Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை
Janu / 2024 செப்டெம்பர் 17 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
ஜனாதிபதித் தேர்தல் களம் சூடுபிடித்துக் கொண்டு இருக்கின்றது. முன்னர் கருத்துக் கணிப்புபக்களில் எதிர்வு கூறப்பட்ட அனுமானங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. அதற்குப் பின்னால் பல காய்கள் நகர்த்தப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட இந்த சூடு, ஒரு நெருப்பாகமாறி விடுமோ என்ற அச்சம் அதிகரிப்பதையும் தவிர்க்க முடியாதுள்ளது.
இலங்கையில் இம்மாதம் 21ஆம் திகதிநடைபெறும் என எதிர்பார்க்கப்படுவது ஒரு ஜனாதிபதித் தேர்தல் என்றாலும் கூட, இந்தத் தேர்தலின் ஊடாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியையேனும் அடைந்துகொள்வதற்காகவும், இன்னும் ஐந்தாறு வருடங்களில் ஜனாதிபதி, பிரதமர் அரியாசனத்தில் ஏறும் கனவோடும் போட்டியிடுகின் றவேட்பாளர்களும் உள்ளனர் என்பதை உண்மையகும்.
மிக முக்கியமாக இலங்கையில் நடக்கின்ற தேர்தல்கள் ஆட்சி மாற்றங்களில் வெளிநாட்டுச் சக்திகளின் செல்வாக்கு தொடர்ச்சியாக இருந்து வருகின்றது. இம் முறைதேர்தலில் சீனா, இந்தியா,அமெரிக்கா ஆகிய நாடுகள் தம்முடைய அரசியலைச் செய்து,செல்வாக்கை உறுதிப்படுத்திக் கொள்ள முனைகின்றன என்பதை மறந்துவிடக் கூடாது.
பிரதான வேட்பாளர்களில் தலா ஒருவரை பிரதான தெரிவாக இந்த நாடுகள் கொண்டுள்ளன. அவர்களது விருப்பத்திற்குரிய வேட்பாளர் வெற்றிபெறாவிட்டால் வெற்றிபெறக் கூடியவரை தமக்கு ஆதரவானவராக மாற்றுவதற்கு இராஜதந்திரக் காய்கள் நகர்த்தப்படுகின்றன.
தான் வெற்றி பெறமுடியாது என்று ஒரு வேட்பானர் கருதுமிடத்து அல்லது தனக்கு ஆதரவான ஒரு வேட்பாளரை ஜனாதிபதியாக்க முடியாமல் போகலாம் என உள்நாட்டு,வெளிநாட்டுச் சக்திகள் முன்கணிக்குமிடத்து, குட்டையைக் குழப்புவதற்கான வாய்ப்புக்கள் இன்னும் இருப்பதாகவே அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதாவது, மக்களுக்கு வெளிப்படையாக தெரிகின்ற அரசியலுக்கு பின்னால் திரைமறைவு அரசியல் மூலோபாயங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. அதன் காரணமாகவே தேர்தல் நடக்குமா ,அப்படி நடந்தாலும் அமைதியான,நீதியான வாக்கெடுப்பாக அமையுமா? வாக்களிப்பு முடிந்தாலும் சுமுகமான முறையில் அடுத்த ஜனாதிபதி பதவியேற்க முடியாதவாறு குழப்பங்கள் தலைதூக்குமா என்று சிந்திக்க வேண்டியுள்ளது.
எனவே எந்தநேரத்திலும் களநிலைமைகள் மாறலாம், கொதிநிலை அடையலாம் என்ற அடிப்படையில் நாட்டுமக்கள் மிகவும் அவதானமாகவும் பொறுப்புடனும் நடந்துகொள்ள வேண்டியது அவசியம் என்பதை இப்பத்தி வலியுறுத்துகின்றது.
இந்தமுறை ஜனாதிபதித் தேர்தல்களம் மிக வித்தியாசமானது. குறிப்பாக எந்தவொரு பிரதான ஜனாதிபதி வேட்பாளரையும் சிறுபான்மை இனத்திற்கு எதிரானவர் அல்லது இனவாதி என முத்திரைகுத்த முடியாதநிலை உள்ளது. இந்த தேர்தலில்; ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச,அனுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலேயே பலத்த போட்டி நிலவுகின்றது.
நாமல் ராஜபக்ச, விஜயதாச ராஜபக்ச, சரத் பொன்சேகா, திலித் ஜயவீர உள்ளிட்ட ஏனைய 36 வேட்பாளர்களும் சில இலட்சம் வாக்குகளைப் பங்குபோட்டுக் கொள்வார்கள். வாக்குகளை உடைப்பார்கள். அதைவிட வேறொன்றும் நடந்துவிடப் போவதில்லை என்றே கணிக்க முடிகின்றது.
சீனாவும், இந்தியாவும்,அமெரிக்காவும் தலா ஒவ்வொரு பிரதான வேட்பானர்களுள் ஒருவருக்கு பின்னால் நிற்கின்றன ஆனால், வெற்றி வேறுஒருவர் பக்கம் சாயுமாயின் அதனை குழப்பியடிப்பதற்கு அல்லது உடனடியாக நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு அடுத்த ஜனாதிபதியாகும் நபருக்கு துணைநிற்பதற்கு உலக அரசியல் தயங்காது என்பதையும் நாம் நினைவிற் கொள்ளவேண்டும்.
பிரதான மூன்று வேட்பாளர்களிடையே பிளஸ்களும் மைனஸ்களும் உள்ளன. நாட்டுக்கும், சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் சாதகமான,பாதகமான விளைவுகளை கொண்டுவரக்கூடிய ஆற்றல் எல்லோரிடமும் இருக்கின்றது.
இந்தப் பின்னணியில், ஆரம்பத்தில் வெளியான பலகருத்துக் கணிப்புக்களில் சஜித் வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டது. சில கருத்துக்கணிப்புக்கள் ரணில் விக்கிரமசிங்வுக்கான வெற்றியை முன்னறிவிப்புச் செய்தன. இதற்கிடையில், அனுரகுமாரவுக்கான ஆதரவு முன்னரைவிட அதிகரித்துள்ளதை பலரும் அவதானிக்கத் தவறில்லை.
இந்நிலையிலேயே, பிரதான முஸ்லிம் கட்சிகளான முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் ஆகியன சஜித்தை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்தன. தேசிய காங்கிரஸ் கட்சியும் வேறுசில முஸ்லிம் எம்.பிக்களும் ரணிலின் வெற்றிக்காக பிரசாரம் செய்கின்றன. தேசிய ரீதியாக தமிழ் அசசியல் வாதிகளும் இவ்விதமே இரு வேட்பாளர்களையும் ஆதரிக்கின்றனர்.
சம காலத்தில்,வடக்கு கிழக்கின் சில தமிழ் அரசியல் தரப்புக்கள் தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் எம்.பி. அரிநேத்திரனை களமிறக்கியுள்ளன. தமிழரசுக் கட்சியானது சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக முடிவெடுத்தாலும் அந்த முடிவை கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்டோர் எதிர்க்கின்றனர். இந்த நிலையில் மாவையை ஜனாதிபதி ரணில் சந்தித்துள்ளார்.
ரணிலும் சஜித்தும் அதிகாரப் பகிர்வு பற்றி தம்முடைய தேர்தல் விஞ்ஞாபனங்களில் அறிவித்துள்ளனர். 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக சஜித் கூறியுள்ளார். 13 இன் பிரகாரம் அதிகாரங்களைப் பகிர்வதுடன் காணி அதிகாரங்கள் பற்றி முடிவெடுக்கும் அதிகாரம் புதிய பாராளுமன்றத்திற்குப் பாரப்படுத்தப்படும் என்று ரணில் விக்கிரமசிங்க தனது விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளார்.
13ஆவது திருத்தம் என்பது அரசியலமைப்பில் இருக்கின்ற விடயமாகும். எனவே அதனை நடைமுறைப்படுத்துவது தவறு என்று யாரும் கூற முடியாது. ஆனால், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்படுவதையும், குறிப்பாக பொலிஸ்,காணி அதிகாரங்கள் பகிரப்படுவதையும் முஸ்லிம் சமூகம் விரும்பவில்லை.
நிலைமை இப்படியிருக்க, அதிகாரங்களைப் பகிரப் போவதாக கூறுகின்ற சஜித்தையும், ரணிலையும் ஆதரிக்கின்ற முஸ்லிம் அரசியல் வாதிகள் இது பற்றிச் சிந்தித்தார்களா என்று முஸ்லிம்கள் சிந்திக்க தொடங்கியுள்ளனர். ஆயினும், இது விடயத்தில் முஸ்லிம்களின் நலன் எந்தளவுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது என்பதை இதுவரை எந்த முஸ்லிம் தலைவரும் சொல்லவில்லை.
இதேவேளை, 13அவது திருத்த அமுலாக்கத்தைமையமாகக் கொண்டே சுமந்திரன் தலைமையிலான தமிழரசுக் கட்சி அணி சஜித்தை ஆதரிக்கும் தீர்மானத்தை எடுத்துள்ளது என்ற செய்தி தமிழ் மக்கள் மத்தியில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தினாலும். அது பிரசாரமாகப்படும் போது சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களிடையே சஜித் விடயத்தில் பாதகமான பார்வைகளே உருவாகலாம்.
இந்தப் பின்னணியில், தனியனாக வந்து பிரதமராகி, ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கவுக்கான ஆதரவுத் தளம் ஒரு மிதமான மட்டத்தில் இருப்பதாக கூறப்படுகின்றது. ஏனெனில், 2022 இற்குப் பிறகு அவர் பற்றிய ஒரு நல்லபிப்பிராயம் ஏற்பட்டுள்ளது. சஜித் பற்றி 2019 இல் இருந்தவர் மாறியிருக்கின்ற சூழலில், ஆதரவுத் தளத்தின் ஏறுமுகபோக்கு மெதுவடைந்துள்ளதாக அவதானிகள் கூறுகின்றனர்.
சமகாலத்தில்,அனுர குமாரவுக்கான ஆதரவுத்தளம் ஆரம்பத்தில் குறைந்த மட்டத்திலேயே இருந்தது. ஆனால், இப்போது ஆதரவு அலை அதிகரித்திருக்கின்றது அல்லது நுட்பமான தேர்தல் பிரசாரங்கள், ஊடக செய்திகளின் மூலம் அப்படியான ஒருமாயத் தோற்றப்பாடு கட்டமைக்கப்பட்டு வருகின்றது எனலாம். குறிப்பாக வழக்கம் போல ஜேவிபி அணி இளைஞர்களை குறிவைத்துள்ளது.
எனவே, மாறிக் கொண்டிருக்கின்ற களத்தில் தம்முடைய வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு பிரதான வேட்பாளர்கள் 'எதுவும் செய்வதற்கு' பின்வாங்க மாட்டார்கள் என்பதையும். ஏனைய வேட்பாளர்களை குழப்புவார்கள் என்பதையும், தமக்கு ஆதரவான நபரை இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக்க சீனாவும் இந்தியாவும் அமெரிக்காவும் காய் நகர்த்தும் என்பதையும் மக்கள் விளங்கிக் கொள்ளவேண்டும்.
ஆனால், ‘மாற்றம்' என்று கதைக்கின்றவர்கள் உட்பட யார் ஜனாதிபதியானாலும் குறுகியகாலத்தில் நாட்டில் நாம் நினைக்கின்றபடி எல்லாவற்றையும் மாற்றிவிட் முடியாது என்பதே நடைமுறை யதார்த்தமாகும் .ஆகவே ஒப்பீடடளவில் யார் பரவாயில்லை என்பதுதான் இங்குமக்களால் எடுக்கப்படவேண்டிய முடிவாகும்.
தேர்தல் பிரசாரங்கள் முடிவடைந்து தேர்தல் நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்டு, அடுத்த ஜனாதிபதி பதவியேற்பதற்கு இடைப்பட்ட காலத்தில் நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டு விடுமா என்ற அச்சத்தையே விடயமறிந்த பலர் இப்போது முன்வைக்கின்றனர்.
கண் மூடித்தனமாக ஒரு குறிப்பிட்ட அரசியவ்வாதிகளுக்குப் பின்னால் சென்ற ஆதரவாளர்களை, மக்களை அந்த அரசியல்வாதிகள் ஆபத்தான வேளைகளில் காப்பாற்றியதும் இல்லை, நன்றிக்கடன் செலுத்தியது மில்லை. நெருக்கடியான நேரத்தில் கைவிட்டோடியது தான் வரலாறு
எனவே, வெளிப்படையான அரசியலை புரிந்துகொள்வது மட்டுமன்றி மறைமுக நகர்வுகள், ஆபத்துகள் பற்றியும் மக்கள் மிக அவதானமாகவும் பொறுப்புடனும் தெளிவுடனும் செயற்படவேண்டும்.
இல்லாவிட்டால் இந்த அமைதியின்மைக்குள் மக்கள்தான் பலிக்கடா ஆவார்கள்.
10.09.2024
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago