2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

’’சிறு தோட்டம் கேட்டு ஒன்றிணைவோம் ’’

Janu   / 2024 ஜூலை 10 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700/-நாட் சம்பளத்தினை அரசாங்கம் பரிந்துரை செய்த போதே அதனை வெற்றி என பட்டாசு போட்டோம், பாற்சோறு பகிர்ந்தோம். பின்னர் நீதிமன்றம் துரைமார் சம்மேளன மனுவை விசாரணைக்கு எடுக்காத போதும் பட்டாசும் பாற்சோறு என கொண்டாடினோம். இப்போது உயர் நீதிமன்றம் வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில் வாங்கி வைத்த பட்டாசும் பாற்சோறும் பாழாய்போயுள்ளது. இந்தப பாழாய்ப் போன பழைய கூலிமுறைக்குள் தலைமுறைத் தலைமுறையாக மக்களை அடமானம் வைக்காது தென்பகுதியைப் போல மலையகப் பெருந்தோட்டப் பகுதியிலும் சிறு தோட்ட முறைமையை நடைமுறைப்படுத்தக் கோரும் ஒற்றைக் கோரிக்கையை ஒருமித்த கோரிக்கையாக முன் வைத்து வென்றெடுப்பதே நிரந்தரத் தீர்வுக்கு வழியாகவும். அதற்காகவே அனைத்து மலையக அரசியல் தரப்பும் ஒன்றிணைய வேண்டும். 1700/- நாட்கூலிக்காக அல்ல என மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலக ராஜா தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் நாட்கூலி 1700/- என அறிவித்து அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி யை நடைமுறைப்படுத்த உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில் அவர் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாட்கூலிப் போராட்டத்துக்கு நீண்ட வரலாறு உண்டு. 10 சதம் முதல் 1700/- வரை அது நாட்கூலி போராட்டமாகவே தொடர்ந்து வருகிறது. ஆனால், பெருந்தோட்டக் கட்டமைப்பானது சிறு தோட்ட உடமையாக தென்பகுதி நோக்கி நகர்த்தப்பட்டு 75 சதவீத தேயிலை ஏற்றுமதி சிறுதோட்ட முறைமையில் இருந்தே பெற்றுக் கொள்ளப்படுகின்றது.

இன்னும் 25 ஆண்டுகளில் பெருந்தோட்ட முறைமையை முற்று முழுதாக இல்லாமல் செய்து 100 வீத சிறு தோட்ட உ டமையாக்கலை நடைமுறைப்படுத்த அரசு தேசிய கொள்கை. வகுத்து செயற்பட்டு வருகிறது.

ஆனால் மலையகப் பெருந்தோட்ட அரசியல் தொழிற்சங்க தரப்பினர் பாரம்பரியமாக நாட்கூலி கோரிக்கையை விட்டு வெளியே வராமல் மலையகப் பெருந்தோட்ட சமூகத்தை கூலிச் சமூகமாவே நிரந்தரமாகப் பேணுவதைக் கொள்கையாகக் கொண்டுள்ளனர். அதற்காக அனைவரும் தமக்கு ஒத்துழைப்பும் வழங்க வேண்டும் ஏனைய அரசியல் தொழிற்சங்கத் தரப்புகளைக் கோரியும் வருகின்றனர்.

மலையகத்தில் மாற்று அரசியல் கொள்கைகளை முன்வைத்து செயற்படும் அரசியல் செயற்பாட்டுத் தளம் என்ற வகையில் கூலிக் கோரிக்கைக்குள் மாத்திரமே ஒரு சமூகத்தின் கோரிக்கையை மட்டுப்படுத்தி வைப்பதனை விமர்சன ரீதியாக எதிர்கொண்டு, தென்பகுதி சிங்கள மக்களுக்கு வழங்கப்படுவது போன்று மலையகத் தமிழ்த் தொழிலாளர்களையும் சிறு தோட்ட உடமையாளர்களாக்கு எனும் கோரிக்கையை அரசியல் கோரிக்கையாக வலுவாக மலையக அரசியல் அரங்கம் முன்வைக்கினறோம். கூலிக் கோரிக்கையாக முன்வைக்கப்படும் போது தொழிற்சங்க - தொழில் திணைக்கள- சட்டப் பிரச்சினையாக முதலாளிமார் சம்மேளனத்துடன் முடிச்சுப் போட்டுக் படும் இந்த விடயம் எமது முன்னெடுப்பில் அரசு - இறைமை - காணி உரிமை - வாழ்வாதாரம் - அரசு என அரசியல் பரிமாணம் பெறுகிறது.

ஒரு சமூகத்தை அரசியல் ரீதியாக பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் தலைமைகள் தமது கோரிக்கைகளை அரசியல் ரீதியாக முன்வைக்க வேண்டுமேயன்றி தொடர்ந்தும் கூலி கோரிக்கையையே முன்வைத்து தமது மக்களை தொடர்ந்தும் நாட கூலிகளாகவே காட்ட முனைவது முதலில் நிறுத்தப்படல் வேண்டும்.

மலையக அரசியல் அரங்கம் தவிர்ந்த ஏனைய அமைப்புகள் சிறு தோட்ட உடைமை முறைமை இத்தகைய அரசியல் கொள்கை நிலைப்பாட்டுடனல்லாது தமது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காகவும் தேர்தல் அரசியல் நிகழ்ச்சி நிரலாகவும் முனவைப்பதையே அவதானிக்க முடிகின்றது.

கடந்த பொதுத் தேர்தலில் சிறுதோட்ட உடமை பற்றிப் பேசிய இ.தொ.கா அமைச்சுப் பதவி பெற்றதன் பின்னர் அது பற்றி பேசுவதாக இல்லை. எனவே அது அவர்களது உள்ளார்ந்த எண்ணம் இல் லை என்பது தெரிகிறது. அதே போல சஜித் பிரேமதாச ஜனாதியானால் சிறு தோட்ட உடமையாக்குவோம் என்பதாக இந்த விடயத்தைத் தேர்தலுக்கு மாத்திரம் தமிழ் முற்போக்குக் கூட்டணி மட்டுப்படுத்திக் கொண்டுள்ளது.

சஜித் வெற்றிபெறாவிட்டால் இவர்களது கோரிக்கை என்னவாகும். தனது ஆட்சியில் மலையகப் பெருந்தோட்டங்கள் சிறு தோட்ட உடமையாக்கப்படும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் கடந்த வாரமும் கூறியுள்ளார். அது அவரது உறுதியான நிலைப்பாடு எனில் இப்போது எதிர்கட்சி சார்பில் பாராளுமன்றில் ஒரு பிரேரணையை முன்வைக்க வேண்டும். அதற்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி அழுத்தம் கொடுக்க தமது பாராளுமன்ற அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டுமேயன்றி பாராளுமன்றத்துக்கு வெளியே எதிர்கட்சித் தலைவருடன் ஒப்பந்தம் கைச் சாத்திடுவதில் எந்தப் பலனும் இல்லை.

பதுளை மாவட்ட எம்.பி வடிவேல் சுரேஷ் ஜனாதிபதியின் ஆலோசகராகவும் உள்ளார்.அவர் தனது ஆலோசனையில் நாட்கூலி வர்த்தமானிக்கு வெளியேயும் தனது ஆலோசனையை முன்வைக்கலாம்.

மேற்படி பதவி நிலைகள் எதிலும் இல்லாத போதும் மலையக அரசியல் அரங்கம் மக்கள் மத்தியில் சிறு தோட்ட உடமையாதலின் அவசியத்தை உணர்த்தும் பிரச்சார இயக்கத்தை முன்னெடுத்து வருவதுடன் அரச கொள்கை வகுப்பாளர்களை அணுகி எமது கோரிக்கையை முன்வைத்து வருகிறோம்.அண்மையில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற மறுசீரமைப்புக்கான கலந்துரையாடலிலும் இதனை வலியுறுத்தி இருந்தோம்.

எனவே கூலித்தொகை 1700/- கேட்டு அதனைக் கொண்டாடி பட்டாசு கொளுத்தி பாற்சோறு பகிர்வதைவிடுத்து ஆக்கபூர்வமான செயற்பாட்டு சிந்தனைத் தளத்துடன் கூடியதாக சிறு தோட்ட உடமையாதல் கோரிக்கையை ஒற்றைக் கோஷமாகவும் ஒருமித்த கோரிக்கையாகவும் முனவைத்து வெற்றி பெற ஒற்றுமைப் பட வேண்டிய விடயம் இதுவேயாகும்; கூலிக் கோரிக்கை அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .