Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூலை 23 , பி.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இப்போது எல்லோரும் தமிழ்த் தேசியம் குறித்துப் பேசுகிறார்கள். பழைய தமிழ்க் கட்சிகள் எல்லாமே, தமிழ்த் தேசியத்தைக் காப்பதற்காகவே, தேர்தலில் போட்டியிடுவதாகச் சொல்கின்றன. ஆனால், அவை ஒவ்வொன்றும் தமிழ்த் தேசியம் குறித்தான தமது கற்பிதங்களை வைத்திருக்கின்றன. ஆய்ந்து நோக்கில், இவர்கள் சொல்கின்றதும் வரையறுக்கின்றதுமான தமிழ்த் தேசியம் என்பது, மக்கள் நலன் சார்ந்ததல்ல என்பது விளங்கும்.
தமிழ்த் தேசியம், தமிழ் மக்களை எத்தகையதொரு முட்டுச் சந்திக்குக் கொண்டு வந்திருக்கின்றது என்பது பற்றி, ஆழமாகச் சிந்திப்பதற்கான வாய்ப்புகளை, வரலாறு தொடர்ச்சியாக வழங்கி வந்திருக்கிறது. ஆனால், நாம் அதற்குத் தயாராக இருந்ததில்லை. அதற்கான விலையை, நாம் தொடர்ந்து கொடுத்துக் கொண்டு வந்திருக்கிறோம். இந்த இடத்தில், குறிப்பாகப் போர் முடிந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாடாளுமன்றத்துக்குத் தங்களை அனுப்பச் சொல்லி, தமிழ்த் தேசியம் பேசுவோருக்கு வாக்களிக்கக் கோருவோரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் உள்ளன.
எவரதும் மனமாற்றத்தை நியாயப்படுத்தக்கூடிய விதமாக, தமிழ்மக்களின் வாழ்வில் மேம்பாடு ஏற்பட்டுள்ளதா?
தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள், வென்றெடுக்கப்பட்டு உள்ளனவா?
தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை ஏற்கப்பட்டுள்ளதா?
தமிழ் மக்களின் வாழ்விடங்கள் மீது, அவர்களது உரிமை மதிக்கப்பட்டிருக்கிறதா?
இன்று, தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தேசிய இனமொன்றின் மீதான தேசிய இன ஒடுக்கலாகவும் அதற்கெதிரான போராட்டம், சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு தீர்வுக்கான போராட்டமாகவும் கருதப்படுவதற்கு மாறாக, ஒரு மனித உரிமைப் பிரச்சினையாகவே பேசப்படுகிற ஒரு சூழ்நிலை எவ்வாறு உருவானது, இதற்குப் பொறுப்புச் சொல்ல வேண்டியவர்கள் யார்?
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டக் காலத்திலிருந்தே, மீட்பர்களின் அரசியல்தான் இருந்து வருகிறது. அதற்கு முதல், மேட்டுக்குடி மேய்ப்பர்களின் அரசியல் இருந்து வந்தது. சட்டசபையிலும் நாடாளுமன்றத்திலும் ஆங்கிலத்தில் பேசி, வென்று தருகின்ற தலைவர்களை நம்பி இருந்த சமூகம், பிறகு சத்தியாக்கிரகம் செய்து சமஷ்டி பெற்றுத்தர முடியும் என்கிற அரசியல் தலைமையை நம்பியது.
தமிழ் பேசும் மக்கள் பற்றி நிறையவே பேசப்பட்டது. ஆனாலும், தமிழரைத் தமிழர், சாதியின் பேராலும் வம்சாவளியின் பேராலும் பிரதேசத்தின் பேராலும் ஏறி மிதிப்பதைப் பற்றிக் கண்டுங் காணாமலே தமிழ்த் தேசிய தலைமைகள் செயற்பட்டன; இன்றும் செயற்படுகின்றன.
முஸ்லிம்களின் தனித்துவம் பற்றியும் மலையக மக்களின் தனித்துவம் பற்றியும் எப்போதிருந்தோ சொல்லி வந்தவர்கள், தமிழ் மக்களைப் பிளவுபடுத்தப் பார்க்கிறார்கள் என்று நிந்திக்கப்பட்டனர். வடக்கு, கிழக்கு இணைந்த சமஷ்டியோ, அதே அடிப்படையில் அமைந்த தமிழீழமோ எந்த வகையில் முஸ்லிம்களதும் மலையகத் தமிழரதும் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கும் என்பது பற்றி, எள்ளளவும் அக்கறையில்லாமலே சமஷ்டிக் கோரிக்கையும் தனிநாட்டுக் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டன. இவற்றை விமர்சித்தவர்கள், தமிழ்த் துரோகிகளாகக் காட்டப்பட்டனர். இது இன்று வெவ்வேறு வடிவங்களில் தொடர்கிறது.
தமிழ்ச் சமூகத்தில் உள்ள அகமுரண்பாடுகள் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளன. உழைக்கும் மக்களின் பிரச்சினைகளும் சாதிரீதியான ஒடுக்குமுறையும் கணிப்பில் கொள்ளப்படாத நிலையிலேயே தமிழ்த் தேசியம் இன்றும் இயங்குகிறது.
சமூகநீதி என்பது, தமிழ்த் தேசிய மரபில் இல்லாதவொன்று. மூன்று தசாப்தகால ஆயுதமேந்திய விடுதலைப்போராட்டம், இந்த சமூக நீதிக்கோரிக்கையை உருமறைப்புச் செய்ததேயன்றி சமூக நீதியைத் தமிழ்ச் சமூகத்துக்கு வழங்கிவிடவில்லை.
போர் முடிந்து சில ஆண்டுகளிலேயே, சாதிய ரீதியான ஒடுக்குமுறையும் உயர்சாதிய அகங்காரமும் வெளிப்படையாகவே செயற்படுவதைக் கண்டிருக்கிறோம்.
தமிழ் மக்களுக்கான விடுதலை என்று அடிக்கடி சொல்கிற தமிழ்த் தேசியம் இன்றுவரை, இந்தச் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தயாராக இருந்ததில்லை.
பிற்போக்குத்தனத்தில் பிறந்து, பிற்போக்குத் தேசியமாகவே வளர்ந்த தமிழ்த் தேசியம், இன்றும் பிற்போக்குத்தனமாகவே இருக்கிறது. தேசிய அரசியலிலும் மிகப் பிற்போக்கான திசையிலேயே தமிழ்த் தேசியம் பயணித்துக் கொண்டிருக்கிறது. இதனை இப்போதைய தேர்தல் பிரசாரங்களிலும் காண்கின்றோம்.
சமூகநீதி என்ற சொல்லாடல், தமிழ்த் தேசியத்துக்கு உரியதல்ல என்பதைத் தமிழ்த் தேசியம் பேணும் வேட்பாளர்களும் அவர்தம் கட்சிகளும் தொடர்ச்சியாக நிரூபித்து வருகின்றன.
அண்மையில், யாழ்ப்பாணத்தில் சாதியம் என்பது இராணுவப் புலனாய்வின் திட்டமிட்ட சதி என்றும் சாதியப் பிரச்சினை, பாரிய பிரச்சினை அல்ல என்றும் தமிழ்த் தேசியத்தை உச்சரிக்கும் கட்சியின் வேட்பாளர் நேர்காணலில் சொல்லியிருந்தார்.
தமிழ்த் தேசியம், தமிழ்ச் சமூகத்தின் அகமுரண்பாடுகள் குறித்துப் பேசவோ, அக்கறை கொள்ளவோ தயாராக இல்லை என்பதை, கடந்த ஒரு நூற்றாண்டுகால வரலாறு காட்டி நிற்கின்றது.
இன்று ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள், தமிழ்த் தேசிய கட்சிகளைப் புறக்கணித்து, தனியே புதிய பாதையில் பயணப்படத் தொடங்கிவிட்டார்கள். இது நல்லதொரு தொடக்கம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
8 hours ago