2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

சம்பந்தர் - தேசிய ஒருமைப்பாட்டுக்கு அகிம்சை வழி

Mayu   / 2024 ஜூலை 11 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்ஸ்மன்

ஆயுத வழியில் தமிழர்களின் அரசியல் உரிமைக்கான போராட்டத்தினை நடத்தி வெற்றியை அடைந்துகொள்ளலாம் என்ற நோக்கம் தமிழ் மக்களினதும், தமிழ் அரசியல் தலைவர்களதும் அகிம்சைவழிப் போராட்டத்தின் தோல்வியினாலேயே கருக்கொண்டது. அவ்வாறு கருக்கொண்ட ஆயுத வழிக்கு வித்திட்டவர்களும் அரசியல் தலைவர்களே. இருந்தாலும். 

ஆயுத வழிப் போராட்டமானது சர்வாதிகாரத் தனமாகவும் தான்தோன்றித் தனத்துடனும் வன்முறைக் கலாசாரத்துடனும் நடைபெறுவதாக ஒரு நிலைக்கு அப்பால் அந்த ஆயுதப் போராட்டத்தினை வெறுத்தவர்களும் எதிர்த்தவர்களும் தமிழ் அரசியல் தலைவர்களே. அவ்வாறான தலைவர்களுள் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழரசுக் கட்சியினரே அதிகம்.

அரசியல் தலைவர்களே மக்களின் அரசியல் நிலைப்பாட்டையும் அரசியல் நகர்வையும் தீர்மானிப்பவர்களாக இருப்பது வழமையாகும். அது போலவே தமிழ் மக்களுடைய அரசியல் விடுதலைப் போராட்டத்தில் தமிழ் அரசியல் கட்சிகளும் தங்களுடைய முனைப்புகளை எடுத்திருந்தனர்.

 இலங்கை சுதந்திரமடைந்தது முதல் அகிம்சை வழிப் போராட்ட மரபினைக் கைக்கொண்டு மேற்கொண்ட நகர்வுகள் தோற்றன. அதனால் 1976இல் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஈழத்துக் காந்தி என வர்ணிக்கப்பட்ட சா.ஜே.வே.செல்வநாயகம் தலைமையில் நடந்த குறித்த மாநாட்டில் செல்வநாயகம் முன்மொழிய மு.சிவசிதம்பரம் வழிமொழிந்து இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாகத் தமிழீழத் தனியரசை முன்வைத்ததோடு அதனை அடையத் தமிழ் இளைஞர்களை ‘புனிதப் போருக்கு’  அழைக்கும் அறைகூவலையும் தந்தை செல்வா விடுத்தார். ஏறத்தாழ 20 வருடங்களாகத் தோல்வி கண்ட பேச்சுவார்த்தைகள் ஒப்பந்தங்கள்  சமரச முயற்சிகள் காரணமாக உருவான இந்த நிலைப்பாட்டுக்கு 1977இல் நடைபெற்ற தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் முழுமையான ஆதரவினை வழங்கி அத் தீர்மானத்துக்கு உறுதிப்படுத்தலும் கொடுத்திருந்தார்கள்.

தந்தை செல்வா விடுத்த புனிதப் போருக்கான அழைப்பே பின்னாளில் ஆயுத இயக்கங்களின் தோற்றத்துக்கு வழிவகுத்திருந்தது. அதன் பின்னர், திம்பு பேச்சு நடைபெற்றது. இருந்தாலும் தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கான தீர்வுகளின்றியே நகர்வுகள் இருந்தன. ஈழத் தமிழர்களாகிய எமது போராட்ட வரலாறு இந்த உலகின் ஏனைய போராட்ட அமைப்புகளிலிருந்து முற்றிலுமாக வேறுபட்ட ஒன்றாகக் காணப்பட்டது என்றே கூறலாம்.

அதே போன்றே தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் வரலாற்று வழியில் முக்கியமான ஒன்றாக 1987இல் நடைபெற்ற சுதுமலைப் பிரகடனத்தினைக் கூறமுடியும். அன்றுதான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மக்கள் முன் தோன்றிப் பேசியிருந்தார்.

ஆயுத போராட்ட வடிவத்தை ஊக்குவித்து பின் அத்தனை ஆசைகளையும் நிராசைகளாக்கிய இந்திய அரசு ஒருதலைபட்சமாக இலங்கை அரசுடன் மேற்கொண்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு டெல்லிக்கு அழைத்து வற்புறுத்தப்பட்டது குறித்தும் அதனைத் தாம் ஏற்றுக்கொள்ளமை குறித்தும் தமிழர்களின் பிரச்சினைக்குத் தமிழீழ தனியரசு ஒன்றே தீர்வென தமது நிலைப்பாட்டை இந்திய அரசுக்குத் திட்டவட்டமாகக் கூறியது குறித்தும் வே.பிரபாகரன் சுதுமலை அம்மன் கோவில் முன்றலில் உரையாற்றியிருந்தார்.

அதன் பின்னர் நிகழ்ந்த திருப்புமுனைகளும் இந்திய இராணுவத்தின் வருகையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளும் பட்டவர்த்தனமே.

இவ்வாறான வரலாற்றுப் பின்புலத்தில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படுமா? என்பதைப் பற்றி இப்போதும் சந்தேகத்துடனேயே நாம் பார்க்கவேண்டிய நிலைமைக்கு எது காரணம், எதனால் இவ்வாறிருக்கிறது என்றெல்லாம் நாம் ஆராய்வது வீணே.

இப்போதும் நாம் 1987இல் ஏற்படுத்தப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தினையேனும் முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் என்றுதான் நம்முடைய தமிழ்த் தேசிய அரசியல் கோரிய வண்ணமிருக்கிறார்கள்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் வாக்குறுதிகளை நம்புவதும் காத்திருப்பதுமே நடைபெற்று வந்திருக்கின்றன. ஆனால், அவற்றுக்குப் பிரதிபலனாக ஏமாற்றங்களே கிடைத்துமிருக்கின்றன. இதற்கு இந்திய-இலங்கை ஒப்பந்தம், அதன் பின்னரான பேச்சுவார்த்தைகள் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் நிகழ்ந்த ஐ.நா மனித உரிமைப் பேரவை தீர்மானம் அதன் பின்னர் உருவான நிலைமாறு கால நீதிப் பொறிமுறை, நல்லிணக்கப் பொறிமுறை என அனைத்தின் ஊடாகவும் இதுவரையில் பயன் ஏதும் விளையவில்லை என்பதே நிதர்சனம்.

யுத்தம் 2009இல் முள்ளிவாய்காலில் மௌனிக்கப்பட்ட பின்னர், மீண்டும் தமிழ் அரசியல் தலைவர்கள், அகிம்சை வழி அறவழியில் போராடினோம், ஆயுத வழி பின்னர் வந்தது. அதன் மௌனிப்பின் பின்னர் அறவழியுடன் இராஜதந்திரப் போராட்டத்தினையும் நடத்தவேண்டி நிர்ப்பந்திக்கப்படுகிறோம் என அறிக்கைகளையும் வீசியெறிந்திருந்தனர்.

இந்த இடத்தில் தான் கடந்தவாரம் காலமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் தமிழரசுக்கட்சியின் தலைவராகவும் இருந்த இரா சம்பந்தன் தொடர்பில் வெளிவந்து கொண்டிருக்கின்ற கருத்துக்களும் விமர்சனங்களும் அவற்றுக்கான பதில்கள் தொடர்பிலும் நாம் உரையாடவேண்டியிருக்கிறது. தமிழ்த் தலைவர்களுடைய கருத்துக்களைவிடவும் முக்கியமாக சிங்கள,  முஸ்லிம் மக்களது அரசியல் தலைவர்கள் வெளியிடுகின்ற கருத்துக்கள் மீது நாம் பார்வையைச் செலுத்தவேண்டியிருக்கிறது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் சம்பந்தரின் மறைவையொட்டி வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில், தமிழ் சமூகத்துக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் இடையிலான உறவின் இணைப்புப் பாலமாக சம்பந்தன் விளங்கியதாகவும், தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான சாத்வீகப் போராட்டம் பின்னர் நாளடைவில் மாற்றமடைந்த அரசியல் சூழ்நிலைகள் காரணமாகத் திசை மாறிய போதிலும் கூட, அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகளைத் தமிழர் தரப்புகளுக்கும் சிறுபான்மையினருக்கும் ஏற்புடையதான விதத்தில் கருத்தொருமைப்பாட்டைகாணும் நோக்குடன் முன்னெடுப்பதில் சம்பந்தன் ஐயா நாட்டம் கொண்டிருந்தார். 

இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பொறுத்தவரை அதன் முக்கிய அம்சங்களில் ஒன்றான வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு அங்கு வாழும் முஸ்லிம்களின் இணக்கப்பாடு இன்றி சாத்தியமாகிவிடாது என்பதில் சம்பந்தன் மிகுந்த உறுதியாக இருந்து வந்தார் என்று குறிப்பிட்டுள்ளார். இது அவருடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது.

அதே நேரத்தில், அவருக்குச் செலுத்தக்கூடிய நன்றிக் கடன் இனப் பிரச்சினைக்கான தீர்வில் தமிழ் மக்களும், தமிழ் பேசும் மக்கள் உள்ளடங்கிய சிறுபான்மையினரும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் போது குறைந்தபட்ச சேதாரங்களோடு அவசியமான விட்டுக்கொடுப்புகளை ஒவ்வொரு தரப்பும் செய்து நாட்டில் நிலையான சமாதானத்தை நிலை நாட்டுவதற்குப் பாடுபடுவதாகும் என்ற ரவூப் ஹக்கீம் அவர்களுடைய கருத்தானது உண்மையில் தமிழ் முஸ்லிம் மக்கள் எடுக்கவேண்டிய அரசியல் தீர்மானத்தினைக் குறித்து நிற்கிறது. இந்தத் தீர்மானம் தமிழ் முஸ்லிம் மக்களிடையே ஒரு ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் என்றே கூற வேண்டும்.

அதே போன்று முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் ஹசன் அலியின், தமிழ் பேசும் சமூகங்களுக்கிடையிலான நீடித்த ஒற்றுமையின் மூலமாகவே சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கான  தீர்வை பெரும்பான்மை சமூகத்திடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்று விசுவாசித்து தமிழ் முஸ்லிம் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதில் சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் இடைவெளி இல்லாமல் செயற்பட்டவர் என்ற கருத்து முஸ்லிம் சமூகத்தினரின் தேசிய ஒற்றுமை தொடர்பிலான பங்கினையே காட்டிநிற்கிறது.

இது போன்ற பல்வேறு கருத்துக்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளிடமிருந்து வெளிப்பட்டிருக்கின்றன. இந்த வெளிப்பாடுகள் முஸ்லிம் மக்களின் உணர்வுகளாக எடுத்துக் கொள்ளப்பட்டால் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையின் தீர்வுக்காகப் பாடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இறுதிக் கனவுக்காக முஸ்லிம்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள். 

அதே போன்றே, சிங்கள அரசியல் தலைவர்களும் பெருந்தன்மையாகப் பல கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்கள். குறிப்பாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர் டளஸ் அழகப்பெரும, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பிரதமர் தினேஷ் குணவர்த்தன போன்றவர்களைக் குறிப்பிடமுடியும்.

ஒவ்வொரு அரசியல் தலைவருடைய மறைவிலும் பல்வேறு நல்ல விடயங்கள் வெளிப்படுவதும் அவை நினைவில் இல்லாது மறக்கப்படுவதும் நடைபெறுவது வழமையே அவ்வாறில்லாது வடக்கு-கிழக்கு தமிழ் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்த ஒரு தலைவரின் மறைவின் பின்னராவது, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பான தீர்வுக்கு பெருந்தேசிய தலைவர்களும்,  சிங்கள பெரும்பான்மை சமூகத்தினரும் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் சம்பந்தரின் அகிம்சைவழியிலான தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஒத்துழைக்க வேண்டும். அது நடைபெறும் என்றும் நம்புவோம். சம்பந்தர் போன்று நம்பிக்கையும் கொள்வோம். தமிழர் அரசியலின் தலைவிதியும் அதுவே.

08.07.2024


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X