Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Mayu / 2024 மே 28 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ
1977 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற மாபெரும் வெற்றியானது பாரிய சேதங்களை நாட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தது. ஒருபுறம் இனமுரண்பாடு மோசமடையவும் இனங்களுக்கிடையே பகைமை வேர்விடவும் வழியமைத்தது. மறுபுறம் சுயாதீன அரச நிர்வாகமும் நீதித்துறையும் சீரழிந்ததோடு அராஜரீக அரசியல் தலைதூக்கியது. இன்றும் இலங்கையின் அரசியல் கலாசாரத்தின் பகுதியாகவுள்ள அதிகாரத் துஷ்பிரயோகத்தின் தொடக்கங்களை 1977ஐ தொடர்ந்த அடுத்த பத்தாண்டுகளில் காணலாம். ஜே.ஆர்.ஜெயவர்த்தன தனது சர்வாதிகார நடத்தையை இனமுரண்பாடு என்ற துணி கொண்டு மறைக்க முற்பட்டார்.
தனது இயலாமைக்கு இனமுரண்பாட்டைக் காரணங் காட்டினார். ஆனால் இனத்துவ துவேசத்தில் மூழ்கிப் போயிருந்த இடதுசாரிகள் உட்பட்ட எதிர்க்கட்சிகள் இதைக் கவனிக்கவோ கண்டிக்கவோ இல்லை. இதன் மோசமான பலன்களை இன்றும் நாடு எதிர்நோக்குகிறது.
1978இல் ஜே.ஆர். கொணர்ந்த அரசியல் யாப்பு அவர் 1977 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் முன்னமே திட்டமிடப்பட்டது என்பதைப் பலர் சொல்லியிருக்கிறார்கள். அந்த யாப்பின் பிரதான நோக்கங்களில் ஒன்று தனது ஆட்சி கவிழாமற் தவிர்ப்பதற்கான அனைத்து சட்ட ஏற்பாடுகளையும் செய்வது. மாவட்ட அடிப்படையில், விகிதாசாரப் பிரதிநிதித்துவ அடிப்படையில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம், இனி எப்போதும் ஒரு கட்சி மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்து புதிய அரசியல் யாப்பொன்றைப் புனையும் வாய்ப்பை ஏறத்தாழ இல்லாமற் செய்யும் நோக்குடையது. அவ்வாறே, கட்சித் தாவலுக்கு எதிரான அரசியல் யாப்புப் பகுதிகள் ஆளுங் கட்சி உறுப்பினர்கள் எதிர்க் கட்சிக்குத் தாவி ஆட்சியைக் கவிழ்க்கும் வாய்ப்பை மறுக்கும் நோக்கைக் கொண்டது.
அவருடைய பதவிக் காலத்தில் பன்னிரண்டு சட்டத் திருத்தங்கள் நிறைவேறின. இதன்மூலம் அரசியல் யாப்பானது கேலிக்குரியதாயும் அதிகாரத்தை நிறுவும் கருவியாகவும் மாறியது. குறிப்பாக மூன்று திருத்தங்களை இங்கு நோக்கலாம்.
இரண்டாவது யாப்புத் திருத்தம், எதிர்க்கட்சியில் இருந்து ஆளுங்கட்சிக்குத் தாவுவதை அனுமதிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கட்சி தாவினால் அவர் பதவியை இழப்பார் என்பது யாப்பில் உள்ளடக்கப்பட்டிருந்தது. தனது பெரும்பான்மையைக் காக்க ஜே.ஆரே இதை யாப்பின் பகுதியாக்கினார்.
ஆனால், அவருக்கு எதிர்க்கட்சியிலிருந்து ஆளும் கட்சிக்கு வருவோரை ஏற்க ஒரு வழி தேவைப்பட்டது. எனவே, இந்த யாப்புத் திருத்தம், ஒருவரின் கட்சித் தாவலை ஒரு பாராளுமன்றப் பெரும்பான்மை அங்கீகரித்தால் கட்சித் தாவல் செல்லுபடியாகும் என்றும் அவர் தொடர்ந்தும் பதவி வகிக்கலாம் என்று அறிவித்தது.
இதன் மூலம் எதிர்க்கட்சியிலிருந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் மட்டக்களப்புப் பாராளுமன்ற உறுப்பினர் செ.இராசதுரை ஆளுங்கட்சிக்குப் போய் அமைச்சரானார். வேறு சிலரும் இவ்வாறு ஆளும் தரப்புக்குத் தாவினார்கள்.
மூன்றாவது திருத்தம், ஜனாதிபதித் தேர்தலை அதற்குரிய ஆறு வருடத் தவணை முடியுமுன் நான்கு ஆண்டுகளின் பின்னர் எப்போதும் நடத்தலாம் என்று அறிவித்தது. இதன்மூலம் ஒரு ஜனாதிபதி தனது செல்வாக்குச் சரிய முன்னரே தேர்தலை நடாத்த இது வழிசெய்தது. இதையே சந்திரிகாவும், மஹிந்தவும் பின்னர் பயன்படுத்தினர்.
நான்காவது திருத்தம், முதலாவது பாராளுமன்றத்தின் ஆயுட்கால நீட்டிப்பைப் இயலுமாக்கியது. இது ஒரு ஜனநாயக விரோத நடவடிக்கையாகும். தேர்தலுக்குப் போனால் அதே ஆறில் ஐந்து பெரும்பான்மையைப் பெறவியலாது என்பதைத் தெரிந்த ஜே.ஆர். இத்திருத்தத்தின் மூலம் பாராளுமன்றின் காலத்தை நீடித்தார்.
யாப்புத் திருத்தங்களுக்கு வெளியேயும் அவர் தனது பதவியைக் காக்க அயராது போராட வேண்டியிருந்தது. ஏனெனில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றிபெறுவது பற்றிய ஐயங்கள் அவருக்கிருந்தன. மக்களின் செல்வாக்குப் பெற்ற தலைவராக அவர் இருக்கவில்லை. எனவே தனது பிரதான போட்டியாளரைக் களத்திலிருந்து அகற்ற வேண்டியிருந்தது. எனவே, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு சவாலாக அமையக்கூடிய சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அரசியல் உரிமைகளை ஏழு ஆண்டுக் காலத்திற்கு மறுத்து அவருடைய பாராளுமன்றப் பதவியைப் பறிப்பதற்கு ஜயவர்தன ஒரு ஆணைக்குழவை நியமித்து தனது பழிவாங்கலை நடத்தினர். இது ஆணைக்குழுக்கள் மேலிருந்த நம்பிக்கையைச் சிதைத்தது. இப்போதும் ஒரு அரசியல் நாடகமாகவே ஆணைக்குழுக்கள் இயங்குகின்றன. இதற்கான முன்னோடி ஜே.ஆரின் குறித்த ஆணைக்குழு.
1982 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி உறுதி என்று போட்டியிட்ட ஜே.ஆரால் 52.9 வீதம் வாக்குகளை மட்டுமே பெறமுடிந்தது. எதிரணி பலவீனமானதாயும் சிதறுண்டதாகவும் இருந்த நிலையிலும் கூட பெருவெற்றியை அவரால் பெற்றுக் கொள்ள இயலவில்லை. நீதித்துறையையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்பினார். இங்கு ஒரு உதாரணத்தைக் காட்டுவது பொருத்தம். இரத்தினபுரி மாவட்டத்தில் கலாவன தொகுதிக்கு நடைபெற்ற தேர்தல் செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 1981 நடந்த இடைத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சரத் முத்தெட்டுவேகம வென்றார்.
அத் தோல்வியைச் சீரணிக்க இயலாத ஜயவர்தன, அரசியல் யாப்பை மாற்றிக் கலாவன தொகுதிக்கு 02 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்திருக்க முயன்றார். அதன்படி, தேர்தல் செல்லுபடியாகாததால் பதவியிழந்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான பிலாப்பிட்டியவும் சரத் முத்தெடடுவேகமவும் ஒரே ஆசனத்திற்கான இரண்டு உறுப்பினர்களையும் வைத்திருப்பதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார்.
உயர் நீதிமன்றம் அச் சட்டத்திருத்தத்தை நிறைவேற்றப் பாராளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று தீர்த்ததால் அம்முயற்சி கைவிடப்பட்டது. இது, உயர் நீதி மன்றமே, ஐயவர்த்தனவுக்குத் தடையாக அமையக்கூடிய ஒரே நிறுவனமாக இருந்தது என்பதைக் காட்டியது. சுதந்திர இலங்கையில் சுயாதீனமான அரசியல் தலையீடுகள் இன்றி இயங்கி வந்த ஒரே நிறுவனம் நீதித்துறை மட்டுமே.
நீதித்துறை நியமனங்கள் ஒழுங்கு முறைப்படியும் பதவி உயர்வுகள் மூப்பின் அடிப்படையிலுமே இடம்பெற்றன. 1977இல் ஜே.ஆர் இந்த நடைமுறைகளைப் புறந்தள்ளி தனக்கு நெருக்கமான நெவில் சமரக்கோனை பிரதம நீதியரசாக நியமித்தார். இதுவே நீதிபதிகள் நியமனத்தில் ஒழுங்குகளை மீறி அரசியல் முன்னிலைக்கு வந்த முதல் நிகழ்வு. இதுவே நீதித்துறையின் சரிவின் தொடக்கப்புள்ளி எனவும் கொள்ளலாம்.
1978 யாப்பு ஜனாதிபதியை எவ்வித நீதி விசாரணைக்கும் அப்பாற்பட்டவராக்கியது. நீதிபதிகளுக்கு இருந்த சட்டப்பாதுகாப்பை நீக்கியது. ஆனால், இதைப் பிரதம நீதியரசரான நெவில் சமரக்கோன் கண்டுகொள்ளவில்லை. புதிய யாப்பை நிறைவேற்றியவுடன் ஜே.ஆர் செய்த முதற் காரியங்களில் ஒன்று உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இருந்த 12 பேரையும் பதவி விலக்கினார். அதில் ஐந்து பேரை மட்டும் மீள நியமித்தார், அந்நியமனமும் மூப்பின் அடிப்படையிலான தல்ல. 1984 இல் நெவில் சமரக்கோனுடன் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் அவரைப் பதவி விலக்க சட்டமியற்ற ஜே.ஆர் முடிவெடுத்த நிலையில் அவமானத்தைத் தவிர்க்க நெவில் சமரக்கோன் தானாகவே பதவி விலகினார். அதேவேளை சிறிமாவைத் தண்டித்த ஆணைக்குழுவின் நீதிபதிகளுக்கு அவர்களுக்குரிய சன்மானங்கள் வழங்கப்பட்டன. அவ்வாறே சர்வானந்தா புதிய பிரதம நீதியரசரானார். ஓய்வுக்குப் பின்னர் அவருக்கு கொழும்பு மாகாண ஆளுநராகவும் பதவி வழங்கப்பட்டது.
1978 ஜனவரியில் ‘தொழில் உறவுச் சட்டம்’ என்ற பெயரில் மிகவும் மோசமான தொழிலாளரின் உரிமைகளை மறுக்கும் சட்டமூலத்தை ஜே.ஆர் அறிமுகப்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக 1979 இல் ‘அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டம்’ கொண்டுவரப்பட்டது. அதன்மூலம் அரசாங்க ஊழியர்களின் வேலை நிறுத்த உரிமை இல்லாமல் செய்யப்பட்டது. வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோர் அபராதம், சிறை, சொத்துப் பறிமுதல் ஆகிய தண்டனைகட்கு உட்படலாம் என்பதை விட, அவர்கள் உயர் தொழில் புரிவோராயின் அவர்களுடைய தொழிற் தகைமையை நீக்கவும் அச் சட்டம் இடங்கொடுத்தது. இதன் மூலம் தொழிற்சங்க இயக்கத்தை முடக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
1979-80 காலப்பகுதியில் தீவிரமடைந்த பொருளாதார நெருக்கடியின் விளைவால் 1980 மே மாதம் தொழிற்சங்கங்களின் குழு எடுத்த முடிவின்படி ஜூன் 5ம் திகதி ஒரு வெகுசன மறியற் போராட்டமும் அரை நாள் வேலைநிறுத்தமும் நடந்தது. இதன்போது ஜே.ஆரின் உத்தரவின் பேரில் குண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். டி.சோமபால என்ற ஒரு தொழிற்சங்கவாதி கொலையுண்டார். ஜூலை 18ஆம் திகதி ஒரு பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அரசாங்கம் ஜூலை 16ஆம் திகதி அவசரக்கால சட்டத்தைப் பிறப்பித்து ஏறத்தாழ அனைத்துத் தொழில்களையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவித்தது. அத்துடன், அவசரக்கால சட்டத்தின் கீழ், வேலைநிறுத்தம் பற்றிய கடும் பத்திரிகைத் தணிக்கையும் விதிக்கப்பட்டது. இலங்கையின் ஜனநாயகம் முழுமையான சர்வாதிகாரமாக மாறியது.
19.04.224
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
31 minute ago
41 minute ago
50 minute ago