Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை
Johnsan Bastiampillai / 2022 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கான பணிகள் மெல்ல மெல்ல கைவிடப்பட்டு, தேசிய அரசாங்கத்தை நிறுவுவதை நோக்கி, இலங்கை அரசியல் நகர்ந்து கொண்டிருக்கின்றது.
மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முழுநேரமும் முன்னுரிமை அளிக்காமல், ஒரு பிச்சைக்காரனின் புண்ணைப்போல, அவற்றைக் காண்பித்து, எல்லாத் தரப்புகளும் அரசியல் செய்கின்ற போக்கையே காண முடிகின்றது.
மக்கள் புரட்சி மூலம், புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றது தொடக்கம், ‘சர்வகட்சி அரசாங்கம்’ ஒரு பேசுபொருளாக இருக்கின்றது. ஆர்ப்பாட்டக்காரர்களும் மக்களும் ஏன், சர்வதேச சமூகமும், நாட்டில் சர்வகட்சி அரசாங்கம் ஒன்று அமைவதையே விரும்புகின்றன என்ற தோற்றப்பாடு உருவாகியிருந்தது.
ஜனாதிபதியாக பதவியேற்ற கணத்தில் இருந்து ரணில் விக்கிரமசிங்க, “நாட்டுக்காக இணைந்து பணியாற்ற வாருங்கள்” என அனைத்துக் கட்சிகளுக்கும் அரசியல் அணிகளுக்கும் அழைப்பு விடுத்தார்; அது நல்ல விடயமாகும்.
அதுமட்டுமன்றி, அப்படியொரு கோசத்தை தூக்கிப் பிடிக்காமல், அவரால் களமாட முடியாத யதார்த்த நிலையும் அவருக்கிருந்தது. அப்படிச் செய்தால், மாறுவேடம் பூண்ட ‘மொட்டு’க் கட்சியின் ஆட்சியாளர் என்ற தோற்றப்பாடு ஏற்பட்டு விடும்.
இதனடிப்படையில், சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்காக பல சந்திப்புகள் இடம்பெற்றன. பிரதான எதிர்க்கட்சி, சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் கட்சிகள், மலையகக் கட்சிகள் எல்லாம், ஜனாதிபதி தரப்புடன் ஏதோ ஓர் அடிப்படையில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டன. பொதுஜனப் பெரமுனவில் பெருமளவானோரும், ஜனாதிபதிக்குப் பின்னால் நிற்கின்றனர்.
பெரும் பிரளயங்கள் ஏற்படாவிட்டால், இன்னும் குறைந்தது ஒரு வருடத்துக்காவது ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதியாக பதவியில் இருக்கப் போகின்றார். அவர், எல்லாத் தரப்புகளின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற மாட்டார்; எனினும், ஏனைய தரப்புகளின் அபிப்பிராயங்களுக்கு செவிகொடுத்து கேட்கின்ற ஓர் ஆட்சியாளராகத் திகழ்கின்றார்.
எவ்வாறிருப்பினும், சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்காக கடந்த ஒரு மாதகாலமாக எடுக்கப்பட்ட முயற்சிகள், இந்த நிமிடம் வரை கைகூடவில்லை.
ஐக்கிய மக்கள் சக்தி, சற்று விலகி நின்றே ஜனாதிபதியுடன் உரையாடல்களில் ஈடுபட்டது. மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பத்திலிருந்தே, இந்தக் கோட்பாட்டை எதிர்த்தது மட்டுமன்றி, ரணிலும் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட நடைமுறைச் சாத்தியமற்ற கருத்தியலையே விதைத்துக் கொண்டிருக்கின்றது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, 10 கோரிக்கைகளை முன்வைத்து பேசியது. சில விடயங்கள் தொடர்பாக, ஜனாதிபதி நல்லெண்ண சமிக்கையை வெளிப்படுத்தி இருந்ததாக அறியவருகிறது.
இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் போன்ற கட்சிகளும், ஜனாதிபதி தரப்பைச் சந்தித்து பேசியிருந்தன. வழக்கத்துக்கு மாறாக சில கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டதாக அறிய முடிகின்றது.
எவ்வாறிருப்பினும். பலமுனைப் பேச்சுகளில் அனைத்து தரப்பின் எதிர்பார்ப்புகளும் ஒரு பொதுவான புள்ளியில் சந்திக்கத் தவறியிருக்கின்ற பின்னணியில், சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கான நிகழ்தகவுகள் குறைவடைந்து போவதாகத் தெரிகின்றது.
\இதனால், சர்வகட்சி அரசு என்ற நிலைப்பாட்டில் இருந்து விலகி, தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை, ஜனாதிபதி மேற்கொள்வதாக கூறப்படுகின்றது. சர்வகட்சி அரசு அமைக்கும் முயற்சிகள் தோல்வியடைவதற்கு, வெளிப்படையானதும் மறைமுகமானதுமான பல காரணங்கள் உள்ளன.
‘மொட்டு’ அணி, ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கின்றமை, சர்வகட்சி அரசிலும் செல்வாக்குச் செலுத்துமளவுக்கு ராஜபக்ஷர்கள் ரணிலின் பின்னால் நிற்கின்றார்கள். இந்நிலைமை, ஜனாதிபதி ரணிலை பொறுத்தமட்டில், பெரும் பலமாக தோன்றினாலும், சர்வகட்சி அரசில் இணைய நினைக்கும் கட்சிகளுக்கு, அது நம்பிக்கை தரும் போக்கு இல்லை.
ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கமான சூட்சும நகர்வுகளும் அதிகாரத்துக்கு வந்த பிறகு அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளும், ஆரம்பத்தில் இருந்த நம்பிக்கையில் சிறு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கின்றது.
வழக்கம்போல அமைச்சுப் பதவிகளுக்கான சண்டைகள், சர்வகட்சி அரசாங்கத்தில் குறிப்பிட்ட தரப்பு இணைவதைத் தீர்மானிக்கும் காரணியாக உள்ளது. அத்துடன், சில அரசியல் அணிகளுக்கு, இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்த அரசாங்கம் நீடிக்கும்? இவ்வாட்சி வெற்றிகரமாக அமையுமா என்ற ஐயப்பாடும் ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் ஆட்சிமாற்றத்தில், ஒரு குறிப்பிடத்தக்க வகிபாகத்தை கொண்டிருக்கின்ற இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளினதும் அதேபோன்று ராஜபக்ஷர்களின் திரைமறைவு நகர்வுகளும், சர்வகட்சி அரசாங்கம் அமைவதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
உண்மையில், சர்வகட்சி அரசாங்கம் ஒன்று அமைய வேண்டும் என்று, ஜனாதிபதி கூட மனதார விரும்பினாரா? அல்லது, தன்னிடம் அரசியல் அணி அல்லது எம்.பிக்களின் ஆதரவு இல்லாத சூழலில், வேறு வழியின்றி சர்வகட்சி ஆட்சி அமைப்பதை, ஒரு தெரிவாக கையில் எடுத்திருந்தாரா என்பதும் சந்தேகமே!
ஆயினும், அதற்கான முயற்சிகளை அவர் முழுமையாக மேற்கொண்டார் எனலாம். அதுகைகூடாத நிலையில், இப்போது அப்பாதையில் இருந்து திரும்பி, தேசிய அரசாங்கம் என்ற வழித்தடத்தில், ஜனாதிபதி பயணிக்கத் தொடங்கி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட கட்சிகள், ஆதரவளிக்கும் வாய்ப்புகள் இல்லை எனத் தெரிகின்றது. அதாவது, இதிலுள்ள தனிப்பட்ட எம்.பிக்களின் ஆதரவு கிடைக்கலாம் என்றாலும், கட்சிகளாக ஆதரவளிக்காமல் விடலாம் என்பதாகும்.
எது எவ்வாறாயினும், மக்களின் பிரச்சினை இதுவல்ல! யார் ஜனாதிபதியாக வருகின்றார்? எந்தக் கட்சி அதிகாரத்தில் உள்ளது? தனிக்கட்சி ஆட்சியா அல்லது கூட்டு ஆட்சியா என்பதைப் பற்றி, மக்களுக்கு கவலையில்லை.
மக்களது கவலைகளெல்லாம், தமது வாழ்வியல் நெருக்கடிகள் எப்போது தீரும் என்பது பற்றியதாகும். இந்தப் பொருளாதார நெருக்கடிகள், வாழ்க்கைச் செலவு சுமை, அரசியல் நெருக்கடிகள், அடக்குமுறைகள் எப்போது மாறும் என்பவை பற்றியதாகும். சந்தோசமாக, நிம்மதியாக வாழ்வதற்கான சூழலையே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மக்களை மறந்த ஆட்சியைச் செய்தமையும் மக்களது பிரச்சினைகளை கணக்கெடுக்காமல் விட்டதும்தான் குறிப்பாக, கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சி கவிழ்ப்புக்கு பிரதான காரணமாகும். ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியான பிறகு, நாட்டின் நிலைமைகளில் சிறு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது. ஆனால், பிரச்சினைகள், நெருக்கடிகள் முற்றாகத் தீரவில்லை. மிகக் கிட்டிய காலத்தில் அந்த அபூர்வம் நிகழும் என்று நம்பவும் முடியாதுள்ளது.
10 ரூபாயால் டீசலின் விலையைக் குறைத்து விட்டு, 75 சதவீதத்தால் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கேஸ் விலையை கொஞ்சம் குறைத்துவிட்டு, 253 ரூபாயால் மண்ணெண்ணெய்க்கு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில், சர்வகட்சி அரசாங்கம் வந்தால் அல்லது, தேசிய அரசாங்கம் வந்தால் மட்டும் எல்லாம் சரியாகிவிடும் என்பது, ஏற்றுக் கொள்ள முடியாதது. அது உண்மையில், ஒரு மாயை; பொய்க் கற்பிதம் என்றுதான் சொல்ல வேண்டும்.
“ராஜபக்சர்கள் ஆட்சிக்கு வந்தால்...’, “அறுதிப் பெரும்பான்மை கிடைத்தால்...”, “பசில் அமைச்சரானால்...”, “20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டால்...”, “தம்மிக்க பெரேரா பதவிக்கு வந்தால்...” இப்படிப் பிரச்சினைகள் தீரும், நெருக்கடிகள் தீரும் என, கடந்த காலங்களில் கூறப்பட்டதை, நாம் அறிவோம். அதுபோன்ற ஒரு ‘பேய்க்காட்டலின்’ சூட்சுமமான வடிமாகவே, சர்வகட்சி அரசு, தேசிய அரசு அமைந்தால் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்பதும் தெரிகின்றது.
ஏனெனில், இலங்கையிலுள்ள பிரச்சினை அரசியலமைப்பு, சட்டங்கள், ஆட்சி முறைமை எழுத்தில் எப்படி இருக்கின்றது என்பது பற்றியதல்ல. மாறாக, அவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்துகின்ற தரப்பினர் எப்பேர்ப்பட்டவர்களாக இருக்கின்றனர் என்பதாகும்.
நல்ல ஆட்சியாளர்களும், நல்ல அரசியல்வாதிகளும் இருந்தால் ஒற்றையாட்சியிலும் மக்கள் நிம்மதியாக வாழலாம்.
அவ்வாறில்லாத ஆட்சியாளர்களையும் மக்கள் பிரதிநிதிகளையும் வைத்துக்கு கொண்டு சர்வகட்சி அரசாங்கம் அமைத்தாலும் தேசிய அரசாங்கம் அமைத்தாலும், அது பூசிமெழுகப்பட்டு, வெளியில் பார்ப்பதற்கு நன்றாக இருக்குமே தவிர, அதனால் நாட்டு மக்களுக்கு குறிப்பிடத்தக்க அனுகூலங்கள் கிடைக்கப் போவதில்லை.
எனவே, ‘அவர்கள்’ மாறாமல், ஆட்சியின் ‘ஸ்டைல்’கள் மாறுவதால், மக்களுக்கு நல்லது நடக்கும் என்று கூறுவதெல்லாம், ஒரு வாகனத்தின் நிறத்தை மாற்றினால் அது வேகமாக ஓடும் என்பதைப் போன்ற கற்பிதங்களேயன்றி வேறொன்றுமில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
3 hours ago
6 hours ago
7 hours ago