2024 நவம்பர் 25, திங்கட்கிழமை

சர்வகட்சி மாநாடுகள்: காலத்தைக் கடத்தும் உத்திகள்

Johnsan Bastiampillai   / 2022 மார்ச் 30 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

எம்.எஸ்.எம். ஐயூப்

 

 

 

 

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண முடியாமையின் காரணமாகவும் அதன் காரணமாக, நாடு முழுவதிலும் ஆங்காங்கே மக்கள், தமது ஆத்திரத்தை வெளிப்படுத்தி வருவதன் காரணமாகவும், அரச தலைவர்கள் செய்வதறியாது எதையெதையோ செய்கிறார்கள். அவை ஒன்றுக்கொன்று பொருந்துவதாகவும் தெரியவில்லை.

பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு அமைச்சரவையால் தீர்வு காண முடியாத நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, மார்ச் மாதம் ஏழாம்  திகதி, 11 உறுப்பினர்களைக் கொண்ட பொருளாதார சபையை நியமித்தார். ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களான மஹிந்தானந்த அலுத்கமகே, ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட திறைசேரியினதும் மத்திய வங்கியினதும் உயர் அதிகாரிகள் அதில் அங்கம் வகிக்கின்றனர்.

பின்னர், இந்தப் பொருளாதார சபைக்கு ஆலோசனை வழங்குவதற்கென,  மார்ச் 15ஆம் திகதி, பிரபல வர்த்தகர்களை உள்ளடக்கிய 14 உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனை சபையொன்றை ஜனாதிபதி நியமித்தார். இந்த ஆலோசனை சபை, கடந்த 21ஆம் திகதி கூடி, சர்வதேச நிதி நிறுவனங்களிடம் உதவி பெறுவது தொடர்பாக ஆராய்வதற்காக, மத்திய வங்கியினதும் திறைசேரியினதும் அதிகாரிகளைக் கொண்ட தொழில்நுட்பக் குழுவொன்றை நியமிக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்தது.  அதேவேளை, நிதி அமைச்சருக்கு உதவியாக நிபுணர்கள் குழுவையும் சட்ட அதிகாரி ஒருவரையும் நிதித்துறை அதிகாரி ஒருவரையும் நியமிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.

இந்தக் குழுக்கள், சபைகள் ஆகியவற்றை நியமித்துவிட்டு, அதே பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, ஜனாதிபதி சர்வகட்சி மாநாடொன்றையும் மார்ச் 23ஆம் திகதி கூட்டினார். அந்த மாநாட்டின் போது உரையாற்றிய நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷ, “சர்வதேச நிதி நிறுவனங்களுடன் செயலாற்றுதற்காக, சர்வதேச நிபுணர்கள் குழுவொன்றை  நியமிக்க வேண்டும்” என்றார்.

இவ்வாறு தொடர்ச்சியாகக் குழுக்கள் நியமிக்கப்பட்டு வந்த போதிலும், எந்தக் குழுவும் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான எந்தவொரு பரிந்துரையையும் முன்வைக்கவில்லை. அதேவேளை, பொருளாதார சபைக்கு மஹிந்தானந்தவையும் ஜொன்ஸ்டனையும் நியமித்ததில் இருந்தே, அச்சபையின் தரம் தெரிகிறது.

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரிலேயே, சர்வகட்சி மாநாடு கூட்டப்பட்டது. அரசாங்கத்தில் உள்ள ஸ்ரீ ல.சு.க உள்ளிட்ட சிறுகட்சிகள் அரசாங்கத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டதை அடுத்து, ஜனாதிபதி 14 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஸ்ரீ ல.சு.கவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்தப் பேச்சுவார்த்தையின் போதே, சர்வகட்சி மாநாடு பற்றிய ஆலோசனை முன்வைக்கப்பட்டது.

உண்மையிலேயே, அது சர்வகட்சி மாநாடாக அமையவில்லை. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் நாட்டில் மிகவும் பலம் வாய்ந்த அரசியல் அழுத்தக் குழுவான மக்கள் விடுதலை முன்னணியும், இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. அரசாங்கத்தின் பங்காளிகளான சிறு கட்சிகளும் கலந்து கொள்ளவில்லை; அவை, தமது சார்பில் இரண்டு பிரதிநிதிகளை அனுப்பியிருந்தன.

ஆயினும், இனப்பிரச்சினை தவிர்ந்த ஏனைய தேசிய பிரச்சினைகள் விடயத்தில் பொதுவாகத் தலையிடாத தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, இந்த மாநாட்டில் கலந்து கொண்டமை முக்கியமானதொரு விடயமாகும். மாநாட்டில் பலரும் உரையாற்றினர். ஆனால், எவரும் அதன் நோக்கமான பொருளாதார பிரச்சினையைத் தீர்ப்பதற்கான எந்தவோர் ஆலோசனையையும் முன்வைக்கவில்லை. உண்மையிலேயே, நாட்டில் எந்தவோர் அரசியல் கட்சியிடமும் இந்த நெருக்கடிக்கு தீர்வு இல்லை.

சர்வகட்சி மாநாடுகளைப் பற்றி, நாட்டின் தமிழ்த் தலைவர்களுக்கே, அதிகம் அனுபவம் இருக்க வேண்டும். ஏனெனில், இதற்கு முன்னர் நடைபெற்ற பல சர்வகட்சி மாநாடுகள் அனைத்தினதும் நோக்கம், இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதேயாகும்.

இனப்பிரச்சினையானது, அரசியல் பிரச்சினையாகும். அரசியல்வாதிகளால் அதற்குத் தீர்வு காண முடியுமாக இருக்க வேண்டும். தற்போதைய பிரச்சினை, பொருளியல் நிபுணத்துவம் தேவைப்படும் பிரச்சினையாகும். அரசியல் தன்மை கொண்ட இனப்பிரச்சினைக்கே அரசியல்வாதிகளால் தீர்வு காண முடியாமல் போய்விட்டது.

முன்னைய சர்வகட்சி மாநாடுகள் எதுவும் அவ்வளவு காலம் நீடிக்கவில்லை. சில மாநாடுகள் ஒரு சில கூட்டங்களோடு கைவிடப்பட்டன. ஆனால், சில மாநாடுகளின் போது முன்வைக்கப்ட்ட சில ஆலோசனைகள், இன்றும் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. ‘அதிகார பரவலாக்கல்’ என்ற எண்ணக்கரு, அவ்வாறு முன்வைக்கப்பட்ட ஆலோசனை ஒன்றாகும்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவே முதன் முதலாக சர்வகட்சி மாநாடொன்றைக் கூட்டினார். 1983ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக நாடெங்கிலும் பரவிய வன்முறைகளின் விளைவாக, அந்த மாநாடு கூட்டப்பட்டது.

இந்த வன்முறைகளை அடுத்து, இலங்கையின் இனப்பிரச்சினை விடயத்தில், இந்தியா நேரடியாகவே தலையிட்டது. இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக, அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி, தமது வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் உயர் அதிகாரிகளான கோபாலசுவாமி பார்த்தசாரதி, ரொமேஷ் பண்டாரி ஆகியோரை நியமித்தார்.

அதிகாரப்பரவலாக்கல் கொள்கையை, முற்றாகவே நிராகரித்து இருந்த ஜயவர்தனவை, அரைகுறையாகவேனும் அதை ஏற்கச் செய்தவர் பார்த்தசாரதி ஆவார். பார்த்தசாரதி வழங்கிய ஆலோசனைகளை, தமது கட்சியான ஐக்கிய தேசிய கட்சி மட்டும் ஏற்று, அதன்படி செயலாற்றினால், தேர்தல்களின் போது தமது கட்சியைப் பாதிக்கும் என்று எண்ணிய ஜயவர்தன, அந்த ஆலோசனைகளை ஆராய, சர்வகட்சி மாநாடொன்றைக் கூட்டினார். 1983ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 21ஆம் திகதி, அது முதன் முதலில் கூடியது.
அந்த மாநாட்டில் உரையாற்றிய ஜயவர்தன, தமது உரையின் ஓர் இணைப்பாக, பார்த்தசாரதியின் ஆலோசனைகளை முன்வைத்தார். அது ‘இணைப்பு சி’ என்றழைக்கப்பட்டது.

மாநாட்டின் முதலாவது கூட்டத்துக்குப் பின்னர், எதிர்க்கட்சியான ஸ்ரீ ல.சு.க கலந்து கொள்ளவில்லை. தமிழ் ஆயுதக் குழுக்களுக்கும் அரச படைகளுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரிக்கவே, 1984ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்துக்குப் பின்னர், அந்தச் சர்வகட்சி மாநாடு கூடவில்லை. அரசாங்கமோ தமிழ் அரசியல்வாதிகளோ அதைப் பொருட்படுத்தவும் இல்லை.

ரணசிங்க பிரேமதாஸ ஜனாதிபதியாக பதவியேற்ற போது, வடக்கில் புலிகளும் தெற்கில் மக்கள் விடுதலை முன்னணியும் அரச எதிர்ப்பு ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தன. 1989ஆம் ஆண்டு பிரேமதாஸ இரு இயக்கங்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். புலிகள் மட்டும் இணக்கம் தெரிவித்தனர்.

ஜயவர்தன நினைத்ததைப் போலவே, தாம் மட்டும் புலிகளுடன் இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்ற அடிப்படையில் பிரேமதாஸ, சர்வகட்சி மாநாடொன்றை கூட்டினார். 1989ஆம் ஆண்டு ஓகஸ்ட் 12ஆம் திகதி, அதன் முதலாவது கூட்டம் கொழும்பில் நடைபெற்றது. அத்தோடு அரசாங்கம் தனியாகவும் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

‘விடுதலை புலிகள் மக்கள் முன்னணி’ என்ற பெயரில், அரசியல் கட்சியொன்றைப் பதிவு செய்த புலிகள் இயக்கம், அதன் பிரதிநிதிகளாக யோகரத்னம் யோகியின் தலைமையில் சிலரை சர்வகட்சி மாநாட்டுக்கு அனுப்பி வைத்தது. எனினும், 1990ஆம் ஆண்டு ஆரம்பத்தில் அரசாங்கம் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியதையும் அவ்வமைப்பினர் சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொள்வதையும் எதிர்த்து, புலிகள் மாநாட்டில் இருந்து ஒதுங்கிக் கொண்டனர்.

மிகவும் வெற்றிகரமான சர்வகட்சி மாநாடு, 2006ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்‌ஷ நியமித்த சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவாகும். உண்மையிலேயே சர்வகட்சி மாநாடென்றின் மூலமாகவே அது நியமிக்கப்பட்டது. சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரணவே சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவராகவும் இருந்தார்.

அக்குழு, புதியதோர் அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தைத் தயாரித்து, இடைக்கால அறிக்கையை ஜனாதிபதி மஹிந்தவிடம் சமர்ப்பித்தது. அத்தோடு, போர் இறுதிக்கட்டத்தை அடைந்தது. அந்த அறிக்கை மறக்கப்பட்டது. மஹிந்த, அதை ஒருபோதும் வெளியிடவில்லை.

ஒரு போதும் உரிய பிரச்சினையைத் தீர்க்கும் அரசாங்கத்தின் பிரதான திட்டத்தோடு, சர்வகட்சி மாநாடுகள் இணைக்கப்படுவதில்லை. இப்போதும் அரசாங்கம் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்காக நியமித்துள்ள பொருளாதார சபைக்கும் சர்வகட்சி மாநாட்டுக்கும், இடையே எவ்வித தொடர்பும் இல்லை. 

அதேவேளை, அரசியல் கட்சிகளும் பிரச்சினையைத் தீர்ப்பதை விட, தமது கட்சிப் பிரசாரத்துக்காகவே எப்போதும் அதைப் பாவித்துள்ளனர். எனவே, இவ்வாறான மாநாடுகளைப் பெரிதாகப் பொருட்படுத்தத் தேவையில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .