Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 மே 12 , மு.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-முகம்மது தம்பி மரைக்கார்
முஸ்லிம் ஒருவர் மரணித்து விட்டால், அந்தப் பிரேதத்துக்கு, இஸ்லாமிய அடிப்படையில் செய்ய வேண்டிய நான்கு கடமைகள் உள்ளன.
1. இறந்தவரின் பிரேதத்தைக் குளிப்பாட்டுதல்
2. அந்தப் பிரேதத்துக்குக் கபனிடுதல் (தைக்கப்படாத ஆடை உடுத்துதல்)
3. அந்தப் பிரேதத்துக்காகத் தொழுகை நடத்துதல்
4. பிரேதத்தை அடக்கம் செய்தல்.
ஆனால், கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட பின்னர், இலங்கையில், முஸ்லிம் ஒருவர் இறந்து விட்டால், அவருக்கான மரணச் சடங்குகளை நிறைவேற்றுவதில், அரசியல் குறுக்கீடுகள் ஏற்பட்டு விட்டதா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
மார்ச் இறுதிப் பகுதியில், நீர்கொழும்புப் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்தார். இந்த நிலையில், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த அந்நபரின் பிரேதத்தை, அவசர அவசரமாகச் சுகாதாரத் துறையினர் தகனம் செய்து விட்டு, அந்தத் தகவலை அறிவித்தனர். இந்த நிகழ்வு, முஸ்லிம்கள் மத்தியில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சட்டத்தை மீறிய நடவடிக்கை
இலங்கையில் நடைமுறையில் இருந்து வரும், ‘தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நோய்த் தடுப்புக் கட்டளைச் சட்டம்’ பிரகாரம், தொற்று நோய்களால் மரணிப்பவர்களின் சடலத்தை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடும் இருக்கத்தக்க நிலையிலேயே, நீர்கொழும்பில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்த முஸ்லிம் நபரின் உடல், தகனம் செய்யப்பட்டது.
இவ்வாறு, சட்டத்தை மீறி இஸ்லாமியர் ஒருவரின் உடல் தகனம் செய்யப்பட்டமைக்கு எதிராக, முஸ்லிம் சமூகத்திலிருந்து பாரிய கண்டனங்கள் கிளம்பத் தொடங்கின.
அதையடுத்து, ‘தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நோய்த் தடுப்பு கட்டளைச் சட்டத்தை’ திருத்தியமைத்து, ஏப்ரல் மாதம் 11ஆம் திகதியிடப்பட்ட 2170/8 எனும் இலக்கத்தைக் கொண்ட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை, சுகாதார அமைச்சு வெளியிட்டது. அதில், ‘கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்களைத் தகனம் செய்ய வேண்டும்’ என்றிருந்தது. இதைத் தொடர்ந்து, கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்த முஸ்லிம்கள் அனைவரின் உடல்கள், தகனம் செய்யப்பட்டே வருகின்றன.
இந்த நிலையில், மே ஐந்தாம் திகதி, கொழும்பு-15, மோதரைப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், அங்கொட தொற்று நோயியல் வைத்தியசாலையில் மரணமடைந்தார். இதையடுத்து, அந்தப் பெண், கொரோனா வைரஸ் தொற்றால் இறந்ததாகக் கூறி, அவரின் உடலையும் சுகாதாரப் பிரிவினர் தகனம் செய்தனர்.
சுகாதார பணிப்பாளரின் ‘நழுவல்’
இது இவ்வாறிருக்க, கடந்த ஆறாம் திகதியன்று, ‘ஐக்கிய மக்கள் சக்தி’ அணியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும், சுகாதாரப் பணிப்பாளர் அனில் ஜாசிங்கவுக்கும் இடை யிலான சந்திப்பொன்று நடைபெற்றது.
இதன்போது, “கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களைத் தகனம் செய்யத்தான் வேண்டும் என்கிற தீர்மானம், சுகாதாரப் பிரிவினரால் எடுக்கப்பட்டதா, அல்லது அரசியல் தலைவர்களால் எடுக்கப்பட்டதா’’ என, சுகாதாரப் பணிப்பாளரிடம் அந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேட்டார்.
ஆனாலும், அந்தக் கேள்விக்கு சுகாதாரப் பணிப்பாளர் அனில் ஜாசிங்க, உரிய பதிலை வழங்காமல் நழுவிச் சென்றதாக, முஜிபுர் ரஹ்மான் தெரிவித்திருக்கின்றார். அந்தச் சந்திப்பு, ‘பேஸ்புக்’ இல் நேரடியாக ஒளிபரப்பானமையும் குறிப்பிடத்தக்கது.
இங்கு நமக்கு ஒரு சந்தேகம் எழுகிறது. ‘கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறந்தவர்களின் உடலை எரிக்கத்தான் வேண்டும்’ என்கிற தீர்மானம், சுகாதாரத் தரப்பினரின் கலந்தாலோசனைக்கு அமைய மட்டும் எடுக்கப்பட்டிருந்தால், முஜிபுர் ரஹ்மானின் கேள்விக்கு, உண்மையான பதிலை நேரடியாகவே, சுகாதாரப் பணிப்பாளர் வழங்கியிருப்பார். ஆனால், அவ்வாறு பதிலளிக்காமல் அவர் நழுவிச் சென்றமையானது, ‘கொரோனா வைரஸ் தாக்கி, மரணிப்பவர்களின் உடல்களை, எரிக்க வேண்டும் என எடுக்கப்பட்ட தீர்மானத்தில், அரசியல் தலையீடுகள் உள்ளன என்பதை வெளிப்படுத்துகின்றதா’ என்பதே நமது சந்தேகமாகும்.
பழி வாங்கும் அரசியலா?
பௌத்த சமயத்தவர்கள் எவராவது இறந்தால், அந்தச் சடலத்தைத் தகனம் செய்வது அவர்களின் வழமையாகும். இந்துக்களும் இறந்தவர்களின் உடல்களைத் தகனம் செய்கின்றனர். ஆனால், முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதையே, சமய அடிப்படையில் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஒருவரின் சடலத்துக்கு, அவரின் நம்பிக்கை மற்றும் சமய அடிப்படையில் மரணச் சடங்குகள் நடத்துவது, அவருக்கான உரிமையாகும்.
ஆனால், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இறப்பவர்களைத் தகனம் செய்யத்தான் வேண்டும் எனக் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தச் சட்டமானது, ‘இஸ்லாமியர்களைத் திட்டமிட்டுப் பழிவாங்கும் அரசியல் செயற்பாடகும்’ என்கிற குற்றச்சாட்டு, முஸ்லிம்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்கு உரம் சேர்ப்பதாக, கொழும்பு-15, மோதரைப் பகுதியைச் சேர்ந்த பெண்ணின் மரணம் தொடர்பில், சுகாதாரத்துறையினர் நடந்து கொண்ட செயற்பாடுகள் அமைந்துள்ளன. மேற்படி பெண், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாகவே உயிரிழந்தார் என அறிவித்து விட்டு, அவரின் சடலத்தை சுகாதாரத் துறையினர் தகனம் செய்தும் விட்டனர்.
ஆனால், கொரோனா வைரஸ் தொற்றால் இறந்ததாகக் கூறப்பட்ட மோதரையைச் சேர்ந்த முஸ்லிம் பெண், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகவில்லை என்றும், அவர் தொடர்பில் வெளியிடப்பட்ட மருத்துவ ஆய்வு அறிக்கை (பி.சி.ஆர் அறிக்கை) தவறானது எனவும் இலங்கை அரச மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ், கடந்த ஏழாம் திகதி, ஊடகங்கள் முன்னிலையில் தெரிவித்தார். அதுபோலவே, மேலும் சிலர் தொடர்பான பி.சி.ஆர் அறிக்கைகளும் தவறானவையாக அமைந்திருந்ததாகவும் ரவி குமுதேஷ் அதன்போது குறிப்பிட்டார்.
ஆக, கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக மரணிக்காத முஸ்லிம் பெண் ஒருவரை, கொரோனா வைரஸ் தொற்றால் இறந்ததாகக் கூறியதோடு, அவரின் பிரேதத்தை சுகாதாரத் துறையினர் எரித்தமையும் இதன் மூலம் அம்பலமானது.
இந்தத் தகவல், முஸ்லிம்கள் மத்தியில் மேலும் அதிர்ச்சியையும் கோபத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
ராஜபக்ஷவினரின் கசப்பு
அரசியல் ரீதியாக, முஸ்லிம்கள் மீது தற்போதைய ஆட்சியாளர்களுக்கு இருக்கும் கசப்புத்தான், முஸ்லிம்களின் பிரேதங்களைக் கூட, எரிக்குமளவுக்கு வெறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது எனப் பலரும் குற்றம்சாட்டுகின்றனர். தொடர்ச்சியாக, ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலிலும், முஸ்லிம்கள் தமக்கு எதிராகச் செயற்பட்டார்கள் எனும் ஆத்திரத்தில்தான், இவ்வாறான பழி தீர்த்தலில் ராஜபக்ஷவினர் இறங்கியுள்ளதாகவும் முஸ்லிம்களிடையே புகார்களும் உள்ளன.
ஆனால், ஒரு சமூகம் அல்லது, ஒரு சமூகத்தைச் சேர்ந்த பெரும்பான்மையானோர் தனக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக, யாரேனும் ஒருவர், குறிப்பிட்ட சமூகத்தைப் பழிவாங்குதல் என்பது, மிகவும் கீழ்த்தரமான அரசியல் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. மறுபுறம், “அவ்வாறு தம்மைக் கடுமையாக எதிர்க்கும் ஒரு சமூகத்தை, ராஜபக்ஷவினர் பழிதீர்க்க வேண்டுமென்றால், தமிழர்களைத்தானே வஞ்சித்துக் கொண்டிருக்க வேண்டும், ஏன் முஸ்லிம்கள் மீது கை வைத்தார்கள்’’ என்கிற கேள்வியையும் முஸ்லிம் சமூகத்திலுள்ள சிலர் எழுப்புகின்றனர்.
இதற்கு பதிலளிக்கின்றமை போல், முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீனின் புதல்வர் அஸ்ஸுஹூரின் ‘பேஸ்புக்’ பதிவொன்றை இங்கு சுட்டிக்காட்டுதல் பொருத்தமாக இருக்கும். ‘அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், முஸ்லிம் அரசியல்வாதிகள் வாகனங்களையும் பல மில்லியன் ரூபாய் பணத்தையும் பதவிகளையும் கையூட்டாகப் பெற்றிராவிட்டால், ராஜபக்ஷ தரப்பினர், முஸ்லிம்களையும் கௌரவமாக நடத்தியிருப்பார்கள். தீர்க்கதரிசனமில்லாத அரசியல் செய்து, நமது நிலைமையைச் சிக்கலாக்கிக் கொண்டது நாமே’ என்று அவர், அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தொடங்கிய 2005ஆம் ஆண்டிலிருந்து, அவருக்கு எதிராகவே முஸ்லிம்களில் கணிசமானோர் வாக்களித்து வந்தனர். இறுதியாக, கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிட்ட தேர்தலிலும், முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் அவருக்கு எதிராகவே வாக்களித்தனர்.
முஸ்லிம்களின் கணிசமான வாக்குகளைத் தன்வசம் கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ்தான், ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலிலும், மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, முஸ்லிம்களை வாக்களிக்கச் செய்வதில், முன்னின்று செயற்பட்டது. கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், கோட்டாவுக்கு எதிராக முஸ்லிம்களை வாக்களிக்கச் செய்ததில், முஸ்லிம் காங்கிரஸ் கடுமையாக உழைத்தது.
ஆனாலும், 2005, 2010ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில், முஸ்லிம் காங்கிரஸின் எதிர்ப்பையும் மீறி, மஹிந்த ஆட்சி பீடமேறியமை அறிந்ததே. இந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம், மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, முஸ்லிம்களை வழிநடத்திய முஸ்லிம் காங்கிரஸ், தமது பேச்சைக் கேட்டு வாக்களித்த முஸ்லிம்களை, ‘நட்டாற்றில்’ கைவிட்டு, மஹிந்தவின் அரசாங்கத்தில் இணைந்து கொண்டதோடு, அமைச்சுப் பதவிகளையும் பெற்றுக் கொண்டது.
உதாரணமாக, 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகச் செயற்பட்ட முஸ்லிம் காங்கிரஸ், அதையடுத்து அமைந்த மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில், 2007ஆம் ஆண்டு இணைந்ததோடு, முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், துறைமுகங்கள் மற்றும் தொடர்பாடல் ஆகிய துறைகளுக்கான அமைச்சர் பதவியையும் பெற்றுக் கொண்டார்.
பின்னர், 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக முஸ்லிம் சமூகத்தை வழிநடத்தும் செயற்பாட்டில், முஸ்லிம் காங்கிரஸ் இறங்கியது. ஆனால், அந்தத் தேர்தலிலும் மஹிந்தவே வெற்றிபெற்றார்.
அதையடுத்து, மீண்டும் மஹிந்த அரசாங்கத்தில், 2010ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸ் இணைந்ததோடு, அந்தக் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், நீதியமைச்சர் பதவியையும் மஹிந்த அரசாங்கத்தில் பெற்றெடுத்தார். பிறகு, 2015ஆம் ஆண்டிலும் அதே பல்லவிதான். அந்த வருடம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும், மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து, ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் களமிறங்கியது.
இவை போன்ற வரலாறுகளைத்தான், அஸ்ஸுஹூர் சேகு இஸ்ஸதீன், தனது ‘பேஸ்புக்’ பதிவில் சுட்டிக்காட்டி இருக்கின்றார். அரசியல் ரீதியாக மஹிந்தவை, முஸ்லிம்கள் எதிர்த்ததில் எந்தத் தவறும் இல்லை. யாரை ஆதரிக்க வேண்டும் என்பது, அவரவர் உரிமையாகும்.
ஆனால், மஹிந்த ராஜபக்ஷ களமிறங்கிய ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலிலும், அவரை முஸ்லிம் காங்கிரஸ் எதிர்த்து விட்டு, அந்த ஈரம் காய்வதற்குள் மஹிந்த அமைக்கும் ஆட்சியில் முஸ்லிம் காங்கிரஸினர் ஓடிச் சென்று ஒட்டிக்கொண்டு, அமைச்சர் பதவிகளைப் பெறுவதும், பிறகு அடுத்து வந்த தேர்தலில் மஹிந்தவுக்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் களமிறங்கியதும், பின்னர் வந்து ஒட்டிக் கொண்டு அமைச்சர் பதவிகளைப் பெற்றதும் மஹிந்த ராஜபக்ஷவின் கணக்கில், அவருக்கு முஸ்லிம்கள் செய்த மிகப்பெரும் துரோகமாகும். அந்தக் கோபம்தான், முஸ்லிம்களின் சடலங்களை எரிக்கும் நிலைவரை, அவர்களைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பது, முஸ்லிம்களில் ஒரு சாராரின் கருத்தாகும்.
தமிழர்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, மஹிந்த ராஜபக்ஷவை ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலிலும் எதிர்த்து வந்தமை போலவே, மஹிந்த அமைத்த ஆட்சிகளிலும் பங்கேற்காமல், ஒவ்வொரு தடவையும் அவர்களுக்கு எதிராகவே நாடாளுமன்றில் அமர்ந்தது. அந்த வகையில், தமிழர்கள் அரசியல் ரீதியாகத் தமக்கு எதிராளிகளாக இருந்தார்களே தவிர, துரோகிகளாக இருக்கவில்லை என்பது, மஹிந்த தரப்பின் பார்வையாக இருக்கிறது என்கிற கருத்துகளும் அரசியலரங்கில் உள்ளன.
அதனால்தான், பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில், சில நாள்களுக்கு முன்னர் நடந்த கூட்டமொன்றில், தமிழ்த் தேசிய கூட்டமைப்புப் பங்கேற்ற போது, அவர்களை மரியாதையாக மஹிந்த நடத்தினார் என்றும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், அங்கு முன்வைத்த எழுத்து மூலக் கோரிக்கைகள் கொண்ட ஆவணத்தை, மறுப்பின்றி மஹிந்த பெற்றுக் கொண்டார் எனவும் கூறப்படுகிறது. ஆக, ‘முஸ்லிம்கள் மீது ராஜபக்ஷவினர் இவ்வாறானதோர் ஆத்திரம் கொள்ளும் நிலைக்கு, அந்தச் சமூகத்தைக் கொண்டு வந்து நிறுத்திய அரசியல் செயற்பாடுகள் எவை’ என்பதையும், முஸ்லிம் மக்கள் புரிந்து கொள்தல் வேண்டும்.
பேசாமல் இருக்க முடியாது
அதேவேளை, தமக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநீதிகளுக்கு எதிராகப் பேசாமல் இருந்து விடக்கூடாது என்பதையும் முஸ்லிம்கள் புரிந்து கொள்ளுதலும் அவசியமாகும்.
‘கொரோனா வைரஸ் காரணமாக இறக்கும் நபர்களைத் தகனம் செய்யவும் அடக்கம் செய்யவும் முடியும்’ என்று, உலக சுகாதார நிறுவனமே கூறியுள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இறந்தவர்களின் உடலிலிருந்து, கொரோனா வைரஸ் கிருமிகள் பரவாது என்கிற விஞ்ஞான பூர்வ உண்மையையும் உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தநிலையில், இதற்கு மாற்றமாக, ஒரு சமூகத்தைப் பழிவாங்கும் வகையில், ‘கொரோனா வைரஸ் காரணமாக இறப்பவர்களை எரித்தே ஆகுவோம்’ என, ஒற்றைக் காலில் நிற்கும் இலங்கை ஆட்சியாளர்களின் நிலைப்பாடு கண்டனங்களுக்கு உரியதாகும்.
எனவே, கொரோனா வைரஸ் பரவுகையால் மரணிக்கும் முஸ்லிம்களின் பிரேதங்களை அடக்கம் செய்வதற்கான இணக்கப்பாட்டை, அரசியல் ரீதியாகப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ள நிலையில், அந்த விவகாரத்தைச் சட்ட ரீதியாக அனுகுவதே அடுத்த கட்ட நடவடிக்கையாகும்.
ஆனால், இலங்கையிலுள்ள எந்தவொரு முஸ்லிம் அரசியல் கட்சிகளும், இந்த உரிமையை வென்றெடுப்பதற்கான சட்ட நடவடிக்கைகளில் இந்தக் கட்டுரை எழுதப்படும் வரை இறங்கவில்லை. கடந்த நல்லாட்சியில், 52 நாள்கள் அரசியல் குழப்படி இடம்பெற்றபோது, ‘அரசியல் யாப்பு மீறப்பட்டு விட்டது; அதனை அனுமதிக்க முடியாது’ என்று கோஷமிட்டுக் கொண்டு, கறுப்புக் ‘கோட்’களை அணிந்தவாறு உயர் நீதிமன்றத்தின் படியேறிய எந்தவொரு முஸ்லிம் சட்டத்தரணி அரசியல்வாதியும், முஸ்லிம்களின் பிரேதங்கள் எரிக்கப்படுவதற்கு எதிராக, இதுவரை நீதிமன்றம் செல்லவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.
ஆனால், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த தனிநபரொருவர், இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டும் முயற்சிகளில் இறங்கியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago