Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Editorial / 2023 ஒக்டோபர் 20 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ். எம் ஐயூப்
ஏழு பெரும் பாவங்களைப் பற்றி மகாத்மா காந்தி குறிப்பிட்டு இருந்தார் அவற்றில் ஒன்று கொள்கையில்லா அரசியலாகும். இலங்கை அரசியலில் நடப்பவை காந்தியின் அந்தக் கூற்றை அடிக்கடி எமக்கு நினைவூட்டுகிறது.
நாட்டில் நடக்கும் சில குற்றச் செயல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அடிக்கடி பலரால் முன்வைக்கப்படும் கோரிக்கையைப் பற்றியும் இந்நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு நிரந்தர கொள்கை இல்லை.
1959ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க படுகொலை செய்யப்பட்டபோது சிலர் சர்வதேச விசாரணையை கோரினர். தென் பகுதியில் மிகவும் பிரபல்யம் வாய்ந்திருந்த பிரிகேடியர் டென்சில் கொப்பேகடுவ 1992ஆம் ஆண்டு புலிகளின் கண்ணி வெடியில் சிக்கி உயிரிழந்தபோது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட பலர் அது தொடர்பாக அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவை குற்றஞ்சாட்டினர். அப்போதும் சர்வதேச விசாரணை கோரப்பட்டது.
புலிகளால் முன்னாள் தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி கொல்லப்பட்டபோதும் பிரேமதாசவே சந்தேகிக்கப்பட்டார். எனவே அப்போதும் ஸ்ரீலசுக உள்ளிட்ட பலர் சர்வதேச விசாரணையை கோரினர். ஆனால் ஸ்ரீலசுகவின் மறு அவதாரங்களான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகள் வடக்கு, கிழக்கு போர் விடயத்தில் சர்வதேச விசாரணையை எதிர்த்து வந்துள்ளன.
2015ஆம் ஆண்டு ‘நல்லாட்சி’ அரசாங்கம் போர் கால மனித உரிமை மீறல்கள் தொடர்பாக வெளிநாட்டு (பொதுநலவாய நாடுகளின) நீதிபதிகளைக் கொண்ட விசாரணையை நடத்த ஐ.நா.மனித உரிமை பேரவையுடன் இணக்கத்துக்கு வந்தது. அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவே அப்போது அந்த முடிவுக்கு காரணமாக இருந்தார். ஆயினும் அவர் இப்போது எந்தவொரு விடயம் தொடர்பாகவும் சர்வதேச விசாரணையை ஏற்பதில்லை.
கடந்த 2ஆம் திகதி ஜேர்மன் தொலைக்காட்சியான டௌஷ் வெலாவின் (Deutsche Welle) ஊடகவியலாளர் ஒருவருடன் ஜேர்மனியின் தலைநகரான பெர்லினில் நடத்தப்பட்ட நேர்காணலில் அவர் இந்த விடயத்தை மிக தெளிவாக தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத் தக்குதலை கோட்டாபயவின் தேவைக்காக அரச உளவுத்துறையினரே நடத்தினர் என்று கடந்த மாதம் பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி சேவை விவரணப் படமொன்றின் மூலம் குற்றஞ்சாட்டியது.
அது தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றம் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச போன்றவர்கள் கோருகின்றனர். இதைப் பற்றி டௌஷ் வெலா ஊடகவியலாளர் கேட்டபோதே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச விசாரணை தொடர்பான தமது புதிய நிலைப்பாட்டை தெரிவித்தார்.
இந்த நேர்காணல் ஐக்கிய தேசிய கட்சி இனவாத அரசியலை நோக்கி வேகமாக நகர்ந்து செல்வதையும் தெளிவாக எடுத்துக் காட்டியது. தாம் மேற்குலக ஆதிக்கவாதத்தை எதிர்ப்பவர் என்று காட்டிக் கொண்டு தென்னிலங்கையில் பெரும்பான்மை தேசியவாதிகளின் மனதில் இடம்பிடித்துக் கொள்ள ரணில் விக்ரமசிங்க முயல்வதையும் அது காட்டியது.
தாம் ஏன் சர்வதேச விசாரணையை நிராகரிக்கிறோம் என்பதை விவரிக்க ஜனாதிபதி மிகப் பலமான வாதங்களையும் முன்வைத்தார் என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும். உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பாக ஜேர்மனியோ பிரிட்டனோ சர்வதேச விசாரணைகளை நடத்துகின்றனவா என்று அவர் ஊடகவியலாளரிடம் கேட்டார்.
‘இலங்கையினருக்கும் ஆசியாவைச் சேர்ந்தவர்களுக்கும் மட்டும் அது ஏன்? நாம் இரண்டாந்தரமானவர்கள் என்று கருதுகிறீர்களா? உங்கள் மேற்குலக கண்ணோட்டத்தை கைவிடுங்கள். நீங்கள் அரத்தமற்றவற்றை பேசுகிறீர்கள்’. ஏன்று ஜனாதிபதி அந்த மேற்குலக ஊடகவியலாளருக்கு கோபமாக பதிலளித்தார்.
ஊயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவையில்லை என்பதற்கு அவர் மற்றுமொரு பலமான வாதத்தையும் முன்வைத்தார். அதாவது ஏற்கனவே பல சர்வதேச விசாரணைகள் இடம்பெற்று இருக்கின்றன என்பதே அவரது வாதமாகும். அமெரிக்க எப்.பி.ஐ நிறுவனம், பிரித்தானிய பொலிஸ், அவுஸ்திரேலிய சமஷ்டி பொலிஸ். சீன. இந்திய, பாகிஸ்தான் விசாரணை அதிகாரிகள் ஆகியோர் ஏற்கனவே விசாரணையை நடத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அவ்வாறு இருக்க, மேலும் என்னகுற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். ஏன்று ஜனாதிபதி ஊடகவியலாளரிடம் கேட்டார்.
சர்வதேச விசாரணை நடத்துமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று ஊடகவியலாளர் தமது கேள்வியை கேட்க முற்பட்ட உடனேயே ஜனாதிபதி ஏன் கோபமடைந்தார் என்பது தெளிவாகவில்லை. ஊடகவியலாளர் மேற்குலக மனப்பான்மையுடன் அக்கேள்வியை கேட்டதாகவும் அவர் அந்தக் கேள்வியை கேட்டிருக்கக் கூடாது என்றும் மிகவும் ஆக்ரோஷமாக ஊடகவியலாளரை மிரட்டும் தொணியில் அவர் கூறினார்.
இந்தக் கேள்வி மேற்குலகத்தவர்கள் மட்டும் கேடகும் கேள்வியாக ஜனாதிபதி ஏன் முடிவு செய்தார்? உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல், முழு உலகத்தினதும் கவனத்தை ஈர்த்த சம்பவம் என்பதாலும் சனல் 4 தொலைக்காட்சி நிகழ்ச்சியானது இன்னமும் புதிய விடயமாக இருப்பதாலும் சீனா, ஜப்பான் அல்லது இந்தியாவைச் சேர்ந்த கீழத்தேய ஊடகவியலாளர் ஒருவர் இலங்கை ஜனாதிபதியை இந்நாட்களில் பேட்டி கண்டாலும் அவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்கும் வாய்ப்பு அதிகமாகும். அது மேற்குலக் கேள்வியோ கீழத்தேய கேள்வியோ அல்ல.
ஒரு நேர்காணலில் கேட்கப்படும் கேள்விகளை தேர்ந்தெடுப்பது ஊடகவியலாளரின் உரிமையாகும். ஜனாதிபதி வேண்டுமானால் அந்தக் கேள்விக்கு பதிலளிக்காமல் இருந்திருக்கலாம். புதிலளிக்கத் தான் வேண்டும் என்று ஊடகவியலாளர் வற்புறுத்த முடியாது. விந்தை என்னவென்றால் அந்தக் கேள்வியை நிராகரிக்காமல் அதற்கு சிறந்த முறையில் பதிலளித்த வண்ணமே அவர் அதனை கேட்டதற்காக ஊடகவியலாளரை சாடினார்.
ஏந்தவொரு விடயம் தொடர்பாகவும் சர்வதேச விசாரணை நடத்த முடியாது என்று ரணில் விக்ரமசிங்கவால் எவ்வாறு கூற முடியும்? பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகள் உள்ளிட்ட கலப்பு நீதிமன்றம் ஒன்றின் மூலமாக இலங்கையில் போர் கால மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசரணை நடத்துவதற்கான வாசகங்களைக் கொண்ட 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை பேரவையின் பிரேரணைக்கு ரணில் தலைமையிலான அரசாங்கம் சம அனுசரணை வழங்கியது.
அதேபோல் அவர் கடந்த வருடம் ஜனாதிபதியாக பதவிக்கு வந்தவுடன் உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத் தாக்குதல் தொடர்பாக பிரிட்டனின் ஸ்கொட்லன்ட்யாட் பொலிஸாரின் மூலம் விசாரணை நடத்த தாம் தயார் எனவும் கூறியிருந்தார்.
அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் அதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்து இருக்கும் நிலையில மேலும் என்ன விசாரணை வேண்டும் என்று கேட்கும் ஜனாதிபதி ரணில் சனல் 4 குற்றச்சாட்டுக்களை விசாரிக்க முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஐ.இமாமின் தலைமையில் ஒரு குழுவை நியமித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
ரணில் விக்ரமசிங்க எப்போதும் ஊடகவியலாளர்களை மட்டந்தட்டியே பேசுவார். குறிப்பாக நேர்காணல்களின் போது அவர் அவ்வாறு செய்வார். ஊடகவியலாளர்கள் தம்மிடம் கஷ்டமான கேள்விகளை கேட்காதிருக்க அவர் மேற்கொள்ளும் உத்தியாகவும் அது இருக்கலாம்.
இங்கு அதை விட முக்கியமான விடயம் ஒன்று இருப்பதாக தெரிகிறது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ரணில் விக்ரமசிங்க திட்டமிடவுதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சஜித் பிரேமதாசவும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் ஒருவரும் ஜனாதிபதித் தேர்தலின் போது களத்தில் இறங்கினால் ரணிலுக்கு வாக்களிக்கப் போவது யார்? கடந்த பொதுத் தேர்தலின்போது அவரது கட்சிக்கு மாவட்ட ரீதியாக பாராளுமன்றத்தில் ஒரு ஆசனத்தையேனும் வென்றெடுக்க முடியவில்லை. அந்த நிலைமை மாறியதற்கான அறிகுறிகளும் காண்பதற்கு இல்லை.
அதேவேளை, ரணிலை பொதுஜன முன்னணியின் வேட்பாளராக களத்தில் இறக்க வேண்டும் என்று அந்த முன்னணியின் சில அமைச்சர்கள் விரும்புவதாகவும் தெரிய வருகிறது.
அதற்காக பொதுஜன முன்னணியின் இனவாத நிலைப்பாட்டை தழுவுகிறார் போலும்.
மேற்குலகை தாக்கிப் பேசியமையும் சர்வதேச விசாரணையை நிராகரித்தமையும் உள்நாட்டு பெரும்பான்மை தேசியவாத வாக்காளர்களை குறிவைத்து ஜனாதிபதி வெளியிட்ட கருத்துக்களாகவே கருத வேண்டியுள்ளது. அவர் மாறிவிட்டார் என்பதையும் இது காட்டுகிறது.
2023.10.11
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago