Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Mayu / 2024 நவம்பர் 11 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
லக்ஸ்மன்
ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றதையடுத்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. அது முதலே பலரும் தங்களது தேர்தலில் போட்டியிடாமை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
இதில் ஆயுத இயக்கங்களின் போராளிகளாக இருந்து ஜனநாயக அரசியலுக்குள் வந்தவர்கள் முதல், இளைஞர்களாக அரசியலுக்குள் வந்தவர்கள், அரச அதிகாரத்துறைகளில் பதவி வகித்து ஓய்வுக்குப் பின்னர் அரசியலுக்குள் வந்தவர்கள் என பலரும் அடங்குகின்றனர்.
வேட்பு மனுத்தாக்கலுக்கு இன்னமும் 4 நாட்களே உள்ள நிலையிலும் முடிவுக்கு வராத கூட்டுகள், வேட்பாளர்கள் தொடர்பில் இறுதி முடிவு எதனையும் எடுக்காத கட்சிகள், இப்போதும் பேசிக்கொண்டிருக்கும் கட்சிகள் என நிலைமை பலவாறு இருக்கின்றது.
இருந்தாலும், தமிழ்த் தேசிய அரசியலில் தமிழர்களுடைய உரிமைக்காகக் குரல் கொடுக்கின்ற கட்சிகளுக்குள் முடிவு வராமலிருப்பதே கவலையானதாகும். இந்த நிலையில்தான் நாம் பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்கத் திறமையான தமிழ்த் தேசியப் பற்றுள்ள இளைஞர்கள் முன்வருவார்களாயின் அவர்கள் பின்னின்று ஆலோசகர்களாகச் செயற்பட நாங்கள் எப்போதும் தயார் தமிழ் இளைஞர் யுவதிகள் தேசியக் கட்சிகளின் மாய அலைக்குள் சிக்கி விட வேண்டாம் என்ற கருத்தொன்று சில தினங்களுக்கு முன்னர் தமிழ்த் தேசிய அரசியல் அரங்கில் வெளிப்பட்டிருக்கிறது.
படித்த, ஆளுமையுள்ள, திறமையுள்ள இளைஞர்கள், பெண்கள் தேர்தல் களத்துக்குள் வரவேண்டும் என்கிற கருத்துக்களும் வெளிவந்து கொண்டிருக்கின்ற நிலையில் இந்தக் கருத்து சற்று உற்று நோக்கத்தக்கதே. அத்துடன், இக் கருத்தானது எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு இடங்கொடுங்கள் பழையவர்கள் ஒதுங்கிக் கொள்ளுங்கள் என்ற வகையில் சமூக வலைத்தளங்களிலும், சமூக ஊடகங்களிலும் எழுதப்படுவதனாலேயே வெளியே வந்திருப்பதாகக் கொள்ளலாம்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகள், இன்னும் சில தமிழ்த் தேசியக் கட்சிகள், வடகிழக்கு சிவில் அமைப்புகள் இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பினை உருவாக்கி அதனூடாக தேர்தலில் சங்குச் சின்னத்தில் போட்டியிட்டிருந்தன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான அரசியல் கூட்டாக உருவாக்கப்பட்டபோது, ஆரம்பத்தில் உதய சூரியன் சின்னம் களத்துக்கு வந்தது.
பின்னர் ஆனந்தசங்கரி தலைமைக்கு வந்த பின்னர் அச்சின்னம் இல்லையென்றாகி 1974ஆம் ஆண்டுக்குப்பின் தந்தை செல்வாவால் கிடப்பில் போடப்பட்ட வீட்டுச் சின்னம் தூசி தட்டி வெளியல் எடுக்கப்பட்டது. அப்போது இலங்கைத் தமிழரசுக் கட்சி உறங்கு நிலையில், என்பதை விடவும் கைவிடப்பட்ட கட்சியாகவே இருந்தது. ஆனால், அதன் பின்னர் உயிர் பெற்ற அக் கட்சி விடுதலைப் புலிகளின் மௌனிப்புக்குப்பின் தமிழர்களின்
அரசியல் அதிகாரத்தைத் தம் வசம் எடுத்துக் கொண்டது.
முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து சின்னப் பிரச்சினையில் தமிழர் விடுதலைக் கூட்டணி விலகிக் கொண்டது. அடுத்து அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் வெளியேறியது.
அதற்கான சூழல் இலங்கைத் தமிழரசுக் கட்சியினாலேயே உருவாக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன என்பது இந்த இடத்தில் ஆராயப்படத் தேவையில்லை. அடுத்ததாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி- ஈ.பி.ஆர்.எல்.எவ். வெளியேறியது. அதன் பின்னர் இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளூராட்சித் தேர்தலைக் காரணம் காட்டித் தாமாக வெளியேறிக் கொண்டது. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது.
ஏனைய மூன்று கட்சிகள் போலவே இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகிக் கொண்டது என்பதுதான்.
அப்படியானால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் எஞ்சியிருந்தவை ரெலோ மற்றும் புளொட் ஆகிய கட்சிகளே.
அவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்குவதற்குத் தமிழரசுக் கட்சி தடையாக இருந்தது. அது தவறானதாகும். உண்மையில் ஆரம்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழர் விடுதலைக் கூட்டணி தவிர்ந்த, இரண்டு கட்சிகளும் வெளியேறியமைக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அதிகாரத்துவம் காரணமாக இருந்ததாகவே பேசப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஒரு கட்சியாகப் பதிவு செய்யாமை, அங்கத்துவக் கட்சிகளுக்கான அதிகாரப்பங்கீடு, தேர்தல் கால வேட்பாளர் பங்கீட்டுப் பிரச்சினை, தேசியப் பட்டியல் பங்கீட்டுப் பிரச்சினை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் உறுப்பினர்கள் தொடர்பான ஒழுக்காற்று நடவடிக்கைகள், அங்கத்துவக் கட்சிகளை உதாசீனம் செய்தல், வீணான அவதூறான விமர்சனங்கள் எனப் பல காரணங்கள் இருந்திருக்கின்றன.
ஆரம்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்த கட்சிகள் ஒவ்வொன்றாக விலகிவந்த நிலையில் மீண்டும் ஈ.பி.ஆர்.எல்.எவ்., ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியன இணைக்கப்பட்டு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியாகக் குத்துவிளக்குச் சின்னத்தில் இயங்கப் புறப்பட்டவேளை, அவதூறுகள் எதிர்ப்புகள் வெளிவரத் தொடங்கியிருந்தன.
ஆனால் அவற்றினையும் மீறி ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுக்கட்டமைப்பாக தமிழ் மக்களின் தேசிய உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கின்ற வகையில், தமிழ்ப் பொது வேட்பாளர் சுயேச்சையாக நிறுத்தப்பட்டார்.
அவருக்குக் கிடைத்த சின்னம் சங்கு. அதனை அவருக்கு என்று எடுத்துக் கொள்ளாது தமிழர்களுக்குக் கிடைத்த சின்னம் என்றே கொள்ளவேண்டும். பேச்சு மற்றும் உடன்பாடுகளுக்குப் பின்னர் அச் சின்னத்தினை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் குத்துவிளக்குச் சின்னத்திற்குப் பதிலாக அக் கட்சி மாற்றிக் கொண்டது.
சங்குச் சின்னமானது தமிழர்களின் நிதி, உழைப்பினால் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தப்பட்டது.
மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது. அச்சின்னமானது வீணே கிடப்பில் போடப்பட்டுவிடக்கூடாது என்றவகையில், இது நல்லதொரு முடிவே. இதனை வீணான விமர்சனங்களுக்குட்படுத்துவது ஆரோக்கியமானதல்ல என்பது பலரது கருத்தாக இருக்கிறது.
தமிழர்களைப் பொறுத்தவரையில் மறுக்கப்பட்ட, பறிக்கப்பட்ட உரிமைகளுக்காகவே தொடர்ச்சியாகப் போராடி வருகின்ற ஒரு இனமாகும். இந்தவகையில், மீண்டும் மீண்டும் கட்சிகளின் அதிகாரத்துவத்துக்கும், அடக்குமுறைகளுக்கும் வீண் விவாதங்களுக்கும், வீணடிப்புகளுக்கும் துணைபோவது தமிழர்களின் சுயநிர்ணய அரசியலுரிமைக்கு பங்கம் விளைவிப்பதே.
அந்தவகையில், சங்குச் சின்னம் தொடர்பிலான பிரச்சினைகளை விட்டொழிப்பதே நல்லதாக இருக்கும் எனலாம். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் மேலாதிக்கப் போக்கும் மேட்டுக்குடி நடவடிக்கைகளும் தொடர்வதற்கான எத்தனங்களே எடுக்கப்பட்டு வருவதனை நாம் அவதானிக்க முடியும்.
வீடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சின்னமானதும், அதிலிருந்து ஒவ்வொரு கட்சிகளாகப் பிரிந்து சென்றமையும் தெளிவானால், கூட்டமைப்பிலிருந்து விலகிச் சென்ற கட்சியின் சின்னம், உதய சூரியன் இல்லையென்றானதற்கு ஒப்பானதே.
சின்னம் இல்லையென்றானதன் பின்னர் வேறு ஒரு சின்னத்துக்குள் செல்வதில் எந்தப்பிழையும் இல்லையே என்பது கூட்டமைப்பிலுள்ள ஏனைய கட்சிகளின் வாதமாக இருக்கின்றது.
இருந்தாலும், ஒரு கூட்டு என்ற வகையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில், மீண்டும் தாம் கூட்டமைப்பில் இணைந்து கொள்வதனைப் பற்றி ஆலோசிக்காது தம்முடன் இணையுமாறு கோருவது முற்றிலும் ஜனநாயக விரோதமானதேயாகும் என்பது அக்கட்சிகளின் நிலைப்பாடாக இருந்தாலும், காலத்தினைக் கருத்தில் கொண்டு அக் கட்சிகள் இணைய விரும்பினாலும் தமிழரசுக் கட்சி அதற்குத் தயாரில்லாத போது, அது எவ்வாறு சாத்தியமாகும் என்பதே இப்போதைய நிலை.
எனவே, தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் ஜனநாயக, அகிம்சைவாதப் போராட்டங்களுக்குப் பின்னர் உருவான சூழலால் ஏற்பட்ட ஆயுதப் போராட்ட இயக்கங்களின் தோற்றம் வெறுமனே உருவானதல்ல. அத்துடன், பல்வேறு நெருக்கடிகளும், வேண்டாத விடயங்களும் நடந்து முடிந்து விட்டிருந்தன.
அதன் பின்னர் பல கட்சிகள், பல சின்னங்கள் தமிழர்களுடைய போராட்டத்தில் வந்து போயிருக்கின்றன. இந்தநிலையில், ஒரு ஒற்றுமைக்காகவும் ஒருமித்த குரலுக்காகவும் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சின்னம் தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சினையாக இருக்கப் போவதில்லை.
அவர்களுடைய அரசியலுரிமையும் போராட்டத்தின் தீர்வும் வெற்றியுமே முக்கியமானதாக இருக்கும். நவம்பர் 14இல் நடைபெறும் தேர்தலில், தமிழர் அரசியலில் அதிகாரத்துவம், மேட்டுக்குடித்துவம், அடக்குமுறை ஆதிக்கம் போன்றவற்றுக்குத் தீர்வினையே வெளிப்படுத்துவார்கள். அப்போது சங்குச் சின்னம் பற்றிய வீண் வாதங்கள் பயனற்றுப் போகும்.
ஏழு தசாப்தங்களுக்கு மேலாக அரசியல், ஆயுத ரீதியாக உரிமைகளைப் பெறுவதற்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற ஒரு இனம், அந்தப் போராட்டத்திற்கான நியாயமான தீர்வு கிடைக்காத நிலையில் அவர்களின் ஆழ் மனத்தின் தீர்வாகவும் அது இருக்க வேண்டும்.
10.07.2024
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
13 minute ago
18 minute ago
31 minute ago