Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 25, திங்கட்கிழமை
Johnsan Bastiampillai / 2022 டிசெம்பர் 30 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
புருஜோத்தமன் தங்கமயில்
இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், அடிக்கடி கொழும்பு வந்து இராஜதந்திர ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புகளை நடத்திச் செல்கின்றார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தமிழ்த் தேசிய கூட்டமைபின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்டவர்களை, கடந்த சில நாள்களுக்கு முன்னரும் சந்தித்துச் சென்றிருக்கின்றார். இந்தச் சந்திப்புகள் அனைத்திலும், அண்மையில் நடைபெற்ற சர்வகட்சித் தலைவர்கள் மாநாட்டில் உரையாடப்பட்ட, இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயங்கள் பற்றிப் பேசப்பட்டிருக்கின்றன.
எதிர்வரும் சுதந்திர தினத்துக்கு முன்னராக, இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்பட வேண்டும் என்கிற அவசரத்தை ரணில் காட்டுகின்றார். சுதந்திரத்துக்கு முந்தைய இலங்கையில் தோன்றிவிட்ட தமிழர் அரசியல் பிரச்சினைக்கு, சுமார் இரண்டு மாத கால இடைவெளிக்குள் தீர்வு காண்பது என்பது, நடக்கக் கூடிய காரியமல்ல!
அப்படியான நிலையில், ரணில் காட்டும் அவசரத்துக்குப் பின்னாலுள்ள சூட்சுமங்களை அவதானிப்பது, பாதிக்கப்பட்ட தரப்பின் பிரதிநிதிகளாக பேச்சுவார்த்தை மேடைகளிலும் இராஜதந்திர ஊடாட்டங்களிலும் அமரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்த் தேசிய தரப்புக்களுக்கு முக்கியமானது.
சம்பந்தனுக்கும் சொல்ஹெய்முக்கும் இடையிலான சந்திப்பு, திங்கட்கிழமை (19) இடம்பெற்று சில மணி நேரங்களிலேயே, தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்களை சந்திப்புக்கு வருமாறு ரணில் அழைத்தார். அதன் பிரகாரம், நேற்று புதன்கிழமை மாலை அந்தச் சந்திப்பு இடம்பெற்றிருக்கின்றது. சம்பந்தன், எம்.ஏ சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்டோர் அதில் கலந்து கொண்டனர். சி.வி விக்னேஸ்வரனும், செல்வம் அடைக்கலநாதனும் கொழும்பில் இல்லாத காரணத்தால் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அவரது கட்சியும் வழக்கமாக பேச்சுகளை புறக்கணிப்பதால், அவர்கள் இந்தச் சந்திப்புக்கு அழைக்கப்பட்டார்களா இல்லை என்பது தெளிவில்லை. ஆனால், அவர்கள் கலந்து கொள்ளவில்லை.
ஜனாதிபதியாக ரணில் பதவியேற்றதும், இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவரான எரிக் சொல்ஹெய்மை, காலநிலை தொடர்பான தனது சர்வதேச ஆலோசகராக அவர் நியமித்தார்.
இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் முறிந்துவிட்ட பின்னர், சொல்ஹெய்ம் நோர்வேயில் சில காலம் அமைச்சராகப் பணியாற்றினார். பின்னரான நாள்களில் அவர், இந்தியாவை முன்னிறுத்திக் கொண்டு சுற்றுச்சசூழல் பாதுகாப்பு, காலநிலை அவதானிப்பு தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தார். அவர், இப்போது தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் ஆலோசகர் பொறுப்பிலும் இருக்கிறார்.
அப்படியான நிலையில்தான், ரணில் மீண்டும் பதவிக்கு வந்ததும் சொல்ஹெய்முக்கு ஆலோசகர் பொறுப்பொன்றை வழங்கி, இலங்கை விவகாரங்களில் நேரடியாகப் பங்கெடுப்பதற்கான முக்கியஸ்தாராக அழைத்திருக்கின்றார்.
தென் இலங்கையின் அரசியல் பிடுங்குப்பாடுகளில் சிக்காமல் இருப்பதற்காகவே, சொல்ஹெய்முக்கு ‘காலநிலை தொடர்பான சர்வதேச ஆலோசகர் பதவி’ என்கிற பெயரில் ஒரு பதவி வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால், அவரின் உண்மையான பணி அல்லது அவசியம் என்பது, சர்வதேச ரீதியில் இலங்கை இன்று சந்தித்து நிற்கும் நெருக்கடிகளில் இருந்து மீட்டெடுப்பதாகும்.
அதன்போக்கில், தமிழர் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு என்கிற விடயம் முக்கியமாகக் கருதப்பட்டு, அவை தொடர்பிலான பேச்சுகள் மீள ஆரம்பிக்கப்பட்டு இருக்கின்றன. சொல்ஹெய்ம், தனக்கு வழங்கப்பட்ட தூதுவர் பொறுப்பை அனைத்துக் காலங்களிலும், அந்தப் பொறுப்பை வழங்கிய தரப்புகளுக்கு சாதகமாக முடித்துக் கொடுத்திருக்கின்றார். அதனால்தான், புதிய பதவிப் பெயரோடு, மீண்டும் சொல்ஹெய்மை ரணில் அழைத்து வந்திருக்கின்றார்.
காலநிலை தொடர்பான ஆலோசகராக ரணிலால் சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டாலும், அது தொடர்பிலான எந்தச் செயற்பாட்டிலும் அவர் இலங்கை தொடர்பில் ஈடுபடவில்லை. மாறாக, இலங்கை வந்த அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலேயே அவர் கவனம் செலுத்தியிருக்கின்றார்.
காலநிலை மாற்றங்கள், சுற்றுச்சூழல் மாசுபாட்டால் நாடுகளுக்கு இடையில் பிணக்குகள் ஏற்பட்டு பிளவுகள் ஏற்படுவதுண்டு. அப்படியான பிணக்குகளை சுற்றுச் சூழலியலாளர்களும் இராஜதந்திரகளும் பேச்சுவார்த்தைகளை நடத்தி முடித்துக் கொள்வது உலக வழக்கம்தான்.
ஆனால், இலங்கையின் இனமுரண்பாடு என்பது, சுற்றுச்சூழலியலாளர்கள் தீர்த்து வைக்கும் அளவுக்கானது அல்ல. அது, பௌத்த சிங்கள மேலாதிக்கக்க அடக்குமுறைகளால் எழுந்தது. அதைக் கையாள்வது என்பது, இலகுவான ஒன்றுமல்ல. ஏனெனில், இலங்கையில் ஆட்சி அதிகாரங்களை அடைவதற்கான ஒற்றை வழி, பௌத்த சிங்கள மேலாதிக்க சிந்தனையின் வழியாக இயங்குவதும், இயக்குவதுமாகும்.
அப்படியான நிலையில், அந்த மனநிலையை மாற்றாமல், முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பது என்பது நடக்கக் கூடிய காரியமல்ல. அப்படியான நிலையில், சொல்ஹெய்மின் மீள்வருகையை ‘கண்ணில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு’ கவனித்தாக வேண்டும்.
சொல்ஹெய்ம் நோர்வேயில் இருந்து கொழும்புக்கு வரும் வழியிலோ, அல்லது திரும்பிச் செல்லும் போதே புதுடெல்லியில் தங்கி, இந்திய இராஜதந்திரிகளைச் சந்திப்பது வழக்கமான செயற்பாடு. இது, இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இடம்பெற்ற காலத்திலேயே வழக்கம்.
அப்படியான நிலையில், சொல்ஹெய்மின் மீள் வருகை என்பது புதுடெல்லியின் ஆசிர்வாதம் இல்லாமல் ரணிலால் நிகழ்த்தப்பட்ட ஒன்றாகவும் கருத வேண்டியதில்லை. சொல்ஹெய்ம், புதுடெல்லியை தன்னுடைய இன்னொரு வாழ்விடம் மாதிரியே கையாண்டு வருகின்றார். அவருக்கு புதுடெல்லியின் இராதஜந்திர தரப்புகளோடு இருக்கும் இணக்கமும் நெருக்கமும், இங்குள்ள எந்த தமிழ்த் தேசிய கட்சிகளுக்கும் இல்லை. தமிழ்க் கட்சிகளால் இராஜதந்திர ரீதியாக இந்தியாவின் முக்கிய தரப்புகளை கையாள முடியவில்லை. அந்த இடங்களில் எல்லாம், சொல்ஹெய்ம் மிக நெருக்கத்தோடு இயங்குபவர்.
எப்போதுமே, இலகுவாக கையாளக் கூடிய தரப்புகளை, அதாவது அடிமை சேவகம் செய்யக்கூடிய தரப்புகளை இராதந்திர கட்டமைப்பு, கடைநிலையில் வைத்தே அணுகும். முக்கிய தீர்மானங்களை எல்லாம் எடுத்துவிட்டு, அதனை செய்வதற்கான ஏவல் தரப்புகளாக மட்டுமே கையாள நினைக்கும். அப்படியான நிலையில், தமிழ்க் கட்சிகளின் புதுடெல்லியுடனான உறவு என்பது, பெரும்பாலும் ஏஜமானுக்கும் ஏவலாளிக்கும் இடையிலானது பொன்றதே! அதனாலும், சொல்ஹெய்மின் நடவடிக்கைகளை கவனிக்க வேண்டியது தவிர்க்க முடியாதது.
இந்தியப் புலனாய்வுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர், இரகசியமாக ரணிலை சந்தித்துச் சென்ற விடயம் கொழும்பில் புகைந்து கொண்டிருக்கின்றது. பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவுகளைச் சந்திக்காத ஒரு சூழல் நிலவுமாக இருந்தால், இந்தியா புலனாய்வுத்துறை அதிகாரியின் வருகையை தென் இலங்கை பெரிய விடயமாக்கி ரணிலை அலைக்கழித்திருக்கும். ஆனால், தற்போதைய நெருக்கடி நிலைமை, தென் இலங்கை கட்சிகளையும், பௌத்த சிங்கள மேலாதிக்க தரப்புகளை எல்லாம் வாயை மூடிக்கொண்டிருக்க வைத்திருக்கின்றன.
நாடு இன்று சந்தித்திருக்கின்ற நெருக்கடிகளில் இருந்து, எப்படியாவது மீள வேண்டும் என்பது தென் இலங்கையின் எதிர்பார்ப்பு. அதற்காக ரணிலின் அனைத்து நகர்வுகளையும் ஆமோதித்து அமைதியாக இருக்கின்றன. அதனை தன்னுடைய அரசியல் வெற்றிகளுக்காகவும் ரணில் கையாள முனைகின்றார்.
அடுத்த ஆண்டு முதல் தொடர்ச்சியான தேர்தல்களை, நாடு எதிர்கொள்ளப் போகின்றது. தென் இலங்கையின் உணர்நிலை, ராஜபக்ஷர்களுக்கும் ரணிலுக்கும் எதிரானதாகவே இப்போது இருக்கின்றது. அதனால், அதனை மாற்றுவதற்கான உத்திகளின் போக்கிலும், சொல்ஹெய்மைக் கொண்டு விடயங்களை ரணில் கையாள நினைக்கின்றார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷர்களின் ஆதரவோடு ரணில் போட்டியிடுவார். ஆனால், அந்த ஆதரவு நிலை, அவருக்கு வெற்றியை பெற்றுக்கொடுக்க போதுமானதாக இருக்காது. எப்படியும், சஜித் அவரின் வெற்றியை தென் இலங்கை வாக்குகளைக் கொண்டு தடுப்பார். அந்த வாக்குகளோடு, வடக்கு கிழக்கு மக்களின் வாக்கும் இணைந்தால் சஜித் இலகுவாக வென்றுவிடுவார்.
அந்த நிலையை உணர்ந்து கொண்டுதான், வடக்கு கிழக்கு வாக்குகளை கணிசமாக கவர்ந்திழுக்கும் நோக்கில், இரண்டு மாதங்களுக்கு தீர்வு என்ற விடயத்தை ரணில் கையாளத் தொடங்கி இருக்கின்றார். அதன்மூலம், தமிழ்த் தரப்புகளை முழுமையாக தன் பக்கத்துக்கு நகர்த்த முடியாவிட்டாலும், பகுதி பகுதிகளாக உடைத்து விடவாவது முடியும் என்பது அவரது எதிர்பார்ப்பு.
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு, தான் பதவியேற்ற குறுகிய காலத்துக்குள்ளேயே தீர்வை வழங்கிவிட்டேன் என்ற பிம்பத்தை நிறுவி, மேற்குநாடுகளை இலகுவாக கையாள ரணில் இன்னொரு பக்கம் முனைகிறார். அதன் மூலம் பொருளாதார பின்னடைவுகளில் இருந்து உதவிகளைப் பெற்று விடுபட முடியும்.
தென் இலங்கை இப்போது எதிர்பார்ப்பது பொருளாதார பின்னடைவில் இருந்து மீட்பதற்கான ஒரு மீட்பரையே! அப்படியான நிலையில், தமிழர்களுக்கு தீர்வு என்ற ஒரு கல்லைக் கொண்டு, இரண்டு மூன்று காய்களை அடிக்க நினைக்கிறார் ரணில். அவரின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றவே சொல்ஹெய்ம் வந்திருக்கிறார்.
இதைப் புரிந்து கொண்டு கவனமாகச் செயற்பட வேண்டியது, பொறுப்புள்ள தமிழ்த் தரப்புகளின் முதல் வேலை. இதைப் புறந்தள்ளிவிட்டு நின்று, தமிழ் மக்களின் தலைகளில் அழுகிய மூட்டைகளை ஏற்றிவைக்கக் கூடாது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
24 Nov 2024
24 Nov 2024