2024 நவம்பர் 25, திங்கட்கிழமை

சீனாவின் கடல்சார் ஆக்கிரமிப்பு அரசியல்

Editorial   / 2022 ஜூலை 21 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியப் பெருங்கடலிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தனது செல்வாக்கையும் ஆதிக்கத்தையும்  நிலைநிறுத்துவதற்காக சீனா ஒரு மூலோபாய சுற்றிவளைப்பை செய்து வருகிறது.

மூலோபாய சுற்றிவளைப்பு என்பது முக்கிய முனைகளிலிருந்து  எதிரியை  தாக்குவதற்கு  பயன்படுத்தப்படும் ஒரு இராணுவ சொல்லாடலாகும். இந்திய பெருங்கடலில் இடம்பெற்று வரும் சீனாவின் இத்தகைய சுற்றிவளைப்பு பற்றி நாங்கள் அவ்வளவாக அலட்டிக்கொள்வதில்லை. இதன் பொருளாதார, அரசியல் விளைவுகள் பற்றி நாங்கள் சிந்திக்காமலேயே இருந்து விடுகிறோம்.

பிராந்திய அரசியலின் அதிகார போட்டிக்குக்  களமாக  எமது கடல் பிராந்தியம் மாறியிருக்கிறது.  இந்த கடலாதிக்க வலை பின்னலை  சீனா மிகவும் கச்சிதமாக  எமது கடல் பிராந்தியத்தில் செய்து வருகிறது.

இந்தியப் பெருங்கடலில், குறிப்பாக இந்தியாவைச் சுற்றி ஓா் ஆதிக்க  வலையை சீனா விாித்து வருவதாக இந்தியா அவ்வப்போது  குற்றம் சாட்டி வருகிறது. இந்து சமுத்திர கடல் பிராந்தியத்தில்  உருவாகி வரும் சீன ஆதிக்கம்  தொடா்பாக இந்தியா மிகவும் விழிப்போடு இருப்பதாகவே அதன் எதிா்வினையாற்றல்  மூலம் அறியக் கூடியதாக இருக்கிறது.

சீனாவின் இந்த மூலோபாய சுற்றி வளைப்பு சீன, இந்திய  நாடுகளுக்கிடையில்  அரசியல் ரீதியிலான   அமைதியின்மையை  தோற்றுவித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், பிராந்திய ரீதியில்  ஓா் அரசியல் முறுகலை இயங்கு நிலையில் வைத்திருக்கவும் சீனாவின்  இந்த கடலாதிக்கம்  காரணமாகியிருக்கிறது.

தனது ஆதிக்கத்தை நிா்வகிக்கும்,  கடல் ரீதியாக சுற்றிவளைக்கும் இந்த அரசியல் பொறிமுறைக்கு  சீனா “முத்துக்களின் சரம்”  (String of Pearls)  என்ற ஓா் அழகிய நாமத்தை சூட்டியிருக்கிறது. ஆக்கிரமிப்புக்கு இப்படியொரு அழகிய பெயரா என்று நீங்கள் யோசிக்கலாம்.

ஆம், சீனாவின் இந்த கடல்சாா் ஆக்கிரமிப்பு மிகவும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எமது அயல்நாடுகளில் ஒன்றான  பாகிஸ்தானின் குவாதா் துறைமுகக் கட்டமைப்பு சீனாவின் ஆக்கிரமிப்பு தொடா்பான  நுண் அரசியலை வெளிச்சம் போட்டுக் காட்டக் கூடியது. 

இந்தியப் பெருங்கடலில் தனது புவிசார் அரசியலையும், வர்த்தகத்தையும் பாதுகாத்துக்கொண்டு, பல நாடுகளில் துறைமுகங்களை மேம்படுத்தி கையகப்படுத்துவதன் மூலம்  கடல் வழிகளில் தனது செல்வாக்கை நிா்வகிக்கும் கைங்கரியத்தை சீனா தீவிரமாக செய்து வருகிறது.

2015 ஆம் ஆண்டு, பாகிஸ்தானின் குவாதர் துறைமுகத்தை மேம்படுத்த சீனா ஆரம்பித்தது. மிக ஆழமான துறைமுகமாக இது பார்க்கப்படுகிறது.  கடல் வழியாக  வணிக நடவடிக்கைகளை மேம்படுத்துதல் என்ற போா்வையில்  இந்துமா சமுத்திரத்தில் தனது மூலோபாய திட்டத்தை குவாதா் துறைமுகம் மூலம்  சீனா கட்டமைக்கத் தொடங்கியது.

பாகிஸ்தானைத் தொடா்ந்து சீனாவின் கடல் ரீதியாக சுற்றிவளைக்கும் செயற்பாடு இலங்கை, பங்ளாதேஷ், மியன்மார், ஜிபூட்டி, ஈரான், எரிட்ரியா, கென்யா ஆகிய நாடுகளுக்கும் விரிவு படுத்தப்பட்டது.   

2020ம் ஆண்டு ஈரானில் உள்ள கிஷ் தீவை குத்தகைக்கு எடுப்பதற்கு ஈரானுடன் சீனா ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. கிஷ் தீவு பாரசீக வளைகுடாவின் வடக்கில் ஈரானிய கடற்கரையில் அமைந்துள்ளது, இந்தத் தீவு  15.45 கிமீ அகலமும் 1,359 கிமீ நீளமும் கொண்டது.

கிஷ் தீவை 25 ஆண்டுகளுக்கு  சீனாவிடம் ஒப்படைப்பது குறித்து ஈரானுக்கும் சீனாவுக்குமிடையில் கருத்துப் பறிமாற்றம்  நடந்ததாக  ஹசன் நவ்ரூசி என்ற நாடாளுமன்ற உறுப்பினா் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.

2014ம் ஆண்டு எரிட்டிரியாவிலுள்ள மஸ்ஸாவா துறைமுக மேம்பாட்டு திட்டத்திற்காக ( Massawa Port )  சீனாவும் எரித்திரியாவும் சீனா ஹார்பர் இன்ஜினியரிங் கம்பெனி லிமிடெட்டின் கீழ் ஒரு கட்டுமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தின்படி, 40 மாத கால கட்டுமான காலத்திற்கு 400 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்பட்டது.

எரிட்ரியாவிலுள்ள அஸ்மாரா (Asmara) சுரங்கத்தில் இருந்து தங்கம், தாமிரம் மற்றும் பிஷா (Bisha) சுரங்கத்தில் இருந்து துத்தநாகம் ஆகியவற்றை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு  பாரிய பங்களிப்பை இந்த துறைமுகம் வழங்குகிறது.

கென்யாவிலுள்ள லாமு துறைமுகம் (Lamu Port) சீன முதலீட்டால் மேம்படுத்தப்பட்டது. தெற்கு சூடான்,எத்தியோப்பியா, கென்யாவிற்கு இடையிலான போக்குவரத்தை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமென்றுன்று கூறப்பட்டாலும்,  ஆபிரிக்க நாடுகளில் நிலத்திற்கு கீழ் புதைந்து கிடக்கும் கனிம வளங்களை கொள்ளையிடும் நோக்கிலேயே சீனா  லாமு துறைமுகத்தை மேம்படுத்தியது என்பது வெளிப்படையான விடயமாகும்.

இந்திய பெருங்கடலில் புவியியல் ரீதியாக முக்கிய அமைவிடமாகவும், கேந்திர முக்கியத்துவமிக்க இடமாகவும், கடற் போக்குவரத்திற்கு முக்கிய தளமாகவும் இலங்கை  கருதப்படுகிறது.  

இலங்கையின் தென் மாகாணத்தில், ஹம்பாந்தோட்டையில் துறைமுகம் ஒன்றை  நிர்மாணிக்க சீனா ஆா்வம் கொண்டது.  மாகம்புர ராஜபக்ஷ துறைமுகம் (Magam Ruhunupura Mahinda Rajapaksa Port)  2010ம் ஆண்டு சீன முதலீட்டால் கட்டமைக்கப்பட்டது.  இலங்கைக்கு பலத்த நஷ்டத்தைக் ஏற்படுத்திய  இந்த துறைமுகம், 2017ம் ஆண்டு 99 வருட குத்தகைக்கு சீனாவுக்கே வழங்கப்பட்டது.

பங்களாதேஷ் நாட்டின்  சிட்டகொங் துறைமுக (Chittagong Port)  மேம்பாட்டு திட்டத்திற்கும், மியன்மார் நாட்டின் கியாக்பியு துறைமுகத்தின்  (Kyaukpyu port) மேம்பாட்டுத் திட்டத்திற்கும்  சீனா கை வைத்தது. இந்த துறைமுகங்களை மேம்படுத்துவதற்காக பல மில்லியன் அமொிக்க டொலா்களை சீனா முதலீடு செய்துள்ளது.

இந்தியப் பெருங்கடலுக்கு அருகிலுள்ள நாடுகளின் கடல்சாா் கேந்திர முக்கியத்துவமிக்க இடங்களை தனது மூலோபாய திட்டத்திற்குள் உள்வாங்கி,  இந்தியப் பெருங்கடலில் தனது செல்வாக்கையும், ஆதிக்கத்தையும்  அதிகரிக்க  சீனா மேற்கொண்ட அரசியல் காய் நகா்த்தலே  இந்த  முத்துக்களின் சரம் (String of Pearls)  என்ற கடல்சாா் ஆதிக்க செயற்திட்டம்.

கடல் வழியாக சுற்றிவளைக்கும் சீனாவின் இந்த ஆதிக்க அரசியல் அதன் பிரதான கடற்கரையிலிருந்து ஆரம்பித்து  சூடான் துறைமுகம் வரை நீண்டு செல்கிறது.

கடற்பரப்புகளை கைப்பற்றி, அவற்றை  தனது பூரண கட்டுப்பாட்டின்  கீழ் கொண்டு வருவதை இலக்காகக் கொண்ட சீனாவின் இந்த முத்துக்களின் சரம் (String of Pearls) என்ற கடலாதிக்க செயற்திட்டம்  மற்றும் கடல் பிராந்தியங்களில் அதன் வணிகப் பிரசன்னம் இந்தியாவிற்கும் உலகின் மற்ற நாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக இந்தியா உள்ளிட்ட  ஜி 7 நாடுகள் தமது எதிா்ப்புகளை வெளியிட்டு  வருகின்றன.

சீன  ஜனாதிபதி சீ ஜின்பிங் 2013ம் ஆண்டு சீனாவின்  பட்டுப் பாதை என்ற பழைய கருத்தியலுக்கு பதிலாக, புதிய வணிக ரீதியிலான ஒரு பட்டி ஒரு பாதை (Belt and Road Initiative)  என்ற திட்டத்தை மும்மொழிந்தாா். 

இந்த  திட்டம்  ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை  ஐரோப்பாவுடன் வா்த்தக ரீதியாக  இணைப்பதை நோக்கமாகக் கொண்டதாக அறிவிக்கப்பட்ட போதும், சீனாவின் ஆதிக்க நுண் அரசியல் இந்த ஒரு பட்டி ஒரு பாதை (Belt and Road Initiative) திட்டத்திற்குள் மறைந்திருப்பது தெளிவாக வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்தது.

இந்த ஒரு பட்டி ஒரு பாதை (Belt and Road Initiative) திட்டத்தைக் காட்டி பல நாடுகளில் டிரில்லியன் கணக்கான டொலா்களை அந்தந்த நாடுகளின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக சீனா அள்ளி இறைத்து  வருவதுடன், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் புகையிரத பாதை மேம்பாட்டுத் திட்டங்கள், விளையாட்டரங்குகள்  என்று அந்த நாடுகளுக்கு பிரயோசனத்தை கொண்டுவராத, சுமையான  பல  திட்டங்களை நிா்மாணித்தும் வருகிறது. 

சீனாவின் இந்தக் கடன் நிதிக்காக அதி கூடிய வட்டியையும் செலுத்த இந்த நாடுகள் நிா்ப்பந்திக்கப் படுகின்றன. அதி கூடிய வட்டிக்கு கடனைக் கொடுத்து தனது சுரண்டல் அரசியல் நிகழ்ச்சி நிரலை பல நாடுகளில்  சீனா கச்சிதமாக நிறைவேற்றி வருகிறது.

தனது எண்ணெய் மற்றும் எரிசக்தி வர்த்தகத்தை நிலை நிறுத்துவதற்காக  கடல் போக்குவரத்து வழிகளை பாதுகாக்கும் நோக்கில், புவியியல் ரீதியாக  கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த  நாடுகளின்  கடல் முனைகளிலூடாக, அந்தந்த நாடுகளின்  அரசியல், பொருளாதார, இராணுவ, துறைமுக மேம்பாட்டு திட்டங்களில் முதலீடு செய்துள்ள  சீனா அந்த நாடுகளை தனது பூரண கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அரசியலை நன்றாக நிர்வகித்து  வருகிறது.

தனது கடல்சார் அரசியல் நலன்களை அடிப்படையாக வைத்து  ஜிபூட்டி, பாகிஸ்தான்,  பங்களாதேஷ், இலங்கை, ஈரான், கென்யா, எாிட்ரியா போன்ற  பல  நாடுகளில் துறைமுக மேம்பாட்டுக்காக  அதிக முதலீடுகளை சீனா செய்துள்ளது. 

கடந்த காலங்களில் இந்தியப் பெருங்கடல், பாரசீக வளைகுடா, மத்திய தரைக் கடல், அரபிக் கடல், ஹொா்மூஸ் நீரிணை, வங்காள விரிகுடா  மற்றும் தென்சீனக் கடல் ஆகிய பகுதிகளை அடைய சீனா தனது தந்திரமான செயற்பாடுகளை அரங்கேற்றியது, 

இந்த பிராந்தியத்தில் குறைந்த வளர்ச்சியடைந்த, புவியியல்  ரீதியாக மூலோபாய முக்கியத்துவம் பெற்ற  நாடுகளை தோ்ந்தெடுத்து  பெருமளவு முதலீடு செய்து வருகிறது. 

ஒரு பட்டி ஒரு பாதை (Belt and Road Initiative) திட்டத்தின் கீழ் தனது முதலாவது  வெளிநாட்டு இராணுவ தளத்தை ஜிபூட்டியில் சீனா நிறுவியது.  இந்த திட்டத்திற்கு   'தளபாட உதவி வசதி' என்று பெயரிட்டது. சீனாவால் நிர்மாணிக்கப்பட்ட ஜிபூட்டி துறைமுகம், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் அதன் நலன்களைப் பாதுகாப்பதற்கு அமைக்கப்பட்ட முக்கிய திட்டமாக கருதப்படுகிறது. 

வடமேற்கு சீனாவில் உள்ள கஷ்கர் என்ற நகரை பாகிஸ்தானில் உள்ள குவாதா் என்ற  துறைமுகத்துடன்  இணைப்பதற்காக  சீனா 46 பில்லியன் அமெரிக்க டொலர்களை  முதலீடு செய்துள்ளது.  

 

இந்த துறைமுகம் அரபிக்கடலில் ஈரான் நாட்டு எல்லையில் அமைந்துள்ளது. இந்த திட்டம் சீனா பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரம் (China Pakistan Economic Corridor) என்ற திட்டத்தின் மூலம் கட்டமைக்கப்பட்டது.

ஆப்பிரிக்கா மற்றும் பாரசீக வளைகுடாவில் இருந்து எண்ணெய்யை இறக்குமதி செய்து அவற்றை பாகிஸ்தானிலேயே சுத்திகரிப்பதற்கு வழி செய்யும் வகையில்  குவாதரில் ஓா் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையையும் சீனா நிறுவியுள்ளது.  இதற்காக 2500 கிமீ நீளமான பாதையொன்றையும் சீனா புதிதாக நிர்மாணித்துள்ளது.

வங்காள விரிகுடா கடற்பரப்பில்  ஹைட்ரோகார்பன்கள் அதிகம் இருப்பதாக நம்பப்படுகிறது. தெற்காசியா, அந்தமான் கடல் மற்றும் மலாக்கா நீரிணை ஆகியவை தென் சீனக் கடலை தொட்டு நிற்கின்றன. வங்காள விரிகுடா  பிராந்தியம் ஒரு சிறப்பு பொருளாதார  மூலோபாய முக்கியத்துவத்தைப் பெற்றுள்ள பகுதியாகும்.

வங்காள விரிகுடா  இந்தியப் பெருங்கடலின் வடக்கே 2,173,000 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. பிராந்தியத்தில் உள்ள பல ஆறுகள் வங்காள விரிகுடாவில் வந்து சோ்கின்றன. சமகால பிராந்திய அரசியலின் பலப் பரீட்சைக்கு  வங்காள விரிகுடா  ஒரு முக்கிய பங்கை செலுத்துகிறது.

வங்காள விரிகுடாவை  சுற்றியுள்ள பகுதிகளைில்  தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும்  நோக்கில்  பங்களாதேசத்திற்கு சீனா  அதிக முதலீடுகளை அள்ளி இறைத்து வருகிறது.

வங்காள விரிகுடாவில் சீனா அதிக ஆர்வத்தை கொண்டிருப்பதற்குக் காரணம்,  எண்ணெய், எரி சக்தி விநியோகம் மற்றும் அதன் முதலீடுகளைப் பாதுகாப்பதற்கான ஒரு நம்பகமான வழியாக அது இருப்பதேயாகும்.

இலங்கையின்  புவியியல் ரீதியிலான அமைவிடம் காரணமாக, இலங்கையின் மீது சீனா  மிகவும் அக்கறை கொண்டுள்ளது.   இந்தியப் பெருங்கடலின் மூலோபாய மையத்தில் இலங்கை  அமைந்துள்ளது. பௌதீக  ரீதியாக கடல் போக்குவரத்தில்  சிறந்த இருப்பிடத்தைக் அது கொண்டுள்ளது.

இலங்கையின் துறைமுகங்களில் முதலீடு செய்வது சீனாவுக்கு அதன் அரசியல், வா்த்தக நலன்களை மேம்படுத்துவதற்கு சிறந்த வசதியை அளித்திருக்கிறது. ஆப்பிரிக்காவிலிருந்து  பெறும் எரி சக்தி மீள் விநியோகத்திற்கான மைய தளமாக இலங்கையை சீனா கருதுகிறது.

சீனாவின்  எரிசக்தி விநியோகத்திற்கான நுழைவாயிலாக இருக்கும் மற்றொரு நாடு மியன்மார்.

இந்தியப் பெருங்கடலை இலக்கு வைத்து சீனா  மியன்மாரில் முதலீடு செய்ய ஆரம்பித்தது. சீனா 1980களில் இருந்து தனது பொருளாதார மற்றும் பிராந்திய மூலோபாய நலன்களுக்காக  மியன்மாரை  பயன்படுத்தி வருகிறது.

2007 ஆம் ஆண்டு சீன தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் (Chinese National Development and Reform Commission) மியன்மாரில் ஆழ்கடல் மூலமாக மத்திய கிழக்கை இணைக்கும் எண்ணெய் குழாய் இணைப்பு  ஒப்பந்தத்திற்கு கைச்சாத்திட்டது.

2009ல் மியன்மார் வழியாக சீனாவின் யுனான் மாகாணத்திற்கு எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்களை அமைக்கத் தொடங்கியது. இது எண்ணெய் மற்றும் எரிவாயுவை சீனாவுக்கு இறக்குமதி செய்வதற்கான நான்காவது வழியாக  அமைந்தது.

“முத்துக்களின்  சரம்” (String of Pearls)  என்ற பெயரில் வடிவமைக்கப்பட்ட சீனாவின் கடல்சாா் ஆதிக்க  சுற்றிவளைப்புக்கு பல நாடுகள் பலியானது மட்டுமல்லாமல்,  எடுத்த கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் பல நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தமது பெறுமதியான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சொத்துக்களை சீனாவுக்கு தாரைவார்த்துக் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

2004 ஆம் ஆண்டில் சீன இராணுவத்தின்  "ஆசியாவில் எரிசக்தி எதிர்காலம்" என்ற தலைப்பிலான  ஒரு அறிக்கையில் முதன்முறையாக “முத்துக்களின்  சரம்” (String of Pearls) என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டது.

சீனாவின் எரிசக்தி நலன்களைப் பாதுகாப்பதற்காக, மத்திய கிழக்கிலிருந்து தென் சீனக் கடல் வரையிலான கடல் பாதைகளுடன் தனது உறவுகளை பேணிக்கொண்டு, அதன் பாதுகாப்பு நோக்கங்களை நிறைவேற்றும் செயற்பாடே  முத்துக்களின் சரம் என்ற திட்டம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சீனாவால் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டு, செயற்படுத்தப்பட்டு  இரண்டு தசாப்தங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த திட்டங்களை உள்வாங்கிய பல நாடுகள் மீள முடியாத  கடனில் மூழ்கடிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடியிலும், அரசியல் கொந்தளிப்புகளிலும் சி்க்கி திக்குமுக்காடிக் கொண்டிருக்கின்றன.

இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இதற்கு சிறந்த மிக அண்மைய எடுத்துக் காட்டுகளாகும். பல  நாடுகள் வீழ்ந்துக் கொண்டிருக்கும் நிலையில்  சீனாவோ வல்லரசுக் கனவில் மேலும் மேலும் வளர்ந்துக் கொண்டிருக்கிறது.

"முத்துக்களின் சரம்"  திட்டத்தை நிறுவுவதன் மூலம் இந்தியப் பெருங்கடலைச் சுற்றி  சீனா ஒரு மூலோபாய வலைபின்னலை  உருவாக்கி இருக்கிறது.

இந்தியப் பெருங்கடல், பெரும் வல்லரசுகளின்  பூகோள அரசியல் நகா்வுகளை தீா்மானிக்கின்ற  மையப்புள்ளியாக மாறி  வருகிறது.  

இந்த நிலையில், பொருளாதார உதவி என்ற பெயரில் பல நாடுகளை கடனில் மூழ்கடித்து அந்த நாடுகளின் முக்கியத்துவம் மிக்க சொத்துகளை சூறையாடி, இந்தியப் பெருங்கடலைச் சுற்றி  இராணுவ ரீதியிலான மற்றும் வணிக ரீதியிலான தளங்களை உருவாக்கி,  அரசியல் காய் நகா்த்தும்  சீனாவால் தொடா்ந்தும் இந்தியப் பெருங்கடலில் தனது ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்ள முடியுமா?

சீனாவின் ஆக்கிரமிப்பு அரசியலில் பகடைக் காய்களாகி, பாதிக்கப்பட்டு, கடன் பொறி ராஜதந்திரத்தில் சிக்கிய நாடுகளின் எதிா்காலம் எவ்வாறு அமையும்? 

கடன் சுமையில் தள்ளாடும் இந்த நாடுகளை உலக நாடுகள் மீட்டெடுக்குமா?  சீனாவின் கடல்சார் ஆதிக்க விளையாட்டில் அமொிக்கா மற்றும் இந்தியாவின் எதிா்வினையாற்றல் எப்படி இருக்கும்? 

பொறுத்திருந்து தான் பாா்க்க வேண்டும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .