இலங்கை உறுப்பினர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறார்கள்.
உலகளாவிய ரீதியில் வாழும் 2 கோடி 80 இலட்சம் இந்திய வம்சாவளி மக்களின் நலவுரிமைகளையும் அபிலாசைகளையும் மேம்படுத்துவதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சு வெளிநாட்டு இந்தியர் விவகாரங்களைக் கவனிக்கவென்று தனியான பிரிவை அமைத்துச் செயற்படுத்திவருகிறது.
மத்திய அரசின் வெளிநாடுவாழ் இந்தியர் விவகாரத் துறை வெளியிட்டிருக்கும் புள்ளி விபரத்தின் படி, உலகெங்கிலுமுள்ள 208 நாடுகளில் ஏறத்தாழ 3.32 கோடி இந்தியர்கள் வாழ்கிறார்கள். அவர்களில் 70% பேர் ஒன்பது நாடுகளில் இருப்பதாகப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அமெரிக்கா (46.6 இலட்சம்), சவூதி அரேபியா (40 இலட்சம்), மலேசியா (24 இலட்சம்), ஐக்கிய அரபு அமீரகம் (28 இலட்சம்) என்று வெளிநாடுவாழ் இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.
வெளிநாட்டில் குடியேறிய இந்தியர்கள், அவர்கள் குடியேறிய நாடுகளை மேம்படுத்தி இருக்கிறார்கள் என்பது மட்டுமல்லாமல், அந்த நாடுகளில் தங்களது ஆளுமையை நிலைநாட்டியும் இருக்கிறார்கள். ஏறத்தாழ 11 நாடுகளில், 28 இந்திய வம்சாவளியினர் அந்த நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருந்திருக்கிறார்கள். சிங்கப்பூரின் நாயர், நாதன், மோரீஷஸ் தீவின் பிரவீண் ஜகந்நாத், மலேசியாவின் மகாதீர் முகமது, போர்ச்சுகல் நாட்டின் அந்தோனியோ போஸ்டோ, நெதர்லாந்தின் லியோ வரத்கர் என்று ஒரு மிகப்பெரிய பட்டியலே இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் இந்திய வம்சாவளியினர் எத்தனையோ பேர் பல்வேறு நாடுகளில் அமைச்சர்களாகவும், அரச உயர் பதவிகளிலும், ராஜ தந்திரிகளாகவும், நீதிபதிகளாகவும் இருந்திருக்கிறார்கள். சுமார் 160 பாராளுமன்ற உறுப்பினர்கள், 25க்கும் அதிகமான மாநகர மேயர்கள் என்று 20க்கும் அதிகமான நாடுகளில் இந்திய வம்சாவளியினர் பதவி வகித்திருக்கின்றனர்.
இந்தியாவில் உள்ள பின்தங்கிய சமூகங்களின் கல்வி,பொருளாதார மேம்பாட்டுக்கான பல செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தும் வெளிநாடுகளில் வாழும் இந்திய இளம் தலைமுறையினர் தமது பண்பாடுகளைப் பற்றி தெளிவாக அறிந்துகொள்ளும் நோக்கிலும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பல திட்டங்களைச் செயற்படுத்தி வருகிறார்.
இந்திய அரசு பல சந்தர்ப்பங்களில் இலங்கையில் வாழும் சுமார் பதினாறு இலட்சம் இந்திய வம்சாவளி மக்களை இலங்கைத் தமிழர்களுடன் இணைத்துப்பார்த்து இரு சாராரையும் ஒன்றாகக் கணிக்க முற்பட்டது. இந்த தவறான அணுகுமுறை பற்றி பல தடவைகள் இந்திய மத்திய அரசிடம் நமது முன்னாள் தலைவர்களான அமரர்கள் சௌமியமூர்த்தி தொண்டமான் பெரியசாமி சந்திரசேகரன் ஆகிய இருவரும் மற்றும் முன்னாள் அமைச்சர் பி.பி. தேவராஜூம் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இலங்கைத் தமிழர்களை மதிக்கின்ற அதேவேளை எமது தனித்துவத்தை இந்திய அரசு அங்கிகரிக்கவேண்டும் என்பதோடு பிரதமர் மோடி அவர்களின் வழிநடத்தலின் கீழ் நடைபெறும் வெளிநாடு வாழ் இந்தியர்களை ஒன்றிணைக்கும் 17 ஆவது பிரவாசி பாரதிய திவாஸ் மகாநாடு உலகளாவிய பரந்து வாழும் இந்திய வம்சாவளி மக்களின் நலன்கள் தொடர்பாக ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்து திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பது இலங்கைவாழ் இந்திய வம்சாவளி மக்களின் எதிர்பார்ப்பாகும்.
இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி சமூகத்தவர்கள் இரட்டைக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் போது இந்திய தூதரகத்தினால் கோரப்படும் ஆவணங்கள் பலவற்றை அவர்களால் சமர்ப்பிக்க முடியாமல் உள்ளது. மறு வார்த்தைகளில் சொல்வதானால் அவர்களால் முடியாத ஆவணங்களை தூதரகம் கோருகிறது. இது விடயத்தில் தூதரகம் கவனம் செலுத்தி இரட்டைக் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு தீர்வு காணவேண்டும் என்று இந்த சந்தர்ப்பத்தில் வேண்டுகோள் விடுக்கிறோம்.
இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களின் நலன்களில் மிகுந்த அக்கறையுடன் கவனம் செலுத்தி பல செயற்றிட்டங்ளை முன்னெடுத்துவரும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இது விடயத்திலும் கருத்தூன்றிய கவனத்தைச் செலுத்தி உரிய நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.
வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் தங்கள் தாய் நாட்டிற்கு உதவ வேண்டும், தங்கள் தொப்புள் கொடி உறவு தொடர வேண்டும் எண்ணத்துடன் வாழ்கின்றனர். இலங்கையில் வாழ்கின்ற இந்திய வம்சாவளியினருக்கும் மற்றைய நாட்டில் வாழ்கின்ற இந்திய வம்சாவளியினருக்கும் பாரிய வித்தியாசங்கள் இருக்கின்றன.
சுதந்திர இலங்கையில் சுமார் ஐம்பது ஆண்டுகள் நாம் நாடாற்றவர்களாக வாழ்ந்திருக்கின்றோம். எமது அரசியல் உரிமையை இழந்திருக்கின்றோம். அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்த ஒரு சமூகத்தினை மேம்படுத்த வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
24 Nov 2024
24 Nov 2024