2024 நவம்பர் 25, திங்கட்கிழமை

சுதந்திரத்துக்கு வயது 74: திரும்பிப் பார்த்தால் தேசிய ஒற்றுமையைக் காணோம்

Johnsan Bastiampillai   / 2022 பெப்ரவரி 09 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

எம்.எஸ்.எம். ஐயூப்

 

 

 

இலங்கையின் சனத்தொகையில் பெரும்பாலானவர்கள், இலங்கையை ஒரு சுதந்திர நாடாக ஏற்றுக் கொள்கிறார்கள் இல்லைப் போலும்! இலங்கையில் வெளியாகும் பத்திரிகைகளைப் பார்க்கும் போது, அவ்வாறுதான் சிந்திக்கத் தோன்றுகிறது.

பேரினவாதத்தால் பல்வேறு விதமாகப் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினர், குறிப்பாகத் தமிழ் மக்கள், தாம் இரண்டாந்தரப் பிரஜைகளாக மதிக்கப்படுவதாகவும் அதனால் கொண்டாடக்கூடிய சுதந்திரம் நாட்டில் இல்லை என்றும் நீண்ட காலமாகக் கூறி வருகின்றனர்.

ஆனால், பெரும்பான்மை இனத்தவர்களும் வேறு காரணங்களுக்காக நாட்டில் சுதந்திரம் இல்லை என்று கருதுவதாகவே, சிங்கள மற்றும் ஆங்கில பத்திரிகைகளில், சிங்கள மக்கள் தெரிவிக்கும் கருத்துகளையும் கேலிச்சித்திரங்களையும் அவர்களின் சமூக வலைத்தள பதிவுகளையும் பார்க்கும் போது தெரிகிறது.

பொதுவாக, பிரிட்டனின் ஆட்சியிலிருந்து இலங்கை சுதந்திரம் அடைந்தமையால், நாடு பெரும் நன்மை அடைந்துள்ளது என்ற கருத்தைத் தெரிவித்தும், அதற்காகப் பாடுபட்ட அரசியல் தலைவர்களைப் பாராட்டியுமே அண்மைக் காலம் வரை, பத்திரிகைகளில் கட்டுரைகள் வெளியாகின.

ஆனால், இப்போது நாடு சுதந்திரம் அடைந்ததை அடுத்து, இந்நாட்டுத் தலைவர்களின் கீழ், நாடு எவ்வாறு சீரழிந்துள்ளது என்பதையே பெரும்பாலான கட்டுரையாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இவ்வருட சுதந்திர தினத்தையொட்டிய கட்டுரைகளில் பெரும்பாலானவை, அது போன்ற கருத்துகளையே முன்வைத்திருந்தன.

உண்மை தான்! ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து நாடு சுதந்திரமடைந்து, 74 ஆண்டுகள் சென்றுள்ள நிலையில், இலங்கை ஏறத்தாழ வங்குரோத்து அடைந்த நாடாகவே இருக்கிறது. கூலி வேலை செய்து வாழும் ஏழைகளைப் போல், அன்றாடம் ஏதாவது தேடிச் சாப்பிடும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. “ஒரு வாரத்துக்குத் தான் எண்ணெய் இருக்கிறது”; “10 நாள்களுக்குத் தான் மின்சாரத்தை வழங்க முடியும்” என்று அமைச்சர்கள் கூறுவதை, இந்நாள்களில் அடிக்கடி கேட்கிறோம்; பார்க்கிறோம்.

மாபெரும் வெளிநாட்டு செலாவணி பிரச்சினையை,  நாடு எதிர்நோக்கி இருப்பதன் காரணமாக, அடுத்த இரண்டொரு மாதங்களில் எவ்வாறு உணவுப் பிரச்சினையை, நாடு எதிர்நோக்கப் போகிறது என்பதை, நாட்டில் சிறந்த பொருளியல் நிபுணர்களாலும் கூற முடியவில்லை.

சுதந்திரம் அடையும் போது, செலவை விட வரவு அதிகமாக இருந்த நாடாக, இலங்கை இருந்தமையை இங்கு சுட்டிக்காட்டல் தகும்.
சுதந்திரத்தை முறையாகப் பாவித்து, நாட்டு வளங்களை முறையாகப் பயன்படுத்தி, மக்களின் வாழ்க்கையை வளம்பெறச் செய்ய, சுதந்திரத்தின் பின்னர் அடுத்தடுத்து அதிகாரத்துக்கு வந்த தலைவர்களால் முடியாமல் போய்விட்டது. ஆனால், சுதந்திர தினம் என்பது நாட்டில் முக்கியமானதொரு தினம் என்பதில் சந்தேகம் இல்லை.

நாம், சுதந்திரத்தின் பின்னர் நாளுக்கு நாள் அதள பாதாளத்துக்குள் வீழ்ந்தமை உண்மையாயினும், அதற்குக் காரணம் சுதந்திரம் அல்ல.
எனவே, சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதில் தவறில்லை. ஆனால், வெளிநாடுகளிடம் கையேந்தி, எண்ணெய்யைக் கடனுக்குப் பெற்று, அதை பாவித்து வான் சாகசங்களை நடத்துவதானது அல்லது, ஏதோ நாம் பாரிய ஆயுத பலத்தைக் கொண்ட நாட்டைப் போல் ஆயுதப் பலத்தை காட்ட, கடனுக்குப் பெற்ற எண்ணெய்யைப் பாவித்து, இராணுவ கனரக ஆயுதங்கள் தாங்கிய வாகன பவனி நடத்துவதானது அறிவின்மையேயன்றி வேறொன்றுமில்லை.

‘நாம் சுதந்திரமடைந்தோம்’ என்று கொண்டாட்டங்களை நடத்துகிறோம். ஆனால், பரஸ்பரம் முரண்பட்ட அரசியல், பொருளாதார நோக்கங்களைக் கொண்ட பலம் வாய்ந்த நாடுகள், எமது நாட்டு வளங்களை பங்கு போட்டுக்கொள்ள நாட்டுக்குள்ளேயே போட்டி போடுகின்றன. அந்தப் போட்டியின் போது, எமது அரசாங்கத்தின் மீது கடும் அழுத்தங்களைச் செலுத்துகின்றன. ‘அவருக்குக் கொடுத்தால் எனக்கும் கொடு’ என்று வற்புறுத்துகின்றன. ‘முடியாது’ என்று வாய் திறந்து கூற முடியாத அளவுக்கு, நாம் அவர்களுக்கு பல்வேறு விதமாகக் கடமைப்பட்டுள்ளோம்.

சுதந்திரத்தை அடைவதற்காக, இந்நாட்டில் வாழும் சகல சமூகங்களும் உழைத்ததாக அரசியல்வாதிகள் கூறுகின்றனர். ஆனால், அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்களும் இனங்களின் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாக, நாட்டு மக்கள் இன ரீதியாகப் பிரிந்து வாழவும் சிந்திக்கவும் முற்பட்டுள்ளனர்.

முதலாவது, சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது, தமிழில் தேசிய கீதத்தைக் கேட்க பக்குவமடைந்து இருந்தவர்கள், இன்று அதற்குத் தயாராக இல்லை. அதன் மூலம், தேசிய கீதத்துக்கும் இந்த நாட்டுக்கும் நாமும் சொந்தக்காரர்கள் என்ற எண்ணம், சிறுபான்மை மக்களின் மனதில் தோன்றுவதை அவர்கள் தடுத்து வருகிறார்கள்.

இன்று மிகச் சிலரைத் தவிர, பொதுவாகத் தமிழர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடத் தயாரில்லை. கொண்டாடுவோரும் ஒன்றில் தனிப்பட்ட காரணங்களுக்காக, ஆளும் கட்சியினரோடு இணைந்து இருக்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு செய்கிறார்கள். அல்லது, அயலவலர்களான பெரும்பான்மை இனத்தவர்களைப் பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக, தேசிய கொடியை தமது வீடுகளில், வளவுகளில் சிலர் பறக்க விடுகின்றனர். மற்றவர்கள், தம்மில் ஒருவர் தேசிய கொடியை பறக்கவிட்டால், அது, தமது இனத்துக்குச் செய்த அவமானமாகக் கருதுகின்றனர். அரசாங்கங்கள், சுதந்திரத் தினத்தை கொண்டாட முற்படும் போதெல்லாம், தாம் இந்நாட்டிலேயே அந்நியராகி விடடோம் என்று அவர்கள் உணர்கிறார்கள். எனவே, அவர்களில் சிலர், இந்த நாளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த முற்படுகின்றனர். இந்த ஆழமான மானசீகப் பிளவானது, சுதந்திர தினத்தின் அர்த்தத்தையே கேள்விக்குறியாக்கி விடுகிறது. கடந்த 74 ஆண்டுகளில், இந்நாடு அடைந்த மிகப் பாரதூரமான தோல்வி, இந்த மானசீகப் பிளவாகும்.

1948ஆம் ஆண்டிலிருந்து, சுமார் இரண்டு தசாப்தங்கள் வரை, நாட்டின் பிரதான இரு கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மக்களின் அங்கிகாரத்தைப் பெருமளவில் பெற்றிருந்தன. தமிழீழ விடுதலை புலிகளால், 1975ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட ஸ்ரீ ல. சு. கவைச் சேர்ந்த அல்பிரட் துரையப்பா, யாழ்ப்பான நகர மேயராக இருந்தமை அதற்குச் சிறந்த உதாரணமாகும். ஆனால், அதன் பின்னர் நிலைமை மிக வேகமாக மாறியது.

1976ஆம் ஆண்டு தனித் தமிழ் நாட்டுக்கான வட்டுக்கோட்டை பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் பின்னர், 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், தமிழர் விடுதலை கூட்டணி, வடக்கு, கிழக்கில் மாபெரும் சக்தியாக மாறியது.

இந்தியாவின் பூகோள அரசியல் பார்வையில், இலங்கையில் தனித் தமிழ் நாடு என்பது சாத்தியமற்ற கோரிக்கையாக அமைந்தாலும், அது திடீரென வானிலிருந்து வீழந்த கோரிக்கையல்ல. அதற்கு ஒரு வரலாறு இருக்கிறது. எனினும் அதனை முன்வைத்து, தமிழ் ஆயுத குழுக்கள் போராட முற்பட்டதை அடுத்து, இனங்களிடையேயான துருவமயமாக்கல் வேகமாகியது. வடக்கிலும் தெற்கிலும் அரசியல்வாதிகள், இன உணர்வை மென்மேலும் அரசியல் மூலதனமாக்கிக் கொண்டமையே அதற்குக் காரணமாகியது.

முப்பது ஆண்டுகளுக்கு மேல் நீடித்த போருக்குப் பின்னர், தமிழ் மக்கள் ஏறத்தாழ முழுமையாகவே தேசிய அரசியலில் இருந்து அந்நியப்பட்டுவிட்டனர். தேசிய கீதம், தேசிய கொடி ஆகியவை தமது தேசிய கொடியாகவோ தேசிய கீதமாகவோ அவர்களில் பெரும்பாலானவர்கள் உணரவில்லை. தேசிய அரசியலில் இருந்து துண்டிக்கப்பட்டவர்களைப் போல், அவர்களது அரசியல் அமைந்தது. 1980களுக்குப் பின்னர், நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகள் அதனையே பறைசாற்றுகின்றன.

போரின் போது, போரில் ஈடுபட்ட இருசாராராலும் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண முஸ்லிம்களும் அத்தோடு, அரசியல் ரீதியாகத் தனியாகச் சிந்திக்க முற்பட்டனர். அதன் விளைவே, முஸ்லிம் அரசியல் கட்சிகளாகும்.

விகிதாசார தேர்தல் முறை காரணமாக, அரசியல்வாதிகள் தமது இனத்தவர்களையும் சாதியினரையும் தேடிச் செல்லும் நிலைமை உருவாகவே, இந்த இனத் துருவமயமாக்கல் மேலும் விரிவடைந்து வருகிறது. அரசாங்கங்களுக்கோ அரசியல் கட்சிகளுக்கோ, இந்த நிலைமையை சீர் செய்ய இன்னமும் தேவை ஏற்படவில்லை.

போரின் போது மனித உரிமை மீறல்கள் மிக மோசமாகவும் பரவலாகவும் இடம்பெற்றன. 2014ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையொன்றின் அறிக்கையில், இதற்காக ஆயுதப் படைகளும் புலிகளும் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளனர்.

இப்போது ஒவ்வொரு வருடமும் முதல் மூன்று மாதங்களில் அரச தலைவர்களும் தமிழ் தலைவர்களும் மனித உரிமைகள் பிரச்சினையை முன்வைத்து, சர்வதேசத்தை அணுகுகின்றனர். அதன் மூலமும் ஒவ்வொரு வருடமும் பழைய காயங்கள் கிளறப்படுகின்றன. முறையான விசாரணையொன்றை நடத்தி, இதற்குத் தீர்வு காண அரசாங்கம் தயாராகவும் இல்லை.

இரண்டு சந்தர்ப்பங்களில் தவிர, இந்த விடயத்தில் தமது புறத்தில் இடம்பெற்ற குற்றங்களை ஏற்கும் மனப்பான்மை எவரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. 1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் 21 ஆவது ஞாபகார்த்தமாக 2004ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டமொன்றின் போது, அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்டார்.

மேற்படி, மனித உரிமைகள் பேரவையின் விசாரணையை அடுத்து, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும், தமிழரின் பெயரால் இடம்பெற்ற குற்றங்களை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார். ஆனால், அவர்களும் பின்னர் அதனை மறந்துவிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .