2025 ஜனவரி 09, வியாழக்கிழமை

சபாநாகரின் பட்டப் பிரச்சினை மக்களின் பிரச்சினை அல்ல

Mayu   / 2024 டிசெம்பர் 27 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஐயூப்

சிய மக்கள் சக்தியின் அரசாங்கம் நிறுவப்பட்டு ஒரு மாதம் முடிவடைவதற்குள் அது முக்கிய பிரச்சினையொன்றை எதிர்நோக்கியிருக்கும் சபாநாயகர் அசோக ரங்வல தமது பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 நாட்டுக்கோ மக்களுக்கோ எவ்வித பயனுமில்லாத ஒரு விடயத்தின் காரணமாகவே அவர் பதவி துறந்துள்ளார்.

ரங்வலயின் பெயருக்கு முன்பாக  கலாநிதி என்ற பட்டம் நீண்ட காலமாகவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆயினும் அவருக்கு உலகில் எந்தவொரு பல்கலைகழகத்தாலும் கலாநிதிப் பட்டம் வழங்கப்படவில்லை என்று எதிர்க் கட்சியினர் கோஷமிட்டதை அடுத்தே அவர் தமது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

இதனை அடுத்து இப்போது எதிர்க் கட்சியினர் மேலும் சில ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் போலி பட்டங்களை தமது பெயருடன் சேர்த்து பாவிப்பதாக குற்றஞ்சாட்ட ஆரம்பித்துள்ளனர். ஆளும் கட்சியினர் மக்களுக்கு உண்மைக்கு புறம்பானதைக் கூறியே பதவிக்கு வந்துள்ளனர் என்று காட்டுவதே அவர்களது முயற்சியாக இருக்கிறது.
ரங்வலவுக்கு கலாநிதி பட்டம் இல்லை என்ற சர்ச்சையை யார் ஆரம்பித்தார் என்பது இன்னமும் தெளிவில்லை. 

ஆனால் தே.ம.ச பதவிக்கு கொண்டுவர மக்கள் அபிப்பிராயத்தை கட்டியெழுப்புவதில் தீவிரமாக  ஈவ்டுபட்ட பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய ஆகியோரே ஆரம்பத்தில் இந்த விடயத்தை முகநூலில் பெரிதாக எடுத்துரைக்கலாயினர். அதனை அடுத்தே இது பாரிய அரசியல் பிரச்சினையாகியது.

இலங்கையில் அரசியலுக்கு கல்வித் தகைமை தேவை இல்லை என்பதை சகலரும் அறிவர். எனவே சபாநாயகராவதற்கும் கல்வித் தகைமை அவசியமில்லை. 
அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தால் போதுமானது. பாராளுமன்ற உறுப்பினராவதற்கும் கல்வித் தகைமை தேவையில்லை. 

ஒரு வாக்காளராக இருந்தால் போதுமானதாகும். வாக்காளராவதற்கும் கல்வித் தகைமை தேவையில்லை. ஒருவர் இலங்கை பிரஜையாகவும் கடந்த ஏழாண்டுகளில் இரண்டு வருடத்துக்கு குறையாத சிறை தண்டனையை பெற்று அதில் குறைந்தது ஆறு மாத காலமாவது அத்தண்டனையை அனுபவிக்காதிருந்தால் போதுமானதாகும்.

எனவே ரங்வலவுக்கும் கலாநிதிப் பட்டம் இல்லை என்று நிரூபனமானாலும் அவர் தொடர்ந்தும் சபாநாயகராக பதவியில் இருக்க சட்டத்தில் தடையேதும் இல்லை.

பிரச்சினை என்னவென்றால் கடந்த பொதுத் தேர்தலின் போது தே.ம.ச தமது வேட்பாளர்களாக நிறுத்தியவர்களில் பெரும்பாலானோர் படித்தவர்களாகவும் பல்வேறு பட்டம் பெற்றவர்களாகவும் இருந்தனர். அதைப்பற்றி அக்கட்சியினர் பெருமையும் அடித்துக்கொண்டனர்.

இது ஏனைய அரசியல் கட்சிகளுக்கு பெரும் பிரச்சினையாகியது. அக்கட்சிகளின் பல வேட்பாளர்கள் பல்வேறு குற்றச்செயல்களுக்கு குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக இருந்தனர்.
இப்போது தமக்கு கலாநிதிப் பட்டம் இருப்பதை நிரூபிக்க முடியாமல் ரங்வல தடுமாறுகிறார். 

இந்த நிலையில், தே.ம. ச மக்களுக்கு பொய்யைக் கூறி மக்களை ஏமாற்றி அம் மக்களிடம் வாக்குப் பெற்று ஆடசிபீடமேறியிருக்கிறது என்பதே எதிர்க்கட்சினரின் வாதமாகும்.
ஒருவர் தான் இந்த பிரச்சினையில் சிக்கிக்கொண்டார், மேலும் எத்தனை கள்ள பட்டதாரிகளோ தெரியாது என்றதொரு கருத்தை நாட்டில் உருவாக்குவதே அவர்களின் நோக்கமாகும்.

மக்கள் உண்மையிலேயே தே. ம. ச.யின் வேட்பாளர்களில் பெரும்பாலானோர் படித்தவர்கள் என்பதற்காகத் தான் அக்கட்சிக்கு வாக்களித்தார்கள் என்றால் நிச்சயமாக ரங்வலவின் பிரச்சினை ஓரளவுக்கு பாரதூரமானது என்பது உண்மையாகும்.

உண்மையிலேயே தே.ம.சக்தியின் வேட்பாளர்கள் படித்தவர்கள் என்பதற்காகவா மக்கள் அக்கட்சிக்கு வாக்களித்தார்கள்? சிலர் அவ்வாறும் வாக்களித்திருக்கலாம். பெரும்பாலான வாக்காளர்கள் ஏனைய கட்சிகளை வெறுத்தே தே.ம.சக்திக்கு வாக்களித்தனர். 

இது 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரகலய என்றழைக்கப்படும் மக்கள் எழுச்சியின் பயனாக ஏற்பட்ட நிலைமையாகும். அந்த எழுச்சி இடம்பெறாதிருந்தால் தே.ம.ச. இம்முறையும் சுமார் ஐந்து வீத வாக்குகளையே பெற்றிருக்கும்.

எனினும் ஏனைய கட்சிகளின் தலைவர்கள் பொய்யர்கள், ஊழல்பேர்வழிகள் என்று கூறிய தே.ம. சக்தியின் பிரதான சுலோகமாக புதியதோர் அரசில் கலாசாரத்தை உருவாக்குவோம் என்றிருந்தது. 
அதனடிப்படையில், சபாநாயகர் போன்ற உயர் பதவிக்கு நியமிக்கப்பட்ட ரங்வல தொடர்பான சம்பவம் அக்கட்சியின் நம்பகத்தன்மைக்கு பாரியதோர் அடி என்பதை மறுக்க முடியாது.
இச்சம்பவத்தை அடுத்து ரங்வலயோ அரசாங்கமோ அதைப் பற்றி உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை.

சுமார் ஒரு வார காலம் கழித்தே தவறு செய்வோர் எந்த அந்தஸ்த்தில் இருந்தாலும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த 13 ஆம் திகதி அரச ஊடக நிறுவனத் தலைவர்களிடம் கூறினார். அன்றே ரங்வலயும் சபாநாயகர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தார்.

பின்னர் பாராளுமன்ற இணையத்தளத்தில் கலாநிதி ஒருவரல்லாத நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயகாரவின் பெயருக்கு முன்னாலும் கலாநிதி என்று குறிப்பிடப்பட்டு இருந்தமை தெரிய வந்தது. 

அது தவறுதலாக இடம்பெற்றுள்ளதாக பாராளுமன்ற அதிகாரிகள் தெரிவித்தனர். அத்தோடு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக்கவின் பெயருக்கு முன்னாலும் சிலர் கலாநிதி என்ற சொல்லை பாவிப்பதாக செய்திகள் வெளியாகின.

இது எவ்வாறு நடந்திருக்கும் என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. முன்னாள் அரசாங்கங்களினால் நியமிக்கபபட்ட அதிகாரிகளே இன்னமும் பாராளுமன்றத்தில் இருக்கின்றனர். 
எனவே, இந்த இரண்டு அமைச்சர்களும் தமது பெயருக்கு முன்பாக கலாநிதி என்ற பட்டம் எவ்வாறு குறிப்பிடப்பட்டன என்று விசாரணை நடத்துமாறு கடந்த திங்கட்கிழமை இரகசிய பொலிஸாரிடம் கோரியுள்ளனர்.

இது அரசாங்கத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குவதற்கான திட்டமிடப்பட்ட செயல் என்று அவ்விருவரும் கூறியுள்ளனர்.
இப்போது இந்தப் பிரச்சினை எதிர்க் கட்சியினருக்கு எதிராகவும் திரும்பியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு பட்டமொன்று இருப்பதாக கூறப்பட்ட போதிலும் அது பட்டமொன்றல்ல என்று சிலர் வாதிடுகின்றனர். 

ஐ. ம. சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி பெரேரா மற்றும் சமிந்திரானி கிரிஎல்ல ஆகியோர் தேர்தல் காலத்தில் தமது பெயருக்கு முன்பாக 
“அதிநீதிச்” (அட்வகேட்) என்று குறிப்பிட்டதாகவும் அதுவும் மக்களை ஏமாற்றும் செயல் என்றும் ஆளும் கட்சியினர் வாதிடுகினறனர்.

1974 ஆம் ஆண்டுக்கு முன்னர் சட்டத்தரணிகள் புரொக்டர் மற்றும் அட்வகேட் என்று பிரிக்கப்பட்டு இருந்தனர்.

 புரொக்டரைப் பார்க்கிலும் அட்வகேட் என்பவர் உயர்ந்தவராகவே கருதப்பட்டார். 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அமுலாக்கப்பட்ட சட்டமொன்றின் மூலம் இந்த வேறுபாடு ஒழிக்கப்பட்டு சகலரும் சட்டத்தரணிகளாகவே கருதப்படுகின்றனர். 

எனவே இப்போதும் அட்வகேட் என்று பாவிப்பது மக்களை ஏமாற்றும் செயல் என அவர்கள் கூறுகின்றனர். ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் எம்.பி நாமல் ராஜபக்ஷ எவ்வாறு சட்டத்தரணியானார் என்பதைப் பற்றியும் பல்வேறு கதைகள் பரவியிருக்கின்றன.

ஒரு அரசியல்வாதியின் நம்பகத்தன்மை அவரது பெயரின் முன்பாக உள்ள பட்டத்தின் உண்மைத்தன்மையிலா இருக்கிறது என்று இப்போது ஒருவர் கேட்கலாம். அவர் போலி பட்டங்களை பயன்படுத்தவதாக இருந்தால் அதுவும் நம்பகத்தன்மைக்கு விழும் ஒரு அடி தான். 

அதனால் மக்கள் பாதிக்கப்படுவதில்லை. எனினும் மக்கள் வாழ்க்கையை சீர்குழைக்கும் வகையில் மக்களை திட்டமிட்டு ஏமாற்றியவர்களே கடந்த காலங்களில் காணக்கூடியதாக இருந்தனர்.

நாடு சுதந்திரம் அடைந்ததிலருந்து பதவிக்கு வந்த சகல கட்சிகளும் சந்திர மண்டலத்திலிருந்தாவது போதியளவு அரிசி வழங்குவோம்,  எட்டு இறாத்தல் தானியம் வழங்குவோம்,  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்போம் என்றெல்லாம் வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றின.

இப்போதும் இனப் பரச்சினை உள்ளிட்ட எத்தனையோ பாரதூரமான பிரச்சினைகள் இருக்க எதிர்க்கட்சிகள் இந்தப் பட்டப் பிரச்சினையில் தொற்றிக்கொண்டு இருக்கின்றன. இவை அவ்வடிப்படை பிரச்சினைகளை மூடி மறைக்கவே உதவும்.

12.18.2024


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X