2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

சுதந்திரம் பறிக்கப்பட்ட நாளில் விடுதலைக்காகத் திரள்தல்

Johnsan Bastiampillai   / 2021 பெப்ரவரி 04 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-புருஜோத்தமன் தங்கமயில்

இலங்கையின் 73ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. முதல் ஒன்றிரண்டு சுதந்திர தினங்களுக்குப் பின்னரான அனைத்துச் சுதந்திர தினங்களும், அதுசார் நிகழ்ச்சிகளும் ‘ஒரே இனம், ஒரே மதம், ஒரே தேசியம்’ என்கிற பௌத்த சிங்களப் பேரினவாத நிகழ்ச்சி நிரலின் போக்கிலேயே, முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றன.

நாட்டிலுள்ள தமிழர்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட  இன, மத சிறுபான்மை சமூகங்கள், இலங்கையின் சுதந்திர தினங்களோடு தங்களைப் பொருத்திப் பார்ப்பதற்கான கட்டங்கள், நிராகரிக்கப்பட்டு இருக்கின்றன. 

சுதந்திரம் என்கிற சொல்லின் அர்த்தமும் அதுசார் ஆன்மாவும், இலங்கையிலுள்ள சிறுபான்மைச் சமூகங்களிடமிருந்து, தென் இலங்கையால் பறிக்கப்பட்டு இருக்கின்றன. தமிழ், முஸ்லிம் மக்களுக்கு மட்டுமல்ல, பௌத்தர்கள் அல்லாத சிங்களவர்களின் நிலையும் இன்றைக்குக் கிட்டத்தட்ட அதுதான்!

இந்த நாட்டில், சுதந்திரத்தை உணர்ந்து கொள்ள வேண்டுமானால் நீங்கள், பௌத்த சிங்களவர்களாக வேண்டும். பௌத்தத்தை முன்னிறுத்தியே, இந்த நாட்டின் ஆட்சியும் அரசியலும் அதுசார் உரிமைகளும் முனைப்புப் பெறுகின்றன. 

இலங்கையின் மேற்குக் கரைகளில், குறிப்பாக புத்தளம் தொடங்கி நீர்கொழும்பு வரை வாழ்ந்த தமிழ் மக்களின் தொண்ணூறு சதவீதமானவர்கள், சிங்களவர்களாகக் கரைந்துவிட்டார்கள். அவர்களின் பட்டானும் முப்பாட்டனும் தமிழர்களாக, கத்தோலிக்கர்களாக வாழ்ந்த வாழ்க்கை மறக்கப்பட்டுவிட்டது. தனிச் சிங்களவர்களுக்கான அடையாளங்களுக்காகப் பாரம்பரிய மொழியை மாத்திரமல்ல, தாங்கள் சார்ந்திருந்த கத்தோலிக்க மதத்தையும் விட்டு விலகுவதற்கு, அந்த மக்கள் தயாராகிவிட்டார்கள். 

தென் இலங்கையின் பல தமிழ், முஸ்லிம் கிராமங்கள் இப்படித் தனிச் சிங்களக் கிராமங்களாக, கடந்த 70 ஆண்டுகளில் மாறியிருக்கின்றன; மாற்றப்பட்டிருக்கின்றன. அப்படியான நிலையொன்றுக்குச் செல்வதைத்தான், தென் இலங்கையின் ஆட்சியாளர்கள் வலியுறுத்துகிறார்கள். 

அதற்கு எதிராகச் சிறு புல்லாக எழுந்து நின்றாலும், அதை புல்டோசர் கொண்டு அழிக்கும் மனநிலையில்தான், ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். இவ்வாறான மனநிலையில் நின்று கொண்டுதான், சுதந்திரம் பற்றியும் சமாதானம் பற்றியும் அவர்கள் போதிக்கிறார்கள்.

இலங்கை, பிரித்தானிய கொலனித்துவத்தில் இருந்து விடுதலை பெற்ற காலம் முதல், தமிழ் பேசும் மக்களின் தாயகப் பகுதியான வடக்கு - கிழக்கை நோக்கிய, பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பு, தென் இலங்கை ஆட்சியாளர்களால் ஆரம்பிக்கப்பட்டது. 

தமிழ் மக்களின் பாரம்பரிய அடையாளங்களை அழித்து, அவற்றுக்குப் பௌத்த அடையாளங்கள் சூட்டி, அந்த நிலத்தின் பூர்வீகக்குடிகளான தமிழ் மக்களைச் சிறிய நிலப்பரப்புக்குள் சுருக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

அரச காணிகளில் மாத்திரமல்ல, தமிழ் மக்களின் சொந்தக் காணிகளிலும் இராணுவமும் தொல்பொருள் திணைக்களமும் இணைந்து, பௌத்த விகாரைகளைக் கட்டுகின்றன.

தென் இலங்கை, சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் திளைத்திருக்க, வடக்கு - கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழ் பேசும் மக்கள், தங்களது அடிப்படை உரிமைகளை வலியுறுத்திப் போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள். குறிப்பாக, ‘பொத்துவில் தொடங்கி பொலிகண்டி’ வரையிலான தொடர் போராட்டமொன்று, இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியிலும் நேற்று (03)  புதன்கிழமை தொடங்கி, நடைபெற்று வருகின்றது. 

ஏனைய சமூகங்களுக்கான சுதந்திரத்தை மறுத்தவர்கள், சுதந்திர தினத்தைக் கொண்டாட, சுதந்திரம் மறுக்கப்பட்டவர்கள், சுதந்திரத்துக்காகவும் விடுதலைக்காகவும் போராடுகிறார்கள். இதுதான், இலங்கையின் ஒரே யதார்த்தம். 

மதம், மார்க்கம் போன்ற உரிமை தொடங்கி, எந்தவித அடிப்படை உரிமையையும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு வழங்கக் கூடாது என்பதில், தென் இலங்கை குறியாக இருக்கின்றது. ஜனநாயக வழிப் போராட்டங்களை நடத்தினால்கூட, நீதிமன்றத்தினூடான தடையுத்தரவு தொடங்கி, புலனாய்வு அச்சுறுத்தல், இராணுவக் கெடுபிடி என்று அனைத்து வகையிலான அத்துமீறல்களும் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

 “...நீங்கள் இறந்தவர்களைப் புதைக்க முடியாது; அவர்களை நினைவுகூர முடியாது; அவர்களுக்காகக் கண்ணீர் சிந்த முடியாது; அவர்களின் அடையாளங்களைப் பேண முடியாது...” என்ற இராணுவ சிந்தையும், தாழ்வுச் சிக்கலும் ஒருங்கே பெற்றவர்களின் மனநிலைக்கும் உத்தரவுகளுக்கும் எதிராக நின்றுதான், தமிழ் பேசும் மக்கள் போராட வேண்டியிருக்கின்றது. அடிப்படை ஜனநாயகம் அனுமதிக்கின்ற எதையுமே அனுமதிக்காத இராணுவ, தாழ்வுச் சிக்கலுள்ள தென் இலங்கை மனநிலைக்கு எதிராகப் போராடுவது என்பது, அவ்வளவு இலகுவான ஒன்றல்ல. 

ஒவ்வோர் அடக்குமுறையையும் ஜனநாயக ரீதியாக எதிர்கொண்டாலும், மீண்டும் புதிய வடிவில் அடக்குமுறையை ஏவுகின்றார்கள். அவற்றை எதிர்கொள்வது என்பது, ஒருசில தனி நபர்களாலோ, கட்சிகளாலோ, அமைப்புகளாலோ மாத்திரம் செய்ய முடியாது. அதற்குத்தான் ‘சமூகமாகத் திரள்தல்’ என்கிற விடயம் முக்கியமானது. 

சமூக விரோதச் செயற்பாடுகளுக்காக அல்லாமல், சமூக முன்னேற்றத்துக்காக, அடிப்படை உரிமைகளுக்காகச் ‘சமூகமாகத் திரள்தல்’ என்பது, மனித விடுதலையில் முதற்படி. 

கடந்த எழுபது வருடங்களாக விடுதலைக்காக, சுயநிர்ணய உரிமைக்காகப் போராடி வருகின்ற தமிழ் மக்கள், அந்த விடுதலைக்கான உணர்வை எந்தவொரு காரணத்துக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது. சமூகமாகத் திரண்டு, ஜனநாயகப் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும்.

இறுதி மோதல்களுக்குப் பின்னரான கடந்த பதினொரு ஆண்டுகளில், முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குள் இருந்து மீண்டெழுதல் தொடங்கி, போராட்ட வடிவத்தை மீளமைத்து, அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லுதல் வரையில், சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு இருக்கின்றன. 

இறுதி மோதல்களுக்குப் பின்னரான நாள்களில், சில அரசியல் தலைவர்களிடமும், அமைப்புகளிடமும் பேணப்பட்ட ஜனநாயகப் போராட்ட வடிவம், 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தோடு தமிழ் மக்களிடம் பெருமளவு கடத்தப்பட்டு இருக்கின்றது.‘சமூகமாகத் திரள்வது’ பற்றிய நம்பிக்கைகள் ஏற்படுத்தப்பட்டது. அதுதான், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம், காணி விடுவிப்புக்கான போராட்டம் என்பன, ஆயிரம் நாள்களைத் தாண்டி, நீள்வதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தியது. ‘எழுக தமிழ்’ போன்ற பேரெழுச்சிப் போராட்டங்களைக் கட்டமைத்தது. 

இப்போது, மீண்டும் 2015க்கு முந்தைய நிலைமை. ஆனால், அதை ஜனநாயக வழியில் எதிர்கொள்வதற்கான தைரியம், சமூகமாகத் திரள்வதனூடாகத் தமிழ் மக்களிடம் ஏற்பட்டிருக்கின்றது. அது, எவ்வகையிலான தடைகள் வந்தாலும், அதை எதிர்கொள்ளும் திடத்தைக் கொடுத்திருக்கின்றது. தொடர்ச்சியாகப் போராடும் ஒரு சமூகத்துக்கு, அது மிகவும் அவசியமானது.

‘பொத்துவில் தொடங்கி பொலிகண்டி’ வரையிலான தமிழ் மக்களின் கவனயீர்ப்புப் போராட்டத்துக்கு எதிரான நீதிமன்றத் தடை உத்தரவுகளை, சமூக ஒருங்கிணைவு, மக்கள் திரட்சி ஊடாக வலிதற்றதாக்கலாம். 

அரசியல் தலைவர்களையும் ஊடகவியலாளர்களையும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் போராட்டங்களில் பங்குபற்றத் தடை விதிக்கும் உத்தரவுகளை நீதிமன்றங்கள் ஊடாகப் பொலிஸார் பெற்றுவருகிறார்கள். அது, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடங்கி, ஜனநாயகப் போராட்டங்கள் எதுவானாலும், அவற்றை முடக்குவதற்காகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறான அடக்குமுறைக் கட்டங்களை, கட்சிகள், அமைப்புகளின் ஒருங்கிணைவாலும் மக்களின் சமூகத் திரள்வாலும்தான் கடக்க முடியும்.

பொத்துவிலில் நேற்று ஆரம்பித்த கவனயீர்ப்புப் போராட்டத்தை, பொலிகண்டியில் முடிக்கும் வரையில், தமிழ் மக்கள் ஒன்றிணைந்திருக்க வேண்டும். 

ஒவ்வொரு கட்டத்திலும் புதிய புதிய வழியில், தமிழ் மக்களின் போராட்டத்தை தென் இலங்கை முடக்க முனையும். அதைச் சட்டப் போராட்டத்தை நடத்தியும், ஜனநாயக வழியில் புதிய யுத்திகளைக் கண்டடைந்தும் கடக்க வேண்டும். அதுதான், தொடர் அடக்குமுறையாளர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக அடக்குமுறைக்குள் உள்ளாகிவரும் தமிழ் மக்கள் செய்ய வேண்டியது. 

பொத்துவில் தொடங்கிய போராட்டம் பொலிகண்டியோடு நின்றுவிடாமல், சர்வதேசம் வரையில் தொட வேண்டும். அது, உரிமைகள் பறிக்கப்பட்ட தமிழ் மக்களின் சுதந்திரத்தை மீட்டெடுக்கும் அளவுக்கான விடய ஞானம், தெளிவு, திட்டமிடல், ஒருங்கிணைவோடு நிகழ வேண்டும். 

தனது சுதந்திரம் பறிக்கப்பட்ட ஒரு சமூகம், அதே நாளில் அதற்கான சபதத்தை ஏற்பதைத்தவிர, வேறு தெரிவுகள் இருக்க முடியாது. தமிழ் மக்களின் முன்னால் உள்ளதும் அந்தத் தெரிவு மாத்திரமே.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .