Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூலை 30 , மு.ப. 08:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எம்.எம்.முர்ஷித்
சிறுபான்மை மக்களும், சம உரிமையோடு சுதந்திரமாக வாழ வேண்டுமாக இருந்தால், இந்த அரசாங்கத்துக்கு எதிரான, ஓர் ஆட்சி வரவேண்டும். அதற்குப் பொருத்தமான தலைவர், இன்றைய நிலையில் சஜித் பிரேமதாஸதான் என, ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் அப்துல் லத்தீப் தெரிவித்தார்.
இவர், ‘தமிழ்மிரர்’ பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்சொன்னவாறு கூறினார். அவர் வழங்கிய செவ்வியின் விவரம் பின்வருமாறு:
கே: நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளராகவுள்ள நீங்கள், ஐக்கிய மக்கள் சக்தி என்ற கட்சியைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன?
இன்று, இந்த நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு எதிராகப் பல்வேறு வகையான கோசங்கள் எழுப்பப்பட்டு, சிறுபான்மை மக்கள் துன்பத்திலும் மிகவும் கஸ்டமான சூழ்நிலையிலும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். இன்றைய ஆட்சியாளர்களுடன், தீவிர இனவாதத்தையும் பேரினவாதத்தையும் கொள்கையாகக் கொண்டவர்கள் இணைந்துள்ளார்கள். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கூட, சிறுபான்மை மக்கள் சஜித் பிரேமதாஸவை ஆதரித்த நேரத்தில், அவர்கள் இனவாத ரீதியாகப் பிரசாரங்களை மேற்கொண்டு, இனவாதத்துடன் ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றினார்கள்.
இவ்வாறான சூழலில், முஸ்லிம்களும் தமிழர்களும் இன்னல்கள் பலவற்றை அனுபவித்து வருகின்றார்கள். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பெரும்பான்மையின மக்களின் வாக்குப் பலத்துடன், மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று, சிறுபான்மை மக்களுக்கு இருக்கக்கூடிய உரிமைகளை எல்லாம், இழக்கச் செய்கின்ற சட்ட மூலத்தைக் கொண்டு வருகின்ற ஒரு நோக்கத்திலேயே, இந்த அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஆகவே, சிறுபான்மை மக்களும் சம உரிமையோடு சுதந்திரமாக வாழ வேண்டுமாக இருந்தால், இந்த அரசாங்கத்துக்கு எதிரான, ஒர் ஆட்சி வரவேண்டும். அதற்குப் பொருத்தமான தலைவர், இன்றைய நிலையில் சஜித் பிரேமதாஸ என்பது தான், எனது நிலைப்பாடாகும். அதனால்தான், அந்தக் கட்சியில் போட்டியிடுகின்றேன்.
கே: மட்டக்களப்பு மாவட்டத்தில், உங்களது கட்சி ஆசனங்களை கைப்பற்றும் என்பது உறுதியா, அவ்வாறாயின் எத்தனை ஆசனங்களைக் கைப்பற்றுவீர்கள்?
பொதுவாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்து ஆசனங்கள் இருக்கின்றன. அதிக வாக்கு எடுப்பவர்களுக்கு ஒரு போனஸ் ஆசனமும் நான்கு ஆசனங்கள் மக்கள் தெரிவின் மூலமும் வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில், 75 சதவீதமான தமிழ் மக்களும் 25 சதவீதமான முஸ்லிம் மக்களும் வாழ்கின்றார்கள். இதில், நாங்கள் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில், மூன்று முஸ்லிம்களும் ஐந்து தமிழர்களுமாக எட்டு வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளார்கள்.
இதில், எங்களது கட்சியின் தலைமை வேட்பாளராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி உள்ளார். ஏனைய முஸ்லிம் வேட்பாளர்களில், ஏறாவூர் முஸ்லிம் பிரதேசத்தை மய்யப்படுத்தி நானும், காத்தான்குடி பிரதேசத்தை மய்யப்படுத்தி பொறியலாளர் அப்துல் ரஹ்மானும், ஏனைய தமிழ் வேட்பாளர்களைப் பொறுத்தமட்டில், தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் செல்வாக்கு பெற்றவர்களும் பெறுமதியானவர்களும் போட்டியிடுகின்றார்கள். ஆகவே, இந்த நிலையில், எங்களுக்கு பெரும்பான்மை வாக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கின்றது.
இதையும் விட, எங்களது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவைப் பொறுத்தவரை, மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமான வீட்டுத்திட்டங்களைச் செய்து கொடுத்து, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்த மாவட்டத்தில், 85 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருந்தார். ஆகவே, இவ்வாறான ஒரு நிலையில், எங்களுக்கு அதிகமான வாக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கின்றது.
இருந்தாலும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பலம், மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்னும் இருந்து கொண்டு இருக்கின்றது. இருந்தும் எங்களது கட்சி, இரண்டு ஆசனங்களைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றது. எவ்வாறிருந்த போதும், ஓர் ஆசனம் நிச்சயம் என்பது, எங்களது நம்பிக்கை. ஆகவே, மட்டக்களப்பு மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியினுடைய ஆசனம், உறுதிப்படுத்தப்பட்ட ஆசனம் என்பதைத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கே: மட்டக்களப்பு மாவட்டத்தில், முஸ்லிம்கள் செறிந்து வாழும் மூன்று பிரதேசங்களில் ஒன்று, கல்குடா தொகுதி. மற்றையவை, ஏறாவூரும் காத்தான்குடியும் ஆகும். இதில், உங்கள் பிரதேசமான ஏறாவூரில், அரசியலில் பலம் பொருந்தியவர்கள் முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும் என, உங்களுக்கு எதிரான அரசியல் செயற்பாட்டில் உள்ளார்கள். இந்நிலைமை, உங்களுக்குச் சவாலாகத் தெரியவில்லையா?
என்னைப் பொறுத்தவரை, இந்த மக்களோடு மிக நீண்டகாலமாக இணைந்து வாழ்பவன்; சமுக சேவையில், பாடசாலைக் காலத்தில் இருந்து இன்றுவரை, பல்வேறு சமுகப்பணிகளில் செயற்பட்டு இருக்கின்றேன். ஏறாவூரில் போட்டியிடுகின்ற எல்லா வேட்பாளர்களுமே எனது நண்பர்கள். என்னைவிட அரசியலில் பெரிய பதவிகளில் இருந்தவர்களாக இருந்தாலும், அவர்களை விட, மக்களோடு மக்களாக இருந்தவன் நான்தான். இந்தப் பிரதேசத்தின் பள்ளிவாயல்கள், முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவராகப் பல காலம் இருந்திருக்கின்றேன். ஏறாவூர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தை, பல அபிவிருத்தி திட்டங்களை உருவாக்கி, கூட்டுறவு வைத்தியசாலையையும் உருவாக்கி, இந்தப் பிரதேசத்தின் பல்வேறு தேவைகளை நிறைவு செய்ததோடு, இந்தப்பகுதி மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைப்பதற்கு வழிகாட்டியாக இருந்திருக்கின்றேன்.
அந்த வகையில், மக்கள் என்மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். இருந்தாலும், எங்கள் பிரதேசத்தில், பணபலம் பொருந்தியவர்கள், இன்று களம் இறங்கியுள்ளார்கள். அவர்களில் சிலர், பணத்தையும் பொருள்களையும் வாக்காளர்களுக்குக் கொடுத்து, வாக்குகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால், எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் மக்களிடத்தில் செல்கின்ற போது, கடந்த அரசாங்கத்தில் நான்கரை வருட காலமாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலியின் இணைப்பாளராகச் செயற்பட்டு, அவரது அமைச்சின் ஊடாக, ஏறாவூரில் 1,500க்கு மேற்பட்டவர்களுக்கு வாழ்வாதாரமாகத் தொழில் முயற்சிகளுக்குப் பொருள்கள் வழங்கியதுடன், பல்வேறுபட்ட அபிவிருத்தி வேலைத் திட்டங்களையும் செய்திருக்கின்றோம்.
நான் பொறுப்பேற்ற எந்த நிறுவனத்தையும் பலவீனமாக்கியதில்லை. அந்த நிறுவனங்களை, எனது காலத்திலேயே கட்டிக்காத்து வளர்த்துள்ளேன். அத்துடன் தமிழ், முஸ்லிம் உறவுகளைப் பேணுவதில், பல்வேறு வேலைத்திட்டங்களைச் செய்துள்ளேன். அந்தவகையில், எங்களுடைய மக்கள், என்மீது நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.
நான், வீடு வீடாக வாக்குச் சேகரிக்கச் செல்கின்ற போது, அதிக வரவேற்பு இருக்கின்றது. “எங்களது வீட்டில், ஐந்து வாக்குகள் இருக்கின்றன. இவற்றில், உங்களுக்கு இரண்டு வாக்குகளை நிச்சயம் அளிப்போம். நீங்கள், எங்களது தேவைகளை அறிந்து செயற்பட்டவர்” என்று பலரும் தெரிவிக்கின்றனர். எனக்குப் பிரதேசத்தில் சவால் இருக்கின்றது. அவர்களை எதிர்த்து, அரசியல் செய்வது கடினம் என்றாலும் எனது மக்கள், கனிசமான வாக்குகளை எனக்கு தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
4 hours ago
7 hours ago