2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

சமூக மாற்றத்துக்கு சிறுபான்மையினர் தயாரா?

Mayu   / 2024 நவம்பர் 05 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஐயூப்

இலங்கை வரலாற்றில் மிகவும் சிறிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அமைச்சரவையில் அவர் உட்பட  மூவர் மட்டுமே இருக்கின்றனர்.இதற்கு முன்னர் 1960களில் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தில் சில காலமாக 12 அமைச்சர்கள் இருந்துள்ளனர்.

சில ஜனாதிபதிகளின் காலத்தில் பெருந்தோட்ட துறைக்கு ஒரு அமைச்சரும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பிற்கு என்று ஒரு அமைச்சரும் தென்னைக்கு மற்றொரு அமைச்சரும் நியமிக்கப்பட்டு இருந்தனர். கல்வி, உயர் கல்வி மற்றும் கல்வி அபிவிருத்தி என்று மூன்று அமைச்சர்கள் ஒரு காலத்தில் இருந்தனர்.

கோட்டாபயவின் காலத்தில் மட்பாண்டங்களுக்கும் பத்திக் தொழிலுக்கும் என்றெல்லாம் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டார்கள். 

இவ்வாறு சில ஜனாதிபதிகளின் காலத்தில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை நூற்றையும் தாண்டியது. தமக்கு உதவியவர்களுக்கு பொதுப் பணத்தில் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கச் சந்தர்ப்பத்தை வழங்குவதே இதன் நோக்கமாகும். 

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க கடந்த 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற போது, அவரும் உள்ளிட்ட மூவர் மட்டுமே அக்கட்சியின் சார்பில் பாராளுமன்றத்தில் இருந்தனர். அவர் ஜனாதிபதியான உடன் பாராளுமன்றத்தில் அவரது இடத்துக்கு லக்ஷ்மன் நிப்புணஆரச்சி நியமிக்கப்பட்டு ஜனாதிபதியும் உள்ளிட்ட நால்வரைக் கொண்ட அமைச்சரவை நியமிக்கப்படவிருந்தது. 

எனினும், நிப்புணஆரச்சி பாராளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்யாது, அவரை அமைச்சராக நியமிக்க முடியாது என்று சட்டமா அதிபர் கூறியதாகக் கூறப்படுகிறது. ஆயினும், அவர் சத்தியப்பிரமாணம் செய்யும் வகையில் பாராளுமன்றத்தைக் கூட்ட ஜனாதிபதி விரும்பவில்லை. எனவேதான் நான்கு பேர் கொண்ட அமைச்சரவைக்குப் பதிலாக மூன்று பேரைக் கொண்ட அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது.  

எனினும், இதற்கு முன்னர் பாராளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட சில எம்.பிக்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் முன்னரே அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளனர். பசில் ராஜபக்‌ஷ 2021 ஜூலை 7ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவால் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.மறுநாள் அவர் நிதி அமைச்சராகச் சத்தியப் பிரமாணம் செய்து விட்டு பாராளுமன்றத்தில்  எம்.பியாக சத்தியப் பிரமாணம் செய்தார். எனினும், நிப்புணஆரச்சியின் பிரச்சினையைப் பெரிதுபடுத்தாமல் ஜனாதிபதி மூவரைக் கொண்ட அமைச்சரவையை நியமித்துள்ளார். 

கடந்த செப்டெம்பர் மாதம் 25ஆம் திகதியே இந்த அமைச்சரவை நியமிக்கப்பட்டது. அன்று இரவே ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்தார். அத்தோடு, எம்.பியாக சத்தியப் பிரமாணம் செய்யாமலேயே நிப்புணஆரச்சியும் ஏனைய எம்.பிக்களைப் போல் எம்.பி. பதவியை இழந்தார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து புதிய பாராளுமன்றத்தைத் தெரிவு செய்வதற்காக நவம்பர் மாதம் 14ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறும் பட்சத்தில், 25 அமைச்சர்களும் ஏறத்தாழ அதே எண்ணிக்கையில் பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்படுவர் என்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள் என்றும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.  

தேசிய மக்கள் சக்தி பதவிக்கு வருவதானது வெறுமனே ஆட்சி மாற்றம் அல்ல, 
அது ஒரு சமூக பொருளாதார மாற்றத்தையும் மக்களின் அரசியல், சமூக முறைமை மாறத்தை கொண்டு வரும் என்றும் அதன் தலைவர்கள் நீண்ட காலமாகக் கூறி வருகின்றனர். 

தற்போதைய சமூக அமைப்பை மட்டுமே கண்டு இருக்கும் இந்த நாட்டு மக்களில் பெரும்பாலானோர்களுக்கு இந்த முறைமை மாற்றம் என்றால் என்ன என்பது விளங்கவில்லை. அதை விளங்கப்படுத்துவதைப் போல், தமது பதவியேற்பு நடைபெறும் நிகழ்ச்சியை ஜனாதிபதி அனுரகுமார ஒரு வைபவமாகவன்றி ஒரு உத்தியோகபூர்வ நிகழ்ச்சியாகவே நடத்தினார். 

முன்னைய ஜனாதிபதிகள் சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட போது, இடம்பெற்றதைப் போல், குதிரை ஊர்வலம், இராணுவ மரியாதை போன்ற எதுவும் அந்நிகழ்ச்சியில் இடம்பெறவில்லை. ஆரம்பத்திலேயே முறைமை மாற்றத்தைச் செய்து காட்டுவது அவரது நோக்கமாக இருந்திருக்கலாம். பொதுத் தேர்தலுக்குப் பின்னர், தாம் நியமிக்கும் அமைச்சர்களுக்கு விஞ்ஞானபூர்வமாக கடமைகள் பகிர்ந்தளிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். அதாவது ஒன்றோடொன்று சம்பந்தப்பட்ட பொறுப்புக்கள் ஒவ்வொரு அமைச்சருக்கும் வழங்கப்படும் என்பதாகும்.  தற்போது வாழ்வில் சகல விடயங்களும் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளன. 

அரசியல்வாதிகள் கொள்கை வகுக்கும் பணியிலும் நிர்வாக விடயங்களை மேற்பார்வை செய்யும் பணியிலும் தான் ஈடுபட வேண்டும். தொழில் வழங்குவதோ, பிள்ளைகளைப் பாடசாலைகளில் சேர்ப்பதோ அவர்களது தொழில் அல்ல.

இதனால் தான் தேர்தலில் தமக்கு நட்டமேற்படும் அபாயம் இருந்தும் தமது பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொள்வது தமது ஆட்சியில் தொழில் பெறவோ, பதவி உயர்வு பெறவோ, தகைமை ஆகாது என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் ஜனாதிபதித் தேர்தல் மேடைகளில் கூறி வந்தனர். 

முறைமை மாற்றம் என்னும் போது, அதில் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் பொது மக்களுக்கும் வெவ்வேறான பொறுப்புகள் இருக்கின்றன. அரசியல்வாதிகள் அரச வருமானம் பெருகும் வகையில் நாளைய மாற்றங்களை எதிர்நோக்கும் வகையிலும் ஊழல்களுக்கு இடமளிக்காத வகையிலும் தொழில்கள் மூலம் பொதுமக்களின் வருமானம் அதிகரிக்கும் வகையிலும் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யக் கொள்கைகளையும் எண்ணக்கருக்களையும் வகுத்து அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டும். 

அதிகாரிகள், நிபுணர்கள் மூலம் அந்த நோக்கங்கள் நிறைவேறும் வகையில், திட்டங்களைத் தீட்டி அரச இயந்திரத்தை வடிவமைத்து அத்திட்டங்களை அமுலாக்க வேண்டும். இத்திட்டங்களில் அரச இயந்திரத்திலும் இணையும் மக்கள் தமது பொறுப்புக்களை முறையாக நிறைவேற்ற வேண்டும். இவ்வனைத்தும் முறையாகச் செயற்படும் வகையில், அரசியல்வாதிகள் சட்டங்களையும் வகுக்க வேண்டும். அப்போது எவரும் அரசியல்வாதிகளின் பின்னால் போகத் தேவையில்லை. 

சொல்லில் வர்ணிக்கும் போது, இது அழகாக இருந்த போதிலும், அது மிகவும் நீண்ட கால கடினமானதோர் நோக்கமாகும். ஆயினும், பத்து ஆண்டுகளிலாவது  இந்த நோக்கங்களில் 80 சதவீதமாவது நிறைவேறும் என்ற நம்பிக்கை  ஏற்படுமானால் தற்போதைய பெற்றோர்  தமது பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை. 

தற்போதைய முறைமையில் ஒரு சிலர் மட்டுமே நன்மை அடைகின்றனர். ஊழலோடு சம்பந்தப்படாத எதுவுமே இல்லை என்ற நிலையே நாட்டில் இருக்கிறது. சிலர் அரச அதிகாரத்தைப் பாவித்து கோடிக் கணக்கில் பணம் சம்பாதிக்கின்றனர். சிலர் அரச இயந்திரத்தில் தமக்கு இருக்கும் அதிகாரங்களைப் பாவித்து  கோடிக் கணக்கில் சம்பாதிக்கின்றனர்.

அவ்விரு சாராரும் தமது அதிகாரத்தைப் பாவித்து பொதுப் பணத்தில் பாரிய அளவில் வசதிகளையும் வாய்ப்புக்களையும் சிறப்புரிமைகளையும் பெறும் வகையில், சட்டங்களையும் விதிமுறைகளையும்  எடுத்துக் கொண்டு இருக்கின்றனர். 

எனவே, அவர்கள் முறைமை மாற்றத்தை விரும்பவில்லை. இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் அவர்களது நோக்கம் நிறைவேறாவிட்டாலும் அவர்கள்  விட்டுக் கொடுக்கப் போவதில்லை. 

இதற்கிடையே சாதாரண மக்களில் பலரும் வேறு வழியின்றி ஒருவரை ஒருவர் ஏமாற்றிப் பிழைக்கின்றனர். பொது மக்களில் பலருக்கு முறைமை மாற்றம் என்றால் என்னவென்று தெரியாது. மேலும் சிலருக்குத் தெரிந்திருந்தாலும் சுவர்க்கத்தைக் கொண்டு வந்து காலடியில் வைப்போம் என்று பல தசாப்தங்களாக அரசியல்வாதிகள் அளித்த வாக்குறுதிகளால் ஏமாந்து எவரையும்  நம்பாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

மேலும், சிலருக்கு இதுவரை தாம் தலைவர்களாகக் கருதியவர்களைப்  பதவியில் அமர்த்தி அழகு பார்க்க வேண்டும் என்ற ஆசை. சிலர் சரி, இவர்களுக்கும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவோம் என்ற  ஊசலாடும் நம்பிக்கையோடு முறைமை மாற்றத்துக்கான முயற்சியை ஆதரிக்கின்றனர். மிகச் சிலரே நம்பிக்கையோடு நாம் மாறாவிட்டால் முறைமையும் மாறாது 
என்று அம்மாற்றத்துக்காக முன்வருகிறார்கள். இலங்கையில் சிறுபான்மை மக்களைப் பார்க்கிலும், பெரும்பான்மை மக்கள் சமூக மாற்றத்துக்காக முன்வந்துள்ளமை இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் காண முடிந்தது.   

தற்போதைய நிலையில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்தின் தலைவர்கள் முறைமை மாற்றத்திற்கான தமது முயற்சியை கை விட்டுக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பாவித்து தாமும்  தற்போதைய முறைமையில் மூழ்கி சுகபோக வாழ்க்கையை அனுபவிக்க முற்படுவார்கள் என்று கருதக் காரணங்கள் இல்லை. 

ஆனால், அவர்களுக்கு அதற்காகப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்க வேண்டும். இன்றேல் அவர்களால் சமூக மாற்றத்துக்கான எந்தவொரு சட்டத்தையோ, பிரேரணையையோ நிறைவேற்ற முடியாது. அப்பெரும்பான்மை மற்றொரு கட்சிக்குக் கிடைத்தால் எதிர்வரும் ஐந்தாண்டுகளும் ஜனாதிபதிக்கும் பாராளுமன்றத்துக்கும்  இடையிலான மோதல்களை மட்டுமே பார்க்க முடியும்.  

10.02.2024

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X